Poornayogam

Sanatana Dharma – The Eternal Way of Life

Home » Classes Recorded » Srimad Bhagavad Gita – Tamil

Srimad Bhagavad Gita – Tamil

முகவுரை

மனிதன் உலகில் எப்படி வாழ வேண்டுமென்று முன் மாதிரியாக இருந்து தங்கள் வாழ்க்கையின் மூலம் புகட்டுதலே அவதார புருஷர்களின் முதற்கடமை. அவதார புருஷர்கள் எல்லோரும் மக்களுக்கு தாங்கள் புகட்டி யவைகளை மிக எளிய முறையில் கொடுத்திருக்கிறார்கள். யாவருக்கும் விளங்கும் வண்ணம் மேலாம் தத்துவங்களை சுலபமாக்கியிருக்கிறார்கள்.

ஶ்ரீமத் பகவத் கீதையும் போதனா முறையில் மிக எளியதே. மூலத்தை அவரவர்குத் தெரிந்த மொழியிலே பெயர்த்தெடுத்து படித்து பார்த்தால் படிக்கின்றவர்கட்கு விளங்குகின்ற பகுதியே பெரும்பான்மை எனலாம். ஒரு கோட்பாட்டை பகவான் ஒரிடத்தில் பகர்ந்தால் அதன் பொருள் நன்கு விளங்குவதற் பொருட்டு வேறு பல இடங்களில் பல விதங்களில் அதை விளக்குகிறார்.

பகவத் கீதை என்பது பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கும் அர்ச்சுனனுக்கும் இடையே குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் நிகழ்ந்த தெய்வீக உபதேசமாகும். இது அறிஞர்கள் கூடிய சபையில் நிகழ்ந்த சொற்பொழிவு அல்ல; வாழ்க்கையின் மிகக் கடினமான தருணத்தில், தர்மச் சங்கடத்தில் தவித்த ஒருவனுக்கு இறைவன் நேரடியாக அளித்த ஆன்மிக வழிகாட்டுதலாகும். எனவே, இந்த உரையாடல் எவ்வாறு உலக மக்களிடம் அப்படியே வந்து சேர்ந்தது என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.

இந்திய ஆன்மிக மரபின்படி, அவதார புருஷர்கள் உலகில் அவதரிக்கும் ஒவ்வொரு காலத்திலும், அவர்களின் தெய்வீக வாழ்க்கையையும் போதனைகளையும் வரலாற்றில் நிலைநிறுத்தும் மகரிஷிகளும் தோன்றுகின்றனர். ஸ்ரீ ராமரின் அவதார வரலாற்றை உலகிற்கு அளிக்க வால்மீகி முனிவர் தோன்றியதுபோல், ஸ்ரீகிருஷ்ணரின் தெய்வீக செயல்களையும் உபதேசங்களையும் உலகிற்கு வழங்க வியாச மகரிஷி தோன்றினார். தெய்வீக ஞானப்பார்வை பெற்றிருந்த வியாசர், ஸ்ரீகிருஷ்ணர் எங்கு இருந்தாலும் அவரது எண்ணங்களையும் செயல்களையும் உள்ளவாறே அறியும் அருளைப் பெற்றிருந்தார்.

வியாசரின் அருளால் சஞ்சயரும் தற்காலிகமாக திவ்ய திருஷ்டியையும் திவ்ய ச்ரவண சக்தியையும் பெற்றார். அதன் மூலம் குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் நிகழ்ந்த அனைத்தையும் நேரில் கண்டதுபோல் உணர்ந்து, திருதராஷ்டிரருக்கு உள்ளபடியே விவரிக்க முடிந்தது. அந்த வகையில், அர்ச்சுனன் பகவான் கிருஷ்ணரிடமிருந்து பகவத் கீதை என்னும் அமுதத்தை நேரடியாகப் பெற்றுக்கொண்ட அதே நேரத்தில், வியாசரும் சஞ்சயரும் தெய்வீக அருளின் மூலம் அந்த அமுதத்தை அனுபவித்தனர். வியாசர் அதனை நூலாகப் பதித்தார்; சஞ்சயர் அதனை வாய்மொழியாக எடுத்துரைத்தார்.

இங்கு ஒரு இயல்பான ஐயம் எழலாம். சஞ்சயர் உண்மையிலேயே தொலைவில் நிகழ்வதைக் காணவும், கேட்கவும் இயலும் அசாதாரண ஆற்றலைப் பெற்றிருந்தாரா? யோக சாஸ்திரம் இந்தக் கேள்விக்கு ஆழமான விளக்கத்தை அளிக்கிறது. மனிதனிடம் காணப்படும் இரண்டு புறக்கண்கள் மட்டுமே உணர்வின் கருவிகள் அல்ல; இடம், காலம் போன்ற எல்லைகளைக் கடந்துணரும் நுண்ணிய புலனாற்றல்களும் அவனுள் மறைந்திருக்கின்றன. மனதை ஒருமுகப்படுத்தி, ஒழுக்கமான யோகப் பயிற்சியுடன் தொடர்ந்து முயற்சி செய்தால், இத்தகைய மறைந்துள்ள ஆற்றல்கள் விழிப்புறும் என்று யோகம் போதிக்கிறது. சில அரிதான சந்தர்ப்பங்களில், இயற்கையின் விசேஷமான சூழ்நிலைகளாலும் இத்தகைய திறன்கள் சிலரிடம் தன்னிச்சையாக வெளிப்படக்கூடும்.

இத்தகைய கருத்துகளுக்கு சிந்தனையைத் தூண்டும் சில நிகழ்வுகள் உலகின் பல பகுதிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. பல ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் வாழ்ந்த ஒருவர், தன்னிடமிருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் நடைபெறும் சம்பவங்களை மனக்கண்ணால் காணும் திறன் கொண்டவராகக் கூறப்பட்டார். மேலும், அவர் கண்ட காட்சிகள் புகைப்படங்களில் பதிவானதாகவும் செய்திகள் வெளியாகின. இதுபோன்ற நிகழ்வுகள் மனித மனத்தின் மறைந்துள்ள திறன்களைப் பற்றிய ஆராய்ச்சிகளுக்கு புதிய ஆர்வத்தை ஏற்படுத்தின.

அதேபோல், ஒரு கார் விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த ஒருவர் நினைவு திரும்பியபின், தொலைவில் இருந்த வானொலி நிலையத்தின் ஒலிபரப்புகளைத் தெளிவாகக் கேட்கும் திறனைப் பெற்றிருந்ததாக மருத்துவ ஆய்வுகள் சுட்டிக்காட்டின. உடல் உறுப்புகளில் வெளிப்படையான மாற்றங்கள் எதுவும் இல்லாத நிலையிலும், முன்பே மறைந்திருந்த ஒரு நுண்ணிய திறன் வெளிப்பட்டிருக்கலாம் என்று கருதப்பட்டது.

மற்றொரு சம்பவத்தில், மாடியிலிருந்து விழுந்து காயமடைந்த ஒரு பெண்மணி, பகல் நேரத்திலேயே வானத்தில் நட்சத்திரங்களைக் காண முடிந்ததாகக் கூறப்படுகிறது. உண்மையில் நட்சத்திரங்கள் பகலிலும் வானில் இருக்கின்றன; சூரிய ஒளியின் பிரகாசம் காரணமாக அவை நம் பார்வைக்குப் புலப்படுவதில்லை. கண்களின் உணர்திறன் வழக்கத்தை விட அதிகரித்தால், அவற்றைப் பார்க்க முடியும் என்ற சாத்தியத்தை இந்த நிகழ்வு உணர்த்துகிறது.

இந்த நிகழ்வுகள் அனைத்தும் சஞ்சயரின் திவ்ய சக்திகளுக்கு நேரடியான அறிவியல் சான்றுகள் என்று கூற முடியாவிட்டாலும், மனிதனின் புலன்கள் நாம் அன்றாடம் பயன்படுத்துவதைவிட மிகவும் விரிந்த திறன்களை உடையவையாக இருக்கலாம் என்ற சாத்தியத்தை உணர்த்துகின்றன. யோகப் பயிற்சி, மனஒழுக்கம், தியானம் மற்றும் இறையருள் ஆகியவற்றின் மூலம் இத்தகைய நுண்ணிய ஆற்றல்கள் வெளிப்படலாம் என்று பாரம்பரிய யோக சாஸ்திரம் வலியுறுத்துகிறது.

எனவே, சஞ்சயரின் திவ்ய திருஷ்டியும் திவ்ய ச்ரவண சக்தியும் அவருக்கே உரிய தனித்துவமான வரப்பிரசாதமாக இருந்தாலும், அவற்றின் அடிப்படை ஆற்றல் மனித இயல்பிற்கே அந்நியமானதல்ல. அந்த ஆற்றல் ஒவ்வொரு மனிதனிடமும் விதையாக மறைந்திருக்கிறது. ஆனால் அது முழுமையாக மலர்வதற்கு தனிப்பட்ட முயற்சி மட்டுமன்றி, வியாசர் போன்ற ஞானகுருவின் அருளும் வழிகாட்டுதலும் இன்றியமையாதவை என்பதை இந்த நிகழ்வுகளும் யோக மரபும் நமக்கு உணர்த்துகின்றன.

பகவத் கீதை’ ‘மஹாபாரதம்’ என்னும் இதிகாசத்தில் அடங்கியுள்ளது. ‘பீஷ்ம பர்வதத்தில்’ 25-வது அத்தியாயத்தில் இருந்து 42-வது அத்தியாயம் வரையில் இந்த அரிய நூலைக் காணலாம். ‘பதினெட்டு’ அத்தியாயங்கள் இருக்கின்றன, இவைகளில் அமைந்துள்ள சுலோகங்கள் மொத்தம் ‘எழுநூறு’.

இந்து சமய அனைத்திற்க்கும் அடிப்படையாக மூன்று நூல்களைக் குறிப்பிடு வது வழக்கம். இம் மூன்று நூல்களையும் சேர்த்துப் ‘பிரஸ்தானத் திரயம்’ என குறிப்பிடுவதுண்டு. ‘பிரதானமான மூன்று’ என்பதே இதன் பொருள். இம் மூன்று யாதெனில் ‘உபநிஷதம்’, ‘பிரம்மசூத்திரம்’, ‘பகவத்கீதை’.

‘உபநிஷத’ங்கள் எல்லாம் நான்கு ‘வேத’ங்களினின்றும் வந்தவை. ‘பகவத் கீதையோ’ ‘மஹாபாரத்த்தி’னின்றும் வந்தது. ஆயினும் இது ‘உபநிஷதம்’ என்று அழைக்கப்படுகிறது. ஏனென்றால் எல்லா உபநிஷதங்களின் சாரம் இதில் இருக்கிறது. உபநிஷதங்களையெல்லாம் பசு என்று வைத்துக் கொண்டால் பகவத்கீதையை அவை தரும் பால் என்று பகரலாம்.

கீதா சாஸ்த்திரத்தை இக, பர இரண்டுக்கும் ஏற்ற நல்ல வழிகாட்டியாக வைத்து கொள்ளலாம். கீதையை நன்றாக அறிந்துக் கொண்டவர்கள் பிறகு உபநிஷதங்களில் அடங்கியிருக்கும் கோட்பாடு யாதோ என்று கவலைப் பட வேண்டியதில்லை. எல்லோருக்கும் எளிதில் விளங்காத உபநிஷதங்களை விளங்கும் படி நமக்கு அருளியவர் பகவான் கிருஷ்ணர். கீதையில் அடங்காத இக, பர தத்துவம் ஒன்றுமில்லை.

பகவத்கீதைக்கு அமைந்துள்ள தனிச் சிறப்புக்கு முக்கியமான காரணம் ஒன்று உண்டு. அது ஏக காலத்தில் ‘சுருதி’யாகவும், ‘ஸ்மிருதி’யாகவும் வழங்குகிறது. சுருதி என்றால் என்ன, ஸ்மிருதி என்றால் என்ன என்று முதலில் பார்ப்போம்.

‘உபநிஷதங்’களுக்கு ‘சுருதி’ என்று பெயர். கர்ண பரம்பரையாகக் காதால் கேட்டுக் காப்பாற்றி வைக்கப்பட்டுள்ளது எதுவோ அது சுருதி. நெடுங்கால மாக ஒருவர் பின் ஒருவராகக் கேட்டு வந்தது எனினும் அதன் சொல்ல மைப்பு திரிவுப் படாது இருந்து வந்திருக்கிறது. சுருதிப் பொருளை யாரும் மாற்ற முடியாது. மெய்ப்பொருளை விளக்குகின்ற சுருதி மொழியும் என்றும் மாறாதிருக்கிறது. சுருதி என்றும் சாசுவமானது.

‘ஸ்மிருதி’ என்பது ‘ஞாபகத்தில் வைத்துக் கொள்ளப்பட்டது’ என்று பொருள். சமூக வாழ்க்கை சம்பந்தமான கட்டுபாடுகளும், சட்டத்திட்டங்களும் சேர்ந்து ஸ்மிருதி என்று பெயர் பெறுகிறது. நன்கு அமைக்கபெற்ற ஸ்மிருதிகள் எப்பொழுதும் பரதத்துவங்களை அடிப்படையாகக் கொண்டவைகள். ஸ்மிருதி கள் சாசுவதமானவைகள் அன்று. காலத்திற்க்கும், இடத்திற்கும், சந்தர்பத்திற் கும் ஏற்ப அவைகள் மாறியமையும். சமூக நடைமுறைகளை நன்கு அறிந்துள்ள மேலோன் ஒருவன், அல்லது மேலோர் கூட்டம் ஒன்று ஸ்மிருதிகளைக் காலத்திற்கு ஏற்றவாறு திருத்தி அமைத்துக் கொள்வ துண்டு. ஸ்மிருதி என்பது அப்போதைக்கப்போது மாறியமையும் தன்மை யுள்ள சமூக கோட்பாடுகளாம்.

ஶ்ரீமத் ‘பகவத்கீதை’யானது ஏக காலத்தில் ‘சுருதி’யாகவும், ‘ஸ்மிருதி’யாகவும் அமைந்துள்ளது. பரதத்துவத்தை அது நன்கு விளக்குவதால் அது ‘சுருதி’யாகி றது. பரதத்துவத்திற்கு ஏற்ற வாழ்க்கை வாழ்வது சனாதன தர்மம். இந்நுலில் இருந்து சனாதன தர்மத்தை உள்ளப்படி கற்றுக் கொள்ளலாம். சமுதாய அமைப்பு எத்தகையது என்பதையும்,  அது எங்ஙனம் நடைபெற வேண்டும் என்பதையும் கீதை எடுத்து விளக்குகிறது. ஆகையால் ‘ஸ்மிருதி’ என்றும் சிறப்பு பெயர் பெற்றுள்ளது. மற்ற ஸ்மிருதிகள் காலத்திற்கேற்று மாறி அமையும். ஆனால் பகவத்கீதை மாற்றி அமைக்க முடியாது. ஏனென்றால் சமூக நடைமுறையில் எக்காலத்திற்கும் ஏற்ற கோட்பாடுகளுடையது கீதை. மாறுபாடு அடையும் உலகில் மாறுபாடு அடையாத கோட்பாடுகளையே கீதா சாஸ்த்திரம் விளக்குகிறது. ஆகவே எக்காலத்திற்கும், எல்லா சமூகத்திற்கும் உதவுகிற ஸ்மிருதியாகும்.

ஒவ்வொரு சாஸ்த்திரத்திலும் ‘உபபத்தி’ என்றும் ‘அனுஷ்டானம்’ என்றும் இரண்டு பகுதிகள் உண்டு. ஆங்கிலத்தில் இவை ‘Theory’-தியரி என்றும், ‘Practical’- பிராட்டிக்கல் என்றும் கூறுவர்.

யுக்தியால் முடிவு கட்டுவது உப்பத்தி, நடைமுறையில் செய்து காட்டுவது அனுஷ்டானம்.

சதாரண மனிதன் ஒருவனுக்கு “பிரம்மஞானம்” வெறும் உபபத்தியாகப் போய் விட்டால் அந்த ஞானத்தால் நன்மையொன்றும் அடைய மாட்டான். பிரம்மஞானம் முற்றிலும் வாழ்க்கைக்கு உரியது. ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கையில் அதை அனுஷ்டானத்திற்குக் கொண்டு வரும் பொழுது அது “யோக சாஸ்த்திரம்” என்று பெயர் பெறுகிறது.

கூலி வேலை செய்பவனுக்கு கீதா சாஸ்த்திரம் தெரிந்திருந்தால் அவன் தன் வேலையைத் திறம்பட செய்வான். விவசாயம் செய்பவருக்கு கீதை தத்துவம் தெரிந்திருந்தால் அவன் நல்ல விவசாயி ஆவான். வர்த்தகம் செய்பவனுக்கு கீதா கோட்பாடுகள் தெரிந்திருந்தால் அவன் சிறந்த வர்த்தகன் ஆவான். அரசாங்க உத்தியோகஸ்தர்கள் கீதையை நன்கு அறிந்திருந்தால் அவர்களுடைய உத்தியோகம் சீராக நிகழும். பாடம் புகட்டும் ஆசிரியர்கள் கீதையின் கோட்பாடுகள் அறிந்திருந்தால் அவர்கள் சீரிய ஆசிரியர்கள் ஆவார்கள். சுருங்கச் சொல்லுமிடத்து கீதையைக் கற்று அனுஷ்டிக்கும் ஒவ்வொரு மனிதனும் மேலான மனிதன் ஆவான். திறமை வாய்ந்த மனிதனுக்கே ‘யோகி’ என்று பெயர்.

மனத்தின் பண்பாடு யோகமாகிறது. மனம் தளர்வுறுவது, துயர்வுறுவது யோகமாகாது. வியாகூலமுடையவன் யோகியாகான். அப்படியானால் கீதை யின் முதல் அத்தியாயத்திற்கு ‘அர்ச்சுன விஷாத யோகம்’ என்று பெயர் எப்படி வந்தது என்ற ஐயப்பாடு பொதுவாக எழும். அதற்கான விளக்கம் பார்ப்போம். பொதுவாக துயரம் வருவது உலக ஆசையை குறித்ததாக தான் இருக்கும். தனக்கு வந்து அமைந்த போகமும், பொருளும் போதவில்லை என்பதாகத்தான் இருக்கும். ஆனால் அர்ச்சுனனுக்கு அமர்களத்தில் வந்த துயரம் அத்தகையதானது அல்ல. அவனுக்கு உலக ஆசை அகன்று விட்ட தாகவும், மூன்று உலகின் இராஜ்யமும் வேண்டாம் என்கிறான். போர்  புரிவதா, பின் வாங்குவதா, எது தன் கடமை என்று தனக்குப் புலப்பட வில்லை என்று பரிதவிக்கிறான். வாழ்க்கை தனக்கு தாங்க முடியாத சுமை போன்று உணர்வு கொள்ள வைத்தது . அது குறித்து அவன் வருந்தினான். அது வாழ்க்கையின் விரக்தி அல்லது பற்றின்மைக்கு சமானம். அருள் தாகம் என்றும் அதை கூறலாம்.  ஆகவே அர்ச்சுனனுக்கு ஏற்பட்ட துயரம் அவனை யோகத்திற்கு ஆயத்தப்படுத்தியது. ஆகவே அர்ச்சுன்னுக்கு ஏற்பட்ட துயரம் ஒருவித யோகம் என்று சொல்லப்படுகிறது.

பதினெட்டு அத்தியாயங்களில் உள்ள பதினெட்டு யோகங்களையும் மேலும் தொகுத்து நான்கு யோகங்களில் அடக்கி வைக்கலாம். அந்த நான்கும் முறையே ‘கர்மயோகம்’, ‘ராஜயோகம்’, ‘பக்தியோகம்’, ‘ஞானயோகம்’ என்று பெயர் பெறுகின்றன. “ஶ்ரீ பகவான் கிருஷ்ணர்” இந்த நான்கினுள்  வேற்றுமை யோ, தாரதம்மியமோ பாராட்டுகிற அறிகுறிகளைக் காணமுடியாது. கர்மத் தோடு உயர்ந்த ஞானத்தை அவர் இணைக்கிறார். பிறகு பக்தியையும், ஞானத்தையும் ஒரே பாங்கில் பொருள் படுத்துகிறார். யோகத்தையும், பக்தியையும் மற்றோர் இடத்தில் ஒன்று படுத்துகிறார். இங்ஙனம் ஒரு யோகம் மற்றொன்றுக்கு முந்தியதுமில்லை, பிந்தியதுமில்லை, மேலானது மில்லை, கிழானதுமில்லை என்று எடுத்துக்காட்டுவது அவரது சிறப்பியல்பு ஆகும். அங்ஙனம் நான்கு யோகங்களும்  ஏக காலத்தில் சேர்ந்து அனுஷ்டிக் கப்படும் பொழுது வாழ்க்கையின் புருஷார்த்தம் இனிது நிறைவேறுகிறது. நான்கு யோகங்களையும் சமரசமாக வழங்குகின்ற அப்பரம புருஷனுக்கு “யோகேஷ்வரன்” என்னும் பெயர் வந்துள்ளது.

“வேத”ங்களில் நான்கு “மஹாவாக்கியங்கள்” அமைந்திருக்கின்றன். “மஹா வாக்கியம்” என்பது “பரமாத்மாவுக்கும்”, “ஜீவாத்மாவுக்கும்” உள்ள சம்பந்தத்தை சொல்வது. “தத் த்வம் அஸி” என்ற மூன்று சொற்களை கொண்ட மஹா வாக்கியத்திற்கு உற்ற உயர்ந்த விளக்கம் என்று “ஶ்ரீமத் பகவத்கீதை”யைச் சொல்லலாம். பதினெட்டு அத்யாயங்கள் ‘திரிஷட்கம்’ என்று அறியப்படுகிறது. முதல் ஷட்கம் என்கிற முதல் ஆறு அத்தியாயங்கள் “த்வம்”(நீ) என்னும் பதத்திற்கு இலக்காக இருக்கிற ஜீவ தத்துவத்தை விஸ்தாரமாக விளக்குகின்றன. ஏழாவது அத்தியாயத்திலிருந்து பன்னிரண்டாம் அத்தியாயம் வரையுள்ள இரண்டாவது ஷட்கம் மஹாவாக்கியத்தில் “தத்”(அது) என்னும் பதத்திற்கு இலக்காக இருக்கிற “பரதத்துவம்” அல்லது “பரமாத்மாவை” விளக்குகின்றன. பதிமூன்றாவது அத்தியாயத்திலிருந்து பதினெட்டாம் அத்தியாயம் வரையில் உள்ள மூன்றாவது ஷட்கம் மஹாவாக்கியத்திலுள்ள “அஸி”(இருக்கிறாய்) என்னும் சொல்லுக்கு இலக்காயுள்ள “பரமாத்மா”, “ஜீவாத்மா” இணக்கத்தை இப்பகுதி தெளிவுபடுத்துகிறது. ஆக, மஹாவாக்கியத்துக்கு முறையான வியாக்க யானம் என்று  “ஶ்ரீமத்பகவத்கீதை” சிறப்பை பெறுகிறது.

ஶ்ரீமத் பகவத்கீதைக்கு பல பாஷ்யங்கள் இருக்கின்றது. பகவத்கீதை ஒரு நிலைக்கண்ணாடி என்றால் ஒவ்வொரு பாஷ்யமும் அதில் தோன்றும் பிம்பம் போன்றதாகும். அவரவர் முகம் எப்படியோ அப்படியே பிம்பமும் தென்படுகிறது. அங்ஙனம் ஒவ்வொருடைய மூலக்கருத்தும் கீதையில் இருக்கிறது.

கீதா சாஸ்த்திரம் முக்தியைப் புகட்டுகிறது. முக்தி மார்க்கத்தை புகட்டும் சாஸ்த்திரங்களே யாவற்றிற்க்கும் மேலானவைகள். அதற்கு உற்ற நெறி யோகம். கீதா சாஸ்த்திரத்தில் கர்ம, பக்தி, ஞானம் ஆகிய மூன்று யோகங் களும் முறையே இடம் பெறுகின்றன. இரண்டு சிறகுகளும், ஒரு வாலும் இருந்தால் பறவை பறக்கும். ஜீவன் பரத்தை அடைவதற்கு ஞானமும், பக்தியும் சிறகுகளாக அமைகின்றன. கர்மயோகம் சமப்படுத்தும் வால் ஆகிறது. எல்லா சாதனைகளும் இம் மூன்றில் அடங்கியிருக்கின்றன.

பரத்தை எண்ணியெண்ணி இகத்தை மறந்தது விடும்படி புகட்டும் நூல்களும் உண்டு. இகத்தில் கருத்து அனைத்தையும் வைத்து பரத்தைப் புறக்கணிக்கும் படி போதிக்கும் நூல்களும் உண்டு. ஆனால் பகவத்கீதை இகம், பரம் இரண்டையும் முறையாக வகுத்து, ஒன்று மற்றொன்றுக்கு முரண்பட்டதல்ல என்பதோடு இக வாழ்க்கை நன்கு நடத்துபவன் பரத்துக்கு உரியவன் ஆகிறான். பரத்தை சார்ந்திருக்க வல்லவன் இகத்துக்கு நன்கு பயன் படுகிறான் என்று கீதை நமக்கு போதிக்கிறது.

மன அமைப்பில் செயல், உணர்வு, அறிவு என்று மூன்று பகுதிகள் உண்டு. அதையே இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்பர். மனதில் இந்த மூன்று வித மாண்புகளும் ஒருங்கே மிளிருதல் வேண்டும் அப்பொழுது தான் பண்பாடு பூர்த்தியாகிறது. இந்த மூன்று மாண்புகளையும் கீதா சாஸ்த்திரம் முறையாக நமக்கு போதிக்கிறது.

மனிதனை நிறைமனிதன் ஆக்குவது கீதையின் கோட்பாடு. நிறைநிலை எய்து நிறைமனிதன் ஆக விரும்பும் அனைவருக்கும் ஶ்ரீமத் பகவத்கீதை பொது நூலாகும்.

“ஶ்ரீமத் பகவத்கீதை ஸர்வகத சாஸ்த்திரம்”                          என்றே அறியப்படுகிறது.

Sub topics:

  1. தியான சுலோகங்கள்

Our Visitor

000559
Users Today : 3