Poornayogam

Sanatana Dharma – The Eternal Way of Life

Home » Sreemad Bhagavatgita Lesson – 02 Sankiya yogam – Tamil » ஸ்லோகம் – 24

ஸ்லோகம் – 24

अच्छेद्यो ऽयमदाद्योऽयमक्लेद्योऽशोष्य एव च ।

नित्यः सर्वगतः स्थाणुरचलोऽयं सनातनः ।। २४ ||

அச்சேத்யோSயமதாஹ்யோSயமக்லேத்யோSசோஷய ஏவ ச நித்ய: ஸர்வகத: ஸ்தாணுரசலோயம் ஸநாதன: || 24 ||

அயம் – இந்த ஆத்மா; அச்சேத்ய – வெட்டுபட முடியாதவன்;

அயம் – இந்த ஆத்மா; அதாஹ்ய – எரிக்கப்படமுடியாதவன்;

அக்லேத்ய: – நனைக்கப்படமுடியாதவன்; ச – மேலும்; ஏவ – சந்தேகமின்றி; அஸோஷ்ய – உலர்த்தப்படமுடியாதவன்; அயம் – இந்த ஆத்மா;

நித்ய – நித்யமானவன்; ஸர்வகத: – எங்கும் நிறைந்தவன்;

அசல: – இயக்கமற்றவன்; ஸ்தாணு – ஸ்திரமாக இருப்பவன்;

ஸநாதந: – ஸாஸ்வதமானவன்.

இந்த ஆத்மா வெட்டுப்படமுடியாதவன், எரிக்கப்படமுடியாதவன், நனைக்கப் -படமுடியாதவன், மேலும் ஸந்தேகமின்றி உலர்த்தபடமுடியாதவன்; மற்றும் இந்த ஆத்மா நித்யமானவன், எங்கும் நிறைந்தவன், இயக்கமற்றவன், ஸ்திர மாக இருப்பவன், சாஸ்வதமானவன்.

ஸ்லோகம்-24,25 இந்த இரண்டு ஸ்லோகங்களில் பகவான் முடிவுரை செய்கின்றார். முடிவுரை செய்கின்றார் என்றால் எங்கு முகவுரை செய்தார். பதினொன்றாவது ஸ்லோகத்தில் முகவுரை செய்து பன்னிரெண்டாவது ஸ்லோகத்தில் இருந்து ஆத்ம தத்துவத்தை விளக்க ஆரம்பித்தார். அதை பகவான் இருபத்தி நான்காவது, இருபத்தி ஐந்தாவது ஸ்லோகங்களில் முடிவுரை செய்கின்றார். இந்த இருபத்தி நான்காவது ஸ்லோகத்தில் என்ன செய்கின்றார் என்றால் இதுவரை கூறி வந்த ஆத்ம தத்துவத்தினுடைய கருத்துக்களை ஒட்டு மொத்தமாக எந்தளவு கூற முடியுமோ அந்தளவுக்கு சாரமாக தந்துள்ளார். ஆகவே இந்த ஸ்லோகம் ஆத்ம தத்துவத்தின் சாரம். இந்த ஸ்லோகத்தில் புதிதான கருத்து ஒன்றும் கிடையாது இதுவரை சொன்னதின் சாரத்தை சொல்லி அடுத்த ஸ்லோகத்தில் ஆகவே துயரப்       -படாதே என்று கூறி முடிவுரை செய்வார். ஆகவே இந்த இரண்டு ஸ்லோகங் -களும் முடிவுரை ஸ்லோகங்கள். இந்த இரண்டு ஸ்லோகங்களுக்கும்  விளக்கம் கிடையாது ஏற்கனவே இந்த ஸ்லோகங்களில் உள்ள கருத்துக் களுக்கு விளக்கம் பார்த்து விட்டோம். இதன் முதல்வரி பகவான் முன் ஸ்லோகத்தில் சொன்னதையே சொல்லியிருக்கிறார். இரண்டாவது வரியில் இதற்கு முன் சொன்ன கருத்துக்களின் சாரத்தை கூறுகின்றார்.

ஸ்லோகத்தின் பொருள் விளக்கம் சுருக்கமாக பார்ப்போம்.

இந்த ஆத்மாவானது அச்சேத்ய:, அச்சேத்ய: என்றால் இந்த ஆத்மாவை ஆயுதங்களால் வெட்டப்பட முடியாதது. அடுத்தது அதாஹ்ய: அயம், அதாஹ்ய: என்றால் எரிக்கப்பட முடியாததாக இருக்கின்றது. தாஹ்யம் என்றால் எரிக்க யோக்கியமானது என்று பொருள், அதாஹ்யம் என்றால் எரிக்க யோக்கியமல்லாதது. அடுத்தது அக்லேத்ய: நனைக்கபடமுடியாத்து, அடுத்தது அஸோஷ்ய: என்றால் உலர்த்தபடமுடியாதது. ஏவ என்ற சொல் ஒரு விஷயத்தை நிச்சயமாக அல்லது சந்தேகமின்றி என்று வலியுறுத்தி கூறுவதற்கு உபயோகிக்கும் ஒரு சொல்.

அடுத்தது இரண்டாவது வரி:

நித்ய: இந்த ஆத்மாவானது என்றும் இருக்கின்றது, முதல் வரியில் சொன்னதை காரணமாக கொண்டு நித்ய: என்பதை சாத்தியமாக எடுத்துக் கொள்ள வேண்டும். எப்படி இந்த ஆத்மாவை எந்த ஆயுதத்தாலும் வெட்ட முடியாதோ. நெருப்பால் எரிக்கமுடியாதோ, நீரினால் நனைக்கமுடியாதோ, காற்றால் உலர்த்த முடியாதோ ஆகையால் இந்த ஆத்மா நித்ய:. எல்லா காலத்திலும் இருப்பது. நித்ய: என்றால் காலத்தை கடந்தது என்று பொருள். அடுத்தது ஸர்வகத: எல்லா இடத்திலும் வியாபித்து இருக்கிறது. இதை எப்படி புரிந்து கொள்வது என்றால் நித்யத்துவா ஸர்வகத: இந்த ஆத்மா நித்யமாக இருப்பதால் எல்லா இடத்திலும் வியாபித்து இருக்கிறது. ஸர்வகத: என்பது தேசத்தினால் இந்த ஆத்மாவிற்கு வரையரை கிடையாது. நித்ய: என்பது காலத்தினால் வரையரை கிடையாது. அடுத்து ஸ்தாணு: அசையாதது, ஸ்திரமாக இருப்பது, ஆத்மா ஏன் அசையா ஸ்திரமாக இருக்கிறது என்றால் ஒரு பொருள் அசைய வேண்டுமென்றால் அதற்கு இடம் தேவை, ஆத்மா எங்கும் நிறைந்து ஆத்மாவிற்கு அப்பாற்பட்டு ஒரு இடம் கிடையாது ஆகையால் ஆத்மாவிற்கு அசைவு, மாற்றம் என்பது கிடையாது. இதையே விளக்கப்படுகிறது அடுத்ததாக அசல: சல என்றால் அசைவு, அசலம் என்றால் அசைவற்றவன். ஸ்தாணுவாக இருப்பதனால் ஆத்மா அசைவற்று இருக்கிறது. ஸ்தாணுவை போல ஸ்திரமாக இருப்ப      -தால் இந்த ஆத்மா அசல:, அசல: என்றால் செயலற்றவன் ஸ்தாணு:, அசல: என்ற இரண்டு சொல்லும் ஆத்மாவிற்கு க்ரியை இல்லை, செயல் இல்லை என்பதை காட்டுகிறது. கடைசி சொல் ஸநாதந: என்றால் அகாரணம்(காரண மற்றது) இந்த ஆத்மாவிற்கு காரணம் என்பது கிடையாது. வேறு சொல்லில் கூறுவதென்றால் அநாதி, இந்த ஆத்மாவிற்கு தோற்றம் என்பது கிடையாது.  ஒன்று தோன்றுவதாக இருந்தால் அந்த தோற்றத்திற்கு காரணம் ஒன்று இருந்தாக வேண்டும் ஆகவே இந்த ஆத்மா காரணமற்றது, அநாதி. அநாதி என்றால் தோற்றம் என்பது இல்லாதது ‘என்றும் இருப்பது’ என்று பொருள். இந்த ஸ்லோகத்தில் கூறுகின்ற அனைத்தும் பன்னிரெண்டாவது ஸ்லோகத் -திலிருந்து இருபத்திமூன்றாவது ஸ்லோகம் வரை கூறிய ஆத்மாவின் சொருபத்தை பற்றிய விளக்கம் தான் இந்த ஸ்லோகத்தில் ஞாபகப்படுத்தி முடிவுரை செய்கிறார். இது உபதேசத்தினுடைய ஒரு நியமம். உபக்ரமம், உபஸம்ஹாரம் என்று சொல்லப்படும். உபக்ரமம் என்றால் ஒரு நூலின் ஆரம்பம் அல்லது உரையின் தொடக்கப்குதி, இது ஒரு கருத்தை அறிமுகப் படுத்துகிறது. உபஸம்ஹாரம் என்றால் நூலின் அல்லது உரையின் முடிவு பகுதி. இது கருத்தை தொகுத்துரைத்து முடிவுக்கு வருகிறது. உபக்ரமமும், உபஸம்ஹாரமும் ஒன்றுக்கொன்று ஒத்து போக வேண்டும். ஆரம்பத்தில் எதை கூறி ஆரம்பிக்கின்றோமோ, முடிக்கும் போது அதை கூறி தான் முடிக்க வேண்டும். ஆகவே இருபத்தி நான்கு, இருபத்தி ஐந்து ஸ்லோகங்கள் உபஸம்ஹார ஸ்லோகங்கள்.

No classes added yet.

Our Visitor

000560
Users Today : 4