Poornayogam

Sanatana Dharma – The Eternal Way of Life

Home » Sreemad Bhagavatgita Lesson -01 Arjuna Vishada Yogam – Tamil » ஸ்லோகம் – 38 முதல் 45 வரை

ஸ்லோகம் – 38 முதல் 45 வரை

य्द्यप्येते न प्श्यन्ति लोभोपहतवेतसः ।

कुलक्षयकृतं दोषं मित्रद्रॊहे च पतकम् ॥ १- ३८ ॥

யத்யப்யேதே ந பச்யந்தி லோபோபஹதசேதஸ: |

குலக்ஷயக்ருதம் தோஷம் மித்ரத்ரோஹே ச பாதகம் || (1-38) |

திருதராஷ்டிரனின் புத்திரர்கள், அவர்கள் புத்தியில் உள்ள லோபத்தினால் தான் மட்டும் அனுபவிக்க வேண்டும் என்ற தீய குணத்தால் போரின் விளைவை அவர்கள் பார்க்கவில்லை.  ஒரு குலத்தை நாசம் செய்வதினால் வருகின்ற விளைவை எண்ணிப் பார்க்கவில்லை. நமக்கு வேண்டியவர்களை கொல்வதினால் வரும் பாதகத்தையும், வீழ்ச்சியையும், குறைகளையும் அவர்கள் எண்ணிப் பார்க்க வில்லை.

कथं न ज्ञेयमस्माभिः पपदस्मान्निवर्तितुम् ।

कुलक्षयकृतं दोषं प्रपस्यद्भिर्जनार्दन ॥ १-३९ ॥

கதம் ந ஜ்ஞேயமஸ்மாபி: பாபாதஸ்மாந்நிவர்திதும் |

குலக்ஷயக்ருதம் தோஷம் ப்ரபச்யத்பிர்ஜநார்தன || (1-39) ||

நம்மால் ஏன் புரிந்துக் கொள்ளக்கூடாது. மற்றவர்கள் தவறு செய்தாலும் நாம் ஏன் தவறு செய்ய வேண்டும்.  ஒரு குலத்தை அழிக்கின்ற செயலில் உள்ள குறையை பார்க்கின்ற நம்மால் அந்த பாவத்திலிருந்து ஏன் பின் வாங்கலாகாது ஜனார்தனா!

அடுத்த ஸ்லோகத்திலிருந்து குலம் அழிவதனால் என்னென்ன தோஷங்கள் வரும் என்று விளக்குகிறான்.

कुलक्षये प्रणस्यन्ति कुलधर्माः सनातनाः ।

धर्मे नष्टे कुलं कृत्स्नमधर्मोऽभिभवत्युत ॥ १-४० ॥

குலக்ஷயே ப்ரணச்யந்தி குலதர்ம: ஸநாதனா: |

தர்மே நஷ்டே குலம் க்ருத்ஸ்னமதர்மோSபிபவத்யுத || (1-40) ||

ஒரு குலம் அழிந்துவிட்டால் குலதர்மங்கள் நாசமடைந்து விடும். தொன்று தொட்டு பரம்பரையாக பின்பற்றுகின்ற குல தர்மங்கள் யாவும் மறைந்து விட்டால் அந்த குலம் முழுவதும் அதர்மத்தை பின்பற்றுபவர்களாக மாறிவிடும் அல்லவா!

अधर्माभिवत्कृष्ण प्रदुष्यान्ति कुलस्त्रियः ।

स्त्रीषु दुष्टासु वर्ष्णेय जायते वर्णसङ्कर: ॥ १-४१ ॥

 

அதர்மாபிபவாத்க்ருஷ்ண ப்ரதுஷ்யந்தி குலஸ்த்ரிய: |

ஸ்த்ரீஷு துஷ்டாஸு வார்ஷ்ணேய ஜாயதே வர்ண ஸங்கர: || (1-41) ||

ஹே கிருஷ்ணா! அதர்மமானது அந்தக் குலம் பின்பற்றும்போது அந்த குலத்தில் இருக்கின்றவர்கள் நடத்தை கெட்டவர்களாகி விடுவார்கள். பெண்கள் இந்த நிலைக்கு சென்றுவிடுவதால் வர்ண கலப்பு ஏற்பட்டு விடும்

 

सङ्करो नरकायैव कुलघ्नानां कुलस्य च ।

पतन्ति पितरो ह्येषां कुप्तपिण्डोदकक्रिया: ॥ १-४२ ॥

ஸங்கரோ நரகாயைவ குலக்நானாம் குலஸ்ய ச |

பதந்தி பிதரோ ஹ்யேஷாம் லுப்தபிண்டோதக்க்ரியா: || (1-42) ||

வர்ண கலப்பானது, குலதர்மத்தை கைவிட்டவர்கள் நரகத்திற்குத்தான் கொண்டு போகும். அந்த குலத்திற்கு நாசம் வந்துவிட்டால் இந்த நிலை ஏற்படும். அவர்களுடைய இறந்த பெற்றோர்கள் பித்ரு லோகத்திலிருந்து வீழ்ந்து விடுவார்கள். அவர்களுக்கு செய்ய வேண்டிய நீர், உணவு,கர்மங்கள் செய்யாமலிருப்பதால் கிடைக்காது. சிரார்த்தம் மூலம் வருகின்ற புண்ணியம் அவர்களுக்கு கிடைக்காது.

गोषैतैः कुलघ्नानां वर्णसङ्करकारकैः ।

इत्साद्यन्ते हातिधर्माः कुलधार्माश्च शाश्वताः ।  १-४३ ॥

தோஷைரேதை: குலக்நானாம் வர்ணஸங்கரகாரகை: |

உத்ஸாத்யந்தே ஜாதிதர்மா: குலதர்மாஸ்ச சாச்வதா: || (1-43) ||

குலம் நாசமடைகின்ற விளைவினால், ஜாதிகளில் கலப்பு ஏற்பட்டு விடுகின்றது. இதனால் நெடுங்காலமாக பின்பற்றி வந்த ஜாதி தர்மங்களும், குல தர்மங்களும் அழிந்து விடும்.

उत्सन्नकुलधर्माणां मनुष्याणां जनर्दन ।

नरके नियतं वासो भ्यवतीत्यनुशुश्रुम ॥ १-४४ ॥

உத்ஸன்னகுலதர்மாணாம் மனுஷ்யாணாம் ஜநார்தன |

நரகே நியதம் வாஸோ பவதீத்யனுசுச்ரும || (1-44) ||

குலதர்மம், நாசமடைந்த மனிதர்களுக்கு ஜனார்தனா, நரகத்தில்தான் அதிக நாட்கள் இருக்கும் நிலை ஏற்படும். இந்த கருத்து சாஸ்திரத்தின் மூலமாக நாம் கேட்டிருக்கின்றோம்.

अहो बत महत्पापं कर्तु व्यवसिता वयम् ।

यद्राज्यसुखलोभेन हन्तुं स्वजनमुद्यता: ॥ १-४५ ॥

அஹோ பத மஹத்பாபம் கர்தும் வயவாஇதா வயம் |

யத்ராஜ்யஸுகலோபேன ஹந்தும் ஸ்வஜனமித்யதா: || (1-45) ||

ஐயோ! பெரிய பாவத்தை செய்வதற்கு நாம் உறுதி செய்து விட்டோம். தான் மட்டும் ராஜ்ஜியத்திலும், சுகத்தையும் அனுபவிக்க வேண்டும் என்ற லோபத் தினால் நம்மைச் சார்ந்தவர்களை கொல்வதற்கு தயாராக இருக்கின்றோம்.

அடுத்து அர்ச்சுனன் முப்பத்திஎட்டாவது ஸ்லோகத்திலிருந்து நாற்பத்தி ஐந்தாவது ஸ்லோகம் வரை யுத்தத்தினால் விளையும் விளைவுகளை எடுத்து கூறி அதை நியாயப்படுத்த குலதர்மத்தையும், தர்ம சாஸ்த்திரத்தை யும் மேற்கோள் காட்டுகிறான்.

விளக்கம் பார்ப்போம்:

யுத்தத்தினால் என்னென்ன கெடுதல்கள் விளையும் என்பதைப் பல வழிகளில் யேசித்துக் கண்டு பிடிக்கிறான். அவன் மனதில் எதிர் காலத்தில் ஏற்படக் கூடும் பல கெடுதல்கள் தோன்றுகின்றன. பிற்காலத்தில், சந்ததிகள் எவ்விதம் மாறி விடுவார்கள்; ஜாதிகள் எவ்விதம் சிதைந்துவிடும். சனாதன தர்மம் எப்படி அழியும் என்றெல்லாம் தர்க்கம் செய்கிறான்.

அர்ச்சுனனுக்கு யுத்ததைப் பற்றி, சற்று முன்பு வரை, வரப்போகும் சந்ததி என்ன ஆகும் என்பதில் ஒரு கவலையும் அவனுக்கு இருக்கவில்லை. இப்பொழுது இவையெல்லாம் வரிசையாக தோன்றுகின்ற காரணம் தன் சொந்த மனிதர்களை அழிப்பதில் அவன் அடைந்த பீதி, இந்த பீதி என்பது அவன் அஹங்காரத்தாலும், மோஹத்தினாலும் பீடிக்கபட்டு தன் மனிதர்கள் என்ற பற்றினால் அவர்களை எதிர்த்து போரிட அவனால் முடிய வில்லை, இந்த மன நிலையை மறைத்து, அதை சுற்றிலும் பெரிய தத்துவங்களை, கருத்துக்களை தர்க்க ரீதியாக வாதிடுகிறான். அவனது இத்தகைய சிந்தனைகள், தர்க்கங்கள் யாவும் சமயோஜிதமாக அவனால் கற்பிக்கப் பட்டவை, இத்தகைய எண்ணங்கள் அவனது இயல்பான சொந்த கருத்துக்கள் அல்ல. அவனது புத்தியின் கபட தன்மை, தந்திரம்.

போரிடுவது அவனது வாழ்க்கை முழுவதும் நிறைந்த அனுபவம். இப்போது அவன் கூறும் காரணம் அனைத்தும் அவனை பொறுத்தமட்டிலும் உண்மை காரணம் அல்ல. பொய்யான மாற்று காரணங்கள். யுத்தத்திலிருந்து தர்க்கபூர்வமான சம்மதத்துடன் பின்வாங்கும் முயற்சியே இந்த கபட தர்க்கவாதம். போரில் பல்லாயிரக்கணக்கான வீரர்கள் கொல்லப்படும் போது நாட்டில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட அதிகரிக்கும். பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட அதிகமாக இருக்கும் படியான நிலையை மக்கள் தொகை அடையும் போது அந்த நாட்டில் வர்ண கலப்பு ஏற்படவும், ஆண்களுக்கு திருமண பந்தத்திற்கு வெளியேயும் உறவில் மனம் ஈடுபடவும் சம்பந்தப்பட்ட தனிநபரின் வாழ்க்கையின் அனைத்து நிலைகளும் மாறி தம்பதிகளுக்கிடையே பரிபூரண விசுவாசமாக இருப்பது என்பது இல்லாமல் சமுதாயம் எதன் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளதோ அதன் மதிப்பு ஒவ்வொன்றாக நொறுங்க ஆரம்பிக்கின்றன.

வர்ண கலப்பினால் குலதர்மத்தை கைவிட்டவர்கள் அவர்கள் இறந்த பிற்பாடு கீழ் லோகத்திற்கு தான் செல்வார்கள். மேலும் அவர்கள் தங்கள் குல தர்மப்படி வாழ தவறிவிட்டதாலும் தங்களுடைய இறந்த பெற்றோர்களுக்கு செய்ய வேண்டிய கர்மங்களை செய்ய தவறியதால் குறிப்பாக நீர், உணவு, சிராத்தம் மூலம் கிடைக்க வேண்டிய புண்ணியங்கள் கிடைக்காமல் அவர்கள் பித்ரு லோகத்திருந்து வீழ்ந்து விடுகிறார்கள்.

ஒரு சமுதாயம் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்ள ஆரம்பித்தால் அந்த சமுதாயத்தின் குடும்பங்களின் கட்டமைப்பு பாதிப்பு அடைந்துவிடும். ஒரு சமுதாயத்தை கட்டுமானம் செய்வது என்பது அதிலுள்ள தனி நபர்களின் தலையாய பொறுப்பாகும். அத்தனி நபர்கள் ஒழுக்கமுடனும், சுயகட்டுப்பாடுடனும் இருந்தால் மட்டுமே வளமான, நலமான வாழுக்கை வாழ்ந்து, குழந்தைகளை ஈன்று அவர்களை ஆரோக்கியமாக வளர்க்க முடியும். மேலும் தம்பதிகளுக்கிடையே உறவு முறை தூய்மையாகவும் விசுவாசமாகவும் இருந்தால் மட்டுமே குடும்ப பொறுப்பை சரிவர நிறை வேற்ற முடியும். இவற்றில் ஏதாவது ஒன்று குறைந்தாலும் குடும்பத்தின் அவனது இலக்குகள் அனைத்தும் நிறைவேறாக் கனவாகி விடும். ஒழுக்கமான வாழ்க்கை என்பது வளர்ச்சியின் ஒரு அங்கமே.

இரண்டு நாட்டுக்கிடையே போர் மூளும் போது அந்த இரு நாடுகளுக்கு மிடையே ஏற்படும் குடும்ப சீர்கேடை அர்ச்சுனன் இந்த ஸ்லோகங்களில் எடுத்துரைக்கிறான்.

அர்ச்சுனன் கூறும் காரணங்கள் யாவும் சரியாக இருந்தாலும், இங்கு அவனது மனநிலையைப் புரிந்து கொள்ள வேண்டும். அர்ச்சுனன் மிக சிறந்த வீரன், அவன் மனம் மோஹத்தால் வயப்பட்டு எதிரணில் போரிட வந்திருப்பது தன் மனிதர்கள் என்ற பற்றின் காரணமாக அவர்களை கொல்லும் துணிவை இழந்து போரிலிருந்து பின் வாங்கும் எண்ண மிருந்தாலும் சிறந்த வீரனான தன்னை ஒரு கோழையாக காட்டிக் கொள்ள கூடாது என்பதற்காக “நான் போரிட மாட்டேன், உறவினர்களைக் கொல்ல மனம் வரவில்லை அது தற்கொலைக்கு சமம், நான் போகிறேன்” என்று கூறாமல் தர்க்கபூர்வமான சம்மதத்துடன் பின் வாங்க இவ்வளவு காரணங்கள் இருக்கின்றன என குலதர்மத்தை எடுத்துரைத்து வாதிக்கிறான்.

குல தர்மம் அழிவதை பகவான் கிருஷ்ணர் விரும்ப மாட்டார், பண்பாடு, சனாதன தர்மம் இவை அழிவதை ஒருகாலும் அனுமதிக்க மாட்டார். ஆனால் இவைகள் காப்பாற்ற பட வேண்டுமெனில் ஒரு போர் தவிர்க்கபடாத ஒன்றாகும் பட்சத்தில் தர்மம் அந்த போருக்கு அனுமதி அளிக்கிறது.

(இங்கு சாஸ்த்திரம் சிரார்த்தம் என்று ஒரு கர்மத்தை கூறுகிறது அது என்னவென்று பார்ப்போம். சாஸ்த்திரத்தின் நோக்கில் ஒருவன் இறந்த பிறகு அவர்கள வாழும் போது நல்ல புண்ணிய கர்மங்கள் செய்து வைத்திருந்தார்கள் என்றால் (தர்மப்படி வாழ்ந்து தான, தர்மங்கள் எல்லாம் செய்திருந்தால்) அந்த புண்ணியத்திற்க்கு தகுந்தாற் போல் அவர்கள் சொர்க்க லோகத்திற்கு செல்வார்கள். அங்கு சுக, போகங்களை அனுபவிப்பார்கள். அவர்களுடைய புண்ணிய பலன் தீர்ந்த பிறகு மீண்டும் அவர்களின் கர்ம பலன்களுக்கு தகுந்தாற் போல் பிறவி எடுப்பார்கள். இறந்த ஒருவருக்கு அதிக புண்ணியம் இருந்தால் அந்த புண்ணியத்தின் பலன் கொண்டு நல்ல மேலுகங்களுக்கு செல்வார். அதேசமயம் சிலருக்கு புண்ணியம் குறைவாக இருந்தால் அவர்களுக்கு அவர்களுடைய சந்ததிகளாகிய புத்திரர்கள், உறவினர்கள் செய்யும் தர்பணமானது அவர்களுக்கு புண்ணியத்தை அதிகரிக்க உதவியாகிறது. அந்த புண்ணியத்தின் துணைகொண்டு நல்ல லோகத்திற்கு செல்லுகிறார்கள். எனவே பித்ரு லோகத்திலிருக்கும் நம் பெற்றோர்களுக்கு அங்கிருந்து நல்லலோகம் செல்ல புத்திரர்கள், உறவினர்கள் செய்யும் சிரார்த்தம் என்ற கர்மம் புண்ணியம் என்ற நற்பலனை கொடுக்க உதவி செய்கிறது. இங்கு பூலோகத்திலிருந்து புத்திரர்கள் செய்யும் சிரார்த்தம் போன்ற கர்மங்கள் எப்படி அவர்களுக்கு செல்கிறது என்றால் இவைகள் எல்லாம் தர்மத்தின் அடிப்படையிலும், புண்ணியத்தின் அடிப்படையிலும் என்று சாஸ்த்திரம் நமக்கு வலியுறுத்து கிறது. எப்படியென்றால் சிராத்தம் போன்ற கர்மங்களில் தானம் என்பது ஓரு முக்கிய அங்கம். அந்த சிரார்த்தத்தில் தானம் செய்கின்றோம், ஏழை பிராமணருக்கு தானம் அளிக்கின்றோம், அந்த தானத்தினால் கிடைக்கும் புண்ணியம் அந்த பெற்றோர்களுக்கு சென்றடைகின்றது. நாம் கொடுக்கும் உணவு அவர்களுக்கு போகாது, அதனால் கிடைக்கும் புண்ணியமானது அவர்களுக்கு போகும், அதிலும் அந்த புண்ணியம் அவர்களுக்கு தேவை என்றால் மட்டுமே அவர்களும் அந்த புண்ணியத்தை பயன்படுத்த வேண்டி வரும், அந்த புண்ணியம் அவர்களுக்கு உதவியாக துணை புரியும். ஒரு கால் அவர்களுக்கே தேவையான புண்ணியம் அவர்களிடமே இருக்குமெனில் நாம் செய்கின்ற இந்த கர்மம் அவர்களுக்கு தேவையற்றதாகவோ, அல்லது அவர்கள் வேறு சரீரம் எடுத்திருந்தாலும் நாம் செய்கின்ற இந்த கர்மம் அவர்களுக்கு சேராது, அப்படி வரும் பட்சத்தில் சாஸ்த்திரம் நமக்கு உறுதியளிக்கிறது நாம் செய்யும் இந்த கர்மம் வேறு ஏதாவது பெற்றோர்களுக்கு தேவையெனில் அவர்களுக்கு அது சென்றடையவும் அவர்களின் மேன்மைக்கு அது உதவியாக துணை பரியும். அதனால் சாஸ்த்திரம் பொதுவாக பெற்றோர்கள் என்று சொல்கிறது. இதனால் நமக்கு, நம் பெற்றோர்களுக்கு செய்வதால் என்ன நன்மை  கிடைக்குமோ அதே நற்பலன் நாம் செய்யும் இந்த சிராத்தத்தாலும் நமக்கு கிடைக்கிறது. ஆகையால் எந்த விதத்திலும் சிரார்த்தம் என்ற கர்மம் பலனை தராமல் இருக்காது. சிரார்த்த கர்மம் செய்யும் போது ஒரு புண்ணியம் உண்டாகிறது இந்த புண்ணியத்தை தான் நாம், நம் பெற்றோர்களுக்கு தானம் செய்கிறோம். இந்த புண்ணியம் அவர்களை நல்ல லோகங்களுக்கு செல்ல உதவியாக துணை புரிகிறது. இந்த புண்ணியத்தை தானம் செய்த நமக்கும் புண்ணியம் கிடைக்கிறது. ஆக சிராத்த கர்மம் என்பது நம் பெற்றோர்களுக்காக செய்யும் கர்மமே ஆனாலும் உண்மையில் நம்முடைய புண்ணியத்திற்காவும் செய்யும் கர்மமே.)

No classes added yet.

Our Visitor

000568
Users Today : 6