जातस्य हि ध्रुवो मृत्युर्ध्रुवं जन्म मृतस्य च ।
तस्मादपरिहार्ये ऽर्थे न त्वं शोचितुमर्हसि ॥ २७ ॥
ஜாதஸ்ய ஹி த்ருவோ ம்ருத்யுர்த்ருவம் ஜந்ம ம்ருதஸ்ய ச |
தஸ்மாதபரிஹார்யேSர்தே ந த்வம் ஸோசிதுமர்ஹஸி || 27 ||
ஹி – ஏனெனில் (இதன்படி); ஜாதஸ்ய – பிறந்தவனுக்கு; ம்ருத்யு – இறப்பு; த்ருவ – நிச்சயமான; ம்ருதஸ்ய ச – இறந்தவனுக்கும்; ஜந்ம – பிறப்பு;
த்ருவம் – நிச்சயம்; தஸ்மாத் – ஆகவே;
அபரிஹார்யே அர்தே – தவிர்பதற்கான உபாயமே இல்லாத விஷயத்தில்; த்வம் – நீ; ஸோசிதும் – துயரப்படுவது; ந அர்ஹஸி – நன்றன்று.
ஏனெனில் இதன்படி பிறந்தவனுக்கு இறப்பு நிச்சயமானது. இறந்தவனுக்கும் பிறப்பு நிச்சயம். ஆகவே தவிர்ப்பதற்கான உபாயமே இல்லாத விஷயத்தில் நீ துயரப்படுவது தக்கதன்று.
விளக்கம்: இந்த ஸ்லோகத்தில் ஆத்மா அழிகின்ற போதிலும் துயரப்பட வேண்டியதில்லை என்பதற்கான காரணத்தை கூறுகின்றார். ஸ்லோகத்தின் முதல் வரியை பார்ப்போம். ‘ஜாதஸ்ய ஹி த்ருவோ ம்ருத்யுர்த்ருவம் ஜந்ம ம்ருதஸ்ய ச’ என்றால் ஏதாவது ஒன்று பிறந்தால் அல்லது பிறந்த ஒன்றுக்கு, தோன்றிய ஒன்றுக்கு, படைக்கப்பட்ட ஒன்றுக்கு அழிவு அல்லது மரணம் என்பது நிச்சயம் இதை நாம் அனுபவத்தில் பார்க்கிறோம், இந்த வரியில் இனியொன்றையும் சொல்கிறார் எது இறக்கின்றதோ அதற்கு பிறப்பு என்பது நிச்சயம். இந்த முதல் வரியில் ‘த்ருவம்’ என்ற சொல் மிக முக்கியம். த்ருவம் என்றால் நிச்சயம், மாற்றமுடியாதது, விதிவிலக்கு இல்லாதது என்று பொருள். அடுத்த இரண்டாவது வரி ;தஸ்மாதபரிஹார்யேSர்தே ந த்வம் ஸோசிதுமர்ஹஸி’ ஆகவே நீக்கமுடியாத, தவிர்க்க முடியாத விஷயத்தில் நீ துயரபடுவதற்கு அருகதை இல்லை. இந்த வரியில் ‘அபரிஹார்ய’ என்ற சொல்லை பதம் பிரித்தால் அ + பரிஹாரம் என்று கிடைக்கும். பரிஹாரம் எனபதற்கு ‘ஒன்றுக்கு தீர்வு காண்பது’ என்று பொருள், அபரிஹாரம் என்றால் தீர்வு காணமுடியாத அல்லது தவிர்க்க முடியாதது என்று பொருள்.
இந்த உபதேசத்தை நாம் கவனமாக புரிந்து கொள்ள வேண்டும். ஒரு நாளில் நாம் எத்தனையோ சூழ்நிலைகள், எத்தனையோ மனிதர்களை நாம் சந்திக் கிறோம், எத்தனையோ கஷ்டமான சூழ்நிலைகளை சந்திக்கின்றோம். இந்த கஷ்டமான சூழ்நிலைகளை எல்லாம் அபரிஹார்யம் என்று அதை அப்படியே ஏற்றுக் கொள்ள பகவான் கூறவில்லை. ஒரு சூழ்நிலை, ஒரு கஷ்டம் வந்தது என்றால் அந்த சூழ்நிலை கஷ்டத்திலிருந்து மாற்ற முடியுமா, முடியாதா என்று நமக்கு தெரியாது அந்த நேரத்தில் நாம் என்ன செய்ய வேண்டுமெனில் அந்த சூழ்நிலை, அல்லது அந்த கஷ்டத்தை மாற்றுவதற்கு எவ்வளவு முயற்சி செய்தால் மாற்றம் ஏற்படுமோ அந்தளவு முயற்சியை மேற்கொள்ள வேண்டும். முயற்சி செய்ததற்கு பிறகு நமக்கு ஒரு அறிவு வருகிறது, இந்த சூழ்நிலையில் அல்லது கஷ்டத்தில் மாற்றம் கிடையாது என்று. அப்படி அறிவு பூர்வமான முடிவுக்கு பிற்பாடு அந்த சூழ்நிலை அல்லது கஷ்டத்தை மனபூர்வமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒரு சூழ்நிலை மாறும் என்றால் மாற்ற முழு முயற்சியை மேற்கொள்ள வேண்டும், மாறாது என்றால் அதை ஏற்று கொள்ள வேண்டும், மாறுமா, மாறாதா என்று தெரியாது என்றால் மாறாது என்று அறிவில் புலப்படும் வரை முயற்சி செய்ய வேண்டும். மாறுமா, மாறாதா என்று தெரியாத சூழ்நிலை, அல்லது கஷ்டத்தை அப்படியே ஏற்று கொள்கிறேன் என்றால் அதற்கான துணிச்சல் நம் மனதுக்கு வராது, அப்படி மனதுக்கு ஒரு சக்தி வந்து நாம் ஒரு கஷ்டத்தை ஏற்றுக் கொண்டால் பிறகு அதை நினைத்து நாம் முயற்சி செய்தால் இந்த கஷ்டத்தை மாற்றியிருக்கலாம் என்ற ஒரு குற்ற உணர்வு நமக்கு வரும். ஆகவே பலன் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும் நமது முழு முயற்சியை செய்ய வேண்டும். பிறகு அதன் முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
நம்முடைய துயரத்திற்கு காரணம் சூழ்நிலை, சம்பவங்கள் இல்லை. சம்பவங்கள் துயரத்திற்கு காரணம் என்றால் ஒரு சம்பவம் எங்கெல்லாம் நடக்கின்றதோ அங்கெல்லாம் நாம் துயரபடவேண்டும் அப்படியில்லையே, மரணம் என்கிற ஒரு சம்பவம் துயரத்திற்கு காரணம் என்றால் நடக்கும் எல்லா மரணமும் நமக்கு துயரத்தை தருவதில்லையே. நம்மால் ஏற்று கொள்ள முடியாத மரணம் தானே நம்மை துயரத்தில் ஆழ்த்துகிறது. ஆகவே ஒரு சூழ்நிலையோ, ஒரு சம்பவமோ அல்லது நிகழ்வோ அல்ல துக்கத்திற்கு காரணம் அவற்றில் நாம் வைக்கின்ற தவறான பாவனை. ஆகவே சூழ்நிலை யையோ, நிகழ்வுகளையோ நம்மால் மாற்றமுடியாது, அவற்றில் நாம் வைக்கின்ற பாவனையை தான் மாற்ற வேண்டும். பாவனையை மாற்ற வேண்டும் என்றால் ஏற்று கொள்ளும் மனோபாவத்தை நம்முள் வளர்த்திக் கொள்ள வேண்டும் என்று பகவான் இந்த ஸ்லோகத்தில் கூறுகிறார்.
No classes added yet.






Users Today : 2