Poornayogam

Sanatana Dharma – The Eternal Way of Life

Home » Classes Recorded » Vedam – Tamil

Vedam – Tamil

ஶ்ரீகுருப்யோ நம:

நமோ தர்ம்ப்ரவர்தகேப்யோ மஹத்ப்ப்ய

வேதம்

வேதம் என்ற சொல் ‘வித்’ என்னும் வட மொழிச் சொல்லடியிலிருந்து தோன்றியது. ‘வித்’ என்ற சொல்லுக்கு ‘அறிதல்’ என்று பொருள். வேதங்கள் என்ற சொல்லுக்கு ‘அறிவு நூல்கள்’ என்று பொருள். வேதம் நமக்கு இரண்டு வகையான அறிவை தருகிறது. மனிதன் தன் வாழ்க்கையை மகிழ்ச்சி உடையதாக்குவதற்கு உலகிலுள்ள பொருட்களை தர்மநியதிக்கு உட்பட்டு எவ்விதமாக பயன்படுத்தலாம் என்பதை புகட்டும் ஒரு வகை அறிவு. இந்த வாழ்க்கையும், இந்த உலகமும் எதற்காக என்பதை குறித்த ஒருவகை அறிவையும் தருகிறது. வேதம் நமக்கு இந்த அடிப்படை அறிவை தருவதால் ‘அறிவு நூல்’ என்ற பெயரால் விளங்கப்படுகிறது. வேதங்களின் காலம் என்று ஆராய்ந்தால் வேதங்களுக்கு காலமே சொல்ல முடியாது. அதனால் வேதம் ‘அநாதி’ என்று அறியப்படுகிறது. அநாதி என்றால் அதற்கு முந்தியதாகவோ, அதற்கு ஆதியாக எதுவும் இல்லை என்பது தான் அநாதி என்பதன் பொருள். வேதம் மனிதரால் ஆக்கப்பட்டவையல்ல. ஆகையால் வேதத்திற்கு ‘அபெளருஷேயம்’ என்று அறியப் படுகிறது. வேதங்கள் எவராலும் எழுதப்படாதவை என்று பொருள்பட அவற்றை ‘எழுதாமறை’ என குறிப்பிடும் வழக்கமும் உண்டு. மறை என்பது மறைத்து வைக்கப்பட்ட நூல் என்பதல்ல, மறைந்து நிற்கும் பரம் பொருளை விளக்கும் நூல் என்பதுதான் கருத்து. மேலும் வேதத்திற்கு ‘ரிஷி’ என்ற பெயரும் உண்டு. மெய்ஞானிகளான முனிவர்களால் கண்டறியப்பட்டதுதான் வேதம். அதனால் அவர்கள் ‘ரிஷிகள்’ என்று அறியப்படுகிறார்கள்.

‘ரிஷியோ மந்திர த்ரஷ்டா’ ரிஷிகள் மந்திரத்தை பார்த்தவர்கள்:

எத்தனையோ அனாதியான சப்தங்கள் ஒலி வடிவமாக ஆகாசம் முழுவதும் வியாபித் திருக்கின்றன. அவற்றில் ‘லோகஷேமார்த்த’மான சப்தகோவை களே வேத மந்திரங்களாகும். தவ வலிமைகளாலும், யோகாப்பியாசங் களாலும் அநாதியான சப்தங்களிலிருந்து ‘ரிஷி’கள் சப்தங்களை கிரகித்து கொள்கிறார்கள். அப்படி கிரகித்து கொள்ளக்கூடியவர்கள் தான் ‘மந்திர த்ரஷ்டா’க்கள் என அறியப்படுகிறார்கள். ஒவ்வொரு வேதமந்திரமும் ஒரு ரிஷியின் பேரில் இருந்தாலும் உண்மையில் அந்த ரிஷி அந்த மந்திரத்தை இயற்றவில்லை. ஒரு மந்திரத்திற்கு இன்னார் ரிஷி என்கிற போது ஆகாசத்தில் அனாதியான அந்த மந்திரத்தை அந்த ரிஷியே முதலில் கண்டு உலகத்திற்கு வேளியிட்டார் என்றே அர்த்தம். ரிஷி என்றால் ‘மந்திர திரஷ்டா’ (மந்திரத்தை கண்டுப்பிடித்தவர்) என்று தான் அர்த்தம், ‘மந்திர கர்த்தா’ (மந்திரத்தை செய்தவர்) என்றல்ல. வேத மந்திரங்கள் சப்த ரூபத்திலேயே லோகஷேமத்தை செய்கின்றன.

பரமாத்மாவின் மூச்சே வேத மந்திரங்கள்:

நமது உடம்புக்குள் ‘சுவாசம்’ என்ற மூச்சின் அசைவால் (ஓட்டத்தால்) வாழ்க்கை நடப்பது போல இந்த சப்த அசைவுகளாலேயே பிரபஞ்ச வாழ்க்கை நடப்பதால் ‘பரமாத்மா’வின் மூச்சே வேத மந்திரங்கள்.

வேதத்தை ‘சுருதி’ என்றும் அழைப்பர். ‘செவிவழி அறிவு’ என்பது இதன் பொருள். வேதங்களை எழுத்து எழுத்து வடிவில் வடிக்கும் முன்னர் வேதம் பயில்பவர்கள் பன்னிரண்டு வருட காலம் மாணவர்களாயிருந்து அவற்றை மனப்பாடம் செய்வார்கள். பின்னர் தங்களிடம் வரும் மாணவர்களுக்கு நீண்ட காலம் இவற்றை போதித்து மனப்பாடம் செய்ய சொல்லுவர். இவ்வாறு வேதங்கள் ‘செவிவழி அறிவாக’ தலைமுறை, தலைமுறையாக வந்ததால் ‘சுருதி’ எனப்பட்டது. ‘சுருதி’ என்றால் காதால் கேட்பது என்று பொருள்.

ரிஷிகளால் வெளிப்படுத்திய இந்த உண்மைகள் பின்னாளில் வியாச முனிவரால் நான்காக தொகுக்கப் பட்டன. அவை ரிக், யஜுர், சாமம், அதர்வண வேதங்கள். ஒவ்வொரு வேதமும் நான்கு முக்கிய பாகங்களாக பிரிக்கப்படுகின்றன.

அவை: சம்ஹிதை அல்லது மந்திரபாகம், பிராமணபாகம், ஆரண்யகம், உபநிஷதம்.

சம்ஹிதை அல்லது மந்திரபாகம்: பல்வேறு தெய்வகளிடம் பிராத்தனை மற்றும் தெய்வங்களை நோக்கி கூறப்படும் துதிப்பாடல்கள். மந்திரம் என்ற சொல்லிற்கு ‘உச்சரிப்பவரை காப்பாற்றும்’ என பொருள்படும். எனவே மந்திரங்கள் யார்,யார் உச்சரிக்கின்றனரோ, அல்லது யார்பொருட்டு அவை உச்சரிக்கப் படுகின்றனவோ அவர்கள் எல்லோரையும் காப்பாற்றும்.

பிராமணபாகம்: மந்திரங்களை வாய் உச்சரிக்கும் போது அனுஷ்டிக்க வேண்டிய கர்மங்கள், துதிக்கும் முறைகளையும், பலியிடுகின்ற முறை களையும் கூறுகின்ற ‘வழிபாட்டுத்துறை’யே  பிராமணம். சுருங்ககூறின் வேதங்களின் உட்பொருள்களைக் கொண்ட செயல்முறை விளக்கங்கள் தான் பிராமணபாகம். இவை ரிக்வேத பிராமணம், யஜுர்வேத பிராமணம், சாமவேத பிராமணம், அதர்வணவேத பிராமணம் என நான்கு பிரிவுகளாய் பகுத்தறியப்படுகின்றன.

ஆரண்யகம்: ஆரண்யகம் என்றால் காடு. உலக வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் தனிமையாக (அன்றைய காலத்தில் துறவறம் மேற் கொள்பவர்கள் காட்டில் சென்று தனிமை யில் வாழும் மரபு கொண்டிருந்தனர்.) அமர்ந்து மானசீக முறையில் தன அனுஷ்டானங்களை மேற்கொள்ள வேண்டியவற்றை விவரிப்பவையே ஆரண்யங்கள். ஆரண்யபாகம் என்பது ஒருவரை பிராமணங்களின் கிரியை நிலையிலிருந்து உபநிஷத சிந்தனை நிலைக்கு எடுத்து செல்லக் கூடிய ஒரு இடைநிலை எனக் கொள்ளலாம்.

உபநிஷதம்: வேதங்களின் சாரமே உபநிஷதம்.

இந்த நான்கு பகுதியும் சேர்ந்ததே முழு வேதம். வேதத்தின் ஒவ்வொரு சாகையை எடுத்து கொண்டாலும் இந்த மரபு சார்ந்தே அமைந்துள்ளது.

ஸம்ஹிதை மரம் என்றால், பிராமணம் பூ, ஆரண்யகம் காய், உபநிஷதம் தான் பழம். வேதங்களின் வரிசையில் அந்தமாக (கடைசியில்) வருவதால் உபநிஷதம் ‘வேதாந்தம்’ என்று அறியப்படுகிறது. 

‘உப-நி-ஷத’ என்றால் பக்கத்தில் உட்கார்ந்து கொள்வது என்று பொருள். குருவுக்கு மிக சமீபத்தில் சிரத்தையோடு உட்கார்ந்த சீடனுக்கு குரு உபதேசித்த உபதேசமொழிகளே உபநிஷதங்களாகும்.

பல விளக்க ஆசிரியர்கள் பல விளக்கங்கள் தந்துள்ளார்கள். ஒவ்வொன்றாக உபநிஷத விளக்க உரைகளில் பார்ப்போம்.

வேதகால சிந்தனைகளின் மணிமகுடமாக திகழ்பவை உபநிஷதங்கள். உபநிஷதங்கள் பல அவற்றுள் ‘108’ பொதுவாக கணக்கில் கொள்ளப்படு கின்றன. அவற்றில் பதினான்கு உபநிஷதங்கள் முக்கியமாக கருதப்படு கின்றன. அவை ஈச, கேன, கட, ப்ரச்ன, முண்டக, மாண்டூக்ய, ஐத்தரேய, தைத்திரீய, சாந்தோக்யம், பிருஹதாரண்யகம், சுவேதாஸ்வதர, கெளசீதகி, மஹாநாராயண, மைத்ராயணி உபநிஷதங்கள் ஆகும். இவற்றுள் முதல் பத்து உபநிஷதங்களுக்கு ஶ்ரீஆதிசங்கரர் விளக்கவுரை எழுதியுள்ளார். பதினான்கு உபநிஷதங்களும் கீழ் கண்டபடி நான்கு வேதங்களில் அமைந்துள்ளன.

ரிக் – ஐதரேய, கெளசீதகி

யஜுர் – ஈச, கட, தைத்திரீய, பிருஹதாரண்யகம், சுவேதாஸ்வதர,

மைத்ராயணி, மஹாநாராயண

சாம – கேன, சாந்தோக்ய

அதர்வண – பிரசன்ன, முண்டக, மாண்டூக்ய

உபநிஷதங்களை நமக்கு அளித்த முனிவர்கள் தங்களை முன்படுத்தி எதையும் கூறாமல் ‘எங்களுக்கு விளக்கிய மகான்கள் இவ்வாறு கூறினார்கள்’ என்றே குறிப்பிடுகிறார்கள். அதாவது இந்த உண்மைகள் தங்கள் திறமையால் பெறப்பட்டவை அல்ல, மகான்களின் அருளால் கிடைத்தவை என்று அவர்கள் கூறுவது போல் உள்ளது இது. நாம் எத்தனை சிரத்தையுடன் இதை அணுக வேண்டும் என்பதையே இது உணர்த்துகிறது. வெறும் நூலறிவு கொண்டோ, சமஸ்கிருத புலமை கொண்டோ, உபநிஷத்தின் உண்மைப் பொருளை அறிந்துக் கொள்வது சாத்தியமில்லை. மன தூய்மையுடன் மீண்டும், மீண்டும் படித்து மந்திரங்களின் பொருளை ஆழமாக சிந்தித்து சிரத்தையுடன் அணுகினால் ‘உபநிஷத’ உண்மையை புரிவதோடு மட்டுமின்றி உபநிஷத்தின் அற்புதத்தில் ஆழ்ந்து மனம் மகிழ முடியும். அந்த மந்திரங்களை நமது வாழ்க்கையில் பொருளுடையவை ஆக்கி கொள்வோம்.

Sub topics:

  1. வேதபாடம்-01
  2. வேதப்பாடம் – 02

Our Visitor

000559
Users Today : 3