Poornayogam

Sanatana Dharma – The Eternal Way of Life

Home » Sreemad Bhagavatgita Lesson -01 Arjuna Vishada Yogam – Tamil » ஸ்லோகம் – 31

ஸ்லோகம் – 31

निमित्तानि च पश्यामि विपरीतानि केशव ।

न च श्रॆयोऽनुपस्यामि हत्वा स्वजनमाहवे ॥ १-३१ ॥

நிமித்தானி ச பச்யாமி விபரீதானி கேசவ |

ந ச ச்ரேயோSனுபச்யாமி ஹத்வா ஸ்வஜனமாஹவே || (1-31) ||

விளக்கம்:

முப்பத்தி ஒன்றாவது ஸ்லோகத்தில் முதல் வரியில் ஹேகிருஷ்ணா!, கேசவா! (நிமித்தானி ச பச்யாமி விபரீதானி கேசவ|) பார்ப்பதெல்லாம் கெட்ட சகுணங்களாக இருக்கின்றது. என்று கூறினான்

நிமித்தம் அல்லது சகுனம் என்பதை எதிர்கால நிகழ்ச்சிகளை  முன்கூட்டியே அறிவிக்கும் அறிகுறியாக மக்களால் தொன்றுதொட்டு இன்றுவரை நம்பப் பட்டு வருகிறது.

மனிதனின் எண்ணங்களுக்கும், அவனுடைய செயல்களுக்கும் இயற்கையில் நடைபெறும் நிகழ்வுகளுக்கும் ஒருவித தொடர்ப்பு உண்டு. உலகத்தில் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத விஷயம் ஒன்றும் இல்லை. நடக்கும் காரியங்களும் அப்படியே. நம் மனதில் ஏற்படும் மனதுயரத்துடனும், மனகலக்கத்தினுடனும், நம்பிக்கை இழப்பினுடனும் கூடிய மனநிலையில் நாம் இந்த உலகைப் பார்க்கும் போது எல்லாம் எதிர் வினையான காட்சியாக தோன்றும், இதுவே மனம் மகிழ்ச்சியான நிலையில் உலகைப் பார்க்கும் போது எல்லாம் நேர்மறை காட்சியாக தோன்றும். இந்நிலை தான் சகுனம்.

கெட்ட சகுனம் என்பது நம் மனதின் பலவீனத்தின் வெளிப்பாடு. நம்முடைய செயல்கள், எண்ணங்கள் படியே காரியங்கள் நடக்கின்றன. நல்ல நேர்மறை சிந்தனைகளுடன், எந்த வித தீய நோக்கமின்றி உயர்ந்த எண்ணத்தோடு வாழ்ந்தாலே போதும் நமக்கு நடக்கும் காரியங்கள் யாவும் இனிதாகவே அமையும் என்பது தான் உண்மை.

அடுத்து முப்பதாவது ஸ்லோகம் இரண்டாவது வரி முதல் இந்த அத்தியாயம் கடைசி ஸ்லோகத்திற்கு முன் ஸ்லோகம் வரை அர்ச்சுனனுக்கு ஏற்பட்ட மூன்றாவது மாற்றம். மூன்றாவது மாற்றம் என்பது மோஹத்திற்கு ஆட்கொள்வது. மோஹம் என்பது மயக்கம், தவறானஅறிவு.

மோஹம் என்பது என்ன?

நம்முடைய மனதிற்கு சாஸ்த்திரத்தில் அந்தகரணம் என்று சொல்லப் படுகிறது. கரணம் என்றால் கருவி, அந்தக என்றால் உள்ளே இருக்கின்ற, அல்லது நம் கண்ணுக்கு தெரியாத என்று பொருள்.

அந்தகரணம் என்றால் கண்ணுக்கு  தெரியாத  கருவி அல்லது நம் சரீரத்தின் உள்ளே செயல்படும் கருவி. இந்த அந்தகரணம் இரண்டாக பிரிக்கப்படுகிறது, ஒன்று மனம், இரண்டாவது புத்தி.

மனம் என்பதும் எண்ணங்கள் ரூபமானது, புத்தி என்பதும் எண்ணங்கள் ரூபமானது. இரண்டும் எண்ணங்கள் ரூபமானது தான் என்றாலும் இரண்டாக பிரிக்க காரணம் அதன் லக்ஷ்ணங்களை பார்த்தால் புரியும்.

அந்தகரணங்களினுடைய எண்ணங்களின் ஒரு சில தொகுப்புக்கள் மனம் என்றும், மற்று ஒரு சில தொகுப்புக்கள் புத்தி என்றும் கூறப்படுகிறது.

மனம் என்று கூறப்படுகின்ற தொகுப்புக்கள் எப்படிபட்டதென்றால் சங்கல்பம்-விகல்பம் கொண்ட எண்ணங்கள், ஆசை, கோபம், பொறாமை போன்ற எல்லா உணர்வுகள் மயமான எண்ணங்கள் கொண்ட பகுதி மனம் எனப்படும்.

அந்தகரணத்தின் ஒன்றான மனதின் சங்கல்ப-விகல்ப எண்ணங்களில், எந்த ஒரு சூழ்நிலையில் சங்கல்ப- விகல்ப எண்ணங்களில் எது சரி, எது தவறு என்று நிச்சயமான, உறுதியான நிர்ணயம் அல்லது முடிவு செய்யும் பகுதி புத்தி.

இந்த ராஹத்தால் ஏற்பட்ட விளைவு சோகம் என்று பார்த்தோம்.

சோகம் என்பது ஒரு விதமான உணர்வு அது மனதில் வருவது என்றும் பார்த்தோம். அந்தகரணம் என்பது இரு பகுதிகளை உடையது என்றும் பார்த்தோம்.

இங்கு அர்ச்சுனனுக்கு அந்தகரணத்தின் ஒரு பகுதியான மனம் சோகத்தால் பாதிப்புக்குள்ளானது. மற்றொரு பகுதியான அவனுடைய புத்தியும் பாதிப்புக் குள்ளாகின்றன. அந்த பாதிப்பு தான் மோஹம்.

சோகத்திற்கு உற்பத்தி ஸ்தானம் ராஹம், அது போல் தான் மோஹத்திற்கு உற்பத்தி ஸ்தானம் இந்த ராஹம் தான்.

புத்தி என்பது நிச்சயம் பண்ணகூடிய, நிர்ணயம் பண்ணகூடிய, முடிவெடுக்க கூடிய பகுதி என்று பார்த்தோம். முடிவு எடுத்தல், நிச்சயம்பண்ணுதல், நிர்ணயம் பண்ணுதல் எனபது எதை குறித்தது என்றால் தர்மம், அதர்மம், இது சரி, இது தவறு என்ற விஷயத்தை குறித்த்து.

இந்த புத்திக்கு நல்லது எது, கெட்டது எது என்று பாகுபாடு படுத்தும் இயல்பு இயற்கையாக அமைய பெற்ற ஒன்று. இது எல்லா மனிதர்களுக்கும் எந்த வித ஏற்ற, தாழ்வு இன்றி படைக்கபட்ட ஒரு சக்தி. புத்திக்கு இயல்பாகவே அமைய பெற்ற இந்த சக்தியானது விபரீதமாக செயல்படும் போது அது மோஹம் என்று அறியப்படுகிறது.

இந்த மோஹம் என்ன நிகழ்த்தும் என்றால் இயற்கையாகவே அமையப் பெற்ற நல்லது, கெட்டது என்று பாகுபடுத்திகாட்டும் புத்தியின் திறனை மாற்றி விடும். மாற்றி அமைத்து விடும் இந்த புத்தி மோஹத்தில் உட்பட்டது என்று பொருள்.

எது சரியோ அதை தவறு என்றும், எது தவறோ அதை சரி என்றும் காட்டும் விபரீத புத்தியாக நம் இயல்பான புத்தியை மழுங்க செய்வதை தான் மோஹம் என்று சொல்வது.

ராஹம் எங்கு இருக்கிறதோ, அங்கு இந்த மோஹம் இருப்பிடம் கொள்கிறது.

இயல்பாக நம் புத்தி சரியான தீர்வை எடுக்கும் திறன் வாய்ந்தது, இந்த மோஹம் இந்த புத்தியை வசப்படுத்தும் போது புத்தி எடுக்கும் தீர்வு விபரீதமாகவும், அதர்மமாகவும் ஆகிறது.

இந்த மோஹமானது, தான் எடுக்கும் தவறான தீர்வை தர்க்கபூர்வமாக நன்மைக்காக செய்வதாக நியாயபடுத்தி சாதிக்க செய்யதக்கது.

இங்கே ஒரு நீதிபதியின் தீர்ப்பு ஒன்றை மேற்கோளாக எடுத்து காட்டுவது பொருத்தமாக இருக்கும். ஒரு நீதிபதி, அவர் பல குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதித்தவர். ஒரு வழக்கில் அவரது மகனே கொலை குற்றவாளி யாக அவர் எதிரே கொண்டு வந்து நிறுத்தப்பட்டான். அவன் கொலை செய்தது நிரூபணமாகி விடவே தன் மகனுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டிய சந்தர்ப்பம் அவருக்கு ஏற்பட்டு விட்டது. அப்பொழுது அவர் முன்னும், பின்னும் பார்க்கலானார். “தூக்கு தண்டனை என்பது மனித தன்மையில்லாதது. இத்தகைய தண்டனை அளித்தல் மனிதனுக்கு அழகல்ல இதனால் குற்றவாளியை திருத்தலாம் என்பதற்கே இடமில்லாமற் போகிறது. கொலை செய்தவன் உணர்ச்சிவயனாகி ஆத்திரத்திலோ, ஆவேசத்திலோ கொலை செய்து விட்டான். கொலை செய்ய தூண்டிய வெறி அவனிலிருந்து இறங்கிய பின் அவனை கடின சித்தத்துடன் தூக்கு மேடையிலேற்றி கொல்லுதல் சமூகத்தின் மனிதத் தன்மையையே களங்கத்திற்குள்ளாக்கி, களங்கப்படுத்துவதாக்கும்” அவர்தன் அறிவின் வளத்தை வாதங்களில் விளம்பலானார். தன் மகன் மட்டும் எதிரில் வந்து நின்றிராவிடில்  நீதிபதி தன் வாழ் நாள் முழுவதும் சிறுதும் தயங்காது தூக்கு தண்டனை விதித்த வண்ணமிருந்திருப்பார். தன் பிள்ளையிடம் கொண்ட பாசத்தினால் இவ்வாறு பேசலானார். அவர் பேச்சு உள்ளத்திலிருந்து எழுந்ததல்ல. ராஹத்தின் விளைவான மோஹத்திலிருந்து பிறந்தது.

இங்கு நாம் பார்க்க போகும் அர்ச்சுனனின் வாதங்கள் யாவும் இந்த நீதிபதியின் போக்கை போன்றதே. இங்கு அர்ச்சுனன் எதெல்லாம் தவறான முடிவோ அதையெல்லாம் சரி என்று வாதிக்கிறான்.

நம்முடைய வாழ்க்கையில் ஏதாவது ஒரு செயலை செய்ய வேண்டும் என்றால் அதற்கு மனமும், புத்தியும் துணை புரிய வேண்டும். மனமும், புத்தி யும் சேர்ந்தால் தான் ஒரு செயலை செய்ய முடியும்.

மனம் மட்டும் புத்தியின் துணை இல்லாமல் அதிக காலம் செயல் செய்ய முடியாது. குழப்பத்ததுடன் சிறிது காலம் தான் செய்ய முடியும்.

ஒரு மனிதனுக்கு அதர்மமான ஒரு செயலின் மேல் பற்று வந்து விட்டது அல்லது பலவீனம் வந்து விட்டது அப்போது புத்தி அந்த செயல் தவறானது, பலவீனத்தால் ஏற்பட்ட எண்ணம் என்று எடுத்து கூறும். ஆனால் மனதிற்கோ அதை விடுவதற்கான சக்தி இல்லை காரணம் பற்று இருக்கிறது, பலவீனம் இருக்கிறது.

அப்பொழுது இந்த மனமானது புத்தியை மயக்கி தனக்கு சாதகமாக பேச வைத்து விடும். அது மட்டுமல்லாமல் இந்த புத்தியை மனமானது தன்னோடு இணைத்து  செயல் பட ஆரம்பிக்கும். இந்த மதி மயக்கத்தில் இந்த புத்தி எடுக்கும் நிச்சயமும், முடிவும் விபரீதமாகவே இருக்கும்.

இந்த புத்தி எடுக்கும் முடிவு விபரீதமானது என்று நமக்கு தெரியுமா என்றால் தெரியாது. நமக்கு தெரியாமலேயே புத்தி நம்மை ஏமாற்றி விடும்.

எதிலெல்லாம் நாம் பற்றுடனும், பலவீனத்துடனும் இருக்கிறோமோ அங்கெல்லாம் இந்த மனமானது புத்தியை வசப்படுத்தி மனமும், புத்தியும் சேர்ந்து மதி மயக்கத்தோடு விபரீதமாக செயல்பட்டு அதனால் வரும் விபரீத பலன்களை அனுபவித்து கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறோம். இது நமக்கு தெரியாமலேயே நம் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வு.

நம் மனமும், புத்தியும் இணைந்து மதி மயக்கத்தோடு செயல்படுவதை தான் நாம் மோஹத்தால் ஆட்கொள்ளப்பட்டுள்ளோம் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒருவன் மோஹத்தினால் ஆட்கொள்ளபட்டுள்ளான் என்பதை நாம் எவ்வாறு தெரிந்து கொள்வது:-

வெளிபடையாகவே ஒருவன் ஒரு தவறை செய்கின்றான், அவனிடம் சென்று அந்த தவறை சுட்டி காட்டினால் அதை அவன் தவறு என்று ஒப்பு கொள்ள மாட்டான், அத்தோடு நில்லாமல் தான் செய்ததை நியாயப்படுத்த அதிகமாக பேசுவான், துணைக்கு தர்ம சாஸ்த்திரத்தை எடுத்து சாதகமாக கையாளுவான். இப்படிபட்டவர்கள் தர்மத்திற்காக தர்மம் பேசுவதில்லை, தனக்கு சாதகமாக தன்செயலை நியாயப்படுத்த தவறாக தர்ம சாஸ்த்தி ரத்தை எடுத்து கையாள தயங்க மாட்டார்கள். இப்படி பட்டவர்களை மோஹத்தால் வசப்பட்டவர்கள் என்று புரிந்து கொள்ளலாம்.

இயல்பாகவே நல்லவர்களாகவும், தர்மத்திற்கு கட்டுபட்டவர்களாக இருந்தா லும், இந்த ராகம், ராகத்தின் விளைவாக ஏற்படும் மோஹத்தின் வசத்தால் ஆட்கொள்ளும் போது அவன் மதி மயக்கத்தில் செயல்படுகிறான்.

இப்போது அர்ச்சுனனின் நிலை என்ன?

ஏற்கனவே அவன் மனம் சோகத்தால் பாதிப்புக்கு உள்ளாயிருந்தது, இப்போது அவன் புத்தியானது படிப்படியாக மோஹத்தால் ஆட்கொள்ளப்பட்டு அவன் வாதம் பண்ண ஆரம்பிக்கிறான்.

ஆரம்பத்தில் அர்ச்சுனன் மிக தெளிவாக தான் இருந்தான். நாம் தர்மத்திற் காக தர்ம யுத்தம் செய்ய வந்துள்ளோம் என்பதில் சந்தேகமில்லை என்ற தெளிவோடு தான் யுத்தத்திற்கு தயாராக இருந்தான். தர்ம சாஸ்த்திரப்படி  இரண்டு நாட்டிற்கு இடையே தகராறு என்று வந்தால் யுத்தம் என்பது கடைசியாக கையாள பட வேண்டிய ஒன்று.

யுத்தத்திற்கு முன்பாக நான்கு படிகள் சொல்லப்படும். நான்கு படிகளில் கடைசிப் படிதான் யுத்தம்.

நான்கு படிகள் என்னவென்று பார்ப்போம்.

1) சாம, 2) தானம், 3) பேத, 4) தண்டம்.

நாட்டிற்கானாலும் சரி, அல்லது குடும்பத்திலானாலும் சரி, இரண்டு நபர்களுக்குளானாலும் சரி மனஸ்தாபம் அல்லது கருத்து வேறுபாடு என்று வந்து விட்டதென்றால் கையாள வேண்டிய யுக்தி தான் இந்த நான்கு படிகள்.

1) சாம: சாம என்றால் சமரசம் என்று பொருள். இரண்டு தரப்பிலும்,  பிரச்சினை தீர்வுக்கு எதிலெல்லாம் ஒத்து போக முடியுமோ, அதிலெல்லாம் ஒத்து போய் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்ச்சி தான் சாம என்பது. பகவான் ஶ்ரீகிருஷ்ணர் பாண்டவர்களுக்காக, கெளரவர்க ளிடம் தூது சென்று போர் நடக்காமல் பேச்சு வார்த்தையால் தீர்வு காண முயற்சியை மேற்கொண்டது தான் சாம. இந்த முயற்சி பலனளிக்க வில்லை யானதினால் அடுத்த படிக்கு இறங்கி வந்தார்.

2) தானம்: இரண்டு தரப்பினரில் ஒரு தரப்பினர் ஒரு சில விஷயங்களில் விட்டு கொடுத்து பிரச்சினைக்கு தீர்வு காணல் தான் தானம் என்பது. நியாயப்படி பாண்டவர்களுக்கு பாதி இராஜ்யம் வரவேண்டும். ஆனால் பகவான் ஶ்ரீகிருஷ்ணன் பாண்டவர்களுக்காக, கெளரவர்களிடம் ஐந்து வீடு களாவது கொடுங்கள் என்று இறங்கி வந்தார். இந்த விட்டு கொடுத்து தீர்வு காணும் முயற்சி தானம். இந்த முயற்சியும் பலனளிக்காததால் அடுத்த படிக்கு வந்தார்.

பேதம்: பகைவனுடைய வலிமையை குறைத்து, பலவீனபடுத்தி பிரச்சினை  க்கு தீர்வு காணல் தான் பேதம் என்பது. அதையும் பகவான் ஶ்ரீகிருஷ்ணன் பாண்டவர் தரப்பிலிருந்து செய்தார். கர்ணனுடைய கலசகுண்டம் பறிக்கப்பட் டது. அதற்கும் துரியோதனனிடமிருந்து எந்த மாற்றமும் வரவில்லை. ஆக கடைசியில் தர்ம சாஸ்த்திரத்தில் கூறியப்படி மீதி இருப்பது தண்டம்.

தண்டம்: போர் புரிதல், நான்கு படிகளில் மூன்று படிகளும் பலனளிக்க வில்லையென்றால் போர் புரிதல் தான் கடைசி தீர்வு.

ஆகையால் இந்த யுத்தம் தர்மப்படி நிச்சயிக்கப்பட்ட யுத்தம் என்பது அர்ச்னனுக்கு தெளிவாக தெரிந்தும்  ‘மோஹ வசத்தால்’ வாதம் செய்கிறான்.

No classes added yet.

Our Visitor

000560
Users Today : 4