Poornayogam

Sanatana Dharma – The Eternal Way of Life

Home » Sreemad Bhagavatgita Lesson – 02 Sankiya yogam – Tamil » ஸ்லோகம் – 25

ஸ்லோகம் – 25

अव्यक्तोऽयमचिन्त्योऽयमविकार्योऽयमुच्यते ।

तस्मादेवं विदित्वैनं नानुशोचितुमर्हसि ।। २५

அவ்யக்தோயமசிந்த்யோயமவிகார்யோSயமுச்யதே |

தஸ்மாதேவம் விதித்வைனம் நானுசோசிதுமர்ஹஸி || 25 ||

அயம் – இந்த ஆத்மா, அவ்யக்த: – புலன்களுக்கும் புலப்படாதவன்;

அயம் – இந்த ஆத்மா; அசிந்தய: – மனதால் சிந்திக்க முடியாதவன்;

அயம் – இந்த ஆத்மா; அவிகார்ய – மாறுதல் இல்லாதவன்;

உச்யதே – கூறப்படுகிறது; தஸ்மாத் – ஆகையால்: ஏநம் – இந்த ஆத்மா; ஏவம் – மேலே கூறியவாறு; விதித்வா – அறிந்து கொண்டு;

அநுஸோசிதம் – வருத்தப்படுவது; ந அர்ஹஸி – நன்றன்று.

இந்த ஆத்மா புலன்களுக்கும் புலன்படாதவன்; மனதால் சிந்திக்க முடியாத -வன்; மேலும் மாறுதல் இல்லாதவன் என்று கூறப்படுகிறது. ஆகையால் அர்ஜுனா! இந்த ஆத்மாவை மேலே கூறியவாறு அறிந்து கொண்டு நீ வருத்தப்படுவது உசிதமல்ல.

விளக்கம்:

இந்த ஆத்மாவானது அவ்யக்த: வ்யக்தம் என்றால் வெளிதோற்றத்திற்கு வருவது, அவ்யக்தம் என்றால் வெளிதோற்றத்திற்கு வராதது. வெளிதோற்ற திற்கு வராத இந்த ஆத்மாவானது ‘இந்திரீய அகோசரம்’ இந்திரீயங்களினால் இந்த ஆத்மாவை கிரஹிக்க அல்லது அறிந்து கொள்ள முடியாது. இந்திரீயங்களினால் கிரஹிக்க முடியாது என்றால் மனதினால் கிரஹிக்க முடியுமே என்ற சந்தேகம் வரும் பொழுது ‘அசிந்தயம் அயம்’ இது மனதினாலும் கிரஹிக்க முடியாது. சில பொருட்களை இந்திரீயங்களினால் கிரஹிக்க முடியாது உதாரணமாக அன்பு, கோபம், பொறாமை, போன்றவை -கள், ஆனால் இவைகளை மனதினால் புரிந்துக் கொள்ளமுடியும். அன்பு என்றால் என்ன என்று மனதில் புரிந்துக் கொள்ள முடியும். இப்படி ஆத்மாவை மனதில் அனுபவிக்கலாமா  என்றால் இதை மனதினாலும் அனுபவிக்க முடியாது. பிறகு ஆத்மாவை மனதினாலும் கூட அனுபவிக்க முடியாது என்றால் சாஸ்திரம் படிப்பது எதற்கு என்றால் எல்லா அனுபவத்திற்கும் ஆத்மாவாகிய நான் காரணம் என்கிற ஞானத்திற்காக சாஸ்திரம் படிக்கிறோம். சாஸ்திரம் ஆத்மாவை பற்றிய அனுபவத்தை நமக்கு கொடுக்காது, ஆத்மாவைப் பற்றிய அறிவை நமக்கு கொடுக்கும். ஆத்மாவைப் பற்றிய அனுபவம் நமக்கு எல்லா காலத்திலும் இருக்கிறது, நமக்கு இல்லாதது ஆத்மாவை பற்றிய அறிவு. நமக்கு ஆத்மாவை பற்றிய அனுபவம் இல்லை என்று ஏன் சொல்ல முடியாது, எப்பொழுதெல்லாம் நான், நான் என்று சொல்கிறோமோ அப்பொழுதெல்லாம் நான், நான் என்பதற்கு பொருள் ஆத்மா. ஆகவே ஆத்மாவினுடைய அனுபவம் இருக்கிறது அறிவு இல்லை. அடுத்தது அவிகார்ய: என்றால் பரிணாம ரஹித: விகார்யம் என்றால் பரிணாமம், பரிணாமம் என்றால் மாற்றம் அவிகார்ய: என்றால் மாற்றம் இல்லாதது. இது ஒரு பொருள் அவிகார்ய: எனபதற்கு இனியொரு பொருள் என்பது ஆத்மா காரியம் அற்றது, அப்படியென்றால் ஆத்மா ஒரு படைக்கப்பட்ட பொருள் அல்ல. ஆத்மா காரணம் அற்றது என்று இதற்கு முன் நாம் பார்த்துள்ளோம். ஒன்று காரியம் ஆவதற்கு ஒரு காரணம் வேண்டும், ஆத்மா காரணம் அற்றது, ஆகையால் ஆத்மா காரியம் அல்ல அப்படியென்றால் படைக்கப்பட்டது அல்ல. எனவே ஆத்மா அவிகார்ய:. அடுத்தது உச்சயதே என்றால் இப்படி சொல்லப்படுகிறது. அடுத்த சொல் தஸமாத், தஸ்மாத் என்றால் ஆகையால் என்று பொருள் இதுவரை ஆத்ம தத்துவத்தை பேசி வந்த பகவான் ஆகையால் இந்த ஆத்மாவை மேலே கூறியவாறு அறிந்து கொண்டால் துயரப்பட அர்கதை இல்லை என்று கூறி முடிவுரை செய்கிறார்.

அடுத்த ஸ்லோகத்திற்கு பொருள், விளக்கம் பார்ப்பதற்கு முன் இதுவரை பார்த்த ஆத்ம சொரூபத்தின் கருத்தை மிக சுருக்கமாக ஞாபகப்படுத்தி கொள்ளலாம்.

முதலில் பன்னிரண்டாவது ஸ்லோகத்தில் ஆத்மா நித்ய: என்று கூறினார், பதிமூன்றாவது ஸ்லோகத்தில் ஆத்மா நிர்விகார: அப்படியென்றால் ஆத்மா விகாரமற்றது என்று கூறி பதினாராவது ஸ்லோகத்தில் இந்த ஸ்லோகம் முக்கியமான ஒரு ஸ்லோகம் இந்த ஸ்லோகத்தில் ஆத்மா ஸத்ய: ஸத்ய: என்றால் ‘என்றைக்கும் உள்ளது’ என்றும் அநாத்மா மித்யா என்றும் கூறி பதினேழாவது ஸ்லோகத்தில் ஆத்மா ஸர்வஹத: ஸர்வஹத: என்றால் ஆத்மா எல்லா இடத்திலும் இருக்கிறது விளக்கி பதினெட்டாவது ஸ்லோகத் -தில் ஆத்மா நித்ய: என்றால் எப்படிப்பட்ட நித்யமென்றால் கூடஸ்த நித்யம்

கூடஸ்த நித்யம் என்றால் மாறாத நித்யம் என்றும் இந்த ஆத்மா அப்ரமேயம் என இரண்டு கருத்தை இந்த ஸ்லோகத்தில் விளக்கினார். அப்ரமேயம் என்றால் அனுபவத்திற்கு வராது. இந்த ஆத்மாவை இந்திரீயங்களால் பார்க்க முடியாது. இந்திரிய, மன, வாக் அகோசரம் அதாவது இந்திரீயங்களாலும், மனதாலும் அதை அனுபவிக்க முடியாது, வாக்காலும் அதை விளக்க முடியாது. அப்ரமேயம் என்பதற்கு இனியொரு அர்த்தம் அளக்க முடியாதது. இந்த ஆத்மாவை எதனாலும் அளக்க முடியாது காரணம் இதற்கு எல்லை கிடையாது. என்று எடுத்து கூறி பத்தொன்பதாவது ஸ்லோகத்தில் ஆத்மா அகர்த்தா, அபோக்தா. அகர்த்தா என்றால் ஆத்மா ஒரு கார்யத்தையும் செய்யாது. ஒரு கர்மத்தினுடைய பலனையும் அனுபவிப்பது இல்லை. என்று கூறி இருபதாவது ஸ்லோகத்தில் ஷட் விகார ரஹித: ஷட் என்றால் ஆறு, விகாரம் என்றால் மாற்றம். ஆறு மாற்றங்கள் அஸ்தி, ஜாயிதே, வரத்ததே, விபரிநபதே, அபக்ஷியதே, விநஸ்யதே. தமிழில் சொன்னால் இருத்தல், பிறத்தல், வளர்தல், மாறுதல், தேய்தல், மாய்தல். இந்த ஆறு மாற்றங்கள் இந்த ஆத்மாவிற்கு இல்லை. இருபத்தொன்றாவது ஸ்லோகத்தில் இந்த ஆத்மா ந ஹேது கர்த்தா என்று கூறினார். ந ஹேது கர்த்தா என்றால் இந்த ஆத்மா எதையும் செய்ய தூண்டாது. ஆத்மா தானாக எதையும் செய்யாது, எதையும் செய்ய தூண்டாது.

ஆத்மா பிறவியெடுப்பதில்லை; இறப்பதில்லை. அதற்கு தொடக்கமும் இல்லை, முடிவும் இல்லை என்பதை வேறுவிதமாக கூறுவதென்றால் ஜனனம், மரணம் இவை ஏற்படாத, ஆரம்பமும் முடிவும் அற்ற இருப்பு தன்மையே ஆத்மா எனப்படுகிறது. எந்த பொருளுக்கும் ஆரம்பம் உண்டு, முடிவும் உண்டு. ஆனால் ஒன்று எதிலிருந்து பிறக்கிறதோ, எதில் முடிவடை கிறதோ அந்த இருப்பு தன்மைக்கு ஆரம்பமும் கிடையாது, முடிவும் கிடையாது. ஆத்மா என்பதன் பொருள் ‘இருப்பு’. ‘ஆத்மா’ இருப்பு தன்மை யுடைய பெயரே! ஆத்மா இருப்பு தன்மையுடைய ‘வஸ்து அல்ல’. அதுவே இருப்பு தன்மை. எல்லா வஸ்துக்களுக்கும் இருப்புத் தன்மை அதுவே. ஆத்மா, அதுவே இருப்புத் தன்மையாக இருக்கிறது. அதனால் நெருப்பு இந்த ஆத்மாவை எரிக்க முடியாது, நீர் இந்த ஆத்மாவை மூழ்கடிக்க முடியாது, வாயுவு இந்த ஆத்மாவை உலர வைக்க முடியாது, மண்ணிலிருந்து உருவான ஆயுதங்கள் இந்த ஆத்மாவை வெட்ட முடியாது. நெருப்பு, நீர், காற்று, மண் போன்ற பூதங்கள் இந்த ஆத்மாவை அழிக்க முடியாது.   ஆத்மா ‘செயலற்றது’, இந்த ஆத்மா செய்கையற்றது என்றாலும் எல்லா யாத்திரிகைகள், ஜனனம், மரணம், சரீரத்தை களைந்து சரீரத்தை ஏற்பது ஆகிய செயல்கள் ஆத்மாவின் இருப்பு இல்லாமல் நிகழ்வது சாத்தியமற்றது. ஆகையால் ஆத்மாவின் இருப்பு செயலற்று எந்தவிதமாகவும் பங்கெடுத்து கொள்ளாமல் ஆஜராகியிருப்பது மட்டுமே போதுமானதாகிறது. காலையில் சூரியன் உதிக்கிறது. நமது தோட்டத்தில் மலர்கள் மலர்ந்து விடுகின்றன. சூரியனுக்கு மலர்கள் விரிந்தது தெரிவது கூட இல்லை. இந்த மலர்களை மலரச் செய்வதற்காகச் சூரியன் உதிக்கவும் இல்லை. மலர்கள் மலர்ந்தது அதற்கு சூரியனுடைய தோற்றம் மட்டுமே போதுமானது. மேலும் ஒரு வகுப்பில் மாணவர்கள் கூக்குரலிட்டு ஆடிப்பாடி விளையாடிக் கொண்டிருக் கிறார்கள். ஆசிரியர் உள்ளே நுழைகிறார். வகுப்பு உடனே அமைதியாகி விடுகிறது. மாணவர்கள் அவரவர் இருக்கையில் அமர்ந்து புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்து விடுகின்றனர். ஆசிரியர் ஒரு வார்த்தைக் கூடப் பேசவில்லை. எந்த வேலையும் செய்யவில்லை, அமைதி என்று கூடச் சொல்லவில்லை. உள்ளே நுழைந்தார், அவரது வருகை, இருப்பு இந்த ‘இருப்பே’ போதுமானது. இந்த இருப்பு தன்மை சுதந்திரமானது. அதன் மேல் எந்தவிதமான ஆதிக்கமும் கிடையாது. இவ்விதம் ஆத்மாவின் சொரூபத்தை இருபத்தொன்றாவது ஸ்லோகம் வரை பற்றி பேசி இருபத்திரெண்டிலிருந்து, இருபத்திஐந்தாம் ஸ்லோகம் வரை ஏற்கனவே சொன்ன தத்துவகருத்துகளை மீண்டும் கூறி முடிவரை செய்கிறார்.

No classes added yet.

Our Visitor

000568
Users Today : 6