Poornayogam

Sanatana Dharma – The Eternal Way of Life

Home » Vedam – Tamil » வேதப்பாடம் – 02

வேதப்பாடம் – 02

ஒரு மனிதன் என்றால், பல அங்கங்கள் இருக்கின்றன. இப்படியே வேதத்தை வேதபுருஷன் (வேதமாதா என்றும் சொல்வதுண்டு) என்று உருவகப்படுத் தினால், அந்த புருஷனுக்கு ஆறு அங்கங்கள், இந்த ஆறை ‘ஷடங்கம்’ என்பர்.

அந்த ஆறு அங்கங்களாவன: சிக்ஷை (எழுத்திலக்கணம்), வியாகரணம் (சொல்லிலக்கணம்),  நிருக்தம்(நிகண்டு), கல்பம்(கர்மானுஷ்டானமுறை), சந்தஸ்(பாவிலக்கணம்) ஜ்யோதிஷம்(சோதிடம்) என்பவை. வேதம் கற்று கொள்ளும் ஒருவர் வேதங்களையும் இந்த ஆறு அங்கங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். வேதத்திற்கு அரத்தம் தெரிந்து கொள்ளும் பொருட்டு, இந்த ஆறு அங்கங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

வேத ஒலிகளையும் அக்ஷரங்களையும் புரிந்து கொண்டு சரியான முறையில் பயன்படுத்த வேதாங்கங்கள் மிக முக்கியமாய் இருக்கின்றன. எனவேதான் வேதங்களைக் கற்பிப்பதில் வேதாங்கங்களுக்கு முதன்மை இடம் அளிக்கப்படுகிறது.

வேதாங்கங்களின் உறுப்பான ‘சிக்ஷை’ என்பது வேதத்தின் ஆறு அங்கங் களில் பிரதம பாகம். அக்ஷர லக்ஷணத்தை சொல்வது தான் சிக்ஷை என்பது. வேத மந்திரங்களுக்கு உயிர் மூச்சாக இருக்கிற அங்கம் சிக்ஷை. ஆகவே சிக்ஷை சாஸ்த்திரம் வேதபுருஷனின் மூக்குஸ்தானம் என்று அறியபடுகிறது. சீக்ஷா வேதங்களின் நாசியாகக் கருதப்படுகிறது. நாம் சுவாசிக்கவும் நம் பிராணனைக் காத்துக் கொள்ளவும் நம் நாசி உதவுவது போல் சீக்ஷா வேத மந்திரங்களின் ஜீவ சக்தியைக் கட்டிக்காக்கிறது. ஓசை நயம் மற்றும் உச்சரிப்பு முறையை நெறிப்படுத்துகிறது.  வேத மந்திரங்களின் பலனை முழுமையாய்ப் பெற அவற்றை முறைப்படி சரியாக உச்சரித்தாக வேண்டும். அவைகளின் விதிமுறைகளை வரையறை செய்வதால் சீக்ஷா முக்கியத் துவம் பெறுகிறது. உச்சரிப்பில் எழும் எந்த ஒரு சிறு பிழையும் விரும்பத் தகாத, அல்லது எதிர்மறை பலன் கொடுக்கக்கூடும். எனவே வேத புருஷனின் ஆறு உறுப்புகளில் சீக்ஷை பிரதானமாக மதிக்கப்படுகிறது. ஒவ்வொரு அக்ஷரமும் எவ்வளவு உயர்த்தி அல்லது தாழ்த்தி ஒலிக்கப்பட வேண்டும், அதன் கால அளவு என்ன என்பன போன்ற விஷயங்களை சீக்ஷை நெறிப்படுத்துகிறது. இந்த விதிமுறைகள் மாற்றப்படக்கூடாதவை என்பதில் ஒருமித்த கருத்துண்டு. எனினும் வெவ்வேறு சாகைகளுக்கு இடையே மந்திரங்களை உச்சரிப்பதில் வேறுபாடு இருப்பதைப் பார்க்கிறோம். இங்குதான் சீக்ஷா மிக முக்கியமான பணியாற்றுகிறது வெவ்வேறு பகுதிகளுக்குரிய சாகைகளுக்கு ஏற்றவகையில் விதிமுறைகளை வகுத்து மந்திர பிரயோகத்தில் பிழை ஏற்படாத வகையில் சீக்ஷை பார்த்துக் கொள்கிறது.

ஒரு பாஷையில் இப்படியிப்படி உச்சரிக்கவேண்டும் முறைப் படுத்துகிறதை அக்ஷரசுத்தம், ஸ்வரசுத்தம் என்கிறார்கள். மற்ற பாஷைகளை விட வேத பாஷைக்கு இது மிக முக்கியம். ஏனென்றால் உச்சரிப்பு மாறினால் பலனே மாறி விடுகிறதை அந்தப் பாஷையில் பார்க்கிறோம்.

மந்திரங்களின் ஒவ்வொரு எழுத்தையும்,அதன் பரிணாமம் எப்படியிருக்க வேண்டுமோ அப்படி சரியாக உச்சரிக்க வேண்டும் இதற்கு ‘அக்ஷரசுத்தம்’ என்றுப் பெயர். அதோடுகூட ஒவ்வொரு எழுத்தையும் உயர்த்திச் சொல்வதா, தாழ்த்திச் சொல்வதா, சமனாகச் சொல்வதா என்ற பாகுபாடும் உண்டு. இந்த மூன்றையும் முறையே உதாத்தம், அநுதாத்தம், ஸ்வரிதம் என்று சொல்வார் கள். இப்படியாக அக்ஷர சுத்தம, ஸ்வரசுத்தம் இரண்டும் இருந்தால் தான் பலன் தரும். மந்திரங்களின் பொருள் தெரியாவிட்டாலும் கூட, மந்திரங் களின் சப்த ரூபத்தை உள்ளப்படி உச்சரித்தால் அவை பலன் தந்து விடும். மந்திரங்களில் ஒவ்வொரு அக்ஷரமும் இப்படி உண்டாக வேண்டும், அதன் ஸ்வரம் இப்படி இருக்க வேண்டும், மாத்திரை என்பதன் நீளம் இப்படியிருக்க வேண்டும் என்றெல்லாம் சிக்ஷா சாஸ்த்திரம் விளக்குகிறது. மாத்திரை என்பதில் குறில், நெடில் என்பன போன்ற விஷயங்கள் விளக்கப்படும்; குறிலுக்கு ‘ஹ்ரஸ்வம்’ என்றும், நெடிலுக்கு ‘தீர்க்கம்’ என்றும் பெயர். வார்த்தைகளை ஸந்தி பிரிக்காமல் சேர்த்துச் சொல்வதற்கான வழிமுறை முதலான அனேக விஷயங்கள், அத்யயனம் செய்கிறவர்களுக்கு உறுதுணை யான விஷயங்கள் சிக்ஷா சாஸ்த்திரங்களினாலேயே தெரிய வருகின்றன.

உச்சாரணம், ஸ்வரம், மாத்திரை, பலம், ஸமம், ஸந்தானம் என்ற பல விஷயங்களை சிக்ஷா சாஸ்த்திரம் சொல்லி, ஒவ்வொரு மந்திரத்தையும் ஒரு மயிரிழை கூட அதன் சப்தரூபம் தப்பாத வகையில் வகுத்துக் கொடுக் கிறது. அதிலும் இன்னின்ன எழுத்துக்கள் மனுஷ்ய சரீரத்தில் இன்னின்ன இடத்தில் பிறப்பவை, அவை இப்பிடியிப்படியான முயற்சியால் உண்டாகின் றது என்று வகுத்து கொடுக்கிறது.

வேத அக்ஷரங்களை எத்தனை கவனத்தோடு, ஜாக்கிரதையோடு சொல்ல வேண்டும் என்பதற்கு பாணினி மஹரிஷி  ‘பாணினீயசிக்ஷா’ என்கிற நூலில் ஸ்லோகங்களால் குறிப்பிட்டுள்ளார். பாணினியை தவிர அனேக மஹரிஷிக ளும் சிக்ஷா சாஸ்த்திரங்கள் எழுதியிருக்கிறார்கள். பாணினி மஹரிஷியுடை தும், யாக்ஞவல்கிய மஹரிஷியடையதும் விஷேசமானது.

‘ப்ராதிசாக்யம்’ என்பதாக ஒவ்வொரு வேதசாகைக்கும் விஷேசமாகவும், வித்தியாசமாகவும் உள்ள வேத சப்தஸ்வரங்களை விரிவாக ஆராய்கிற நூல்ளும் ஒவ்வொரு வேதத்திற்கும் உண்டு. ஒன்றுக்கொன்று விபரீதமான பலன் உண்டாக்கிற அக்ஷ்ரங்களாக இல்லாமல், ஒரே மாதிரியான பலனை உண்டாக்கிற அக்ஷ்ரங்களை ரிஷிகள் பல சாகைகளுக்கிடையிலே மாற்றிக் கொடுத்திருக்கிறார்கள். இவற்றைப் பற்றிய விதிகள் ப்ராதிசாக்யத்தில் தெளிவாக்க் கூறப்பட்டிருக்கின்றன.

வேத அத்யயனத்தில் ஸம்ஹிதா, பதம், க்ரமம், என்று பல உள்ளன. இப்படி ஸம்ஹிதா பாடத்தை பதம், க்ரமம் முதலான மற்ற அத்யயன முறைகளில் மாற்றிக் கொடுப்பதற்கும், சிக்ஷா சாஸ்த்திரத்தை சேர்ந்த ப்ராதிசாக்யங்கள் உதவி புரிகின்றன.

ஏதோ சப்தம் தானே என்று அலட்சியம் பண்ணுவதிற்கில்லை. சப்தத்தில் தான் அத்தனையும் இருக்கிறது. அதனால் சிக்ஷா சாஸ்த்திரம் வேத புருஷனுக்கு மூச்சு விடுகிற நாசி ஆகிறது.

வேத புருஷனுக்கு இரண்டாவது அங்கம் “வியாக்கரணம்”. வியாக்கரணம் என்றால் “இலக்கணம்”. பாஷையின் லக்ஷணத்தை சொல்வதால் இலக்கணம் என்று இதன் பொருள். லக்ஷணம் தமிழில் இலக்கணம் ஆகிறது. வேதத்  திற்கு முகம் வியாக்கரணம், முகம் என்றால் இங்கே வாய். பாஷைக்கு வாய் தானே முக்கியம்.

வியாக்கரணம் ஸம்ஸ்கிருத மொழிக்கும், வேதத்திற்கும் முக்கியமானது.

வியாகரணத்திற்கும் ஏராளம் கிரந்தங்கள் இருக்கின்றன. அவற்றில் பாணினியின் சூத்திரம், அதற்கான பதஞ்சலியின் பாஷ்யம், வாரருசியி னுடைய வார்த்திகம் ஆகிய மூன்றும் முதன்மையாக இருக்கிறது.

பர்த்ருஹரியின் ‘வாக்யபாதீயம்’ என்ற நூலும் முக்கியமான வியாகரண புத்தகங்களில் ஒன்றாகும்.

நவ வ்யாகரணம் என்று ஒன்பது நுல்கள், ‘ஆஞ்சநேய’ ஸ்வாமி ‘ஸூர்ய பகவானிடமிருந்து’ இவற்றை கற்று கொண்டார். நவ வ்யாகரணங்களில் ஒன்று தான் ‘ஐந்திரம்’. இந்திரனால்’ செய்யப்பட்டதால் இப்படி பெயர்.

‘ஸித்தாந்த கெளமுதி’ என்ற வியாக்கரண நூல் இப்போது அதிகமாக பிரசாரத்தில் இருந்து வருகிறது. இதை செய்தவர் ‘அப்பையா தீக்ஷிதரரின்’ சிஷ்யராகிய ‘பட்டோஜி தீக்ஷிதர்’ என்பவர். இந்த நூல் பாணினியின் சூத்திரத் திற்கு வியாக்கியான ரூபமாக இருக்கிறது.

ஸித்தாந்த கெளமுதிக்கு முன்பு, ‘ரூபாவதாரம்’ என்னும் வியாக்கரண சாஸ்திரமே பிரஸித்தமாயிருந்தது. ரூபாவதார சாஸ்திரத்தில் நல்ல புலமை படைத்தவர்களுக்கு ராஜமான்யம் வழங்கப்பட்டதாக வேங்கை நாட்டு தாமிர சாஸனம் ஒன்று உள்ளது.

“சிவன்” கோயில்களில் ‘வ்யாகரண தான மண்டபம்’ என்னும் பெயருடைய மண்டபம் ஒன்று இருப்பதுண்டு. ‘வக்காணிக்கும் மண்டபம்’ என்று திரித்துச் சொல்வார்கள்.

ந்ருத்தாவஸானே நடராஜ ராஜோ நநாத டக்காம் நவபஞ்ச வாரம் |       உத்தர்துகாம: ஸனகாதி ஸித்தான் ஏதத் விமர்சே சிவ ஸூத்ர ஜாலம் || என்று ஒரு ஸ்லோகம் இருக்கிறது. இதைப் பற்றிக் கொஞ்சம் பார்க்கலாம்.

“ந்ருத்தாவஸாநே”-திருவம்பலக் கூத்தாடுவாரென்பது நடராஜருடைய பெயர். அவர் பெரிய கூத்து ஆடுகிறார். நாமெல்லாம் ஆட வேண்டிய கூத்தைச் சேர்த்து வைத்து அவர் ஆடுகிறார். நடராஜாவுடைய கையில் ஓர் உடுக்கு இருக்கிறது. அதற்கு ;டக்கா’ என்றும் ‘டமருகம்’ என்றும் பெயர்கள் உண்டு. பாதத்தின் தாளத்தை அனுசரித்து, அந்த டமருக தாளமும் இருக்கும். இதன் ஒலியைத்தான் ஸ்லோகத்தில் ”நநாத டக்காம்” என சொன்னது.

வாத்தியங்களில் முக்கியமானவை மூன்று வகை. அவை: சர்ம வாத்தியம் (டக்கா,மேளம்,கஞ்சிரா,மிருதங்கம்,போன்ற தோல் சேர்ந்த வாத்தியம்); தந்திரி வாத்தியம் (வீணை,பிடில்,போன்ற தந்தி போட்டது); வாயுரந்திர வாத்தியம் (நாதஸ்வரம்,புல்லாங்குழல் போன்ற துளைப் போட்டு காற்றை ஊதும் கருவிகள்). இவைகளில் சர்ம வாத்தயங்கள் தண்டத்தாலோ, ஹஸதத் தாலோ அடிக்கப்படும். அந்த வாத்தியத்தை நிறுத்தும் போது ‘சாப்பு’ கொடுப்பது வழக்கம, அதாவது சேர்ந்தாற் போலச் சில அடிகள் அடிப்பது.

நடராஜர் நிருத்தம் செய்கிறார். ஸனகாதிகள் பார்த்து கொண்டிருக்கிறார்கள். அங்கே இருந்தவர்களில் பாணினி மஹரிஷியும் ஒருவர். நடராஜருடைய டமருகத்தில் நடனம் முடியும் காலத்தில் ஒரு சாப்பு தொனி உண்டாயிற்று. அந்த சாப்புப் தொனி பதினான்கு சப்தங்களை கொண்டதாக இருந்தது.

இந்த பதினான்கு சப்தங்களை கொண்டு, அவற்றை பதினான்கு சூத்திரங்க ளாக வியாகரணத்திற்கு மூலமாக வைத்துக் கொண்டு, “அஷ்டாத்யாயி”யை எழுதினார். வியாகரண மூல நூல் இதுவே. எட்டு அத்தியாயம் கொண்டதால் ”அஷ்டாத்யாயி” எனப் பெயர். மஹேஷ்வரரின் டமருவிலிருந்து உண்டான சப்தமானதால் அவை மஹேஷ்வர ஸூத்ரம் எனப்படும்.

இவ்வாறு வியாகரணத்திற்கு மூலகாரணமாயிருந்தது நடராஜருடைய டமருகத்தில் இருந்து உண்டாகிய மஹேஷ்வர ஸூத்ரங்கள்.

ஆகையால் அவருடைய கோயிலில் “வ்யாகரண தான மண்டபம்” ஏற்படுத்த பட்டிருக்கின்றன.

சந்தஸ்: வேத அங்கங்களில் மூன்றாவது அங்கமாக வருவது சந்தஸ். சந்தஸ் வேதபுருஷனுக்குப் பாதம். சந்தஸ் என்பது செய்யுளிலக்கணம். பாவிலக்கணம் என்றும் பொருள்படும். சந்தம் என்றும்  (metre என்ற) வ்ருத்தம் என்றும் சொல்லும் செய்யுள் அளவுகளை வகுத்து கொடுப்பது இந்த சந்தஸ் சாஸ்த்திரம்.

செய்யுள் உருவில் உள்ள வேத மந்திரங்களையெல்லாம் சந்தஸ் என்றும், வேதத்தை மையமாக கொண்டு வேத தாத்பரியத்தை சொல்லும் செய்யுள் களை சுலோகம் என்றும் சொல்வார்கள். சுலோகங்களும் வ்ருத்தங்களே. வ்ருத்த லக்ஷ்ணம் தான் சந்தஸ்.

ஒவ்வொரு வ்ருத்தத்திற்கும் இவ்வளவு பாதம் இருக்க வேண்டும், ஒவ்வொரு பாதத்திற்கும் இவ்வளவு எழுத்து என்றெல்லாம் நிர்ணயம் செய்து தருவதே சந்தஸ்.

ஒரு மந்திரம் உருவான பின் அதன் சரியான உச்சாரணத்திற்கு ரக்ஷ்ணை யாக இருப்பது சிக்ஷா சாஸ்த்திரம். மந்திரரூபம் சரியா என்று பார்ப்பதற்கு ரக்ஷ்ணையாக இருப்பது சந்தஸ் தான்.

மந்திரங்களை உலகத்திற்கு தந்தது ரிஷிகள். ஒரு மந்திரம் எந்த ரிஷிகள் மூலம் வந்ததோ அந்த ரிஷி அந்த மந்திரத்திற்குரியவர். மந்திர உபதேசம் செய்து கொண்டவர்கள் அந்த ரிஷியின் பெயரைச் சொல்லி தலையில் கையை வைத்துக் கொள்வது அவருடைய பாதங்களை சிரஸில் வைத்துக் கொள்வதற்கு அறிகுறி. அடுத்து சந்தஸைச் சொல்லி மூக்கில் கை வைக்கி றோம். மந்திரத்தின் ரூபத்தை ரக்ஷ்சிப்பது சந்தஸ். அது அதற்குப் பிராணன் போன்றது. அதனால் பிராண ஸ்தானமாகிய மூக்கில் கை வைக்கிறோம். மூச்சு இல்லாவிட்டால் பிராணன் இல்லையல்லவா. ஆகவே மந்திரங்        களுக்கு மூச்சாக இருப்பது சந்தஸ். வேதம் என்ற முழு ரூபத்திற்கு சீக்ஷை மூக்கு, சந்தஸ் பாதம். வேதத்திலுள்ள மந்திரங்கள் என்பதன் ரூபத்திற்கு சந்தஸே மூக்கு.

பிங்களாச்சாரி என்பவர் வேதத்தின் சந்தஸுகளையெல்லாம் அறிந்து “சந்த்ஸ் ஸூத்ரம்” என்ற நூலை செய்துள்ளார். இந்த நூல் தான் முக்கிய நூலாக இருக்கிறது.

வேதத்தில் வரும் சந்தஸ்களாவன: காயத்ரி, உஷ்ணிக், அனுஷ்டுப், ப்ருஹதி, பங்க்தீ, த்ருஷ்டுப், ஜகதீ முதலானவை.

காயத்திரி சந்தம்: மூன்று அடிகள், ஒரு அடிக்கு எட்டு எழுத்துக்களுடன் மொத்தம் 24 எழுத்துக்களுடன் கூடிய மந்திரங்கள் கொண்டது.

உஷ்ணிக் சந்தம்: நான்கு அடிகள், ஒர் அடிக்கு ஏழு எழுத்துக்கள், மொத்தம் 28 எழுத்துக்கள் கூடியது.

அனுஷ்டுப் சந்தஸ்: நான்கு அடிகள், ஒரு அடிக்கு எட்டு எழுத்துக்கள், மொத்தம் 32 எழுத்துக்கள கொண்டது.

ப்ருஹதி சந்தஸ்: நான்கு அடிகள், ஒவ்வொரு அடிக்கும் முறையே 8,8,12,8 எழுத்துக்களுடன் மொத்தம் 36 எழுத்துக்கள் கொண்டது.

பங்கதி சந்தஸ்: நான்கு அல்லது ஐந்து அடிகள், மொத்தம் 40 எழுத்துக்கள் கொண்டது.

திருஷ்டுப் சந்தம்: நான்கு அடிகளுடன் ஒரு அடிக்கு 11 எழுத்துக்களுடன் மொத்தம் 44 எழுத்துக்களுடன் கூடியது. இந்த சந்தஸிலேயே பல வகைகள் உள்ளன. இந்த்ர வஜ்ரா, உபேந்த்ர வஜ்ரா, உபஜாதி ஆகியவை இதில் அடங்கும்.

ஜகதி சந்தம்: நான்கு அடிகள், ஒரு அடிக்கு 12 எழுத்துக்கள், மொத்தம் 48 எழுத்துக்கள் கொண்டது. இதில் ஒரு வகை புஜங்க ப்ராயதம்.

இப்படியே ஒரு பாதத்திற்கு 17 அக்ஷ்ரங்கள், 19 அக்ஷ்ரங்கள், 21 அக்ஷ்ரங்கள் என்றும் அதற்கான நாமங்களோடு கூடியதான சந்தஸ்கள் ஏராளம். இவையெல்லாம் வேதத்திற்கு பிற்பட்ட காவியங்களிலும், ஸ்தோத்திரங் களிலும் வருகின்ற சந்தஸ்.

வேத அங்கங்கள் என்ற பாட விளக்கத்திற்கு எந்த அளவு விளக்கம் தேவையோ அந்தளவு தான் விளக்கம் பார்த்து செல்கிறோம். பாடங்களில் விரிவான விளக்கங்கள் எங்கெங்கு தேவையோ அங்கெல்லாம் விரிவான விளக்கம் பார்த்து தான் செல்ல உள்ளோம்.

நிருக்தம்: நிருக்தம் வேத புருஷனுக்கு ச்ரோத்திர ஸ்தானம். அதாவது காது. நிருக்தம் என்பது வேதத்திற்கு அகராதி. ஒவ்வொரு வார்த்தையும் இந்த தாது விலிருந்து வந்தது என்று அக்ஷ்ர, அக்ஷ்ரமாக பிரித்து ஒவ்வொரு அக்ஷ்ரத் திற்கும் அர்த்தம் சொல்வது நிருக்த சாஸ்த்திரம்.

அமர கோசம் என்ற பிரஸித்தி பெற்ற அகராதி இருக்கிறது. அகராதி என்பது சமஸ்கிருதத்தில் ‘கோசம்’ என்றும் ‘நிகண்டு’ என்றும் சொல்வதுண்டு. நிருக்த சாஸ்த்திரம் பலரால் செய்யப்பட்டிருக்கிறது. இவற்றில் முக்கிய மானது யாஸ்கரால் செய்தது.

நிருக்த சாஸ்த்திரம் வேதத்தில் உள்ள அரிய வார்த்தைகளுக்கு இன்ன இன்ன அர்த்தம் என்று சொல்கிறது, ஏன் இந்த பதம் இங்கே உபயோகிக்கப் பட்டது என்பதை காரணத்துடன் சொல்லும்.

சமஸ்கிருதத்தில் எல்லா பதங்களுக்கும் தாது உண்டு. சமஸ்கிருதத்தில் பெயர் சொல்லுக்கும் இன்ன க்ரியையால் இப்படி பெயர் வந்தது என்று தாது காட்ட முடியும். இப்படி ஒவ்வொரு சொல்லுக்கும் காரணம் உண்டு. இதை ஆராய்வது “நிருக்தம்”.

அர்த்தம் தெரியாமல் ஒரு மொழியை கேட்பது என்பது கேட்காமல் செவிடாக இருப்பதற்கு சமம். நிருக்தம் அந்த மொழியின் ஒவ்வொரு சொல்லினுடைய பொருளையும் அந்த சொல் இப்படி வந்தது என்ற தாதுவையும் சொல்லி விளக்கி புரிய வைப்பதால் நிருக்தம், வேதத்திற்கு ச்ரோத்திரம் (காது) ஆகிறது.

அடுத்து வேத அங்கமாக வருவது ‘ஜ்யோதிஷம்’. அடுத்த பாடமாக பார்ப்போம்.

ஜ்யோதிஷம்: வேதபுருஷனுக்கு ஜ்யோதிஷம் நேத்திரஸ்தானம். அதாவது கண். ஜ்யோதிஷ சாஸ்திரமானது மூன்று ஸ்கந்தங்கள் அடங்கியது.அதனால் அதற்கு “ஸ்கந்த த்ரயாத்மகம்” என்று பெயர். கர்க்கர், நாரதர், பராசரர் முதலிய பல ரிஷிகள் பல ஜ்யோதிஷ ஸம்ஹிதைகளைச் செய்திருக்கிறார்கள். ஸூரியபகவான், அசுரத் தச்சனாகிய மயனுக்கு ஜ்யோதிஷ உபதேசம் பண்ணினதாக ஒரு கிரந்தம் இருக்கிறது. அதற்கு “ஸூரிய ஸித்தாந்தம்” என்று பெயர். இப்படி தேவர்களும், ரிஷிகளும் இயற்றிய பல கிரந்தங்கள் உண்டு. மனிதர்கள் செய்த கிரந்நங்களும் இருக்கின்றன. ஆர்யபட்டர், பாஸ்கராசாரியர் முதலியவர்கள் பண்ணின கிரந்தங்கள் பல இருக்கின்றன. சமீப காலத்தில் சுந்தரேச்வர ச்ரெளதிகள் என்பவர் சித்தாந்த கெளஸ்துபம் என்ற ஜ்யோதிஷ கிரந்தத்தைச் செய்திருக் கிறார்.

ஜ்யோதிஷத்தை ஏன் வேத புருஷனுக்குக் கண்ணாக சொல்லியிருக்கிறது? கையால் தடவியே கிட்டத்தின் உள்ளதன் ரூபத்தைத் தெரிந்து கொள்வது போல், ஜ்யோதிஷ சாஸ்திரம் தேவைப் படாமல் நம் கண்ணாலேயே பார்த்து நிகழ்காலத்தில் உள்ள கிரஹநிலமைகளை அறிந்து கொண்டு விடலாம். ஆனால் ஐம்பது வருஷத்திற்கு முன்னால் கிரஹங்கள எங்கே இருந்தது அல்லது பின்னால் கிரஹங்கள் எங்கே இருக்கும் என்று தெரிய வேண்டுமானால் ஜ்யோதிஷ சாஸ்திரத்தைப் பார்த்தாலே தெரியும். கிட்டத்தில் உள்ளதைத் தடவிப் பார்த்து, அதன் உருவத்தை அறிகிறபோது கூட என்ன கலர் என்று தெரிந்து கொள்ள முடிவதில்லை. இதை அறியக் கண் தேவைப்படுகிறது. இதைப்போல், பிரத்யக்ஷத்தில் ஒரு கிரஹம் தெரிந்தால்கூட, அது அந்த நிலையில் இருப்பதால் ஏற்படுகிற பயன் என்ன, அது நம்மை எப்படிப் பாதிக்கிறது என்று நமக்குத் தெரியாது. இதை ஜ்யோதிஷம் தான் நமக்கு தெரிவிக்கிறது. ஆகவே தான் ஜ்யோதிஷத்தை வேத புருஷனுக்கு கண் என்கிறார்கள்.

வைதீக காரியங்களைச் செய்வதற்கு, இன்னின்ன கிரஹம் இன்னின்ன இடத்தில் இருக்க வேண்டும் என்ற விதி உண்டு. நாள் பார்ப்பது, முகூர்த்தம் வைப்பது என்றெல்லாம் க்ரஹ நிலைகளை ஒட்டித்தானே சடங்குகளைப் பண்ண வேண்டியிருக்கிறது இதனால் ஜ்யோதிஷம் “நேத்ர” ஸ்தானத்தைப் பெறுகிறது.

ஜ்யோதிஷத்திற்கு “நயனம்” என்று ஒரு பெயரும் உண்டு. “நய” என்றால் அழைத்துக் கொண்டு போவது. கண்ணில்லாதவரை இன்னொருவர்தானே அழைத்துக் கொண்டு போக வேண்டியிருக்கிறது, அதனால் கண்தான் அழைத்து கொண்டு போகிற வழி காட்டியாக இருக்கிறது என்பது தெரிகிறது. வேத காரியங்களைப் பண்ணுவதற்கான காலத்தை நிர்ணயம் பண்ணி, நம்மை அந்த காரியத்துக்கு அழைத்துக் கொண்டு போகிற கண்ணாக இருப்பது ஜ்யோதிஷமே.

கிரஹங்கள், நக்ஷ்த்திரங்கள், திதி, ஆகியன இப்படியிப்படி இருந்தால், அந்த சமயத்தில்  செய்யும் கர்மாக்களுக்கு இப்படியாகப்பட்ட பலன்கள் உண்டா கின்றன என்பதைச் சொல்லவே ஜ்யோதிஷ சாஸ்திரம் ஏற்ப்பட்டது. வைதீக கர்மாக்களைச் செய்வதறகுரிய அநுகூலமான காலங்களை நிர்ணயிப்பதற் காகவே வேதாங்கமான ஜ்யோதிஷம் ஏற்பட்டது. இதில் கிரஹ ஸஞ்சாரம் முதலானதுகளை கணக்குப் பண்ண வேண்டியிருந்ததால் கணிதமும் நிறையச் சேர்ந்து விட்டது. யாகம் பண்ணும் இடமான யக்ஞவேதி, சயனம் என்பதான யக்ஞபூமி அமைப்பு ஆகியவற்றிற்கு நிர்ணயமான அளவுகள் உண்டு. அந்த அளவுப்படி அமைத்து யக்ஞம் பண்ணினாலே பலன் உண்டு. அதனால் யக்ஞ வேதிகளின் அளவுகளைத் தீர்மானமாகக் கணக்குப் பண்ணி கொடுக்க வேண்டியதாயிற்று. இந்த ரீதியிலும் வேதத்திற்கு துணையங்க மாக கணிதம் அபிவிருத்தி செய்யப்பட்டிருக்கிறது.

ஜ்யோதிஷத்தில் மூன்று ஸ்கந்தங்கள் இருக்கின்றன அதற்கு த்ரியாத்மகம் என்று பெயர் எனப் பார்த்தோம். (“ஸ்கந்தம்” என்றால் மரத்தின் அடிகட்டையில் இருந்து பிரிகிற பெரிய கிளைகளுக்குப் பெயர்.) அந்த மூன்று ஸ்கந்தங்கள என்பது ஒன்று ‘ஸித்தாந்த ஸ்கந்தம்’, இரண்டாவது ‘ஹோரா ஸ்கந்தம்’ மூன்றாவது ‘ஸம்ஹிதா ஸ்கந்தம்’.

வேதத்தின் ஆறாவது அங்கமாக இருக்கும் ‘கல்ப சாஸ்திரத்திற்கு’ ‘ஸித்தாந்த ஸ்கந்ததின் உதவி மிக்க தேவை. கல்ப சாஸ்திரத்தில் உள்ள  ‘சுல்ப ஸூத்திரத்தில் யக்ஞங்களை பற்றி கூறும் போது யக்ஞம் செய்ய வேண்டிய யக்ஞ சாலையில் யக்ஞ வேதி எப்படிக் கட்ட வேண்டும் எனபன குறித்த அளவு முறைகளை சொல்லியிருக்கிறது. இந்த யக்ஞ பூமி அமைப்பு களுக்கு ‘சயனம்’ என்று பெயர். கருடன் போன்ற ஆக்ருதியில் (வடிவத்தல்) ஒரு சயனம். இப்படி பல ஆக்ருதியில் சயனங்கள் அமைப்பதைப் பற்றி சொல்லும் போது இத்தனை அளவுள்ள இத்தனை செங்கல்கள் அடுக்கினால் இந்த ஆக்ருதியில் உள்ள சயனம் வரும் என்ற கணக்குகள் சுல்ப ஸூத்திரங் களில் சொல்லப்பட்டுள்ளன. இதற்கு ‘ஸித்தாந்த ஸ்கந்தத்தை’ பயன்படுத்திக் கொண்டால் தான் முடியும்.

லோகத்தில் நடக்கும் சுக,துக்கங்களுக்கும், கிரஹங்களுக்கும் சம்பந்தம் உண்டென்று கண்டு மஹரிஷிகள் இன்ன இன்ன மாதிரி கிரஹங்கள் இருந்தால் இன்ன இன்ன பலன்கள் கிடைக்கும் என்று சொல்லி யிருக்கிறார்கள். ஒரு காரியம் ஆரம்பித்தால், அதன ஆரம்ப காலத்தின் கிரஹ ரீதிகளின் இருப்பிடம் அமைப்பை கொண்டு மேலே நடக்கும் பலன்களை சொல்லும் பாகத்திற்கு ‘ஹோரா ஸ்கந்தம்’ என்று பெயர். ஜன்ன காலத்தை ஆரம்பமாகக் வைத்துக் கொண்டு ஜாதகம் கணித்து வாழ்நாள் முழுவதற்க்கும் சுகதுக்க பலன்களை சொல்லி விடலாம்.

அடுத்து ‘ஸம்ஹிதா ஸ்கந்தம்’ என்ற பிரிவில் பூமிக்குள் ஜலம் எங்கே ஓடுகிறது? உள்ளே ஜலம் இருப்பதற்கு மேலே  என்னென்ன அடையாளம் இருக்கும் என்பவைகளை போன்ற பல விஷயங்கள் சொல்லப் பட்டிருக்கின்றன. வாசனை திரவியங்கள் செய்யும் விதம், வீடு கட்டும் அளவு, சகுண சாஸ்திரம், நிமித்த சாஸ்திரம் முதலியவை எல்லாம் இந்த ஸம்ஹிதையில் சொல்லப்பட்டுள்ளன.

சுருக்கமாக சொன்னால் மூன்று ஸ்கந்தங்களில் பொதுவாக கணிதத்தையும், கிரஹ கதிகளையும் சொல்வது ‘ஸித்தாந்த ஸ்கந்தம்’. தனித்தனியாக மனித னுடைய ஸுகதுக்க பலனைச் சொல்வது ‘ஹோராஸ்கந்தம்’ அல்லது ‘ஜாதகம்’. (‘ஹோரா’விலிருந்துதான் ஜாதகம் ‘ஹோரோஸ்கோப்’ எனப் படுகிறது.) அடுத்து மிச்சம் உள்ளவை எல்லாம் ‘ஸம்ஹிதா ஸ்கந்தம்’.

அடுத்து கல்பம்: வேத புருஷனுக்குக் “கல்பம்” என்ற ஆறாவது அங்கம் “கரம்” என்பார்கள்.

காரியத்தில் ஏவும் சாஸ்திரமே கல்பம். வேதத்தை அத்யயனம் பண்ணி, அதிலே உள்ள அக்ஷரங்களைப் பற்றிச் சிக்ஷையால் தெரிந்துகொண்டு, இலக்கணத்தை வியாக்கரணத்தால் அறிந்து, மீட்டர், அர்த்தம் என்பனவற்றை சந்தஸ், நிருக்தம் இவற்றால் தெரிந்துக் கொண்டு, ஜ்யோதிஷத்தின் மூலம் கர்மாக்களைச் செய்யும் காலத்தைத் தெரிந்து கொள்வதின் பிரயோஜனம் என்னவெனில், கல்பத்தில் சொல்லியுள்ள நல்ல கர்மாக்களை பண்ணுவதே.

எந்த கர்மாக்களை எப்படிப் பண்ணுவது, எந்தெந்த வருணத்தார் எந்தெந்தக் காரியங்களைச் செய்ய வேண்டும், எந்தெந்த ஆசிரமத்தார் எதை எதைச் செய்ய வேண்டும் என்பவைகளையும், எந்தக் கர்மாவுக்கு எந்த மந்திரம், திரவியம், தேவதை என்பவைகளையும், யக்ஞங்களில் எத்தனை ரித்விக்கு களை வைக்க வேண்டும், எந்தவிதமான பாத்திரங்களை உபயோகப்படுத்த வேண்டும் என்பவைகளையும், இவை போன்ற மற்றவைகளையும் சொல்வது கல்பம். நாம் ‘சடங்கு’ என்று சொல்வதையெல்லாம் கல்பமே வகுத்துக் கொடுக்கிறது. கல்பம் வேதத்தின் ஆறாவது அங்கமானதால் “ஷஷ்டாங்கம்” ஆகிறது. ‘ஷடங்கம்’ என்பதே ‘சடங்கு’ ஆயிற்று.

கல்பத்தில் ஒவ்வொரு சாகைக்கும் ‘க்ருஹ்ய ஸூத்ரம்’ என்றும், ‘ச்ரெளத ஸூத்ரமென்றும்’ இரண்டு வகை உண்டு. ச்ருதி எனப்படும் வேதத்திலேயே பூர்ணமாக வருகிற யக்ஞம் முதலானவையே ‘ச்ரெளதம் என்பவை. இவை விரிவாக செய்ய வேண்டிய பெரிய காரியங்களாகும். கிருஹத்திலேயே செய்யப்படுகின்ற மற்ற சின்ன வைதீக கர்மாக்களுக்கு ’க்ருஹ்யம்’ என்று பெயர். கர்ப்பம் உண்டாவது முதல் தேஹம் அக்னிக்கு ஹோமம் பண்ணப்படும் தகனக்கிரியை வரையில் செய்யப்படுகின்ற நாற்பது கிரியை வரையில் செய்யப்படுகின்ற நாறுபது கிரியைகளை இவ்விரு சூத்திரங்களும் சொல்லும்.

வீட்டில் செய்வது அக்னிஹோத்திரம். யாகசாலை போட்டுக் கொண்டு பண்ணுவது யக்ஞம். அக்னி ஹோத்திரத்தை ஆதாரமாகக் கொண்டு பண்ணும் ஏழு ஹவிர்யக்ஞம்; ஏழு ஸோமயக்ஞம்; ஏழு பாகயக்ஞங்கள் என்பதாக மொத்தம் 21 யக்ஞங்கள். இவற்றில் ஏழு ஹவிர் யக்ஞமும், ஏழு ஸோம யக்ஞங்களும் க்ருஹ்ய ஸூத்திரத்தில் வராது. இந்த பதினாலும் ச்ரெளத ஸூத்திர ஸூத்திரத்தில் வருவன. இவற்றையும் சேர்த்தே ஒருவன் செய்ய வேண்டிய நாற்பது கர்மாக்கள் உள்ளன. இவற்றை நாற்பது “ஸம்ஸ் காரம்” என்பர். ஸம்ஸ்காரங்கள் என்றால் தூய்மைப்படுத்துவது.

முந்தைய பாடபகுதியில் ஒருவர் செய்ய வேண்டிய நாற்பது கர்மாக்கள் உள்ளன. இவற்றை நாற்பது “ஸம்ஸ்காரம்” என்பர். ஸம்ஸ்காரங்கள் என்றால் தூய்மைப்படுத்துவது என்று பார்த்தோம். இந்த நாற்பது ஸம்ஸ்காரங்கள் என்னென்ன என்பதை குறித்து விரிவாக பின்னால் பார்க்க உள்ளோம்.

வேதசாகை

ஒரு ‘ஜீவன்’ கடைதேறுவதற்கு ‘வேதம்’ தெரிந்துக் கொள்ளவேண்டும். ‘அனந்தமானவேதங்கள்’ அனைத்தையும் தெரிந்து கொள்வது அடியோடு சாத்தியமில்லாத காரியமும் ஆகும். ஆகையால் எவ்வளவு தெரிந்துக் கொண்டால் ஒரு ஜீவன் ஸம்ஸ்காரம் பண்ணப்பட்டு, பரம்பொருளோடு கலப்பதற்கு போதுமோ அதையே ஒரு ‘சாகை’ என்று அனந்தமான வேதங்களிலிருந்துப் பிரித்துக் கொடுக்கிறது.

வேத சூட்சுமத்தை அறிந்த மஹரிஷிகள் பூமண்டலம் முழுவதும் சிஷ்யர்களுக்கு வேதம் கற்பித்தார்கள். ஆனால் காலம், இடம், நிலைகளுக்கேற்றவாறு வேதமொழிகளை சொல்வதிலும், அனுசரிப்பதிலும் சில வேற்றுமை போலுள்ள பேதங்கள் ஏற்பட்டன. அந்த வேற்றுமை யினாலோ, பேதத்தினாலோ வேதத்தின் பூர்ண ஞானத்திலோ, பலனிலோ எந்த குறைவும் இல்லாமல் ரிஷிகள் இதை செய்தனர். அவைகளையே ‘சாகை’ என்பார்கள்.

காலம், இடம், நிலைகளுக்கேற்றவாறு வேத மொழிகளை சொல்வதிலும், அனுசரிப்பதிலும் சில வேற்றுமை போலுள்ள பேதங்களை ரிஷிகள் செய்தனர். இங்கே நமக்கு ஒரு சந்தேகம் எழ வாய்ப்பு ஏற்படுகிறது. சந்தேகத்தை எழுப்பி அதற்கு பதிலையும் பார்த்து விட்டு மேலே செல்வோம்

சந்தேகம்: வேத அங்கங்களில் ‘சிக்ஷை’ பகுதியில் ஒரு அக்ஷ்ரம் தப்பினாலும் கூட விபரீத பலன் என்று சொல்லி விட்டு, ஒரே மந்திரமானது வெவ்வெறு சாகைகளில் வெவ்வெறு பிரதேசங்களில் வரும்போது பேதம் ஏற்படுகிறது என்றால் இதை ஏற்று கொள்வது சாத்திய மில்லையே! மூலரூபம் ஒன்று தான் என்றால், வித்தியாசத்தோடு இன்னொன்று வந்தால் கூட அது பலன் தராது தானே? அல்லது விபரீத பலன் தானே வரும்?

இப்படி ஒரு சந்தேகம் எழுந்தால் அதற்கான பதிலை பார்ப்போம். ஒரு மருந்துக்கு பதில் வேரொரு மருந்தை மாற்றி சாப்பிட்டால் விபரீதம் என்கிற மாதிரி தான், அக்ஷ்ரங்களை மாற்றுவதும். ஆனால் நோயையும், நோயாளியின் தேகவாக்கிலே இருக்கிற வித்தியாசத்தை நன்கு அறிந்த மருத்துவர் ஒரே வியாதிக்கு பல மருந்துகள் இருக்குமானால் நோயாளிக்கு தக்கவாறு மருந்துக்களை மாற்றி  கொடுப்பதில் தவறில்லை. அது போலவே காலம், இடம், நிலைகளுக்கு ஏற்றவாறு ஒன்றுக்கொன்று விபரீதம் பலன் உண்டாகாத சில வேற்றுமை போலுள்ள பேதங்களை சாகைகளில் வேதங்களை நன்கு அறிந்த ரிஷிகள் செய்துள்ளனர். மிக நெருங்கிய தொடர்புள்ள சப்தங்கள் இப்படி ஒன்றுக்கொன்று மாற்ற அனுமதிக் கப்படுகின்றன.

‘ப்ராதிசாக்யம்’ என்பதாக ஒவ்வொரு வேதசாகைக்கும் விஷேசமாகவும், வித்யாசமாகவும் உள்ள வேத சப்த ஸ்வரங்களை விரிவாக ஆராய்கிற நூல்களும் ஒவ்வொரு வேதத்திற்கும் உண்டு.

அடுத்து ஒவ்வொரு சாகைக்கும் சம்ஹிதை, பிராம்மணம், ஆரண்யகம், உபநிஷதம் என நான்கு பாகங்களும் முறையாக வகுக்கப்பட்டிருக்கும்.

ஒரு சாகையின் சம்ஹிதா அதாவது மந்திரங்களை அத்யயனம் பண்ணி, அந்த மந்திரங்களை வைத்துக் கொண்டு பிராம்மணத்திலுள்ள யக்ஞங்களை செய்து, அப்புறம்  கர்மத்திற்கும் ஞானத்திற்கும் பாலமாக அமைந்துள்ள ஆரண்யத்தில் சொல்லியுள்ள உபசானை வழியாக சித்தசுத்தி அடைந்து ஞான தத்துவமான உபநிஷதத்துகளை விசாரம் பண்ணி பிறகு உள்ளும், புறமும் ஒன்றாகி மோக்ஷ்(முக்தி) நிலையை அடைந்து விடுவதற்கு ஏற்ப ஒவ்வொரு சாகையும் வகுக்கப் பட்டுள்ளது.

பல மஹரிஷிகளின் மூலமாக லோகத்திற்கு வந்திருந்த 1180 சாகைகளில் இன்றைய கால கட்டத்தில் மிகவும் குறைந்த அளவே உள்ளது. மீதி அத்தனையும் காப்பாற்றபடாமல் காலத்தால் மறைந்து விட்டது. மீதமுள்ளது ஏறக்குறைய 17-க்கும் குறைவாகவே உள்ளது. அதுவும் பல சாகைகளும் முழுமையாக இல்லை. நான்கு வேதங்களிலும், ஒவ்வொரு வேதங்களிலும் இருந்த சாகைகள், இப்போது இருக்கும் சாகைகள் விலாவாரியாக மற்றொரு பதிவில் பார்ப்போம்.

ஒருவர் நான்கு வேதங்களில் ஒரு வேதத்திலுள்ள ஒரு சாகையை அத்யயனம் பண்ணினவர் களை ‘ஏகவேதி’ என்றும், ஒரு வேதத்தின் ஒரு சாகையை அத்யயனம் செய்தபின், இன்னொரு வேதத்தின், இன்னொரு சாகையை அத்யயனம் பண்ணினவர்களை ‘த்விவேதி’ எனவும், முறையே மூன்று வேதங்களின் மூன்று சாகைகளை அத்யயனம் பண்ணினவர்களை ‘த்ரிவேதி’ எனவும், முறையே நான்கு வேதங்களின் நான்கு சாகைகளை அத்யயனம் பண்ணினவர்களை ‘சதுர்வேதி’ எனவும் பெருமையுடன் புகழப்படுகிறார்கள்.

இன்றைய காலத்தில் ஒரு சாகையை கூட முழுமையாக அத்யயனம் பண்ணுகிறவர்கள்  அபூர்வமாகி விட்டது  ஆகவே நாம் வேதத்தை காப்பாற்ற கடமைப்பட்டவர்கள் ஆகையால் வேத அத்யயனம் பண்ணா விட்டாலும் வேதம் என்ன சொல்கிறது என்பதையாவது தெரிந்துக் கொள்ளவோம்.

உபாங்கங்கள, உப வேதங்கள:

நாம் இதுவரை பார்த்தது நான்கு வேதங்கள், வேதங்களின் ஆறு அங்கங்கள். நாலு வேதமும், ஆறு அங்கமுமான இந்த பத்தும் ஈஸ்வர ஸ்வரூபம் என்று சொல்லப்படுகிறது. இந்த பத்தும் போக வேத மதத்தின் பிரமாண நூல்கள் என்று கூறப்படும் பதினான்கு நூல்களில் இந்த பத்துப் போக மீதி நான்கு மீமாம்ஸை, ந்யாயம், புராணம், தர்ம சாஸ்திரம்.

சதுர் தசம் என்றால் பதினான்கு, சதுர் என்றால் நான்கு; தசம் என்றால் பத்து ஆகவே பதினான்கு தர்மப் பிரமாணங்களை “சதுர்தசவித்யா” என அறியப்கடுகிறது. இந்த பதினாலும் பிரமாண நூல்கள் என்றாலும் இவற்றில் வேதம் தான் தலைமை ஆனது. நாலு வேதங்களை மையமாக கொண்டு மற்ற பத்து வித்யைகளும் ஏற்ப்பட்டிருக்கின்றன. இந்த சதுர்தச வித்யைகளே பூர்ணமாக நம் மதத்திற்கு சாஸ்திரங்களாகின்றது. இது போக இன்னும் பிரமாண நூல்கள் நான்கு உள்ளன. அவைகள் உப வேதங்கள் என்று அறியப்படுகின்றது. அவைகளையும் சேர்த்துக் கொண்டால் பதினெட்டாகும். இந்த பதினேட்டும் ‘அஷ்டாதசம்’ என்று அறியப்படுகிறது. அஷ்டாதசம் என்றால் பதினெட்டு. இந்த அஷ்டா தச வித்யைகளில் அடங்காதது ஒன்றும் இல்லை. லோகத்திலுள்ள சகல வித்தைகளும் இந்த பதினெட்டு வித்தைகளுக்குள் அடங்கி விடும். இந்த பதினெட்டில் நேராக தர்மத்தைச் சொல்லுபவை முன்பு சொன்ன பதினான்கு மீதமுள்ள  உப வேதங்களான ஆயுர் வேதம், அர்த்த சாஸ்திரம், தனுர் வேதம், காந்தர்வ வேதம் ஆகிய நான்கும் நேராக தர்மத்தை சொல்பவன அல்ல. ஆயினும் இந்த நான்கும் அறிவை தருவதால் வித்யா ஸ்தானங்களாக மட்டும் உள்ளன. முன்பு சொன்ன பதினாலோ தர்ம ஸ்தானம், வித்யா ஸ்தானம் இரண்டாகவும் இருப்பவை.

தர்ம ஸ்தானம், வித்யாஸ்தானம் என்பதோடு இவற்றையெல்லாம் பொதுவில் “சாஸ்திரம்” என்கிறோம். “சாஸ்திரம்” என்பதற்கு அர்த்தம் “கட்டளையாக இடப்பட்டிருப்பது”. நம்மை ஒரு கட்டுப் பாட்டில், நெறியில் கொண்டு வந்து அடக்கி வைக்கிற கட்டளை புத்தகங்களே “சாஸதிரங்கள்” எனப்படுபவை.

உபாங்களில் (உப+அங்கம்) முதலாவதாக வருவது மிமாஸ்ஸை

மீமாம்ஸை என்ற வார்த்தைக்கு அர்த்தம் ‘பூஜித விசாரம்’ நல்ல விஷயத்தைப் பற்றிய விசாரணை அல்லது ஆராய்ச்சி.

எது “பூஜிதம்”? எது நல்ல விஷயம்? வேதம் தான்.

வேதத்தை விசாரித்து, ஆராய்ந்து, அர்த்தத்தை எடுத்துச் சொல்வது மீமாம்ஸை.

மிமாம்சை என்ற சொல்லுக்கு நேர்பொருள், முறையாக விசாரித்தல் அல்லது ஆராய்தல் என்பதாகும். அதாவது ஒன்றன் உண்மையையும், பொய்யையும் நமது அறிவைக்கொண்டு ஆராய்வது என்ற பொருளாகும். வேதம் கூறுவது எதுவும் பொய்யல்ல, வேதத்திலே கூறப்பட்ட எதையும் நமது சிற்றறிவைக் கொண்டு ஆராய வேண்டிய அவசியமில்லை. இருந்தும் ஆராய்ச்சி அல்லது விசாரணை என்று பொருள்படும் மீமாம்சை என்ற பெயர் ஏற்பட காரணம், அது வேதத்தில் கூறப்படுவன உண்மையா? பொய்யா? என ஆராய்கின்றன என்பது அல்ல; வேதத்திலே காணப்படும் விதிகளுக்கு நாம் கொடுக்கும் விளக்கம் சரியா? என்பதை ஆராய்வதில் பெரிதும் ஈடுபடுவதினாலேயே இப்பெயர் ஏற்பட்டது.

நிருக்தத்தில் வேதத்தின் வார்த்தைகளுக்கு மட்டும் அர்த்தம் கொடுத்திருக் கிறது, மீமாம்ஸையில் அப்படியில்லை. மந்திரங்களின் தாத்பரியம் என்ன? உத்தேசம் என்ன? என்று ஆராய்ச்சி பண்ணித் தீர்மானிப்பது மிமாஸ்சை  சாஸ்திரமே.

வேதத்தில் கர்ம காண்டம், ஞான காண்டம் என்று இரண்டு பாகம் உண்டு. கர்ம காண்டம் சாகைகளின் முதல் பாகத்தில் வருவதால் கர்ம காண்டத் திற்கு பூர்வ பாகம் என்றும், ஞான காண்டம் முடிவில் வருவதால் ஞான காண்டத்திற்கு உத்திர பாகம் என்றும் பெயர். மந்திரங்களின் தாத்பரியத்தை எடுத்து கூறும் மீமாம்ஸைக்கு முறையே பூர்வ மிமாம்ஸை, உத்திர மிமாம்ஸை என இரண்டு உண்டு.

இப்போது நாம் விளக்கம் பார்ப்பது பூர்வ மிமாம்ஸம். மிமாம்ஸை என்றாலே பொதுவில் குறிக்கப்படுவது பூர்வமிமாம்ஸையை தான். உத்திர மிமாம்ஸைக்கு “வேதாந்தம்” என்ற பெயர் பிரபலமாகி விட்டதால் ‘மீமாம்ஸை’ என்பது பூர்வ மிமாம்ஸைக்கே பெயர் மாதிரி ஆகி விட்டது.

ஒவ்வொரு சாஸ்த்திரத்திற்கும் ஸூத்திரம் – வாரத்திகம் – பாஷ்யம் என்று மூன்று உண்டு. மிமாம்ஸைக்கான ஸூத்திரத்தை செய்தவர் ஜைமினி மஹரிஷி. அதற்கு பாஷ்யகாரர் சபரஸ்வாமி என்பவர். வார்த்திககாரர் குமரிலப்பட்டர். குமரிலபட்டரின் “பாட்டதீபிகை” இந்த சாஸத்திரத்தின் மிக முக்கியமான நூலாக இருக்கிறது.

ஸூத்திரங்களுக்குள் ஜைமினியின் பூர்வமீம்ஸா ஸூத்திரமே மிக பெரிதாக இருக்கிறது. இதிலே பன்னிரண்டு அத்தியாயங்கள் உண்டு. ஒவ்வொரு அத்தியாயத்தையும் பல பாதங்களாகவும், ஒவ்வொரு பாதத்தையும் பல அதிகரணங்களாகவும் பிரித்திருக்கிறது. இப்படி ஆயிரம் அதிகரணங்கள் இருக்கின்றன. ஒவ்வோர் அதிகரணத்தில் ஒவ்வொரு விஷயமாக ஆயிரம் விஷயங்களை விசாரம் செய்வது பூர்வ மீமாம்ஸை. ஆயிரம் அதிகரணங்களை உடையதால் பூர்வ மீமாம்ஸைக்கு ‘ஸஹஸ்ராதிகரணி’ என்று பெயர் உண்டு.

வேதம் என்பது ஈஸ்வரன் உண்டாக்கிய சட்டம். ஆதிஅந்தமில்லாத நித்யமான சட்டம். நாம் பிரஜைகள், ஈஸ்வரன் நமக்கு அரசன். அவர் பல அதிகாரிகளை ஏற்படுத்தியிருக்கிறார். அவருடைய ராஜாங்கத்தில் இந்திரன், வாயு, வருணன், அக்னி, யமன், ஈசானன், குபேரன், நிர்ருதி முதலிய அஷ்ட திக் பாலர்களையும் இன்னும் பல தேவதைகளையும் லோகத்தை ஸம்ரக்ஷிக்கும் அதிகாரிகளாக நியமித்திருக்கிறார். அந்த அதிகாரிகள் பதினாலு லோகத்திலும் உள்ள ஜீவராசிகளாகிய பிரஜைகளை ரக்ஷிப்பதற்கு ஒரு சட்டம் வேண்டும் அல்லவா? அந்த சட்டம் தான் வேதம். அந்த வேதமாகிய சட்டத்திற்கு அர்த்த நிர்ணயம் பண்ணினவர் ஜைமினி. அதுதான் மிமாம்ஸை.

ஜைமினி மஹரிஷியின் ஸூத்திரங்களை விரிவாக விளக்குவது “சாபர பாஷ்யம்”. இந்த பாக்ஷ்யத்திற்கு வழி நூல் செய்தவர் இருவர் ஒருவர் பெயர் குமாரிலபட்டர். மற்றவர் பெயர் பிரபாகரர். ஒன்றாயிருந்த மிமாம்ஸை இவர்கள் இருவருடைய கருத்து வேறுபாட்டால் இரண்டுப்பட்டது. சபரி முனிவர் செய்த பாஷ்யத்தை ஆதரியாது வழி நூல் செய்தார் குமாரிலபட்டர். சபர முனிவரது பாஷ்யத்தை ஆதரித்து வழி நூல் செய்தார் பிரபாகர். இதன் விளைவாக்க் குமரிலபட்டரைப் பின்பற்றிப் பாட்ட மீமாம்ஸம் எனவும், பிரபாகரரைப் பின்பற்றிப் பிராபாகர மீமாம்ஸம் எனவும் மீமாம்ஸம் இருவகைப்பட்டது.

மீமாம்ஸத்தை குறித்து இன்னும் விரிவாக தனி கட்டுரையாக பார்க்க உள்ளோம். அதில் “ஸாங்கியம்” பற்றியும் விரிவாக பார்க்க உள்ளோம்.

உபாங்கத்தில் இரண்டாவதாக உள்ள நியாயம் என்கிற யுக்தி சாஸ்திரத்தின் சிறு விளக்கம் பார்க்கலாம்.

நியாயம்: ந்யாய சாஸ்திரம் தர்க்க சாஸ்திரம் என்றும் வழங்கும். இது கெளதம மஹரிக்ஷியால் செய்யப்பட்டது. இதன் முக்கிய உத்தேசம், இந்த உலகத்துக்கெல்லாம் கர்த்தா பரமேஷ்வரன் தான் என்பதை யுக்திகளைக் கொண்டு தீர்மானிப்பதுதான். ஆகவே இது யுக்தி பிரதான சாஸ்திரம். வேதம் ஒரு விஷயத்தை சொல்கிறது. அதனுடைய அர்த்ததை மீமாம்ஸை நிர்ணயிக்கிறது. வேதம் சொன்னதை பல யுக்திகளைக் கொண்டு தீர்மானப்படுத்தினால் அந்த தீர்மானம் த்ருடமாயிருக்கும். இப்படி யுக்தி களைக் கொண்டு வேதார்த்தத்தை நிர்ணயம் பண்ணுவதைத் தான் “ந்யாயம்”. இந்த சாஸதிரம் கெளதம மஹரிஷியால் செய்யப்பட்டது என்று பார்த்தோம். கணாதர் என்பவர் ஒரு விதமான ந்யாய சாஸ்திரம் பண்ணியிருக்கிறார். அது “வைசேஷிகம்” என்று சொல்லப்படும்.

நாலு பிரமாணங்களை வைத்துக் கொண்டு உண்மையை ஆராய்கிறது நியாய சாஸ்திரம். அவை ‘பிரத்யக்ஷம்’, ‘அனுமானம்’, ‘உபமானம்’, ‘சப்தம்’ என்பவையாகும்.

பிரத்யக்ஷமாகக் கண்ணால் பார்ப்பது, காதால் கேட்பது, முதலியனத்தான் முதலில் சொன்ன பிரத்யக்ஷப் பிரமாணம்.

அடுத்து வருகிற அநுமானம் என்ற பிரமாணந்தான் நியாயத்துக்கு ரொம்பவும் முக்கியமானது.

அநுமானம் என்பது என்ன? தூரத்தில் மலையிலே புகை தெரிகிறது. புகை மட்டும் தான் தெரிகிறது. நெருப்பு தெரியவில்லை. முன்னே இருக்கிற பாறைகள் நெருப்பை மறைக்கின்றன. அதனால் மேலே புகை மாத்திரம் தெரிகிறது. ஆனாலும் நாம் நம் கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் மலையிலே இருக்கிற காட்டில் நெருப்புப் பிடித்துக் கொண்டிருக்கிறது என்று ஊகித்து விடுகிறோம். இது தான் அனுமானம் என்பது.

பிரத்யக்க்ஷ, அநுமானங்களோடு ந்யாயம் சொல்லுகிற மற்ற இரு பிரமாணங் கள் உபமானமும், சப்தமும் ஆகும்.

உபமானம் என்பது என்ன? நமக்குத் தெரியாத ஒன்றைத் தெரிந்த ஒன்றின் ஒப்புவமையால் தெரிந்து கொள்வது. சாஸ்திரத்தில் கூறும் உவமையையே உதாரணமாக எடுத்து கொள்ளலாம். ‘கவயம்’ என்று ஒரு மிருகம் இருக்கிறது. அது எப்படி இருக்கும் என்று நமக்கு தெரியவில்லை. காட்டெருமை மாதிரி ஒன்று அது; பார்த்தால் மாடு மாதிரியே இருக்கும் என்று அதைப்பற்றி சொல்லி கேள்விப்பட்டிருக்கிறோம். நாம் எங்கயோ காட்டுப் பக்கம் போகிறோம். அங்கே இப்படி மாடு மாதிரியான ஒரு மிருகத்தைப் பார்க்கிறோம். இது தான் கவயம் என்று தெரிந்து கொள்கி றோம். ‘உபமானம்’ என்பது இதுவே.

சப்தப் பிரமாணம் என்பது வாக்கு ரூபமான வேதப்பிரமாணமும், ஸத்துகளான பெரியவர்களின் வாக்குமாகும். நமக்குத் தெரியாத விஷயங்களை வேதமும், மஹான்களும் சொல்லும் போது அதிலே பொய்யே இருக்காது என்று பிரமாணமாக எடுத்துக் கொள்ள வேண்டும். “வேதம் ஈஸ்வர வாக்கு” என்பதே ந்யாயிகர்களின் கருத்து. அதனால் அது பிரமாணம். ஸத்ய ஸந்தர்களாக இருக்கப்பட்ட மஹான்கள் சொல்வதும் சப்த பிரமாணத்தில் சேர்க்கப்பட வேண்டியது.

“ந்யாயம்” மற்றும் “வைசேஷிகம்” சாஸ்திரங்கள் தனி கட்டுரையாக விரிவாக பார்க்க உள்ளோம்.

அடுத்து உபாங்கமான புராணம் பற்றி சுருக்கமாக பார்ப்போம்.

புராணம்: புராணம் என்பது வேதத்துக்கு பூதக்கண்ணாடி. சின்னஞ்சிறியதாக இருப்பதை பூதக்கண்ணாடி நன்றாக பெரிசுப் பண்ணிக் காட்டுகிறதல்லவா? அதுபோல் வேதத்தில் சுருக்கமாக, சின்னச்சின்னதாக போட்டிருக்கிற தர்ம விதிகளை கதைகள் மூலம் பெரிசு பண்ணிக் காட்டுவது தான் புராணம்.

நம் தேசத்தில் சரித்திரம் இல்லை என்று ஒரு குறை சொல்லப்படுகிறது. புராணம் சரித்திரம் தான். புராணமும் சரித்திரம் தான் என்றாலும் அது பாப- புண்ணியங்களில் ஜனங்களுக்குப் பாடம் கற்பித்து அவர்களை தர்மத்தில் செலுத்தும்படியான வரலாறுகளை மட்டும் தேர்ந்நெடுத்துக் கொடுக்கிறது.

வேதத்தில் இருப்பதை எல்லோருக்கும் நன்றாக விளங்க வைப்பதற்காக, வேதங்களை வகுத்து கொடுத்த அதே வேத வியாசர் பதினெட்டு புராணங்களை உபகரித்தார். நாலு லக்ஷம் கிரந்தங்களில் வியாசர் இந்த பதினெட்டு பிராணங்களை எழுதியிருக்கிறார். ஒரு கிரந்தம் என்பது முப்பத்து இரண்டு எழுத்துக்களைக் கொண்ட ஸ்லோகம். இந்த நாலு லக்ஷத்தில் கால் வாசியான ஒரு லக்ஷம் கிரந்தத்தை “ஸ்கந்த புராண”மே எடுத்துக் கொண்டுள்ளது. இது தவிர லக்ஷம் கிரந்தம் கொண்ட மஹாபாரதத்தையும் வியாசர் உபகரித்திருக்கிறார். வேதத்திலுள்ள விதிகளை எல்லோருக்கும் நன்றாக மனஸிலே ஆழமாகப் பதிய செய்வதற்காக புராணங்களை அநுக்ரஹித்தார். இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. வேதத்தை அத்ய்யனம் பண்ணும் அதிகாரம் சிலருக்குத்தான் இருக்கிறது. மற்றவர்களுக்கு இல்லை. அதனால் அப்படிப்பட்ட ஜனங்களுக்கு வேத தத்வார்தங்கள் தெரிய வேண்டும் என்றே புராணங்களை வியாசர் எழுதினார் என்பதே அந்த காரணம்.

வேத வியாசரின் பதினெட்டு புராணங்களை “அஷ்டாதச புராணம்” என்பார்கள். ஒவ்வொரு தேவதா மூர்த்தியைப் பற்றியும் ஒவ்வொரு புராணம் சொல்லும்.

பதினெட்டு புராணங்கள் என்னென்ன என்று பார்ப்போம்.

பிரம்ம புராணம், பத்மபுராணம், விஷ்ணு புராணம், சிவ புராணம், பாகவதம், நாரத புராணம், மார்கண்டேய புராணம், அக்னி புராணம்,  பவிஷ்ய புராணம், பிரம்ம வைவர்த்த புராணம், லிங்க புராணம், வராஹ புராணம், ஸ்காந்த மஹா புராணம், வாமன புராணம், கூர்ம புராணம், மத்ஸ்ய புராணம், கருட புராணம், பிரம்மாண்ட புராணம் என்பவை பதினெட்டுப் புராணங்கள்.

‘விஷ்ணு புராணம்’ பண்ணியவர் பராசரர் என்றாலும், பதினெட்டுப் புராணங் களையும் நாம் பார்க்கின்ற ரூபத்தில் சரி பண்ணி எழுதிக் கொடுத்தது வியாசர் தான்.

இப்போது ஒவ்வொரு தெய்வங்களுக்கும் நாம் சொல்லும் அஷ்டோத்திரம், ஸஹஸ்ரநாமம், கவசம், முதலானவைகள் பெரும்பாலும் புராணங்களில் வருகிறவைத்தான். விஷ்ணு ஸஹஸ்ரநாமம், சிவ ஸஹஸ்ரநாமம் இரண்டுமே மஹாபாரதத்தில் வருபவை. அனேக ஸ்தோத்திரங்களும் இவற்றிலிருந்தே நமக்குக் கிடைக்கின்றன. “ஆதித்ய ஹிருதயம்” ஶ்ரீமத் இராமாயணத்தில் வருவது. “ப்ரதோஷ ஸ்தோத்ரம்” ஸ்காந்தத்தில் வருகிறது. இப்படி அனேகம்.

பதினெட்டு புராணங்களை தவிர உப-புராணங்களும் இருக்கின்றன. “விநாயக புராணம்”, “கல்கி-புராணம்” முதலியவை உப-புராணங்கள்.

மாஸங்களின் மகிமையை சொல்லுகின்ற துலாபுராணம், மாக புராணம், வைசாக புராணம் என்றெல்லாம் இருப்பவை பதினெட்டு புராணங்கிளிலும், உப-புராணங்களிலும் அடங்கியிருக்கிற சில பகுதிகளே.

அடுத்து ஸ்தல புராணங்கள் என்று ஒவ்வொரு க்ஷேத்திரத்திற்கும் இருக்கிறது. இவற்றில் பல முன்னே சொன்ன புராணங்களிலும், தனி ஸ்தல புராணமாகவும் இருப்பவை.

மேலும் பகவானைப் பற்றிய புராணங்களை தவிர பக்தர்களைப் பற்றியதான புராணங்களும் இருக்கின்றன. “பெரிய புராணம்” என்ற திருத்தொண்டர் புராணம் சிவனடியார்களான அறுபத்தி மூன்று நாயன்மார்களின் கதைகளை சொல்வது. இதுவே ஸம்ஸ்கிருதத்தில் “உபமன்யு பக்தி விலாஸம்” என்ற பெயரில் இருக்கிறது. பண்டரீபுரத்திலுள்ள பாண்டுரங்கனிடம் விஷேச பக்தியில் ஈடுபட்டிருந்த துகாராம், நாமதேவர் முதலானோர்களின் சரித்திரத்தைச் சொல்வதாக “பக்த விஜயம்” என்ற நூல் இருக்கிறது. வட தேசத்து பக்தர்களைப் பற்றி நாபா தாஸ் என்பவர் “பக்த மாலா” என்று எழுதி யிருக்கிறார். இது போன்று ஏராளமான பக்த புராணங்களும் இருக்கின்றன.

மேலும் இராமாயணமும் மகாபாரதமும் நம் தேசத்தில் பாமர-பண்டித பேதமின்றி எல்லோருக்கும் யுகாந்திரமாக நல்ல வழியைக் காட்டி வந்திருக்கின்றன. இந்த இரண்டையும் புராணங்களோடு சேர்க்காமல் தனி ஸ்தானம் கொடுத்து “இதிஹாஸ”ங்கள் என்று வைத்திருக்கிறது.

‘புரா’ என்றால் “பூர்வத்தில்” என்று அர்த்தம். பூர்வத்தில் நடந்ததை சொல்பவை பராணங்கள். புராணம் என்று இருந்தால் அது சொல்ல வேண்டிய விஷயங்கள ஐந்து, ஒன்று, ஸர்க்கம் (ஆதியில் நடந்த சிருஷ்டி). இரண்டு, ப்ரதி ஸர்க்கம் (அப்புறம் அந்த சிருஷ்டி யுகங்கள் தோறும் கவடு விட்டுக் கொண்டு பரவியது). மூன்று வம்சம் (பிரம்ம புத்திரர்களிலிருந்து ஆரம்பித்து ஜீவகுலம் எப்படி தலைமுறை தலைமுறையாக வந்தது என்ற விஷயம்). நான்கு, மன்வந்திரம் (ஆயிரம் சதுர் யுகங்களில் லோகம் பூராவுக்கும் மநுஷ்யகுல முன்னோர்களாக இருக்கப்பட்ட பதினாலு மனுக்களின் காலத்தைப் பற்றிய விஷயங்கள்). ஐந்தாவது, வம்சாநுசரிதம் (தேசத்தை பரிபாலித்த ராஜாக்களின் வம்சாவளி; ஸூர்ய வம்சம், சந்திரவம்சம் என்பது போன்ற வம்சங்களின் விவரம்). இன்னும் பூகோள வர்ணனை, ககோள(வான மண்டலம்) வர்ணனை என்பதாக லோகங்களை பற்றி விரிவாக வர்ணிக்க வேண்டும். இங்கே புராணம் என்பது சரித்திரமாக மட்டுமின்றி நிலவியல், வானவியல் போன்ற அறிவு நூலாகவும் புராணம் ஆகிறது.

சென்ற பகுதியில் புராணம் என்பது சரித்திரமாக மட்டுமின்றி நிலவியல், வானவியல் போன்ற அறிவு நூலாகவும் புராணம் ஆகிறது எற்று பார்த்தோம். அடுத்து இதிஹாஸம் என்பது இதி-ஹ-ஆஸம். இதி-ஹ-ஆஸம் என்றால் இப்படி நடந்தது என்று அர்த்தம். “இதி ஆஸம்” என்றாலே ‘இப்படி நடந்தது என்றாலும், நடுவிலே ஒரு ‘ஹ’ போட்டிருக்கிறது. ‘ஹ’ வுக்கு ‘நிச்சயமாக’, ‘வாஸ்தவமாக’, ‘ஸத்தியமாக’ என்று அழுத்தம் கொடுக்கிற அர்த்தமுண்டு. கொஞ்சம் கூடப் பொய் கலக்காமல் உள்ளது உள்ளப்படியே எழுதினது ‘இதிஹாஸம்’ அது எழுதப்பட்ட காலத்திலேயே நடந்தது. ராமர் இருந்த போதே வால்மிகி இராமாயணத்தை எழுதினார். பஞ்ச பாண்டவர்கள இருந்த போதே வியாசாரியாள் கூட இருந்து பாரதத்தில் வரும் சம்பவங்களை எல்லாம் நேரில் பார்த்தவர். மஹாபாரதம், இராமாயணம் பிரசரமான போது லோகத்தில் இருந்தவர்களுக்கே அவற்றிலுள்ள அநேக பாத்திரங்களையும், சம்பவங்களையும் தெரியும். அதனால் தான் இவற்றில் நிஜம்தானா என்று நாம் சந்தேகபடுவதற்கு இடமே இல்லை என்பதைக்காட்ட ‘இதி-ஹ-ஆஸம்’ என்று “ஹ” போட்டு உறுதிப்படுத்தியிருக்கிறது.

இதி-ஹ-ஆஸம் என்றால் இப்படி பெரியோர்கள் சொல்கிறார்கள் என்றும் பொருள் கொள்ளப்படுகிறது.

‘இதி’ என்ற வேர் சொல்லிலிருந்தே ‘ஐதிஹ்யம்’ என்ற சொல் வந்திருக்கிறது. நேரே நடப்பதை வைத்துக் சொல்லாமல், இப்படியிருந்தது என்ற நம்பிக்கை யின் மேல் எடுத்து கொள்வதே ‘ஐதிஹ்யம்’. ‘ஐதீகம்’ என்று தமிழில் அதை தான் சொல்கிறோம். அதாவது ‘மரபு அல்லது tradition’. நமக்கு நீண்டக் காலத்திலிருந்தே அனுஸரிக்கப்பட்ட ஒன்று நாமும் அதைப் பின்பற்ற வேண்டும் என்பதே ஐதீகம்.

புராணங்களை வேதத்துக்கு உபாங்கமாகச் சொன்னால் இதிஹாஸங் களையோ வேதத்துக்கு சமானமாகவே உயர்த்தி சொல்லியிருக்கிறது. மஹாபாரதத்தை ‘பஞ்சமோ வேத:’ ஐந்தாவது வேதம் என்று சொல்லியிருக் கிறது. இராமாயணத்தைப் பற்றி, “வேதத்தால் அறியத்தக்க பரம்புருஷன் தசரதனின் குழந்தையாக அவதாரம் பண்ணியவுடன் அந்த வேதமும் வால்மீகியின் குழந்தையாக அவதாரம் பண்ணிவிட்டது” என்று சொல்லி இருக்கிறது.

வேதவேத்யே பரே பும்ஸி

ஜாதே தசரதாத்மஜே|

வேத: ப்ராசேதஸாதாஸீத்

ஸாக்ஷாத் ராமாயணத்மனே||

பிரசேதஸின் பிள்ளையானதால் வால்மிகிக்குப் பிராசேதஸ் என்று பெயர்.

அடுத்து ஒவ்வொரு தெய்வங்களை குறித்தாக ஒவ்வொரு புராணங்கள் இருக்கின்றன. அந்தந்த புராணங்களில் அந்த புராணத்தில் உள்ள தெய்வங்களை முழு முதற்கடவுளாக சொல்கிறது.  இது எப்படி? எதற்காக இப்படி இருக்க வேண்டும்?

ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் ஆகிய சகலத்தையும் செய்கிற பரமாத்மா ஒன்றே தான் இருக்கிறது. அதுவே தான் இத்தனை தெய்வங்களாகவும் ஆகி இருக்கிறது. எதற்காக? இந்த லோக வியாபகாரம் சரி சமமாக இயங்க வேண்டுமாகையால் எல்லா ஜனங்களையும் ஒரே மாதிரி படைக்காமல் பல தரப்பட்ட மனோபாவ வித்தியாசங்களோடு பரமாத்மா சிருஷ்டித்திருக்கிறார். இந்த ஒவ்வொரு மனோபாவத்துக்கும் பிடித்த மாதிரி பரமாத்மாவும் ஒவ்வொரு ரூபத்தை எடுத்துக் கொண்டால் தான் அவரவரும் தங்களுக்குப் பிடித்ததை இஷ்ட தேவதையாகக் கொண்டு உபாஸித்து நல்ல கதியைப் பெறமுடியும். அதற்காகத் தான் ஒரே பரமாத்மா பல தெய்வ ரூபங்களை எடுத்துக் கொள்கிறது.

ஒரு நல்ல காரியம் நடக்க வேண்டுமானால் அதை மூன்று தினுசுகளில் நடக்குமாறு பண்ணலாம். ராஜாங்கம் உத்திரவு போடுவது போலக் கட்டளை செய்வது ஒன்று. இதற்கு பிரபு ஸம்மிதை என்று பெயர். பிரபுவான யஜமானன் வேலைகாரனுக்கு ஆர்டர் பண்ணுவது போல சொல்வது பிரபு ஸம்மிதை, பண்ணா விட்டால் தண்டனை உண்டெயென்று, பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் பயத்தோடு கட்டளைப் பிரகாரம் காரியத்தைப் பண்ணியாக வேண்டும்.

இப்படி அதிகார ஸ்தானத்திலிருந்து கொண்டு உத்திரவாகப் போடாமல் ஒரு சிநேகிதன் நம்மிடம் ஒரு காரியத்தைச் செய்யச் சொன்னாலும் செய்கிறோம். இங்கே பயம் இல்லை. அன்பாலே செய்கிறோம். நமக்கு நல்லதையே நினைக்கும் சிநேகிதன் அவன் என்ற நம்பிக்கை இருப்பதால் செய்கிறோம். இப்படி நம்மிடம் நல்ல மனஸ் உள்ள சிநேகிதனுக்கு ‘ஸுஹ்ருத் ஸம்மித்’ என்று பெயர். அதனால் நம் ஸகா மாதிரியான ஸ்தானத்திலிருந்து கொண்டு நம்மை நல்ல காரியத்தில் ஏவுவது “ஸுஹ்ருத் ஸம்மிதை”.

இதை விடவும் சுலபமாகத் காரியத்தைச் சாதித்து தர வல்லது எது என்றால்  பத்தினியின் பிரிய வசனம் தான். யஜமானனின் உத்தரவு பாரமாக இருக்கிற தென்றால், அதையே சிநேகிதன் சொல்லும் போது லகுவாகிறது. இதை விடவும் லேசாகி விடும், அதையே பத்தினி சொல்கிற போது. இது மாதிரி ரம்மியமாக ஒன்றைச் சொல்லியே செய்யப்பண்ணுவது ‘காந்தா ஸம்மிதை. காந்தா என்றால் பத்தினி என்று பொருள்.

வேதம் பிரபு ஸம்மிதை, புராணங்கள் ஸுஹ்ருத் ஸம்மிதை, காவியங்கள் காந்தா ஸம்மிதை

அடுத்து ஸ்தல புராணங்கள தான் பதினெட்டு மஹாபுராணங்களை விடவும், உப புராணங்களை விடவும், இதிஹாஸங்களை விடவும் நம்முடைய சரித்திரம், பண்பாடு,பிரதேசவழக்கங்கள் முதலியவற்றை அறிய உதவுகிறது.

வேதம் சொல்லும் பரமாத்ம தத்வத்தையும் தர்மங்களையும் நன்னெறி களையும், ஒழுக்கங்களையும் ஸகல ஜனங்களுக்கும் விளக்கி சொல்லி ரஸிக்கும்படியான கதைகளாக சொல்லி அவர்கள் அவற்றைப் பற்றி யொழுகும்படிச் செய்திருப்பது புராணத்தின் சக்தியினால் தான். இதயத்தில் தொடும் விதத்தில் உபதேசம் பண்ணுபவை அவை. நம்முடைய ஜனங்களின் தொன்றுதொட்டு வந்த நற்பண்புகளுக்கு முதுகெலும்பு புராணம் தான். ஆகையால் இப்போது அதனிடம் நமக்கு இருக்கும் அசட்டை மனபான்மையை மாற்றிக் கொண்டு, அதை ஒரு செல்வமாக மாற்றுவோம். பல புராணங்களையும் ஒன்று சேர்த்து ஒப்பிட்டு ஆராய்ச்சிகள் செய்வோம்; இதனால் நாம் பயனடைந்து லோகத்துக்கும் பயனைத் தருவோம்.

வேதம் தோன்றியது தானாக உண்டான

அநுபவம். அதிலிருந்து ரிஷிகள் நினைவால் உண்டாக்கியது தர்ம சாஸ்திரம் எனப்படும் ஸ்மிருதிகள். தர்ம சாஸ்திரம்(ஸ்மிருதி):

நம் மதம் சொல்கிற படி நடந்து கொண்டு, பாபங்களை களைந்து ஜீவாத்மாவை சுத்தப்படுத்திக் கொண்டு செளக்கியமான மோக்ஷத்தை அடைய வேண்டுமானால் என்னென்ன காரியங்கள் பண்ண வேண்டும்? நம் மனஸை, குணத்தை பாபத்தில் போகாதப்படி உசத்திக் கொள்ள வேண்டும். இதற்கு நாம் செய்ய வேண்டியது என்னென்ன? இது நமக்கு தெரியவில்லை.. இந்த புராண, இதிஹாஸங்கள் பக்தியைப் பிரதானமாகச் சொல்கின்றன. ஆகையால் நமக்கு பக்தியை மட்டும் செய்வது என்பது நடைமுறை சாத்தியமில்லை. குடும்பத்திற்காக நாம் அனேக காரியங்கள் செய்ய வேண்டும். ஆகவே நமக்கு வேறு ஸத்கர்மங்கள் வேண்டும். அவற்றை எங்கிருந்து தெரிந்து கொள்வது என்றால் “தர்ம சாஸதிரங்களி”லிருந்து தான்.

பதினாலு வித்யைகளில் புராணத்திற்குப் அப்புறம் கடைசியாக வருவது இந்த தர்ம சாஸ்திரமே. புராண புருஷர்கள் நமக்கு லக்ஷ்யத்தை காட்டுகிறார் கள். அந்த லக்ஷ்யத்தை அடைவதற்கு வழி கர்மானுஷ்டத்தால் தான் ஆரம்பிக்க வேண்டும். இப்படி நடைமுறையில் செய்ய வேண்டியதை யெல்லாம் சொல்வது தர்ம சாஸ்திரம்.

நாம்என்னென்ன செய்ய வேண்டும் என்று வேதத்தில் அங்கெங்கே உதரியாக சொல்லியிருக்கிறவற்றையெல்லாம் நன்றாக வகைப்படுத்தி சொல்கிற உபாங்கம் தான் தர்மசாஸ்திரம்.

ஆத்ம ஷேமத்துக்காக நாம் என்ன செய்ய வேண்டுமோ அதிலேயே லோக ஷேமத்தையும் பயனாக ஏற்படுத்தித் தந்திருப்பது வேதம். தனி மனிதன் தன் சிரேயஸுக்காக பண்ண வேண்டியதிலேயே ஸமூக வாழ்க்கையின் ஒழுங்கும், லோக ஷேமமும் சேரும்படி இணைத்து கொடுத்திருக்கிறது. ஆத்ம ஷேமமும், லோக ஷேமமும் ஏற்பட எது உதவுகிறதோ அது “தர்மம்”. அந்த தர்ம மூலமாக இருப்பது வேதம். “வேதோ (அ)கிலோ தர்ம மூலம்” என்று மநு சொல்கிறப்படி வேதந்தான் நாம் என்னென்ன செய்யவேண்டும் என்ற நெறிகளுக்கும், காரியங்களுக்கும் மூலமாக, வேராக, ஊற்றாக இருக்கிறது.

இப்படி இருக்கிற வேதங்களிலிருந்து தான் கல்பம் என்கிற ஆறாவது வேதாங்கத்தில் உள்ள தர்ம ஸூத்திரங்களும், க்ருஹ்ய ஸூத்திரங்களும், ச்ரெளத ஸூத்திரங்களும் ஒருத்தன் பண்ண வேண்டிய கர்மாக்களைத் திரட்டி ஒழுங்குப்படுத்திக் கொடுத்திருக்கின்றன. ஆனால் இதுவும் சுருக்கமாகத் தான் இருக்கிறது, எல்லா அமசங்களையும் ஒரே இடத்தில் சொல்வதாகவும் இல்லை. இவையும் விரிவான செயல் முறையாக இல்லை இவற்றை சந்தேகத்துக்கு இடமில்லாமல் விவரித்து சொல்வது தான் தர்ம சாஸ்திரங்கள்.

தர்ம ஸூத்திரங்கள (ஆபஸ்தம்பர், கெளதமர், முதலானவர்கள் செய்தவை) சிறிய, சிறிய வாசகங்களாக ஸூத்ர லக்ஷ்ணப்படி இருக்கும். ஸூத்ரம் என்றால் ரத்ன சுருக்கமாகத்தான் இருக்க வேண்டும். தர்ம சாஸ்திரங்கள் என்கிற ஸ்மிருதிகள் (மநு, யாக்ஞவல்கியர், பராசரர் முதலானவர்கள் செய்தவை) சுலோக ரூபத்தில் விரிவாக இருக்கும்.

ஸமுத்திரம்  மாதிரி விரிந்து கிடக்கிற வேதங்களை எல்லாம் நன்கு அறிந்து இருந்த மஹரிஷிகள் வேதங்களிலிருந்து நமக்கு வேண்டிய காரியங்களை தேர்ந்தெடுத்து ஸ்மிருதிகள் என்று செய்திருக்கிறார்கள். அந்த ‘ஸ்மிருதிகள் தான் தர்ம சாஸதிரம்’.

வேதோ(அ)கிலோ தர்ம்மூலம்| தத்விதாம் ச ஸ்ம்ருதிசீலே|

“ஸ்மிருதி” என்றால் நினைவு குறிப்பு. வேதங்களை எல்லாம் நன்றாக உணர்ந்த மஹரிஷிகள், அவற்றிலுள்ள தர்மங்களையும், கர்மங்களையும் நன்றாக நினைவுப் படுத்தி ஒரே இடத்தில் தொகுத்து முறைப்படுத்திக் குறிப்பாக எழுதி வைத்தவையே ஸ்மிருதி.

தர்ம சாஸ்திரம் என்று சொல்வது இந்த ஸ்மிருதிகளைத் தான்.

ஒரு ஜீவன் கருவாக மாதாவின் கர்ப்பத்தில் உருவாவதிலிருந்து, அது பிறந்து வளர்ந்து, கல்யாணம் பண்ணிக் கொண்டு, குடும்பம் நடத்தி, கடைசி யில் சிதையில் வைத்து தகனம் செய்யப்படும் வரையில் இப்படியிப்படிச் செய்ய வேண்டும் என்று நுணுக்கமாக சொல்பவையே ஸ்மிருதிகள்.

மநு, பராசரர், யாக்ஞவல்கியர், கெளதமர், ஹாரிதர், யமன், விஷ்ணு, சங்கர், லிகிதர், பிருஹஸ்பதி, தக்ஷன், அங்கிரஸ், பிரசேதர், ஸம்வர்த்தர், அசனஸ், அத்ரி, ஆபஸ்தம்பர், சாதாதபர் என்றிப்படிப் பதினெட்டு மஹரிஷிகள் தங்களுடைய அதிமானுஷ்ய சக்தியால் வேதங்களை முழுக்கத் தெரிந்துக் கொண்டு அதிலிருந்து தொகுத்து தர்ம சாஸ்திரங்களைத் தந்திருக்கிறார்கள். இவை மநு ஸ்மிருதி, பராசர ஸ்மிருதி, யாக்ஞவல்கிய ஸ்மிருதி என்று அவரவர் பெயரால் வழங்குகின்றன.

இந்த பதினெட்டு ஸ்மிருதிகளை தவிர, உப ஸ்மிருதிகள் என்று பதினெட்டு துணை நூல்கள் இருக்கின்றன.

இப்படி அனேகம் ஸ்மிருதிகள் இருப்பதால் இவற்றிலும் ஒன்றிலிருப்பது இன்னொன்றில் இல்லாமல் இருக்கலாம். சில, சில காரியங்கள ஒன்றுக்கு ஒன்று வித்தியாசப்படலாம். இக்குறைகளை தீர்க்க “தர்மசாஸ்திர நிபந்தன”ங் கள் என்று சில நூல்கள் இருக்கின்றன.

ஸ்மிருதிகளில் ஒன்றுக்கொன்று முரணாக இருப்பவைகளை விவஸ்தை செய்து இதிது இப்படிதான் என்று நிர்ணயமும் செய்து ஸகலத்தையும் எழுதி வைத்திருப்பது நிபந்தனா கிருந்தங்களில்தான். இப்படி நம் தேசத்தில் ஒவ்வொரு பிரதேசங்களிலும் ஒவ்வொரு நிபந்தனா கிரந்தங்களை அனுசரிக் கிறார்கள்.

மேலும் இந்த தர்ம சாஸ்திரங்களை நம்முடைய இக்கால கொள்கைக்கு ஏற்றப்படி மாற்றுவது என்பது விதிக்கு புறம்பானது. காரணம் இந்த  ஸ்மிருதி கள் அவற்றை செய்தவர்களின் சொந்த அபிப்பிராயமே இல்லை. ஏற்கனவே வேதங்களில் சொல்லியிருந்தவற்றையேதான் அவர்கள தொகுத்து கொடுத் திருக்கிறார்கள். வேத வாக்கை ஒரு காலும் எந்த சந்தர்ப்பத்திலும் மாற்றக் கூடாதாகையால், இந்த தர்ம சாஸ்திர விதிகளையும் மாற்றுவதற்கே இல்லை.

ச்ருதி-ஸ்மிருதிகளுக்கிடையே பேதம் கற்பிப்பது தப்பு. ச்ருதி-ஸ்மிருதி- புராணம் மூன்றும் ஒரே மரபு தான். வேதத்திலே வ்யக்தமாக (வெளிப்படையாக)ச் சொல்லாமல் ஸ்மிருதிகளில் சொல்லியுள்ள அனுஷ்டா னங்களை ஸ்மார்த்த கர்மா என்றும், வேதமான ச்ருதியிலேயே வ்யக்தமாகச் சொன்ன அநுஷ்டானங்களை ச்ரெளத கர்மா என்றும் சொல்கிறோம். இதனால் ச்ரெளதத்தை விட ஸ்மார்த்தம் கீழானது என்று நினைத்து விடவே கூடாது. கிருஹஸ்தனுக்கு மிகவும் முக்கியமான ஒளபாஸனம், வீட்டிலே இவன் செய்ய வேண்டிய அதி முக்கியமான க்ருஹ்ய கர்மாக்கள், வைதிக கர்மாக்களில் ரொம்பவும் அவசியமானதான பித்ரு சிரார்த்தம் இவையும், பாக யக்ஞங்கள் என்ற ஏழு வேள்விகளும் ஸ்மார்த்த கர்மாக்கள்தான் இவற்றிலெல்லாம் வேத மந்திரங்களேதான் பிரயோஜனமாகின்றன. ஆகையால் ச்ருதியின் உள்பாவத்தை நன்றாகப் புரிந்து கொண்டேதான் இவற்றை ஸ்மிருதிகாரர்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஆகையால் ச்ருதியை விட ஸ்மிருதி கீழானது, ஸ்மிருதியை விட புராணம் கீழானது என்றெல்லாம் நினைக்காமல் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து ஒருங்கிணைக்கப்பட்டதாக நினைக்க வேண்டும்.

வேத தர்மங்களைப் புராணம் கதையாகச் சொல்கிறது. வேத தர்மங்களையும் கர்மங்களையும் ஸ்மிருதியானவை உபதேசங்களாக, விதிகளாக தருகின் றன, கர்மாக்களின் வழி முறைகளையும் தருகின்றன.

வேதம் முனிவர்களுக்கு தங்களுடைய தபோ வலிமையால் உள்ளுணர்வில் பளீரென்று தெரிந்தது, அதை அவர்கள் செய்யவில்லை, வெறுமே கண்டுக் கொண்டார்கள். அப்படிக் கண்டெடுத்ததில் தங்கள் மூளையைச் செலுத்தி, ஜனங்களுக்கு தர்மங்களையும், கர்மங்களையும் பாகுபடுத்தி, வகை தொகை யாகத் தரவேண்டும் என்ற எண்ணத்தில் நினைவு படுத்திக் கொண்டு கோத்து கொடுத்ததே ஸ்மிருதி.

ஒரு ஜீவனை பரமாத்மாவிடம் சேர்க்கிற அளவுக்கு நன்றாக சுத்தப் படுத்துகிற ஸம்ஸ்காரங்களையே தர்ம சாஸ்திரங்கள் நமக்கு விஷேசமாகச் சொல்கின்றன.

ஸம்ஸ்காரம் என்றால் “ஒன்றை நன்றாக ஆக்குவதே ஸம்ஸ்காரம்”.

‘ஸம்-நன்றாக; காரம்- ஆக்குவது’

கல்ப ஸூத்திரங்களில் சொன்னதை அனுசரித்து ஒரு ஜீவன் இந்த ஜீவ யாத்திரையில் (ஒரு ஜன்மாவில்) செய்ய வேண்டிய நாற்பது  ஸம்ஸ்காரங் களையும் எட்டு ஆத்ம குணங்களையும் விரிவாக தர்ம சாஸ்திரம் நமக்கு சொல்கிறது.

அந்த நாற்பது ஸம்ஸ்காரங்கள் எட்டு ஆத்ம குணங்கள் என்னவென்று பார்ப்போம்.

நாற்பது ஸம்ஸ்காரங்கள் என்பது கர்ப்பதானம், பும்ஸவனம், ஸீமந்தம், ஜாதகர்மா, நாமகர்ணம், அன்ன ப்ராசனம், செளளம், உபநயனம், அதை தொடர்ந்து குருகுலவாசத்தில் செய்ய வேண்டிய நாலு வேத விரதங்கள், அது முடிந்ததும் செய்கிற ஸ்நானம் பிறகு விவாஹம், அதன் பின் கிருஹஸ்தன் செய்ய வேண்டிய ஐந்து நித்ய கர்மாக்களாகிய பஞ்ச மஹா யக்ஞங்கள் ஆக இதுவரை மொத்தம் பத்தொன்பது; இதோடு கிரஹஸ்தன் செய்ய வேண்டிய பாக யக்ஞங்கள் ஏழும், ஹவிர் யக்ஞங்கள் ஏழும், ஸோம யக்ஞங்கள் ஏழும் ஆக யக்ஞங்கள் இருப்பத்தி ஒன்றும் ஸம்ஸ்காரங்களே ஆகும். ஆக மொத்தம் நாற்பது ஸம்ஸ்காரங்கள்.

இந்த எட்டு குணங்களோடு தொடர்புடைய இந்த ஐந்து தர்மங்களில் முக்கியமான ஒரு சிலதின் விளக்கம் பார்த்து ஆத்ம குணத்தின் விளக்கத்திற்கு செல்வோம்.

அஹிம்சை:

அஹிம்ஸா பரமோ தர்ம:

அஹிம்ஸை மோலான தர்மம்

என்பது சான்றோர் வாக்கு. நாம் பின்பற்ற வேண்டிய நற் பண்புகளில் மிகவும் முக்கியமானதாகவும் மேலானதாகவும் கடினமானதாகவும் உள்ள பண்பு அஹிம்ஸை. அஹிம்ஸை என்றால் துன்புறுத்தாமை.

அஹிம்ஸையின் இலக்கணமானது:

“மனோவாக்காய கர்ம்பி: ப்ராணிபீட-அனாசரணம்”.

மனதாலோ, சொல்லாலோ, உடலாலோ உயிரினங்களை துன்புறுத்தாமல் இருப்பது.

பொதுவாக, அஹிம்ஸை என்றால் மற்றவர்களை நாம் துயரப்படுத்தாமல் இருத்தல் என்றே நினைத்து வருகிறோம். அஹிம்ஸையை நாம் நம்மிடத்தி லிருந்தே துவங்க வேண்டும். நம்மை துயரப்படுத்தாமல் இருத்தலும் அஹிம்ஸையே. ஆகவே நம்மையும் புண்படுத்திக் கொள்ளாமல், மற்றவர் களையும் புண்படுத்தாமல் இருப்பதே அஹிம்ஸை.

நம்மை நாம் பண்படுத்தி, உலக வாழ்விலும், ஆன்மீக வாழ்விலும் வெற்றி காண வேண்டும் என்றால் மிக முக்கியமாகக் கடைப்பிடிக்க வேண்டியது  அஹிம்ஸை.

அஹிம்ஸைக் கடைப்பிடிக்க இயலாது எனப் பலர் தவறாக எண்ணி வருகின்றனர். அஹிம்ஸை என்றால் என்ன என்பதைத் தெளிவாக உணர்ந்தால் இது பின்பற்ற வேண்டிய, பின்பற்றக் கூடிய பண்பே என்பது விளங்கும். இயற்கையாக அதாவது தவிர்க்க முடியாத வகையில் நம் உடலுக்கு வரும் கஷ்டத்தை ஹிம்ஸை என்று கூறுவதில்லை. வெறுப்பு, பொறாமை, கோபம் போன்ற காரணங்களால் ஒருவன் மற்றவர்களுக்குக் கொடுக்கும் துயரத்தைத்தான் ஹிம்ஸை என்று கூறுகிறோம். எங்கு துயரத்தை தவிர்க்க முடியுமோ, அங்கு ஒருவன் மற்றவனுக்குத் துயரத்தை கொடுக்காமல் இருப்பதே அஹிம்ஸை. மற்றவர்களின் நன்மையின் பொருட்டு கஷ்டத்தை கொடுப்பது ஹிம்ஸை ஆகாது. நோயாளிக்கு மருத்துவர் கொடுக்கும் கஷ்டமும், ஆசிரியர் மாணவனுக்கு கொடுக்கும் தண்டனையும், பொற்றோர்கள் குழந்தைகளுக்குக் கொடுக்கும் தண்டனை யும் ஹிம்ஸை ஆகாது. ஆகவே எது ஹிம்ஸை, எது அஹிம்ஸை எனத் தெளிவாக அறிந்து அஹிம்ஸையை பினபற்றி நம்மை நாம் உயர்த்திக் கொளளுதல் வேண்டும்.

அஹிம்ஸை என்ற தர்மத்தை நாம் பின்பற்ற வேண்டுமென்றால் மற்ற சில நற்பண்புகளும் துணைபுரிய வேண்டும். மற்ற சில நற்குணங்களின் உதவி யுடன் தான் அஹிம்ஸையை பின்பற்ற முடியும். அது போலவே, ஹிம்ஸை யை விட வேண்டுமென்றால், சில தீய குணங்களை விட்டாக வேண்டும். அஹிம்ஸையை நாம் பின்பற்றினால் பல நற்பண்புகள் நம்மை வந்து சேரும், பல தீய குணங்கள் நம்மை விட்டு விலகும். தீய குணங்கள் என்பவை வெறுப்பு, கோபம், பொறாமை, பழிவாங்கும் நோக்கம், காரியம் நடப்பதற்காக ஹிம்ஸையை கையாள்வது, சொற்களை கவனமின்மையாக பயன்படுத்துவது, பண்பாடு இல்லாத பழக்க வழக்கம் முதலியவைகள் தீயக் குணங்கள். இவ்வகை தீய குணங்கள் அஹிம்ஸையை பின்பற்றி வாழும் போது நம்மை அறியாமலேயே விலகி விடும். அஹிம்ஸையைப் பின்பற்று வதால் கிடைக்கும் பலனுக்கு ஈடு இணை இல்லை. அஹிம்ஸையைப்    பின்பற்ற மற்ற சில நற்பண்புகளின் துணையும் தேவைப்படுகிறது. எனவே, அஹிம்ஸையை பின்பற்றும்பொழுது இதர நற்பண்புகளையும் அடைவோம். நற்குணங்கள் நிறைந்த மனதைத் தூய்மையான மனம் என அழைக்கிறோம். மன தூய்மையே நமக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். மகிழ்ச்சியான மனம் நம் உடல் நலனுக்கு வலுவை கொடுக்கும். உடலும், மனமும் வலுவுடன் இருந்தால் தான் வாழ்க்கையில் அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும். அஹிம்ஸையால் உடல்வலுவும், மனவலுவும் கிடைக்கிறது. அஹிம்ஸையின் பலனை நாம் காத்திருந்து அடைவதில்லை, உடனுக்குடன் அடைவோம். ஒரு யாகம் செய்தால் அதனால் வரும் புண்ணியம் என்ற பலனை எப்பொழுது அனுபவிப்போம் என்றுக் கூற முடியாது. ஆனால் நாம் அஹிம்ஸையை கடைபிடித்தால் பாபம் நீக்கப்பட்டுப் புண்ணியம் கிடைக்கிறது. அதனால் மனத்தூய்மையும், மனமகிழ்ச்சியும் கிடைக்கிறது. அஹிம்ஸையைப் பின்பற்றி நாம் பிறரைக் காத்தோம் என்றாலும் நம்மையும் நாம் காத்துக் கொள்கிறோம். தானும் மகிழ்ந்து பிறரையும் மகிழ்வித்து வாழும் வாழ்க்கைத்தான் அர்த்தமுடையதாகிறது. ஆகவே வாழ்வுக்கு ஓர் அர்த்தத்தைக் கொடுப்பதே அஹிம்ஸை.

 

வாய்மை(சத்தியம்)

சகல மக்களும் அநுசரிக்க வேண்டிய சாமானிய தர்மங்களில் முதலாவது அன்பு(அஹிம்ஸை). அடுத்தது வாய்மை(சத்தியம்).

“சத்தியம் என்றால் வாக்கும் மனசும் ஒன்றாக இருப்பது தான்; மனசில் ஒன்றும் வாக்கில் வேறொன்றுமாக இருந்தால் அதுவே அசத்தியம்” என்று பெரியவர்கள் லட்சணம் சொல்லியிருக்கிறார்கள்.

சத்தியம் என்றால் வாக்கும், மனமும் ஒன்றுபடுவது மட்டுமல்ல. நல்ல மனசிலே தோன்றுகின்ற நல்ல எண்ணங்களை வாக்கில் சொல்வதே சத்தியம். நல்ல விளைவுகளை உண்டாக்குவதே சத்தியம்.

“மக்களுக்கு நன்மை பயப்பதாகவும் பிரியமாகவும் எது இருக்கிறதோ அதுவே சத்தியம்” என்பதும் ஒரு லட்சணமாக கூறப்படுகிறது.

சத்தியம் பூதஹிதம் ப்ரியம்

ஒ ருவனுக்கு நல்லதைச் சொன்னால் மட்டும் போதாது. அதை அவன் ஏற்றுக் கொள்ளுமாறு அன்புடனும், ஹிதமாகவும் சொல்ல வேண்டும்.

“ஸத்யம் ப்ரூயாத் ப்ரியம் ப்ரூயாத்

நப்ரூயாத் ஸத்யம் அப்ரியம்

ப்ரியம் ச ந அந்ருதம் ப்ரூயாத்”

“சத்தியத்தை சொல், பிரியமானதை சொல். சத்தியத்தைப் பிரியமாக சொல்ல முடியவில்லை என்றால், அப்போது அப்படிப்பட்ட சத்தியத்தையும் சொல்லாதே. கேட்கப் பிரியமாக இருந்தாலும் அசத்தியத்தை சொல்லாதே”. ஆக சத்தியத்தின் லட்சணம் மனமும், வாக்கும் ஒன்றுப்பட்டிருப்பது. மனம் சுத்தமாக இருப்பது. வாக்கு சாந்தமாக, ஹதமாக இருப்பது. மொத்தத்தில் தனக்கு சித்த சுத்தியையும் பிறருக்கு க்ஷேமத்தையும் உண்டு பண்ணுவது. சத்தியத்திலேயே ஒருவன் நிலைத்து நின்று விட்டால் அதற்கு ஓர் அவாந்திரப் பலனும் உண்டு. அதாவது சத்தியம்பேசுபவன் உத்தேசிக்காமலே ஒரு பலன் சித்திக்கும். அது என்னவெனில், ஒருவன் சத்தியமே பேசி பேசி பழகி விட்டால் அவன் எது சொன்னாலும் சத்தியமாகி விடும். இப்படிபட்டவன் மனமறிந்து பொய் சொல்லமாட்டான். ஆனால் அறியாமை யாலோ, தவறிப்போயோ அவன் ஒரு விஷயத்தைத் தப்பாகச் சொல்லி விட்டாலும் அந்த தப்பே யதார்த்தத்தில் சத்தியமாக நடந்துவிடும். மகான்கள கொடுக்கிற ஆசீர்வாதம் பலித்து விடுவதற்கு காரணம் அவர்களுடைய சத்தியத்தின் சக்திதான்.

வாய்மை(சத்தியம்) என்ற ஒழுக்கத்தை மூன்று விதத்தில் பின்பற்ற வேண்டும். மூன்று நிலைகள் முறையே ஒன்றாவது உண்மையை கூறுதல், இரண்டாவது உண்மையை மறைத்தல், மூன்றாவது உண்மையை மாற்றி கூறுதல். இம் மூன்றில் முதல் நிலையைத்தான் முதலில் பின்பற்ற வேண்டும். முதல் நிலையை பின்பற்ற இயலாத சூழ் நிலையில் தான் இரண்டாம் நிலைக்குச் செல்ல வேண்டும். அதுவும் இயலாத பொழுது தான் மூன்றாம் நிலையை பின்பற்ற வேண்டும்.

முதல் நிலை: உண்மையைக் கூறுதலே நம் முதல் முயற்சியாக இருக்க வேண்டும். வாய்மையின் பொதுவான இலக்கணமும் உண்மையை கூறுதல் என்பதே. உண்மையைக் கூறும் பொழுது நன்மை இருக்கிறதா எனபதையும் கவனிக்க வேண்டும். நன்மை இருந்தால் முதல் நிலையிலேயே வாய்மை கடைப்பிடிக்கப்பட வேண்டும். இந்நிலையை கடை பிடிக்க வாய்ப்பு இருந்தும் அடுத்த படிக்கு இறங்கினால் அது பொய்மை ஆகும்.

உண்மையை கூறினால் நன்மை ஏற்படுவதில்லை என்ற சூழ்நிலையில் தான் இரண்டாம் நிலைக்குச் செல்ல வேண்டும்.

இரண்டாம் நிலை: எந்த சூழ்நிலையில் உண்மையை கூறினால் நன்மை ஏற்படுவதில்லையோ அப்போது உண்மையை மறைப்பதில் தப்பில்லை. உண்மையை மறைப்பது அவசியமும் ஆகிறது. உண்மையை ஜீரணிக்க சக்தியற்றவரிடம் உண்மையை மறைப்பதே தர்மம். நோயாளியிடம் மருத்துவர் நோயின் தன்மையை மறைப்பது போல.

நமக்கு தெரிந்த உண்மையை எல்லாம் கூற வேண்டிய அவசியம் இல்லை. வாய்மை என்பதற்கு பொய் கூறாமை என்றும் பொருள். உண்மையைக் கூறாமல் இருப்பதாலும், உண்மையை மறைப்பதில் நன்மை இருக்குமெனில் உண்மையையை மறைப்பதும் வாய்மை ஆகும்.

நம்முடைய வாழ்வில் பல சமயங்களில் நம்மிடம் உண்மையிருந்தும் நமக்கே சங்கடம் வரக் காரணம், நாம் அறிந்த உண்மையைத் தகுதியற்ற வரிடம் கொடுப்பதனால் தான். ஆகவே உண்மை மறைக்கப்பட வேண்டிய இடத்தில் மறைக்கப்பட வேண்டும். முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியது யாதெனில், நாம் மறைத்து செய்யும் செயல் தர்மத்திற்கு உட்பட்டதாகவும், நன்மையைத் தருவதாகவும் இருக்க வேண்டும். இவ்விதம் உண்மையை மறைத்தல் வாய்மை ஆகிறது.

மூன்றாம் நிலை: உண்மையைக் கூறுவதால் நன்மை ஏற்படுவதில்லை என்ற சூழ்நிலையில் உண்மையை மறைக்கவும் முடியவில்லை என்ற சூழ் நிலையும் ஏற்படும் பொழுது உண்மையை மாற்றி கூறுதல் வாய்மை ஆகிறது.

திருவள்ளுவரும்-

பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்த்த

நன்மை பயக்கும் எனில்.

குற்றம் அற்ற, நன்மையைக் கொடுக்கும் பொய்மையும் வாய்மையாகவே கருதப்படுகிறது.(புரைதீர்த்த – குற்றம் அற்ற).

உண்மையை மாற்றி கூறுவதற்குத்தான் பொய் என்று பெயர். இங்கு பொய்மையே வாய்மை என்று கூறப்படுகிறது. காரணம் எங்கு பொய்மை யால் நன்மை ஏற்படுகிறதோ, அங்கு பொய்மை வாய்மை ஆகிறது. பொய்மையால் எங்கு கூறுபவருக்கு மட்டும் லாபம் ஏற்படுகிறதோ, அங்கு பொய்மை பொய்மையே. எப்போதும் பொய் பொய்தான், உண்மை உண்மை தான். இருப்பினும் சில சூழ்நிலைகளில் பொய்மை வாய்மையாக மாறுகிறது.

முதல் இரண்டு நிலைகளையும் பின்பற்ற முடியாத பொழுதுதான் இந்த மூன்றாம் நிலைக்கு இறங்கி வர வேண்டும்.

நம்மிடமிருந்து வரும் சொற்கள் நான்கு நியமங்களுக்கு உட்பட்டிருக்க வேண்டும். அவை,

1)ஸத்யம், 2)ஹிதம், 3)பிரியம், 4)மிதம்.

இந்நான்கையும் மனதில் கொண்டு நாம் பேசினால் அதுவே வாக்கின் மூலம் கடைபிடிக்கும் தவம். இது தான் சொல் ஒழுக்கம் அல்லது ‘வாக் தபஸ்’ என்று அழைக்கப்படுகிறது.

1)ஸத்யம்: உண்மையைப் பேசுதல். இதையே வாய்மை(சத்தியம்) என்று நாம் பார்த்தோம். வாய்மையைப் மூன்று படிகளாக பார்த்தோம். இவ்விதம் வாய்மையை பின்பற்றி பேசுதல் வாக்கால் செய்யப்படும் முதல் தவம்.

2)ஹிதம்: ஹிதம் என்றால் நன்மை. நன்மை தருவதை பேசுதல். இக்கருத்தும் வாய்மையில் கலந்துள்ளது. உண்மையை நன்மையின் பொருட்டு மறைக்கலாம், மாற்றியும் கூறலாம் என்று பார்த்தோம். நம்மிடம் இருந்து வரும் சொற்கள் நமக்கும், மற்றவர்க்கும் நன்மையையைக் கொடுக்க கூடியதாக அமைய வேண்டும்.

3)பிரியம்: நன்மை தரும் உண்மையை மென்மையாக பேசுதல், மற்றவர் மனம் புண்படாத விதத்தில் கூறுதல், இனிமையாக கூறுதல், கேட்பவர்கள் மனம் வேதனைப்படாத விதத்திலும், நாகரீகமற்ற சொற்களைக் கையாளா மலும் பேசுதலே பிரியம்.

4)மிதம்: அளவாக பேசுதல். ஒருவர் தன்னுடைய மதிப்பை இழப்பதற்கு முக்கிய காரணம் அதிகமாக பேசுதல். ஆகவே தேவைக்கு அதிகமாக பேசாதிருக்க தன்னை பழக்க படுத்தி கொள்வதே மிதம். அளவுக்கு மீறிப் பேசுதல் பேசுபவருக்கும் நன்மை கொடுப்பதில்லை; கேட்பவருக்கும் நன்மையைக் கொடுப்பதில்லை.

சிறு வயதில் பேசக் கற்றுக்கொள்ள எவ்வளவு முயற்சி செய்தோமோ, அதை விடப் பலமடங்கு முயற்சியும் பயிற்சியும் மேற்கொண்டால்தான் தேவைக்கு மேல் பேசாமல் இருக்க முடியும்.

அதிகம் போசாதிருக்கும் பழக்கத்தை கடைபிடிக்கப் பழகி விட்டால் அனேக பொய்யான பேச்சுகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். பொய் பேசாது இருத்தலும் வாய்மை என்று பார்த்தோம். பேசாமல் இருந்து பழகினால் வாய்மை மட்டும் அல்ல, மற்ற சில உயர்ந்த பண்புகளையும் அடைய முடியும்.

ஒன்றின் தரத்தை நிர்ணயிக்க பரிசோதிக்கும் கருவி இருக்கும். நாம் எந்த அளவு தரத்தில் உயர்ந்துள்ளோம் எனப் பரிசோதிக்கும் கருவி நம்மிடத்தில் இருந்து வரும் சொற்கள். நாம் அடைந்துள்ள பக்குவத்தை அளக்கும் கருவி நம் சொற்கள். எதை பேசுகிறோம், எப்படி பேசுகிறோம், எவ்வளவு பேசுகிறோம் என்பதை பொறுத்தே நம் நிலை நிர்ணயிக்கப்படுகிறது.

மேலும் வாய்மை(சத்தியம்) குறித்து விரிவான விளக்கம் ஒரு அத்தியாய மாக பார்க்கலாம்.

அஸ்தேயம்-திருடாமை

செயல், பேச்சு, எண்ணங்கள் மூலமாக மற்றவர் பொருளை திருடாமலோ, அவ்வாறு திருடும் நோக்கம் இல்லாமலோ நடந்து கொள்வது அஸ்தேயம் ஆகும். அஸ்தேயம் பஞ்சமஹா விரதங்களில் ஒன்று. தனக்கு இகழ்ச்சி வரக் கூடாதென்று விரும்புகின்ற ஒருவன் எந்தப் பொருளையும் திருடி எடுத்துக் கொள்வதை தன்மனம் நினைக்காதிருக்கும்படி காத்துக் கொள்ள வேண்டும். அறத்தோடு வாழ்க்கை நடத்துபவர்களின் மனதில் அந்த அறம் இருந்து கொண்டேயிருக்கும். அறத்தை மதியாது திருடப்பழகினவர்கள் மனதில் அந்த அறம் மறைந்து விடும். களவு ஆசை வந்து விட்டவர்கள் திருடுவதை தவிர வேறு எதிலும் கவனம் செல்லாமல் தன் நிலையை விட்டு கீழே வீழ்ந்து விடுகிறார்கள்.

அளவோடு வாழ்க்கை நடத்தக்கூடிய மன வலிமை உள்ளவர்களிடத்தில் திருட்டு என்ற புத்தி இருக்காது. திருடுவதில் அதிகமான ஆசை கொண்டு விட்டவர்கள் தங்களுடைய நிலமைக்குத் தகுந்த வரையறையோடு அடங்கி வாழ்க்கை நடத்தமாட்டார்கள் அதன் பயனாக துன்பங்களே வந்து சேரும். இன்னொருத்தருடைய சொந்தமான பொருளை திருடி கொள்ளலாம் என்று மனதில் நினைத்தாலே கெடுதல் உண்டாகும் ஆகவே தான் அஸ்தேயம் பஞ்சமஹா விரதங்களில் ஒன்றாக கொள்ளப்படுகிறது.

செளசம்(தூய்மை)

செளசம் என்பது சுசி என்பதை வைத்து ஏற்பட்டது. சுசி என்றால் சுத்தம். சுத்தமான, களங்கமற்ற, தூய்மையானதாக இருத்தல் என்று பொருள். நமது சாஸ்த்திரங்கள் மனம், செயல், குணம், பேச்சு மற்றும் உடல் என  ஐந்து வகையான தூய்மேயை பரிந்துரைக்கின்றன.

தூய ‘மனம்’ என்பது தீமை, அல்லது வெறுப்பு இல்லாதது. எதிர்பார்ப்புகள் இல்லாமல் நல்ல செயல்களைச் செய்வது ‘செயலின்’ தூய்மையை பிரதிப்பலிக்கிறது. கடவுளின் ஆசீர்வாதங்களைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்காமல் நல்ல செயல்களை செய்ய வேண்டும். சூழ்நிலை எதுவாக இருந்தாலும் சாஸ்திரம் சொல்லுகிற ஒழுக்க விதிகளின்படி வாழ்வது தூய ‘குணத்தின்’ அடையாளம். ‘பேச்சின்’ தூய்மை என்பது உண்மையானதும், இனிமையானதும் மற்றும் நன்மைபயக்கும் விஷயங்களை பேசுவதாகும். சுகாதாரம் மற்றும் ஆரோக்கியமாக இருத்தல் ‘உடல்’ தூய்மையின் அடையாளங்கள். இந்த ஐந்து வகையான தூய்மையையும் இரண்டு வகையாக பிரித்து உள்தூய்மை, வெளிதூய்மை என வகைபடுத்தி உடல் மற்றும் சுற்றுசூழலை வெளிதூய்மை எனவும் மனம் மற்றும் ஆன்மாவின் தூய்மை உள்தூய்மை எனவும் வகைபடுத்தி பிரித்துள்ளது நமது சாஸ்திரம். உள்ளே தூய்மையாக இருக்க முதலில் வெளிபுற தூய்மையுடன் தொடங்க வேண்டும். பெரும்பாலான மக்கள் தங்கள் வீட்டை சுத்தமாகவும், நேர்த்தியா கவும் வைத்திருக்கிறார்கள். ஆனால் இந்த மனபான்மை வெளிப்புற சூழலுக்கு நீட்டிக்கப்படுவதில்லை. வெளி தூய்மையைப் பற்றி அக்கறை இல்லாமல் செய்யப்படும் எந்தவொரு செயலும் பயனற்றதாகி விடும், சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்துவது போன்ற பல்வேறு மனித செயல் களுக்கும் இது பொருந்தும் இது நம் கண்முன்னே நடப்பதை நாம் பார்க்கிறோம். மனிதர்கள் தங்கள் செயல்களால் காற்று, நீர், பூமி மற்றும் இடத்தை கூட அசுத்தமாக்கி மாசுப்படுத்தியுள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் புவி வெப்பமடைதல் ஆகியவை மனிதர்களுக்கே தீங்கு விளைவிக்கின்றன. முன்பு கேள்விப்படாத பல நோய் களுக்கு காரணமாகின்றன. இதற்கு பரிகாரம் என்ன? சுற்று புறங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள தூய்மையின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை வளர்த்து, அதை அன்றாட வாழ்க்கையில் நம் திறமைக்கு ஏற்றவாறு செயல்படுத்துவதுதான்.

“நமது வீடும், வீட்டின் சுற்று புறங்களும், நாம் வழிபட செல்லும் அருகிலுள்ள கோவில்களும் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும் அப்போதுதான் கடவுள் அங்கே தங்குவார். கோவிலை சுத்தமாக வைத்திருப்பது அனைவரை யும் தங்கள் வீடுகளை சுத்தமாக வைத்திருக்க ஊக்குவிக்கிறது. எல்லோரும் தங்கள் வீடுகளையும், சுற்றுபுறங்களையும் சுத்தமாக வைத்திருந்தால் அது முழு நாட்டையும் தூய்மையானதாக மாற்றும்”.

அடுத்து வெளிப்புற தூய்மையையும் (வெளியிலே நன்றாக சுத்தமாக இருக்கிறதை பார்த்தாலே நம் மனஸும் சுத்தமாகிறது) உள்ளடக்கிய உள்தூய்மை மிகவும் கடினம் ஆனது.

மனித செயல்கள், அணுகுமுறைகள் அனைத்தும் மனதின் எண்ணங்களால் வழி நடத்தப்படுகின்றன.

ஒரு நபரின் பகுத்தறிவுஎண்ணங்கள், உணர்ச்சிஉணர்வுகள், அணுகுமுறை மற்றும் முடிவெடுக்கும்திறன் யாவும் மனதின் பல்வேறு செயல்பாடுகள் மட்டுமே.

மனம் “அரிஷத்வர்கம்” எனப்படும் உள் உணர்ச்சிகளால் நிறைந்துள்ளது.  வேதம் அவற்றை ஆறு பிரிவுகளாகப் பிரிக்கின்றன. “அரிஷத்வர்கம்” என்பது மனிதனின் மனதுக்குள் ஒளித்திருந்து அவனை அழிக்கின்ற ஆறு          எதிர்வினைகளை ஏற்படுத்தும் தீய குணங்கள. அரி என்றால் எதிரி எனவும், ஷத் என்றால் ஆறு எனவும், வர்கம் என்றால் குழு எனவும் பொருள்படும். இந்த ஆறு எதிர்வினைகள் என்பது காமம்-தீவிர ஆசை, குரோதம்-கோபம்,  மோஹம்-பேராசை, லோபம்-பேராசை, மதம்-செருக்கு,மத்ஸரியம்-பொறாமை முதலியவை.

காமம் என்றால் ‘அவா’ அல்லது ‘ஆசை’(தீவிர ஆசை) எனப் பொருள்படும். தர்ம நீதிக்கு உட்பட்ட ஆசை ஆக்கத்தை தரும், அதுவே தர்மநியதிக்கு எதிரான ஆசை அழிவை தரும். பணம், பொருள், புகழ், பதவி, போன்றவற்றின் மீது தீவிர ஆசை கொள்வதும் குற்றமாகும். எனவே காமத்தை அடக்கிடுக.

குரோதம்: குரோதம் என்றால் கோபம் அல்லது சினம் எனப் பொருள்படும். ஆசைப்பட்ட ஒரு பொருளை அடையாமல் போய் விட்டால், அந்த ஆசை கோபமாக மாறும் கோப உணர்ச்சி மனித்தின் செயல்பாடுகளில் சஞ்சலங்களை ஏற்படுத்தி, வாக்கையும், செயலையும் பாதிக்கும். கோபத்தால் எழும் வாக்கும் செயலும் எப்போதும் சரியாக இருப்தில்லை. எனவே கோபத்தை போக்கிடுக.

லோபம்: லோபம் என்பது சுயநலம், பிறரைப் பற்றி சிந்திக்காமலும், இரக்கம் என்பதே இல்லாமலும், சுயநலத்துடன் பொருட்களை சேர்ப்பதும்,       கஞ்சத்தனமும், எல்லாவற்றையும் தானே அனுபவிக்க வேண்டும் என்ற தீயஎண்ணமும், தீய வழியில் பொருட்களை சம்பாதிக்கக் கூடிய நோக்கமும், வஞ்சனை செய்து பிறர் பொருட்களை அபகரித்து தானே வாழ வேண்டும் என்ற எண்ணமும், எப்பொழுதும் தன் பொருட்களைப் அதிகப் பற்றுடன் பாதுகாப்பதும் லோபம், இதை தவிர்த்து விடுக.

மோஹம்: மோஹம் என்றால் “மருட்சி” “பற்றுதல்” அல்லது “மயக்கம்” எனப் போருட்படும். ஒரு பொருளின் மீது கொண்ட அளவற்ற பற்றுதலினால் அதை எப்படியாவது அடைய வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகின்றது. இதுவே ஒருவனை பல தீய செயல்களிலும் ஈடுப்பட தோன்றுகிறது. எனவே மோஹத்தை நீக்கிடுக.

மதம்: மதம் என்றால் ‘செருக்கு’, ‘இறுமாப்பு’ மற்றும் “பெருமை கொள்ளுதல்” போன்ற குணங்களின் ஒருமித்த தன்மைகள் “மதம்” என்ற பெயரில் அறியப்படுகிறது. ‘அஹங்காரம்’ என்ற பெயரிலும் அறியப்படுகிறது. பதவி, கல்வி, அறிவு, செல்வம் போன்றவற்றை ஒருவன் மற்றவர்களை காட்டிலும் அதிகமாக கொண்டிருக்கும் போது அவனிடம் செருக்கு ஏற்படுகின்றன. அஹங்காரம் என்ற எதிரி ஒருவனின் மனதில் மற்றவர்களை காட்டிலும் உயர்ந்தவன் என்ற கண்மூடிதனமான நம்பிக்கையை காட்டுகிறது. இதனால் சக மனிதர்களிடம் மரியாதை, கருணை போன்ற அடிப்படை நற்குணங்கள் இன்றி செயல்படுகின்றான். இந்த குணம் ஒருவனை படு குழியில் தள்ளி விடுகிறது ஆகவே மதம் என்று அறியப்படும் செருக்கை ஒழித்திடுக.

மத்ஸர்யம்: மத்ஸர்யம் என்றால் “பொறாமை” எனப் பொருள்படும். தன்னை விட வேறு எவரும் கல்வி, பதவி, அறிவு, செல்வம் போன்றவற்றில் உயர்ந்து விட கூடாது என்ற கீழான எண்ணத்தை தான் மத்ஸர்யம் என்று அறியப்படும் பொறாமை. மற்றவர்களின் வளர்ச்சியை கண்டு பொறாமை கொள்பவன் தன்னைத்தானே தன்னுடைய மன நிம்மதியை கெடுத்து கொள்கிறான். அந்தளவுக்கு ஒருவனின் மனதை கெடுக்கும் சக்தி இந்த பொறாமை என்னும் தீய குணத்திற்கு உண்டு. இந்த நபர்கள் வளர்ச்சி அடைந்த யாரைப் பார்த்தாலும் தீய எண்ணங்களுடன் பெருமூச்சு விடுவார்கள், தாழ்வு மனபான்மையோடு, யாரை பார்த்தாலும் சகிக்க முடியாமல் எரிச்சலோடு இருப்பார்கள். இப்படி பட்ட மனிதர்களிடம் சகவாசத்தை குறைத்து கொள்வது நல்லது.. பொறாமை என்பது தன்னைத் தானே அழித்து கொள்ளும் ஒரு எதிர்வினை செயல். ஆங்கிலத்தில் கூறினால் “ஸ்லோ பாயிசன்ஸ்”. ஆகவே பொறாமைக்கு ஆளாகாதீர்கள், இந்த குணத்தை உடையவர்கள் தங்களை எந்தளவுக்கு விரைவில் மாற்றி கொள்வது நல்லது.

மேலே கூறின ‘அரிஷத்வர்கம்’ என்று அறியப்படும ஆறு எதிர்வினை செயல்கள் பிரத்தியேக பாதைகள் அல்ல ஒன்று மற்றொன்றுக்கு இட்டுச் செல்கிற ஒன்றுக்கொன்று தொடர்ப்புடையது. எனவே உள் தூய்மை அடைய ஒருவர் இந்த ஆறு எதிர் வினைகளிலிருந்து விடுபட வேண்டும். இந்த எதிர்மறை வினைகளிலிருந்து விடுபட நமது சாஸ்திரம் பல்வேற் வழி முறைகளை அறிவுறுத்துகின்றன. முதற்படியாக ஒருவர் தன்னை “சுயபரிசோதனை” செய்து கொள்வது இந்த “சுயபரிசோதனை” தன்னைப் பற்றி தானே அறிந்து கொள்ள ஒரு மேலான வழி இந்த வழிமுறை எல்லா வழி முறைகளை காட்டிலும் சிறந்தது. இதன் பலனும் அதிகம். அடுத்தது ஒருவர் தனது எண்ணங்கள், பேச்சு மற்றும் செயல் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒருவர் ஒவ்வொரு சூழ்நிலையையும் ஆராய்ந்து “தர்ம” செயல்களை மட்டுமே செய்ய வேண்டும். மற்றொரு அணுகுமுறை தன்னலமற்ற செயல்களின் பாதை அதாவத ஒருவர் தனது செயல்களை கடமை உணர்வுடன், செயல்களின் பலன்களைப் பற்றி பற்றின்மையுடன் செய்ய வேண்டும். ஒருவர் தனது ஸ்வதர்மத்தை அறிந்திருக்க வேண்டும். மேலும் அந்த செயல்களின் பலன்களின் மீதான பற்றுதலைக் கைவிட்டு அவற்றை உண்மையாகச் செய்ய வேண்டும். இந்த பாதையில் அடுத்த படி என்பது செயல்களின் பலன்களையும், செயல்கள் செய்பவன் தன்னையும், மற்றும் செயல்களையே கடவுளின் பாதங்களில் அர்பணிக்க வேண்டும். இத்தகைய பற்றற்ற மற்றும, தன்னலமற்ற தர்ம செயல்களைச் செய்வதன் மூலம் ஒரு நபர் இறுதியில் இந்த ஆறு எதிர் வினைகளிலிருந்து விடுபட வாய்ப்பு அதிகம். மேலே கூறின வழி முறைகள் அனைத்தும் சித்த-சுத்தி என்று அழைக்கப் படும் உள்தூய்மைக்கு அடிப்படை தேவையாகும்.

ஒவ்வொருவரும் முடிந்தவரை சாஸ்திர விதிகளின் படி அனைத்து செயல்களையும் செய்ய முயற்ச்சிக்க வேண்டும்

ஸ்நானம், மடி வஸ்திரம், ஆஹாரநிர்ணயம் முதலான ஆசாரங்கள் எல்லாம் செளசம் என்பதில் வரும். ‘சுத்தம் சுகம் தரும்; சுத்தம் சோறு போடும்’ பாமர ஜனங்களும் சொல்வார்கள்.

ஸகல ஜனங்களுக்குமாக ஐந்து தர்மங்களை சொல்கிற போது நாலாவதாக இந்த செளசம் எடுத்து கொள்ளப்படுகிறது.

புலனடக்கம்

புலனடக்கம் என்பது அவற்றை வேலை செய்யாமல் அடக்குவது என்பது அர்த்தம் ஆகாது. அவற்றை சரியான நெறியில் இயங்க செய்வதே ஆகும். இது விவேகத்துடன் கூடிய கட்டுபாடு ஆகும். மனிதனுக்கு புலனடக்கம் மிகவும் இன்றியமையானது. அப்பொழுது தான் ஒருவன் மனதையும், இந்திரியங்களையும் உன்னதமான முறையில் அடக்க முடியும். மனம் கட்டு பாட்டின் கீழ் இருக்கும் பொழுது இந்திரீயங்கள் எந்த வித விளைவுகளையும் ஏற்படுத்திவிட முடியாதெனினும், அவைகளை கட்டுப்படுத்துவதால், பரிபூரண பாதுகாப்பும், மனதிற்குப் பரம சாந்தியும் கிடைக்கிறது. நமக்கு தேவைப்படுவதெல்லாம் நியாயபூர்வமான புலனடக்கம் தான், புலன் வழிப் பாதைகளிலே சென்று அவைகள் பழாகி விடுவதற்கு அனுமதிக்கப்படக் கூடாது. அடங்காத குதிரை எவ்வாறு அதன் மீது சவாரி செய்பவனை அது விரும்பிய இடத்திற்கெல்லாம் கொண்டு செல்கின்றதோ அதைப் போல அவைகள் நம்மை ஈவிரக்கமின்றி படுகுழியில் தள்ளி விடுவதற்கு இடந்தர லாகாது. இந்திரியங்கள முறையாக ஒழுங்குபடுத்தப்பட்டால் அவைகள் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட்டால் அவைகள் உங்களுக்கு பயனுள்ள சேவகர்களாக ஆகி விடுகின்றன. தினந்தோறும் சில மணி நேரம் மெளனம் அனுஷ்டித்தல், சாப்பாட்டு முறையில் ஒழுங்குப்பாடு, பிரம்மசரியம் அல்லது மிதமாக இருத்தல் ஆகியவைகள் அனைத்தும் இந்திரியங்களை கட்டுபடுத்து வதில் மிகவும் துணைபுரிகின்றன.

இந்த எட்டு குணங்களோடு தொடர்புடைய ஐந்து தர்மங்களில் நான்காவது ‘செளசம்’ என்பது.  இந்த செளசம் என்ற தர்மம் அஷ்ட (எட்டு) குணங்களிலும் நான்காவதாக வருவதால் அங்கு விளக்கம் பார்க்க உள்ளோம். ஆகவே அடுத்து நாற்பது ஸம்ஸகாரங்களில் விளக்கம் பார்ப்போம்.

மேலே பார்த்த நாற்பது ஸம்ஸாரங்களின் ஒரளவு விரிவான விளக்கம் பார்ப்போம்.

முதல் எட்டு ஸம்ஸாரங்களை வரிசையாக பார்ப்போம்.

கர்ப்பாதானம்

நாற்பது ஸம்ஸாரங்களில் இது முதன்மையானது. “கர்ப்பம் தரிக்கச் செய்தல்” என்பது இதன் பொருள். ஸ்த்ரீ- புருஷ ஸம்பந்தத்தினால் தான் சிசுக்கள் ஜனிக்கின்றன. இந்த ஸ்த்ரீ-புருஷ ஸங்கமம் மந்திரபூர்வமாக தான் ஏற்பட வேண்டும். இதற்கேற்பட்ட விதி நிஷேதங்களை அனுசரித்துப் புணர்ச்சியில் ஈடுபடுதல் வேண்டும். இவ்வாறு கர்ப்பாதானம் செய்வதனால், பிறக்கப் போகும் குழந்தை பலவகைகளிலும் சிறப்புற்று விளங்கும்.

ஸ்த்ரீ-புருஷ ஸங்கம் சம்பந்தமாக நியமங்கள் யாதெனில் மாதந்தோறும் ருதுவாகும் நாளிலிருந்து பதினாறு இரவுகள் ஸ்த்ரீகளுக்கு கர்பாதான யோக்யமான காலமாகும். இதனில் பெண் ருதுவான தினம் முதல் நான்கு நாட்கள் உடலுறவு கொள்ளக்கூடாது. ஐந்தாவதுநாள் முதல் பதினாறாம் நாள் வரை பெறும் உறவால் கருத்தரித்தால் நல்ல சிசு பிறக்கும். இந்த பன்னிரண்டு நாட்களில் சதுர்த்தி, சஷ்டி, அஷ்டமி, ஏகாதசி, திரியோதசி, சதுர்தசி, அமாவாஸ்யை, பெளர்ணமி. இந்த திதிகளும் மாதப் பிறப்பு நாளும் நீங்கலாக திங்கள், புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் ரோகிணி, உத்தரம், உத்தராடம், உத்திரட்டாதி, ஹஸ்தம், ஸ்வாதி, அனுஷம், மூலம், திருவோணம், சதயம், ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் விருஷபம், மிதுனம், கடகம், கன்னி, துலா, தனுசு, கும்பம், மீனம் ஆகிய லக்கினங்களில் கூடுவது நல்ல சிசு உதிக்க ஏற்றது. ருதுவான தினத்திலிருந்து கணக்கிட்டு ஒற்றைப் படை நாளானால் பெண்ணும், இரட்டைப்படை நாளானால் புத்திரனும் பிறக்கும் என்பர். மாதவிடாய் காலத்தில் பெண்கள் பற்பல நியமங்களுடன் இருந்தால் உடல் மெலிந்து விடும். அந்நிலையில் புணர்ந்தால் கூட கர்ப்பம் தரிக்கும். ஒரு இரவில் ஒரு முறை மட்டுமே உடலுறவு கொள்ள வேண்டும். பகலில் உடலுறவு கொள்ள தகாது. இந்த ஸம்ஸ்காரம் இன்னொரு ஜீவனை உத்தேசித்து செய்வதால் எந்த வித நீக்குபோக்காய் இருந்து விடல் கூடாது.

பும்ஸவனம்

இது ஜீவனை குறித்து செய்யப்படும் இரண்டாவது ஸம்ஸ்காரம். “ஆண் பிள்ளை பெறச் செய்தல்” என்பது இதன் பொருள்.

மனைவி கருத்தரித்ததாக தெரிந்தவுடன் மூன்றாவது அல்லது நான்காவது மாதத்தில் பும்ஸவனம் செய்ய வேண்டும். மூன்றாவது மாதத்தில்தான் சிசு ஆணா, பெண்ணா என்பதற்கான அடையாள குறிகள் தோன்றும், இந்த நிலையில் இதை செய்ய வேண்டும், குறிப்பாக கருவில் உள்ள சிசு புரளத் தொடங்குமுன் செய்ய வேண்டும். மிருகசீர்சம், புனர்பூசம், பூசம், ஹஸ்தம், மூலம், திருவோணம் இவை புருஷ நட்சத்திரங்கள், பெரும்பாலும் பூச நட்சத் திரத்தில் தான் செய்வது வழக்கம். மற்ற புருஷ நட்சத்திரங்களிலும் செய்யலாம். முதல் கர்பத்திற்கு மட்டும் இதை செய்வர். பெற்றோர்களுக்குப் பிறக்க இருக்கும் முதல் குழந்தை ஆணாகவே இருக்க வேண்டும், குடும்ப  பாரத்தை பின்னால் சுமக்க தார்மீகமான புருஷ ஸந்ததியை ஏற்கவேண்டு மென்று எதிர்பார்பவர் இதை செய்ய வேண்டும். அதனால் தான் இந்த ஸம்ஸ்காரம் முதல் கர்ப்பத்திற்கு மட்டும் செய்யப்படுகிறது.

ஆலமரத்தின் மொட்டைக் கொணர்ந்து நன்றாக நசுக்கிச் சாறு வரும்படி செய்ய வேண்டும். கர்ப்பிணியை மல்லாந்தவாறாகப் படுக்க வைத்து   அவளுடைய வலது மூக்கினுள் இந்த சாற்றைப் பிழிய வேண்டும். அவளும் இந்த சாற்றை நன்றாக உறிஞ்ச வேண்டும். இதனால் கர்பத்திலுள்ள சிசுவானது “ஆணாக” மாறி விடும்.

ஸீமந்தேர்ந்நயநம்

நாற்பது ஸம்ஸ்காரங்களில் இது மூன்றாவது. முதல் கர்ப்பம் தரித்த ஆறாவது அல்லது எட்டாவது மாஸத்தில் இதை செய்ய வேண்டும். சிசுவிற்க்கும், தாய்க்கும் சுத்தியையும், தைவீகபலத்தையும் இது தருகின்றன. தாய்க்கு இதனை செய்வது மிகவும் பயனுள்ளது. கர்ப்பணிக்கான க்ஷேத்ர ஸம்ஸ்காரம். ‘ஸீமந்தம்’ என்றால் வகிடு. ‘உந்நயநம்’ என்றால் மேல்வாக்காக இழுத்துக் கொண்டு போவது. கர்ப்பணி யான பெண்ணுக்கு அவளுடைய கணவனாலேயே ஒரு நல்ல சுப முஹூர்த் தத்தில் இது செய்யப்படும். இதற்கான மந்திரங்களில் உயர்ந்த கருத்துகள்  பொதிந்து இருக்கின்றன. மந்திரபூர்வமாக கர்ப்ப ஸ்திரீயின் வகிட்டிலே கீழேயிருந்து மேல்வாக்காகப் பன்றி முள்ளால் மெதுவாகக் கீறிக் கோடு இழுத்துக் கொண்டு போவதால் உள்ளே இருக்கிற ஜீவனுக்கு நல்லது ஏற்படுகிறது. இப்படிப் பண்ணுவதற்குப் பெயர்தான் ஸீமந்தோந்நயனம் என்று பெயர்.

ஜாதகர்மம்

குழந்தை பிறந்தவுடன் ஜாதகர்ம ஸம்ஸ்காரம் செய்ய வேண்டும். தானங்கள் கொடுக்க வேண்டும். சிசு பிறந்தவுடன் சிசுவின் தந்தை கட்டியுள்ள ஆடையுடன் ஸ்நானம் செய்ய வேண்டும். அன்று முழுவதும் தந்தைக்கு ஜனனாசெளசம்(பிறப்பு தீட்டு) இல்லை. அவன் தானம் செய்து நாந்தீசிராத்தம் ஹிரண்யமாகவாவது (தக்ஷிணை மட்டும் தந்தாவது), ஆம்மாகவாவது (அரிசியும், கறிகாயும் தந்தாவது) செய்ய வேண்டும்.

(நாந்தி சிரார்த்தம் என்பது பித்ருகளுக்கு தர்பணம், சிரார்த்தம் போன்ற வழிபாடுகளை செய்வதாகும். இது பொதுவாக வீட்டில் எந்த சுப நிகழ்ச்சிகள் செய்தாலும், பித்ருகளை போற்றும் வகையில் முதலில் நாந்தீ சிரார்த்தம் செய்து விட்டுதான் ஆரம்பிப்பார்கள்.)

பித்ருக்கள் தன் வம்சத்தினர்க்கு ஸந்ததி ஏற்பட்டதில் மகிழ்ந்து தானே மங்கள பொருட்களுடன் வந்திருக்கும் போது அவர்களை குறித்து நாந்தீ சரார்த்தம் செய்வதை மிகுந்த திருப்தியுடன் ஏற்று சிசுவையும், பெற்றோரை யும் வாழ்த்துவர்.

நாமகரணம்

இது ஐந்தாவது ஸம்ஸ்காரம் ‘பெயரிடுவது’ என்பது தான் இது. குழந்தை பிறந்த பதினொராவது நாளில் இது செய்யப்பட வேணும். பெயரிடுவது ஒரு ஸம்ஸ்காரமாக கூறப்பட்டுள்ளது. குழந்தையைக் கையில் வைத்துக் கொண்டு தந்தை சொல்லும் மந்திரம் பொருட்சொறிவு கொண்டது. இன்ன நக்ஷ்த்திரத்தில் பிறந்தால் இன்ன மாதிரி பெயர் வைக்க வேண்டுமென்றிருக் கிறது. புருஷ சிசுவானால் இரட்டைப்படை எழுத்துக்கள் உள்ளதாகவும், பெண்ணானால் ஒற்றைப்படை எழத்துள்ளதாகவும் வைக்க வேண்டும். குலத் தெய்வம், இஷ்டதெய்வம், தம் முன்னோர்கள் இவர்கள் பெயரை வைப்பது நல்லது.

அடுத்து ஆறாவது ஸம்ஸ்காரம் அன்னப்ராசனம். இதற்கிடையில் குழந்தை பிறந்த பன்னிரண்டாவது நாளில் பிரசவ அறையிலிருந்து வெளியே எடுத்து செல்வர். இதனை நிஷ்கரணம் என்பர். மூன்றாவது மாதத்தில் அறை கூடம் முதலிய இடங்களை விட்டு வெளில் எடுத்து சென்று சூரியனுக்கு குழந்தையைக் காட்டுவதும், நான்காவது மாதத்தில் சந்திரனுக்கு காட்டுவதும் வழக்கம். சூரிய-சந்திரர்களின் ஒளி குழந்தையின் மேல்      படச்செய்வதே இதன் பொருள்.

அன்னப்ராசனம்

ஆறாவது ஸம்ஸ்காரம் இது. குழந்தைக்கு உணவூட்டுவது என்பதுதான் இதன் பொருள். சிறந்த கருத்துகள் நிறைந்த மந்திரங்கள் இதற்குண்டு, அன்னப்ராசனத்தில் தகப்பனார் மந்திரம் சொன்னாலும் குழந்தையே சாப்பிடு கிறது. இந்த ஸம்ஸகாரம் ஆறாவது மாஸத்தில் அல்லது எட்டாவது   மாதத்தில் நல்ல நாளில் தயிர், தேன், நெய், சேர்ந்த அன்னத்தை முதன் முறையாகச் சாப்பிட செய்வது வழக்கம். இதனையும் குல தெய்வத்தின் சந்நிதியில் செய்வர். தற்போது அப்தபூர்த்தியின்போது இதனை மந்திரபூர்வமாகச் செய்கின்றனர். ஆனால் குழந்தை அதற்கு முன்னரே அன்னம் உட்கொள்ளத் தொடங்கியிருக்கும். அதனால் அன்னம் உட்கொள்ளும் தகுதி பெற்றவுடன் இதனை மந்திர பூர்வமாகச் செய்விப்பது நன்று. (அப்தபூர்த்தி என்பது குழந்தை பிறந்து ஒரு ஆண்டு நிறைந்தபின் பிறந்த மாதத்தின் பிறந்த நக்ஷ்ரத்தில் ஆண்டு நிறைவை கொண்டாடுவது).

செளளம்

ஏழாவது ஸம்ஸ்காரம் இது. சிகை வைத்து கொள்வது, அவரவர் குல ஆசாரப்படி இதனைச் செய்து கொள்ளலாம். முதல் ஆண்டு நிறைவு பெற்ற வுடன் தலையை முண்டனம் செய்வது மரபு. மூன்றாவது அல்லது ஐந்தாவது வயது நடக்கும் போது இது செய்யப்பட வேண்டும். மந்திர பூர்வமாக பாலன் சிகை வைத்து கொள்கிறான். வேத அத்ய்யனம், வைதீக கர்மானுஷ்டானம், தர்ம்ப்படி இல்லறத்தில் இருந்துக் கொண்டு தாம்பத்திய உறவு கொள்வது ஆகியவற்றிலே சரீரத்திற்க்கும், சரீரத்தின் நாடி சலனங்கள் மூலம் சித்தத்துக்கும் ஏற்பட வேண்டியதான பலத்துக்குத் தலையில் ப்ரம்மரந்த்ரத்தில் சிகை என்ற ரக்ஷை இருப்பது பெரிய பாதுகாப்பாகும். பாபம் பண்ணி நரகவாஸம் பண்ணுகிற ஜீவர்களின் ப்ரீதிக் காக, ஒரு கிரஹஸ்தன் ஸ்நாநம் செய்யும் போது மந்திரபூர்வமாக சிகோதகம் தர வேண்டுமென்று (குடுமியிலிருந்து ஜலத்தை பிழிந்துக் கொடுப்பது) இருக்கிறது. இதற்கும் சிகை அவசியமாகிறது.

உபநயனம்

உபநயனம் என்பது செளளத்திற்கு அடுத்ததான எட்டாவது ஸம்ஸ்காரம். இந்த ஸம்ஸ்காரம் ஆண்களுக்கு மட்டுமே உரியது. உபநயனம் என்பது மிக முக்கியமான ஸம்ஸ்காரம். இந்த ஸம்ஸ்காரம் பெயரினாலேயே விளக்கம் தருவதாக அமைந்துள்ளது. உப-சமீபத்தில், நயனம்- அழைத்துக் கொண்டு போவது எனப் பொருள்படும். ஒருவனை குருவின் சமீபத்தில் அழைத்துக் கொண்டு போவது தான் உபநயனம். குருவிடம் அழைத்துச் செல்லப்பட்டு, குருவிடம் தன்னை ஒப்படைத்துக் கொள்வது, குருவின் மூலம் தகுதி பெற்று குருவால் வேதத்தின் அருகே அழைத்துச் செல்லப்படுவது, அதன் மூலம் பிரும்மமாகிய பரம்பொருளை அடைவது என்று கிரமமாக மேனிலை பெற உதவும் ஸம்ஸ்காரமிது. அதனால் உபநயனமான பின் மாணவன் பெறும் நிலையை பிரம்மசரியம் என்பர். பிரும்ம-வேதம், பரம்பொருள், சரியம்- நடை முறை. வேதம் ஒதுவதையே தனது நடைமுறையாகக் கொண்டு அதன் பொருளுணர்ந்து அதன் வழியே, பரம் பொருளை உணர்வதைத் தன் நடை முறையாகக் கொள்வதே பிரம்மசர்யம். இதனை முதல் ஆசிரமம் என்பர்.    (இந்த ஆசிரமத்தில் இருக்கும் மாணவன் ஒழக்கத்தை உயிர்மூச்சாக கொண்டு சீரிய நற் பண்புகளுடன் தன் நடைமுறையை கட்டுப்படுத்தி  வேதத்தின் சாரமான லட்சியத்தைச் எளிதில் சிரமமின்றி அடைய உதவுகின்ற நடைமுறை ஆசிரமமாகும். (இந்த ஆசிரமத்தில் இருப்பவனை பிரும்ம சாரி – வேதமோதுவதையே நடைமுறையாக கொண்டவன் என்று பொருள்பட கூறுவர்).

மேலே பார்த்த முதல் எட்டு ஸம்ஸ்காரங்களில் எட்டாவது ஸம்ஸ்காரமான உபநயனத்தை தொடர்ந்து குருவோடு தங்கி குரு குலத்தில் செய்ய வேண்டிய நான்கு விரதங்கள். இந்த நான்கு விரதங்கள் நமது ஸம்ஸ்காரத்தில் ஒன்பது முதல் பன்னீரண்டு ஸம்ஸ்காரங்களாக உள்ளது. எந்த மந்திர ஸித்திக்கும் நியமம் அவசியம் வேண்டும். வேதஸமூஹம் முழுவதற்கும் ஏற்பட்ட இந்த நியமமே பிரம்மசரியமாகும். இது தவிர, வேதபாகம் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி நியமங்கள் இருக்கின்றன. அவ்வளவுக்கும் சேர்த்து மொத்த விரதம் பிரம்மசரியம். தனித்தனி பிரிவுக்குத் தனித்தனி விரதங்கள் இருக்கின்றன. வேதத்தை நான்கு காண்டமாக பிரித்திருக்கிறார்கள். ஒவ்வொரு காண்டத்திற்கும் தனித்தனியாக ஒரு விரதம் உண்டு. பிரம்மசரிய ஆசிரமத்தின் போது ஒவ்வொரு காண்டத்தை அத்தியயனம் பண்ணுகிறபோது அதற்கு ஏற்பட்ட விரதத்தையும் பண்ண வேண்டும். நம்முடைய தக்ஷிண தேசத்தில் பெரும்பாலும் அனுஷ்டானத்திலுள்ள கிருஷ்ண யஜுர் வேதத்தை எடுத்துக் கொண்டால் அதற்கு ஏற்பட்ட விரதத்தை பண்ண வேண்டும். பிராஜாபத்ய காண்டத்திற்கு ஒரு விரதம் அது பிராஜாபத்யம், அடுத்து ஸெளம்ய விரதம், பின்பு ஆக்னேய விரதம், அப்புறம் வைச்வதேவ விரதம் என நான்கு விரதங்கள். ரிக் வேதத்திற்கு உள்ள நான்கு விரதங்கள் மஹாநாம்னி விரதம், மஹாவிரதம், உபநிஷத் விரதம், கோதான விரதம் ஆகியவை. இப்படி ஒவ்வொரு வேதத்திற்கும் தன்த்தனி விரதங்கள் இருக்கின்றன. இந்த நான்கு விரதங்களும் சேர்த்து பன்னீரண்டு ஸம்ஸ்காரங்கள். அடுத்து பதிமூன்றாவது ஸம்ஸ்காரம்

ஸமாவர்த்தனம்

உபநயனததன்று விரதமாக ஏற்றுக்கொண்ட பிரம்மசரியத்தின் முழுப்பயன் ஒவ்வொரு சாகைகளின் வேதப்பகுதியைப் பூர்ணமாக அங்கங்களுடன் ஓதுவதேயாகும். ஓதி முடிந்ததும் அந்த பிரம்மசர்ய விரதத்தை நிறைவுச் செய்வதே ஸமாவர்த்தனம். ‘ஸ்நாநம்’ என்றும் இதற்கு பெயர் உண்டு. இதனை ஸமாவர்த்தனம் என்று சொல்கிற போது “குருகுலத்திலிருந்து தன் அத்யாயத்தை முடித்துக் கொண்டு தனது இருப்பிடத்திற்குத் திரும்புதல்” என்பது இதன் பொருள். வேத அத்யாயனத்தை முடித்துக் கொண்டு முறைப்படி ஸ்நாநம் செய்தவனுக்கு “ஸ்நாதகன்” என்று பெயர். குரு குலத்தில் பிரம்மசரிய ஆஸ்ரம காலத்தில் ஒருவனுக்கு வாசனை திரவியங்கள் பயன்படுத்த அனுமதியில்லை. நல்ல மங்களகரமான வாசனை திரவியங்கள், எண்ணெய், சிகைகாய்த் தூள், வென்னீர் இவற்றுடன் ஸ்நாநம் செய்து உயர்ந்த ஆடைகளை உடுத்துவது பிரம்மசரிய ஆஸ்ரமத்தின் முடிவில் தான் விதிக்கப்பட்டுள்ளது. பிரம்மசரிய ஆஸ்ரம காலத்தில் நான்கு வேதங்களையும் கற்று விரதம் செய்து இந்த ஸ்நாநம் செய்தவன் “வித்யா வ்ரதஸ்நாதகன்” எனப்படுவான். வேதமின்றி விரதம் மாத்ரம் செய்து ஸ்நாநம் செய்பவன் வ்ரத ஸநாதகன் ஆவான். ஒருவன் நான்கு ஆஸ்ரமங்களில் ஒருவித ஆஸ்ரமும் இல்லாமல் ஒரு க்ஷணம் கூட இருக்க கூடாது. ஆதலால் ஸமாவர்த்தனம் செய்து உடனே விவாஹம் செய்துக் கொண்டு கிரஹாஸ்ரமம் செல்ல வேண்டும் அல்லது தனது இறுதி வரை பிரம்மசாரியாகவே (நைஷ்ட்டிக பிரம்மசாரி) இருக்கலாம். ஆனால் அதற்கு நியமங்கள் அதிகம். பிரம்மசரியத்திலிருந்து சந்நியாஸியாகவும் ஆகலாம். பெரும்பாலனவருக்கு மனச்சஞ்சலத்தை கட்டுப்படுத்த முடியாது. நியமத்தை மீறினால் பெரும் பாபசுமை சேரும். அதனால் பிரம்மசரியத்தை முடித்து கொண்டதன் அடையாளமாக தன் வேதத்தின் ரிஷிகளை வணங்கி விரதத்தை முடித்து ஸ்நாநம் செய்து உடனே விவாகம் செய்து கொள்ள வேண்டும்.

விவாஹம்

பதினான்காவது ஸம்ஸ்காரம் இது. பதிமூன்று ஸம்ஸ்காரங்கள வரை அந்த ஸம்ஸாரங்களை தந்தையோ, ஆச்சார்யனோ செய்து வைப்பர். இந்த ஸம்ஸ்காரம் முதலாக இனி வரும் ஸம்ஸ்காரங்கள் யாவும் தனக்குதானே செய்து கொள்ள வேண்டியவை.

பிரம்மசரிய ஆஸ்ரமத்தில் படித்து முடித்து விஷயங்களை தெரிந்துக் கொண்டு, நல்லறிவையும், நற்குணங்களையும் பெற்றப்பின் தர்ம்ப்படி கர்மானுஷ்டானம் பண்ணுவதற்காக விவாஹம் செய்துக் கொள்ள வேண்டும்.

பிரம்மச்சரிய ஆஸ்ரமத்தில் ஒருவனுக்கு மனக்கட்டுபாடும், நல்லறிவும், நற் குணங்களும் வருவதற்க்கு உபநயனம் என்ற ஸம்ஸ்காரம் இருப்பதுப் போல் பெண்களுக்கு உபநயனமோ, பிரம்மச்சரிய ஆஸ்ரமமோ இல்லையே, அவர்களின் கதி என்ன? புருஷன் மனசு கட்டுபடுகிற மாதிரி அவளையும் கட்டுப்பாட்டில் கொண்டு வராமல் இருக்கலாமா? ஸ்த்ரீகளுக்கு உபநயனம், பிரம்மசரிய ஆஸரமம் இல்லாமல் அநீதி இழைத்திருக்கிறதா என்றால், இல்லை காரணம் புருஷனுக்கு உபநயன-பிரம்மசரியங்களுக்கு அப்புறம் ஏற்படுகிற விவாஹ ஸம்ஸ்காரமே ஒரு பெண்ணிற்கு உபநயன ஸ்தானத்தில் அமைகிறது. பிரம்மசாரி குருவிடம் தன் மனதை அர்ப்பணம் செய்வது போல் இவள் பதியிடம் பண்ண வேண்டும். இதற்கு ஒரு வெளி அடையாளம் தான் ‘உபநயனத்தில் பையனுக்கு பூணூல் போடுகிற மாதிரி விவாஹத்தில் பெண்ணுக்கு மங்கள சூத்திரம் என்கிற தாலி கட்டப்படுகிறது. உப-நயனம் என்றால் ‘அருகில் அழைத்துப் போவது’ என்று பொருள் அதாவது ‘குருவினிடம் அழைத்து போவது’ என்பது. ஸ்த்ரீகளுக்குப் பதியே குரு. அவனிடம் கொண்டு சேர்க்கிற உபநயனம் தான் பெண்களுக்கு விவாஹம்.

மேலும் பிரம்மசர்ய ஆஸ்ரமத்திற்கு உபநயனம் போல இந்திரியத்தை நெறிபடுத்தி ஒரே ஒருத்தர் விஷயமாகப் போகும்படி சீராக்கித் தருவது என்பதோடு, ஸகல தர்மங்களையும் நடத்துவதற்கும் ஒரு ஆஸ்ரமமாக அமைந்த கிரஹாஸ்ரமத்திற்குப் பூர்வாங்கமே விவாஹம்.

பிரம்மசாரிக்கும், ஸந்நியாசிக்கும் அர்த்த(பொருள்) சம்பாதிப்பது, காம அநுபோகம் இரண்டும் இல்லை. அந்த இரண்டு ஆஸ்ரமங்களுக்கும் நடுவே பாலம் போடுகிற மாதிரி அமைந்த கிரஹாஸ்ரமத்தில் இந்த இரண்டும் அநுமதிக்கப்பட்டிருக்கின்றன. அர்த்தம்(பொருள்) சம்பாதிப்பது தர்ம்படிதான் இருக்க வேண்டும். அப்படியே காமமும் தர்மத்தோடு சேர்ந்தே இருக்க வேண்டும். இந்த அர்த்த-காமங்களை தர்மப்படி ஆண்டு அனுபவிக்கிறதே கிரஹாஸ்ரமம். அதற்கு ஆரம்பம் தான் விவாஹம்.

விவாஹம் என்பது உத்வாஹம், பாணிக்ரஹணம், கன்யாதானம், கல்யாணம் என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.

வி+வாஹ, உத்+வாஹ என்ற இரண்டும் “சிறப்பாக வஹிப்பது” என்றும் பொருள் உண்டு. யார் எதை வஹிப்பது? ஆண், பெண் இருவரும் சேர்ந்தால் தம்பதி ஆவார். தம்பதிகள் ஒன்றாக சேர்ந்து தர்மத்தை வகிப்பது என்று பொருள். எனவே இந்த ஸம்ஸ்காரத்தை ஸஹதர்மசாரிணி ஸம்யோகம் என்றும் கூறுவர்.

விவாஹம் அக்னியை சாக்ஷியாக கொண்டு வேதமந்திர பிரயோகமாக செய்ய வேண்டிய சடங்குகள் அனைத்தும் செய்து வைக்கின்றனர்.

விவாஹப் பிரயோக மந்திரத்தில் ரிக் வேதத்தில் பத்தாம் மண்டலத்தில் எண்பத்தி ஐந்தாம் சூக்தத்தில் மந்திரம் நாற்பது, நாற்பத்தி ஒன்று மந்திரங்கள் மிக பிரசித்தம்.

மந்திரம்:

ஸோம: ப்ரதமோ விவிதே கந்தர்வோ விவித உத்தர: |

த்ருதியோ அக்னிஷ்டே பதி: துரீயஸ்தே மநுஷ்யஜா: || (40)

ஸோமோ ததத் கந்தர்வாய கந்தர்வோ ததத் அக்னயே |

ரயிம் ச புத்ராம் சாதாத் அக்னிர் மஹ்யம் அதோ இமாம் || (41)

இந்த வேத மந்திரங்களுக்கு என்ன அர்த்தம் என்றால்

“முதலில் ஸோமன் உன்னை அடைந்தான்; இரண்டாவதாக கந்தர்வன் அடைந்தான்; மூன்றாவதாக அக்னி உனக்கு அதிபதி ஆனான். மநுஷ்ய வரக்கத்தைச் சேர்ந்த நான் நான்காமவனாக உன்னை ஆளுவதற்கு வந்திருக் கிறேன். உன்னை ஸோமன் கந்தர்வனிடம் கொடுத்தான்; கந்தரவன் அக்னியி டம் கொடுத்தான்; அக்னி என்னிடம் இப்போது கொடுத்திருக்கிறான்”.

இதற்கு விளக்கம் பார்ப்போம்.

நம் ஒவ்வொரு தேஹத்திலும், அங்கங்களுக்குள்ளே அவை ஒவ்வொன்றுக் கும் அதி தேவதையாக ஒரு தேவன் இருக்கிறான். கண்ணில் சூரியன், கையில் இந்திரன் என்றிப்படி நமக்குள் ஆத்யாத்மிகமாக தேவ சக்திகள் இருக்கின்றன. இது தவிர ஒவ்வொரு வயதுக்கட்டத்திலும் ஒவ்வொரு தேவதைக்கு நம் மேல் ஆதிக்கம் இருக்கிறது. இவ்விதத்திலே ஒரு பெண்ணானவள் பிறந்ததிலிருந்து வஸ்த்திரம் கட்டிக் கொள்ளத் தெரிகிற வரையில் ‘ஸோமன்’ என்ற தேவதையின் ஆதீனத்தில் இருக்கிறாள். அதற்கப்புறம் ரிதுவாகும் வரையில் அவள் கந்தர்வனின் ஆதீனத்தில் இருக்கிறாள். வயசு வந்ததிலிருந்து மூன்று வருஷம் அக்னியின் ஆதிக்கத்தில் இருக்கிறாள். ஸோமன் என்றால் சந்திரன். ஸோமன் ஒரு பெண்ணை ஸவீகரித்துக் கொண்டிருக்கிற குழந்தைப் பிராயத்தில் அதனிடம் நிலா மாதிரியான குளிர்ச்சி இருக்கிறது. அப்புறம் கந்தர்வன் என்ற உல்லாச ஜீவியான, நல்ல சுந்தரமான தேவதையிடம் இருக்கிற சிறுமிக்கு லாவண்யம் விஷேசமாக இருக்கிறது. பிறகு அக்னியின் அதிகார காலம் உண்டான போது காமாக்னியை ஏற்படுத்தும் சக்தி உண்டாகிறது. மூன்று தேவதையின் ஆதீனத்திலிருந்து பருவம் அடைந்த பெண்ணை விவாஹம் என்ற ஸம்ஸ்காரத்தினால் புருஷன் அடைகிறான்.

எட்டு வித விவாஹங்கள் சாஸ்த்திரங்கள் கூறுகின்றன. அவைகளாவன

ப்ராஹ்மோ-தைவ-ஸ்ததைவார்ஷ:

ப்ராஜாபத்ய-ஸ்த்தாஸுர: |

காந்தர்வோ ராக்ஷஸச்சைவ

பைசாசாஷ்டம: ஸ்ம்ருத:

அதாவது ப்ராம்மம், தைவம், ஆர்ஷம், பிராஜாபத்தியம், ஆஸுரம், காந்தர்வம், ராக்ஷஸம், பைசாசம் ஆகியவை.

பிராம்மம்: வேத அத்யயனம் முடித்து வந்த உத்தம்மான பிரம்மசாரிக்காக  வரனின் பொற்றோர்கள் நல்ல குலத்தினை சார்ந்த பெற்றோர்களை தேடி அவர்களுடைய பெண்ணைக் கன்யாதானம் செய்து தரச்சொல்லி கேட்டு கொள்வது ப்ராம்ம விவாஹம் ஆகும்.வரதக்ஷிணையோ, பரிசம் போடுவதோ இதில் வராது. இரண்டு குலங்கள் அபிவிருத்திக்காக பண்ணப் படுவது ஒன்றே இந்த விவாஹத்தின் லக்ஷ்யம். எட்டு வித விவாஹங் களிலேயே இதை தான் சிரேஷ்டமாக சொல்லி இருக்கிறது.

தைவம்: யக்ஞத்தில் ஒரு ரித்விக்காக உள்ளவருக்கு கன்யகையை அலங்கரித்து தக்ஷ்ணையாக கொடுத்து விவாஹம் செய்து வைப்பது தைவம் எனப்படும்.

ஆர்ஷம்: இதுவும் ஒரு விதத்தில் தைவ விவாஹத்தை ஒத்ததே. ஆர்ஷம் என்றால் ரிஷிக்கு கொடுப்பது என்று அர்த்தம் கொண்டால், இதுவும் உரிய காலத்தில் பிராம்ம விவாஹம் ஆகாத கன்னிகையை ஒரு வயதான ரிஷிக்காவது சிசுருக்ஷை செய்யும் பொருட்டுப் பத்தினியாக கொடுப்பது ஆகும்.

பிராஜாபத்யம்: பிராஜாபத்யம் என்பது எந்த வித கொடுக்கல், வாங்கல் இல்லாமல் ஒரு பிரம்மசாரிக்கு கன்யாதானம் பண்ணி தருகிற முறைதான். பிராம்மம் மாதிரி இல்லாமல் பெண் வீட்டுகாரர்களே வரனை தேடிப் போய் விவாஹம் செய்து தருகிறார்கள்.

ஆஸுரம்: ஆஸுரம் என்றால் ‘அஸுரத்தனமான’ என்று அர்த்தம். ஒரு பெண்ணுக்குப் பொருத்தமில்லாத ஒரு வரனானவன் நிறையப் பணத்தை அவளுடைய தகப்பனாருக்கோ உறவினர்களுக்கோ கொடுத்து, அவர்களை அதனால் வசப்படுத்திக் கட்டாயப்படுத்தி அவளைக் கொடுக்கும்படி பண்ணுவதுதான் ஆஸுரம். அநேக செல்வந்தர்கள் இரண்டாந்தரமாக இளம்பெண்களைத் திருமணம் செய்து கொள்வது ஆஸுரம்தான்.

காந்தர்வம்: இந்த காலத்தில் ஓஹோ என்று கொண்டாடும் காதல் கல்யாணம் இதுதான். ஆணும், பெண்ணும் இச்சையால் ஒன்று கூடி  பிறகு விவாஹம் செய்து கொள்வது தர்மத்திற்கு விரோதமானது, கேவலம் காமமே பிரதானமானதால் இது கீழானது, அதேசமயம் ஆணும், பெண்ணும் விரும்பி அதில் அதில் காமத்திற்கு முக்கியத்துவம் இன்றி நடக்கும் திருமணமும் காந்தர்வ விவாஹம் ஆகிறது.

ராக்ஷஸம்: பெண்ணின் விருப்பத்தை அறிந்து அவளது உறவினர்களின் விருப்பதிற்கு விரோதமாக அவர்களோடு யுத்தம் செய்து ஜெயித்து பெண்ணை தூக்கிக் கொண்டு போய்கல்யாணம் பண்ணி கொள்வது ராக்ஷஸம்.

பைசாகம்: பைசாகத்தில் பெண்ணினுடைய இஷ்டத்தையும் பார்ப்பதில்லை. பெண் வீட்டுகாரர்களைப் பகைத்துக் கொண்டு, கல்யாணப் பெண்ணையும் பலவந்தப்படுத்தி விவாஹம் பண்ணிக் கொள்வதைதான் பைசாகம் என்று வைத்திருக்கிறது.

தர்மசாஸ்திரங்கள் இந்த எட்டு விவாஹங்களையும் அனுமதித்திருக்கிறது. மந்திரபூர்வமாக விவாஹம்செய்து கொள்வதற்கும் இந்த எட்டு விதமான வதூவரர்களுக்கும் அனுமதியும் கொடுத்திருக்கிறது. இந்த எட்டு விதமான விவாஹங்களில் பிராம்ம விவாஹமே ஆத்மாபிவிருத்திக்கு சிறந்தது.

அடுத்த பதினைந்து முதல் பத்தொன்பது வரை கிரஹஸ்தன் செய்ய வேண்டிய பஞ்சமஹாயக்ஞம் என்கிற ஐந்து ஸம்ஸ்காரங்கள்.

பஞ்சமஹாயக்ஞம்

பஞ்சமஹாயக்ஞம் என்பது வாழ்க்கையை ஒழுங்கு படுத்தி, மேம்படுத்து வதற்காக கிரஹஸ்தன் தினசரி செய்ய வேண்டிய  ஐந்து யக்ஞங்கள். யக்ஞம் என்பது எந்த தேசத்திலும், எந்த காலத்திலும், எல்லா மக்களும் பரஸ்பரம் அன்புடனும் ஒற்றுமையுடனும் இயற்கை நியதிகளுக்கேற்ப வாழக் கற்று தருகின்ற தத்துவமாகும். இயற்கையிடமிருந்து பெறுவதில் ஒரு அம்சத்தையாவது இயற்கைக்குத் திருப்பிக் கொடுக்க நாம் கடமைப் பட்டவர்கள் என்ற கருத்திலிருந்தே பஞ்சயக்ஞங்கள் தோன்றின.

பஞ்ச யக்ஞங்கள் 1) தேவ யக்ஞம்; 2)பிரம்ம யக்ஞம்/ரிஷியக்ஞம்; 3)பித்ரு யக்ஞம்; 4)மனுஷ்ய யக்ஞம்; 5)பூத யக்ஞம்.

தேவயக்ஞம்: இறைவனை வழிபடுதல், தேவயக்ஞம் என்பது பூஜை, ஜபம், தியானம், விரத அனுஷ்டானம் கோவிலுக்கு செல்லுதல் போன்ற எந்த வடிவத்திலும் இறைவனை வழிப்படுதலாகும். மன ஒருமைபாடு, புத்திக் கூர்மை, மனமலர்ச்சி, சத்துவ குணம், இவற்றை பெறுதலே லட்சியம்.    மந்திர ஜபத்தின் மூலம் மனதில் பல்வேறு சிந்தனைகள் வராது தடுத்து நிறுத்த முடியும். தியானத்தின் மூலம் அறிவில் தெளிவும், கூர்மையும் வருவதுடன் மனதின் சலனங்கள் அடங்கி அமைதியும், நிம்மதியும் ஏற்படுகின்றன. பூஜையும், ஹோமத்தையும் தத்துவமறிந்து செய்வது மிக நல்லது. ஹோமத் தீயில் பொருட்களை ஆஹூதியாக அளிக்கும் போது விருப்பமுள்ள பொருட்கள் மீது நமக்கு இருக்கும் விருப்பத்தையே அக்னியில் அர்ப்பிப்பதாக பாவனை செய்ய வேண்டும். பூஜை சமயத்தில் ஊதுவத்தி ஏற்றுகையில், ஊதுவத்தி போல் தான் எரிந்து உலகிற்கு நறுமணம் அளிப்பதாக தனது வாழ்வு அமைய வேண்டும் என்று சங்கல்பிக்க வேண்டும். ஆரதிக்குக் கற்பூரம் ஏற்றும் போது, தனது அகந்தை ஒரு துளியும் மீதமின்றி முற்றும் ஞானாக்கினியில் எரிந்து போவதாகப் பாவனை செய்ய வேண்டும். மந்திர உச்சரிப்பும், ஹோம்ப்புகையும் அதைச் செய்பவருக்கு மனத்தூய்மை அளிப்பதுடன், சுற்றுப்புறத்தூய்மைக்கும் உதவுகிறது. அதைப்போல் உண்ணா விரதமும், மற்ற விரதங்களும் மனக்கட்டுப் பாட்டிற்கும், ஆரோக்கியத்திற்கும் மிகவும் உதவுபவை ஆகும். பெரும்பாலான விரத நாட்கள் அமாவாசை, பெளர்ணமி போன்ற தினங்களில் வருவதைக் காணலாம். சந்திரனின் வளர்ச்சியும், தேய்வும் மனதைப் பாதிக்கின்றன என்பதை இப்போது அறிவியல் ஏற்றுக் கொள்கிறது. அமாவாசை, பெளர்ணமி நாட்களில் மனநோயாளிகளுக்கு நோய் அதிகரிக் கும், கோபம் கூடும், மன உணர்ச்சிகள் அதிகரிக்கும். அவ்வேளையில் பிராத்தனை மற்றும் பிற ஆன்மீக சாதனை களின் மூலம் மனதை ஒருமுகப் படுத்துவதாலும், உணவை குறைத்து பழ வகைகளை அருந்துவதாலும் மனதின் சஞ்சலம் குறையும், ஆயுளும், ஆரோக்கியமும் கூடும். விரத அனுஷ்டானம் ஒரு கூட்டாமையாக ஊர் மக்கள் அனைவரும் அனுஷ்டிக்கும் போது அது இயற்கையிலும் அனுகூலமான அலைகளை உருவாக்கும். பருவம் தவறாத மழையும், வெயிலும் கிடைக்கும். இது தான் யக்ஞங்களின் மூலம் தேவதைகளை திருப்திப்படுத்து பருவ காலங்களை ஒழங்காக உலகத்திற்கு கிடைக்க செய்வது என்பதின் பின்னே உள்ள தத்துவம்.

பிரம்மயக்ஞம்/ரிஷியக்ஞம்: வேதங்களையும், நமக்கு வேதங்களை வழங்கிய ரிஷிகளையும் வணங்குதல். இதன் பொருள் வேதங்களை தவறாமல் படிப்பதும், ஊக்குவிப்பதும் ஆகும்.

வாழ்க்கையை நன்றாக வாழ்வது எவ்வாறு என்றும், உலகத்தின் இயல்பு என்ன என்றும், நமக்கு எதிரான சூழ்நிலைகளில் மனம் தளராமல் அவற்றை கடந்து செல்வது எவ்வாறு எனபதையும் ஆன்மீக சாஸ்திர நூல்கள் கற்றுத் தருகின்றன. விவசாயக் கல்வி கற்ற ஒருவன் எந்த செடிக்கு எந்த மண் ஏற்றது, என்ன உரம் தேவை என்பது அவனுக்கு தெரியும். அவன்  விவசாயத்தை செய்தால் அமோக லாபம் ஈட்டுவான் இவற்றில் எதுவும் தெரியாமல் விவசாயம் செய்ய முயன்றால் விளைச்சல் நாம் எண்ணியது போல் இல்லாமல் நஷ்டத்தில் சென்றடையும். நீந்த தெரியாத ஒருவன் கடல் அலைகளால் அலைக்கழிக்கப்பட்டுத் தளர்ந்து போகும் போது நீச்சல் அறிந்தவன் அந்த அலைகளில் ஆனந்தமாக நீந்தி மகிழ்கிறான். ஒரு இயந்தி ரத்தை உபயோகிக்கும் முறையை அறியாமல் அந்த இயந்திரத்தை உபயோகித்தால் அது பழுதாகி விடும். இது போல் வாழ்க்கை என்றால் என்ன சரியாக புரிந்து கொள்ளாமல் நாம் வாழ்க்கை நடத்தினால் நாம் வாழ்க்கையில் சந்தோசத்தை அனுபவிப்பதற்கு மாறாக கஷ்டத்தையும், நஷ்டத்தையும் தான் அடைவோம்.  இங்கு தான் நமது சாஸ்திரம் நமக்கு உதவுகிறது. ஆசைகளை வென்ற நமது ரிஷிகள் உபதேசித்த வாழ்க்கை தத்துவங்களையே ஆன்மீக நூல்கள் நமக்கு புகட்டுகின்றன. அவற்றை தினந்தோறும் படிக்கவும், வாழ்வில் பின் பற்றவும் செய்வதன் மூலம் ரிஷிகளுக்கு நாம் பட்டுள்ள கடன்களை தீர்க்கிறோம். படிப்பது மட்டும் போதாது அவற்றை வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தவும் வேண்டும். ரிஷிகள் கூறியுள்ள ஆன்மீகத் தத்துவங்களை நமது வாழ்வின் அங்கமாக மாற்றுவதே ரிஷி யக்ஞமாகும்.

பித்ருயக்ஞம்: பொற்றோர்களையும், முன்னோர்களையும் வழிபடுதல். பித்ரு யகஞம் என்றால் தர்ப்பணம் போன்ற கர்மங்கள் மட்டுமல்ல. பொற்றோர் மீது நமக்குள்ள அன்பையும், மரியாதையையும் அவர்களுக்கு தொண்டு செய்வதன் மூலம் வெளிப்படுத்துவதே சரியான பித்ரு யக்ஞமாகும். முன்னோர்கள் உயிருடன் இருந்தாலும் சரி, இறந்தாலும் சரி அவர்களை மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும். பொற்றோருக்கு முழு மனதுடன் சேவை செய்யும் ஒருவன் வேறு எந்த இறைவழிபாடும் செய்ய வேண்டியதில்லை என்றே கூறப்படுகிறது.

மனுஷ்ய-யக்ஞம்/அதிதியக்ஞம்: மனித குலத்திற்கான வழிபாடு அல்லது சேவை, மனுஷ்ய-யக்ஞம் என்பது அனைத்து வகையான சமூக சேவைகளை யும் செய்வதாகும். தேவைபடுபவர்கள், ஏழைகள், நோயாளிகள் போன்ற வரை கவனித்து கொள்வது. மேலும் நம்மை நாடி வரும் விருந்தினர்களை இறைவனாக கருதி மரியாதை செலுத்துமாறு நமது பண்பாடு வலியுறுத்து கிறது. குடும்ப அங்கத்தினரிடம் காட்டும் அன்பானது, பற்றால் வருவது நம்மை பரந்த மனமுடையவராக ஆக்க இது உதவாது. ஆனால் அதிதி பூஜை பிரதிபலனை எதிர்பாராத அன்பிலிருந்து உருவாவதாகும். உலகையே ஒரு குடும்பமாகக் கருதி அன்பு செய்ய அது நம்மைத் தகுதியுள்ளவராக ஆக்குகிறது.

பூதயக்ஞம்: மற்ற அனைத்து உயிரினங்களுக்கும் வழிபாடு மற்றும் சேவை. பூதயக்ஞம் என்பது அனைத்து உயிர்களுக்கும் மரியாதை செலுத்துவதாகும். இதில் விலங்குகள், பறவைகள், தாவரங்கள், சுருக்கமாக பூமி ஆகியவை அடங்கும். மரம், செடி, கொடிகளுக்கும், பறவை-மிருகங்களுக்கும் “தெய்வங் கள்” மற்றும் “இறைவாகனங்களின்” இடத்தை நாம் அளித்திருக்கிறோம். வளர்ப்பு மிருகங்களுக்கு தீனி கொடுத்த பிறகும், துளசி, ஆல், வில்வம் போன்ற மரம், செடிகளுக்கு நீர் விட்ட பிறகும் தான்  உணவு உண்ணும் சீலம் உடையவர்களை இன்றும் உள்ளனர். சகல சராசரங்களிலும் ஒரே மெய் பொருளையே தரிசிப்பதே பூத யக்ஞத்தின் நோக்கம்.

பிறந்தோம், உண்டோம், வளர்ந்தோம், வாழ்ந்தோம், மறைந்தோம் என மட்டுமின்றி நமது வாழ்க்கை ஒழுக்கத்துடன் மேம்பட நாம் மேற்கொள்ளும் செயல்களே பஞ்சமஹாயக்ஞங்கள்.

அடுத்து கிரஹஸ்தன் செய்ய வேண்டிய பாக யக்ஞங்கள் ஏழு, ஹவிர் யக்ஞங்கள ஏழு, ஸோம யக்ஞங்கள ஏழு என்னென்ன என்பதை பார்ப்போம்.

 

பாக யக்ஞங்கள் சின்னவை. இவை யாகசாலை போட்டுக் கொள்ளாமல் வீட்டிலேயே செய்கிற க்ருஹ்ய கர்மங்கள். அஷ்டகை(அன்வஷ்டகை), ஸ்தாலிபாகம், பார்வணம், ச்ராவணி, ஆக்ரஹாயணி, சைத்ரி, ஆச்வயுஜி என்ற ஏழும் பாக யக்ஞங்கள்.

அஷ்டகை:- பாகயக்ஞங்கள் ஏழில் அஷ்டகா என்பது சிராத்தத்தைச் சேர்ந்த பித்ருகர்மா. சுக்ல பக்ஷசம், கிருஷ்ண பக்ஷசம் என்பதில் சுக்லபக்ஷ்ம் (வளர் பிறை) தேவர்களுக்கு விஷேசமானது. கிருஷ்ணபக்ஷ்ம் (தேய்பிறை) பித்ருகளுக்கு விஷேசமானது. பித்ரு காரியங்களுக்கு ‘அபரகாரியம்’ என்று பெயர். அதனால் கிருஷ்ணபக்ஷத்தை அபரபக்ஷம் எனபதுண்டு. இந்த அபர பக்ஷத்தில் நட்ட நடுவில் அஷ்டமி வருவதால் அது பித்ருகளுக்கு அதிவிஷேசமானது.

திஸ்ரேஷ்டகா; அஷ்டகா; அன்வஷ்டகா.

மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களின் கிருஷ்ண பக்ஷ ஸப்தமி, அஷ்டமி, நவமி திதிகளில் பித்ருகளுக்கு சிரார்த்தம் அல்லது தர்பணம் செய்வது. அஷ்டமி அன்று செய்யப்படும் அஷ்டகையை பிரதானமாகக் கொண்டு முதல் நாள் சப்தமிக்கு பூர்வேத்யு:(திஸ்ரேஷ்டகா:) என்று பெயர். மறுநாள் நவமிக்கு அன்வஷ்டகா என்று பெயர். மேற்கூறிய நான்கு மாதங்களில் ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் வீதம் பன்னிரண்டு தர்பணங்கள. பன்னிரண்டு தர்பணங்கள் செய்ய இயலாதவர்கள் தைமாதம்(மாக மாதம்) ஸப்தமி, அஷ்டமி, நவமி அன்று தர்பணம் செய்யலாம், அல்லது அஷ்டமி ஒரு நாளாவது பித்ருகளுக்கு தர்பணம் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு வருஷமும் தாய், தந்தையருக்கு சிரார்த்தம் செய்வது போல் இந்த அஷ்டகை, அன்வஷ்டகை நாட்களிலும் பித்ருகளுக்கு ஹோமம் செய்து, சாப்பாடு போட்டு ,முறையாக சிராத்தம் செய்யலாம். இது இரண்டு விதமாக இருக்கிறது.

1) ஸப்தமி அன்று மாலை ஒளபாசனாக்னியில் அப்பம் தயார் செய்து ஹோமம் செய்ய வேண்டும். மறுநாள் அஷ்டமியன்று காலையில் எட்டு பேரை வரித்து தர்பணம் செய்து விட்டு, ஹோமம் செய்து முறையாக் சிரார்த்தம் செய்ய வேண்டும். மறுநாள்(நவமி) அன்வஷ்டகா அன்று ஐந்து பேரை வரித்து சிராத்தம் செய்ய வேண்டும்.

2) ஸப்தமி அன்று மாலை மற்றும் அஷ்டமி அன்று செய்ய வேண்டிய அஷ்டகா சிராத்தம் இரண்டிற்கும் பதிலாக தத்யஞ்சலி ஹோமம் என்னும் ஹோமம் செய்து விட்டு மறுநாள்(நவமி) அன்வஷ்டகை அன்று ஐந்து பேரை வரித்து ஹோமம் செய்து, சாப்பாடு போட்டு சிரார்த்தம் செய்யலாம்.

வருடத்திற்கு தொண்ணூற்றி ஆறு தர்பணம் (ஷண்ணவதி தர்பணம்) செய்ப வர்கள் இந்த பன்னீரண்டு தர்பணமும் செய்து விடுகிறார்கள். தொண்ணூற்றி ஆறு தர்பணம் செய்ய இயலாதவர்கள் இந்த பன்னீரண்டு தர்பணங்கள் செய்யலாம். இதற்கும் முடியாதவர்கள் தை மாதம் சப்தமி, அஷ்டம், நவமி மூன்று நாள் தர்பணம் செய்யலாம்.

ஒரு வருடத்தில் 96 தடவை பித்ருகளுக்கு செய்யும் இந்த தர்பணம், தர்பணம் என்று சொல்வதை விட ச்ராத்தம் என்று சொல்வதே பொருத்தம், ஏனென்றால் ஸ்ரத்தையாக செய்தால் அனுஷ்டிப்பவர்களுக்கு இக, பர சுகங்களை இவை தர வல்லவை. மேலும் ஸ்ராத்தங்கள் ஹிரண்ய ரூபமாக செய்து தர்பணம் செய்ய வேண்டும். இதை விஷேசமாக செய்ய முடிந்தவர்கள் செய்யலாம். இவை விஷேசமாக சங்கல்பத்துடன் தொடங்க வேண்டும்.

“ஷண்ணவதி தர்பணம்” என்கிற அந்த தொண்ணூற்றி ஆறு நாட்கள் எவை, எவை என்பதை பார்ப்போம்.

“அமாயுக மனுக்ராந்தி த்ரிதிபாத மஹாளய:

அஷ்டகா அன்வஷ்டகா சேதி ஷண்ணவத்ய:

ப்ரகீர்த்திதா:”

என்று ஷண்ணவதி நாட்களை தர்ம சாஸதிரம் கூறுகிறது.

அந்த 96 நாட்கள்:-

1) ஸங்க்ரமணம்-12

சித்திரை முதல் பங்குனி வரை உள்ள மாச பிறப்பு. இதில் உத்ராயணம், தக்ஷிணாயன தர்பணமும் அடங்கும்.

2) அமாவாசை-12

ஒரு வருஷத்தில் 12 அமாவாசைகள்.

3) வ்யதிபாதம்-13

27 யோகங்களில் 17 வது வியதீபாத யோகம் கூடிய நாள். ஒரு வருஷத் -தில் சாதாரணமாக 13 வரும். சில வருஷங்களில் ஒன்று அல்லது இரண்டு கூடி வரலாம்.

சந்திரன் குருபத்னியான தாரையிடம் தவறான எண்ணத்துடன் பழக முற்பட்டப் போது தர்மோத்தரமான சூரியபகவான் சந்திரனைக் கோபத்துடன் கடிந்து உஷ்ணமாகப் பார்த்தார். தனது சொந்த விஷயத்தில் சூரியபகவான் தலையிடுவதை விரும்பாத சந்திரனும் பதிலுக்கு சினந்து நோக்கினான். அப்போது அவர்களுடைய கோபப்பார்வை ஒன்று கலந்ததால் அவர்களிடையே ஒரு திவ்ய புருஷன் தோன்றினான். இவ்விதம் ஏற்பட்ட தேவதையே வ்யதீபாதம் என்ற யோகத்திற்கு உரிய தேவதையாகும். அன்றைய தினம் பித்ருகளுக்கு தர்பணம் செய்வது அதீதமான பலன் கொடுக்கும் வ்யதீபாதம் மார்கழி மாதத்தில் வரும் போது இதற்கு       “மஹா வ்யதிபாதம்” என்று பெயர்

4) வைத்ருதி–13

இதுவும் 27 யோகங்களில் கடைசி யோகமான வைத்ருதி யோகம் சேர்ந்த நாள். தர்ம சாஸ்திரம் பித்ருக்களுக்கு உகந்த நாளாக இதை சொல்கிறது. இதுவும் ஒரு வருஷத்தில் சாதாரணமாக 13 வரும். சில வருஷங்களில் ஒன்று அல்லது இரண்டு கூடி வரும்.

5) மஹாளயம்-16

புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய பக்ஷம். ப்ரதமை தொடங்கி மஹாளய அமாவாசை வரை உள்ள காலம்.

6) மன்வாதி நாட்கள்-14

ஸ்வாயம்பு, ஸ்வரோசிச, உத்தம, தாமஸ, ரைவத, ஸாக்ஷுச, வைவஸ்வத, ஸாவர்ணி, தக்ஷ ஸாவர்ணி, ப்ரம்ம ஸாவர்ணி, தர்ம ஸாவர்ணி, ருத்ர ஸாவர்ணி, ரெளச்ய ஸாவர்ணி, மற்றும் இந்த்ர ஸாவர்ணி ஆகிய பதினான்கு மன்வந்தரங்கள் தொடங்கும் நாட்கள்.

அடுத்தது

ஸ்தாலீபாகம்: இது அமாவாசைக்கு மறுநாளும், பெளர்ணமிக்கு மறுநாளும் வரும் ப்ரதமை அன்று மாதாமாதம் செய்ய வேண்டும். ஒவ்வொரு பிரதமை அன்றும் ஒளபாஸன அக்னியில் அரிசியை சமைத்து அதனால் ஹோமம். ஸ்தாலி என்று சோற்று பானைக்கு பெயர். ஒளபாஸனை அக்னியில் ஸ்தாலியை வைத்து ‘சரு’ என்கிற பக்குவ அன்னம் செய்வது ஸ்தாலிபாகம். இந்த ஸ்தாலீபாகம் செய்ய தெரிந்தவர் எல்லா ஹோமங்களையும் செய்ய முடியும். ஏன் என்றால் மற்ற ஹோமங்களின் வரிசை கிரமத்துக்கு இதுவே ஆதாரம். ஏனைய பலவற்றுக்கு அடிப்படையாக இருப்பதை ‘ப்ரக்ருதி’ என்பார்கள். இந்த ப்ரக்ருதியைத் தழுவி சில மாறுதல்களுடன் செய்கிற மற்றவற்றுக்கு விக்ருதி என்று பெயர். அடி முதல் நுனி வரை கர்மா செய்ய வேண்டிய கிரமம் சொல்லப்படுவதே ‘ப்ரக்ருதி’.

பார்வணம்: இதை மாசி ஸ்ராத்தம் என்று கூறுவார்கள். இதுதான் எல்லா ஸ்ராதத்திற்கும் ப்ரக்ருதி(முன்மாதிரி)யாக இருப்பது. தகப்பனார் உயிரோடு இருப்பவர் செய்ய தேவையில்லை. இது தான் அமாவாஸை தர்ப்பணமாக வேற உரு எடுத்து இருக்கிறது.

ஸ்ராவணி: ‘ஸ்ராவணி’ என்கிற பாகயக்ஞத்திற்கு ‘ஸர்ப்ப பலி’ என்றும் பெயர். ச்ராவண மாஸத்தில் அதாவது ஆவணி மாஸத்தில் பெளர்ணமியில் செய்வர். அன்று இரவு சரு, நெய், ஹோமம் செய்து, பலாஸ(புரச) பூக்களை இரு கைகளால் ஹோமம் செய்து; புற்று இருக்குமிடத்திலோ, சுத்தமான இடத்திலோ அரிசி மாவு கோலம் போட்டு ஸர்ப்ப மந்திரங்களை சொல்லி போற்றுவது; இதை மார்கழி பெளர்ணமி வரை செய்வர். இது ஸர்ப்ப தோஷங்களுக்கு சாந்தியாகும்.

ஆக்ரஹாயணி: மார்கழி பூர்ணிமாவில் ‘ஆக்ரஹாயணி’ என்கிற பாக யக்ஞத்தை செய்து, ஆவணியில் ஆரம்பித்த ஸர்ப்பபலியை உத்ஸர்ஜனம் (பூர்த்தி) செய்ய வேண்டும் ச்ராவணி போலவே ஆக்ரஹாயணி என்பதும் மாஸத்தின் பெயரால் ஏற்ப்பட்டது. ஆக்ரஹாயணி என்று மார்கழிக்கு பெயர்.

சைத்ரி: சைத்ரி என்பது நாலு வீதிகள் கூடுமிடத்தில் ஈசானனை உத்தேசித்துச் செய்யப்படுவதால் ஈசானபலி என்றும் கூறப்படும். ஈசானன் என்பது தான் பரமேஸ்வரன்(சிவபெருமான்). மற்ற பாகயக்ஞங்களில் மற்ற தேவதைகளை உத்தேசித்து ஹோமம் செய்யப்படுகிறது. அவர்கள் மூலம் பரமேஸ்வரனுக்கு ப்ரீதி ஏற்படுகிறது. சைத்ரி பாகயக்ஞத்தில் நேரே பரமேஸ்வரருக்கே  கொடுக்கிறோம்.

ஆஸ்வயுஜீ: ஐப்பசியில் குறுவை நெல் விளைந்து வரும். புது அரிசியில் சியாமை தான்யத்தால் பாகம் செய்து ஸ்தாலிபாக ஹோமம், ஈஸ்வரார்பணம் பண்ணிவிட்டு பிறகு மற்றவர்கள் புஜிப்பார்கள. கார்த்திகை பெளரணமி முக்கிய காலம்.

மாதந்தோறும் செய்ய வேண்டிய பார்வணீ ச்ரார்த்தமும், ப்ரதமைகளில் செய்யும் ஸ்தாலீ பாகமும் தவிர மற்ற ஐந்து பாகயக்ஞங்களில் வருஷத்திற்கு ஒரு முறைதான்.

அடுத்ததாக  ஏழு ஹவிர் யக்ஞங்கள.

ஹவிர் யக்ஞங்கள் என்பன அக்னியாதானம், அக்னிஹோத்ரம், தர்சபூர்ணமாஸம், ஆக்ரயணம், சாதுர்மாஸ்யம், நிரூடபசுபந்தம், ஸெளத்ராமணி என்ற ஏழும் ஹவிர் யக்ஞங்கள்.

முதல் நாலு ஹவிர் யக்ஞங்களான அக்னியாதானம், அக்னி ஹோத்ரம், தர்சபூர்ணமாஸம், ஆச்ரயணம் என்பன க்ருஹத்திலேயே தான் செய்யப்படு கின்றன. கடைசி மூன்று ஹவிர் யக்ஞங்களான சாதுர்மாஸ்யம், நிரூடபசு பந்தம், ஸெத்ராமணி யாவும் யாகசாலை அமைத்து செய்யப்பட வேண்டியவை.

யாகசாலைக்கு ‘தேவ யஜனம்’ என்றும் பெயர்.அதன் அமைப்பைப் பற்றி ஸகல விவரங்களும் வெகு நுணுக்கமாக கல்ப சூத்திரங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன.

கார்ஹபத்யம், ஆஹவனீயம், தக்ஷிணாக்னி என மூன்று அக்னிகளை பெறுவது அக்னி ஆதானம் என்ற கர்மாவால்.

முன் சொன்ன கர்மாவை செய்து பெற்ற மூன்று அக்னிகளையும் தினசரி காலையிலும், மாலையிலும் ஆராதிப்பது அக்னி ஹோத்ரம்.

பிரிதி பிரதமைகளில் ச்ரெளத்ராக்னியில் பண்ணவேண்டிய ஹவிர்யக்ஞத் திற்கு ‘தர்ச பூர்ண இஷ்டி’ என்று பெயர். தர்சம் என்றால் அமாவாஸ்ய; பூர்ணம் என்றால் பெளர்ணமி. இந்த இரண்டுக்கும் மறுநாளான பிரதமைகளில் செய்யப்படும் இஷ்டியாதலால் (இஷ்டி என்றால் யாகம்) தர்ச பூர்ண இஷ்டி என்று பெயர். ஹவிர் யக்ஞங்களுக்குள் இதுவே ப்ரக்ருதி மற்றவை இதன் விக்ருதிகள். ஒவ்வொரு பிரதமை அன்றும் அரிசி மாவை வறுத்து நீர் விட்டு கிளறி இறக்கி புரோடஸம் என்கிறதாக உருண்டை பிடித்து அதை ஹோமம் செய்வர்.

அதே போல புதிய அரிசி, ச்யாமை கொண்டு சிசிர ருதுவில் ஆக்ரேயண இஷ்டி.

சாதுர்மாஸ்யம் பல இஷ்டிகளை சேர்ந்த கர்மா.

நிரூடபசுபந்தமும், ஸெளத்ராமணியும் ஆண்டுக்கு ஒரு முறை செய்வன.

ஸோம யக்ஞங்கள் என்பன அக்னிஷ்டோமம், அத்யக்னிஷ்டோமம், உக்த்யம், ஷோடசி, வாஜபேயம், அதிராத்ரம், அப்தோர்யாமம் என்ற ஏழும் ஸோம யக்ஞங்கள். இவையனைத்தும் ஆயுஸில் ஒரு தடவையாவது செய்ய வேண்டும்.

ஸோம யாகங்களை மிக சிலரே செய்கின்றனர்.  ஸோம யாகத்தை ‘ஸோம ஸம்ஸ்தை’ என்றும் சொல்வதுண்டு. ஸம்ஸ்தை என்றால் யாகத்திலே உத்காதா கானம் செய்கிற ஸாமவேத ஸ்தோத்திரத்தின் முடிவுக்குத்தான் ‘ஸம்ஸ்தை’ என்று பெயர். இப்படிப்பட்ட ஸாமவேத ஸ்தோத்ர கானம் தான் ஸோம யாகங்களில் முக்கியம். பாக – ஹவிர் யக்ஞங்களில் ஹோமம் தான் முக்கியமாக நிறையச் செய்யப்படும் ஆனால் ஸோம யாகங்களில் ஹோமங்கள் குறைச்சலே.ஸ்தோத்திரங்கள் தான் அவற்றில் அதிகம். தேவர்களுக்கு ரொம்பவும் பிரீதியான ஸோமரஸம் ஹோமம் செய்யப் படுவதால் தான் இவற்றுக்கு ஸோமயாகம் என்று பெயர். ஸோமரஸம் என்றால் ஏதோ மதுபானம் என்பது போல் ஒரு மாயையை உண்டாக்கியிருக் கிறார்கள. அப்படியில்லை ஸோமலதை என்ற தெய்வீக மூலிகை கொடியை வாங்கி கசக்கி பிழிந்து ரஸம் எடுத்து அதை பல பாத்திரங்களில் எடுத்துக் கொண்டு விரிவாக ஹோமங்கள் செய்வர். இந்த ஸோம லதை கொடி நாளடைவில் கலிப்பிரவாகத்தில் காணாமல் போய் விட்டது. அதனால் அடுத்த திரவியமான பூந்திக்கொடி தான் இப்போது பயன்படுகிறது. (சாத்திரங் கள் வகுத்தவர்கள் பல விஷயங்களை ஊகித்து எல்லாவற்றுக்கும் பிராயசித் தங்கள் சொல்லியிருக்கிறார்கள். எல்லா ஹோமங்களுக்கும் பயன்படுத்த முக்கிய திரவியம் என்று ஒன்றும் அது கிடைக்காத பட்சத்தில் கெளண தரவியம் என்று ஒன்றும் சொல்லி இருக்கிறார்கள்).

ஏழு ஸோம யக்ஞங்களில் முதலாவதான அக்னிஷ்டோமமே ப்ரகிருதி. மற்ற ஆறும் அதன் விக்ருதிகள். இவற்றில் வாஜபேயத்தை வெகு விஷேச மாக்க் கருதிச் செய்வது வழக்கம். வாஜபேய யாகம் முடித்து யஜமானன் ஸநானம் செய்து வருகையில் (யக்ஞ முடிவில் செய்வதற்கு அவப்ருத ஸ்நானம் என்று பெயர்) அவருக்கு ராஜாவே ச்வேத சத்ரம் (வெண்குடை) பிடிப்பார். அவ்வளவு பெருமை அதற்கு. ‘வாஜம்’ என்றால் ‘அன்னம்’; ‘பேயம்’ என்றால் ‘பானம்’. அன்ன பானாதிகளை அதாவது நல்ல தானியச் செழிப்பையும், நீர்வளத்தையும் லோகத்தில் ஏற்படுத்தி தருவதால் இதற்கு வாஜபேயம் யக்ஞம் என்று பெயர்.

இந்த இருப்பத்தியோரு யக்ஞங்களோடு நாற்பது ஸம்ஸ்காரங்களும் நிறைவடைகிறது.

No classes added yet.

Our Visitor

000568
Users Today : 6