Poornayogam

Sanatana Dharma – The Eternal Way of Life

Home » Sreemad Bhagavatgita Lesson – 02 Sankiya yogam – Tamil » ஸ்லோகம் – 22

ஸ்லோகம் – 22

वासांसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरोऽपराणि ।

तथा शरीराणि विहाय जीर्णान्यन्यानि संयाति नवानि देही ॥ २२ ॥

வாஸாம்ஸி ஜீர்ணாநி யதா விஹாய நவாநி க்ருஹ்ணாதி நரோபராணி |

ததா ஸரீராணி விஹாய ஜீர்ணா ந்யந்யாநி ஸம்யாதி நவாநி தேஹீ ||22||

யதா – எப்படி; நர – மனிதன்; ஜீர்ணாநி – (நைந்துபோன) பழைய;

வாஸாம்ஸி – துணிகளை; விஹாய – நீத்துவிட்டு; அபராணி – வேறு;

நவாநி – புதிய( துணிகளை); க்ருஹ்ணாதி – எடுத்துக் கொள்கிறானோ;

ததா – அவ்வாறே; தேஹி – ஜீவாத்மா; ஜீர்ணாநி – (நைந்துபோன)பழைய; ஸரீராணி – உடல்களை; விஹாய – நீத்துவிட்டு; அந்யாநி – வேறு;

நவாநி – புதிய(உடல்களை); ஸம்யாதி – அடைகிறான்.

எப்படி மனிதன் நைந்து போன பழைய துணிகளை நீத்து விட்டு வேறு புதிய துணிகளை எடுத்துக் கொள்கிறானோ, அவ்வாறே ஜீவாத்மா நைந்து போன பழைய உடல்களை நீத்து விட்டு வேறு புதிய உடல்களை அடைகிறான்.

இந்த ஸ்லோகத்திலும் ஆத்மா விகாரமற்றது என்ற கருத்தையே பகவான் கூறியுள்ளார். ஆத்மா விகாரமற்றது(மாற்றமற்றது) என்பதை உதாரணம் மூலம் கூறியுள்ளார். உதாரணம் என்னவென்றால் ஒரு மனிதன் ஆடையை அணிகின்றான், பிறகு அந்த ஆடையானது கிழிந்து விட்டால் அல்லது பழையதாகி விட்டால் அதை அவன் கழைந்து விட்டு புதியதாக இனியொரு ஆடையை அணிகின்றான். இப்பொழுது பழைய ஆடை ஒன்று இருந்தது அதை விடுத்து புதிய ஆடை ஒன்றை அணிந்துள்ளான். இதனால் அணிந்தவனுக்கு ஏதாவது மாற்றம் வருமா என்றால் ஒருவிதமான மாற்றமும் அவனுக்கு கிடையாது, ஆடைகள் வருகின்றது, செல்கின்றது அவனிடம் ஒரு மாற்றமும் கிடையாது. இதை தான் உதாரணமாக கூறுகின்றார்.

இந்த உதாரணத்தில் ஸ்தூல சரீரத்தை பகவான் ஆத்மாவுக்கு உதாரணமாக சொல்கின்றார். பிறகு இந்த ஸ்தூல சரீரம் அணிகின்ற ஆடைகள் இருக்கின்றதல்லவா அது ஆத்மா இருக்கின்ற ஸ்தூல சரீரத்திற்கு உதாரணமாக சொல்கிறார்.  இந்த உதாரணத்தை கவனமாக புரிந்துக் கொள்ள வேண்டும். இந்த இடத்தில் ஸ்தூல சரீரமான உடலுக்கு விதவிதமான ஆடைகள் அணிகின்றோம் அப்பொழுது ஸ்தூல சரீரமான உடலுக்கு எந்த மாற்றமும்  கிடையாது. அதேபோல ஆத்மாவுக்கு விதவிதமான ஸ்தூல சரீரம் வந்து செல்கின்றது ஆத்மாவுக்கு எந்த மாற்றமும் இல்லை.

இந்த உதாரணத்தை புரிந்துக் கொள்ள வேண்டுமானால் சில கருத்துக்களை புரிந்துக் கொள்ள வேண்டும். அந்த அடிப்படையான ஒரு சில கருத்துக்களை பார்ப்போம். ஜீவன் என்ற சொல்லில் ஒரு ஜீவன் என்றால் ஆத்மா, அநாத்மாவின் சேர்க்கை என்று படித்துள்ளோம். ஆத்மாவின் சொரூபம் என்ன என்று பார்த்து வருகிறோம், அநாத்மாவினுடைய சொரூபத்தை மூன்றாக நாம் பிரித்தோம் காரணசரீரம், சூஷ்மசரீரம், ஸ்தூலசரீரம். இந்த மூன்று உடலையும் சேர்த்து அநாத்மா என்று சொல்லப்படுகிறது. காரணசரீரம் என்பது நாம் செய்து வைத்த பாவ, புண்ணியங்களினுடைய ஸ்தானம். ஆயதனம் என்றும் அறியப்படுகிறது, ஆயதனம் என்றால் இருப்பிடம் என்று பொருள். நாம் செய்யும் செயல்களுக்கு பலனாக வரும் பாவ, புண்ணியங்கள் எல்லாம் ஒரு இடத்தில் இருக்க வேண்டுமல்லவா அந்த இருப்பிடம் தான் காரண சரீரம். காரணசரீரத்தின் லக்ஷ்ணம் என்பது ‘பாவ, புண்ணிய ரூபமான கர்ம பலஷ்ய ஆயதனம்’. பாவ, புண்ணிய கர்ம பலன்களின் இருப்பிடம் தான் காரணசரீரம். இந்த காரணசரீரம் என்பது ஒரு காலத்தில் தோன்றவில்லை எப்பொழுதும் இருக்கின்றது. ஒரு ஜீவன் செய்து வைத்த விதவிதமான பாவ, புண்ணியங்களெல்லாம் காரணசரீரத்தில் இருக்கின்றது. பிறகு இந்த பாவ, புண்ணியமானது சுக,துக்கமாக மாறி அனுபவத்திற்கு வரவேண்டுமென்றால் கருவிகள் தேவை. ஆகவே காரண சரீரத்தில் இருந்து பாவ, புண்ணியத்தின் அடிப்படையில் சூஷ்மசரீரமானது கிடைக்கின்றது. சூஷ்மசரீரமான மனம், ஞானேந்திரீயசக்தி, பிராணசக்தி, கர்மேந்திரியசக்திகள் இவைகளெல்லாம் பாவ, புண்ணியத்தை அனுபவிக்க வேண்டுமென்றால் ஒரு இடம் தேவைபடுகின்றது. ஒரு இடத்தில் இருந்து தான் மனமானது சுக,துக்கத்தை அனுபவிக்க முடியும். அந்த போகத்தை அனுபவிக்கும் ஒரு ஸ்தானம் தான் நம்முடைய ஸ்தூலசரீரம். நம்முடைய மனமானது ஒரு இடத்தில் இருந்து சுக, துக்கத்தையெல்லாம் அனுபவிக்க வேண்டும் ஆகவே சூஷ்மசரீரத்தை போக சாதனம் என்றும், ஸ்தூலசரீரத் திற்கு போக ஆயதனம் என்றும் சொல்லப்படுகிறது. போக ஆயத்தனம் என்றால் போகத்தை அனுபவிக்க இருக்கின்ற இடம்.

ஒரு ஜீவனுக்கு எண்ணிக்கைக்கு அடங்காத பாவ, புண்ணியங்கள் அவனுடைய காரணசரீரத்தில் இருக்க அதில் ஒரு விதமான பாவ, புண்ணியங்கள் வெளிப்படுகின்றது. அதனுடைய அடிப்படையில் சூஷ்ம சரீரம் அமைந்து பிறகு அந்த சூஷ்ம சரீரமானது பாவ, புண்ணியத்தை வெளிப்படுத்த அல்லது சுக, துக்கங்களாக மாற்றி அனுபவிக்க அதற்கு தகுந்த சூலசரீரத்தை எடுக்கின்றது. இந்த சூஷ்மசரீரமும், காரணசரீரமும் சேர்ந்ததே ஜீவன் என்று சொல்லலாம். பிறகு இந்த ஜீவன் என்ன செய்கிறான் எப்படிப்பட்ட பாவ, புண்ணியத்தை அனுபவிக்க வேண்டுமோ, அதற்கு தகுந்த ஸ்தூல சரீரத்தை எடுக்கின்றான். அதை தான் ‘பிறப்பு’ என்று நாம் சொல்கின்றோம். அப்படி ஸ்தூலசரீரத்தை எடுத்த ஜீவன் என்ன செய்கின்றான் வெளிப்பட்ட பாவ, புண்ணியத்திற்கு தகுந்தாற் போல் சுக, துக்கங்களை அனுபவிக்கிறான். எதுவரை அனுபவித்து வருவான் என்றால் ஒரு ஜீவனானவன் சூஷ்மசரீரத்திலிருந்து ஸ்தூலசரீரத்தை தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால் பாவ, புண்ணியம் வெளிப்பட்டிருக்க வேண்டும், அந்த வெளிப்பட்ட பாவ, புண்ணியங்களுக்கு ‘பிராராப்த கர்ம’ என்று பெயர். இந்த பிராராப்த கர்ம என்றால் தன்னுடைய பாவ, புண்ணிய சேகரத்திலிருந்து வெளிப்பட்ட சிறு பகுதி பாவ, புண்ணியங்கள். இந்த பிராராப்த கர்ம தீரும் வரை இந்த ஜீவன், தான் எடுத்த ஸ்தூலசரீரத்தில் இருந்து போகங்களை அனுபவிக்கிறான். பிறகு பிராராப்த கர்ம தீர்ந்து விட்டால் உடனே இந்த ஸ்தூலசரீரத்தை விட்டு விடுகிறான். எடுத்து வந்த ஸ்தூலசரீரத்தை விட்ட சூஷ்மசரீரம் வேறு ஸ்தூலசரீரத்தை நாடும் காரணம் வேறு விதமான பாவ, புண்ணியம் வெளிப்படும். இவ்விதம் ஒரு ஜீவன் ஒரு ஸ்தூலசரீரத்தை எடுத்து, அதை விடுத்து வேறெரு ஸ்தூலசரீரத்தை எடுத்து ஒரு ஜீவன் பிறந்து, இறந்து வருகின்றான். இதில் சூஷ்மசரீரம் ஒரு ஸ்தூல சரீரத்தை எடுக்கின்றது, விடுகின்றது காரணசரீரம் சூஷ்மசரீரத்திற்கு காரணமாகிறது. இங்கு ஆத்மாவினுடைய பங்கு என்னவென்றால் நடக்கின்ற எல்லா விஷயத்திலும் ஆத்மா சாட்சியாக மாறாமல் இருக்கின்றது. ஜடமான காரண, சூஷ்ம சரீரத்திற்கு ‘இருத்தல்’ என்ற சக்தியே ஆத்மாவிடமிருந்து வந்து பிறகு ஆத்மா சாட்சியாக மட்டும் இருக்கிறது. இவ்விதம் மாற்றங்கள் நடக்கும் போது ஆத்மாவிடம் எந்த மாற்றமும் கிடையாது இதை தான் பகவான் சொல்ல வருகிறார்.

இந்த உதாரணத்திலிருந்து இரண்டு கருத்து நமக்கு கிடைக்கிறது. உதாரணத்தை பார்ப்போம். உதாரணத்தில் ஒருவன் ஒரு ஆடையை அணிகின்றான் பிறகு அந்த ஆடையை களைந்து விட்டு  வேறு ஆடையை அணிகின்றான். ஒருவன் எப்படிப்பட்ட உடையை அணிவான் என்பது எதை பொறுத்தது என்றால் எப்படிப்பட்ட செயலில் ஈடுபடுவான் என்பதை பொறுத்தது. உதாரணமாக வயலில் உழவு தொழில் செய்பவன் அதற்கு தகுந்தாற் போல் உடையணிகிறான். ஒரு தொழிற்சாலை ஊழியர், ஒரு அலுவலகத்தில் வேலைபார்க்கும் மேலதிகாரி, குமாஸ்தா போன்றவர்கள் அவரவர் ஈடுபடும் செயலிற்கு தகுந்தாற் போல் உடையை அணிகிறார்கள். அப்படி நாம் எடுக்கின்ற உடை எதை பொறுத்தது என்றால் எந்த தொழிலை நாம் செய்கின்றோமோ அதனுடைய அடிப்படையில் நாம் உடையை அணிகின்றோம். அதுபோல் எப்படிப்பட்ட ஸ்தூலசரீரத்தை இந்த ஜீவன் எடுக்கும் என்றால் அவனுடைய கருமத்தை பொறுத்தது. நம்முடைய கருமத்தை பொறுத்து ஆடையை தேர்ந்தெடுக்கின்றோம், ஆடையை பயன்படுத்துகின்றோம். ஆக ஜீவன் காரணசரீரத்திலிருந்து வெளிபட்ட பாவ, புண்ணியத்தின் பலனாக வந்த சுக, துக்கங்களை அனுபவிக்க தகுந்தாற் போல் உடல் இந்த ஜீவனுக்கு வந்து அமைகிறது. ஆகவே ஒரு ஜீவனுக்கு எப்படிபட்ட உடல் அமைந்தாலும் அந்த ஜீவன் அதை ஏற்று கொள்ளதான் வேண்டும்.  காரணம் அந்த உடல் அமைவது வெளிபட்ட பாவ, புண்ணியத்தின் அடிப்படையில். இது முதல் கருத்து.

அடுத்து பகவான் கூறுகிறார். இந்த ஜீவனானவன் தன்னுடைய உடலை விடுத்து அடுத்த உடலை எடுக்கின்றான் எதை போல என்றால் ஒரு ஆடையை நாம் உபயோகிக்கிறோம் அந்த ஆடை நைந்து பழையதாகி விட்டலோ அல்லது கிழிந்து விட்டாலோ அந்த ஆடையை  மாற்றுவது போல என்று பகவான் கூறுகிறார். அப்படி பார்க்கையில் இந்த சரீரம் எப்பொழுது ஜீரணமாகிறதோ எப்போது பயன் இல்லாமல் அதன் சக்தியை இழந்து விடுகிறதோ அப்பொழுது தான் சூஷ்மசரீரமானது ஸ்தூலசரீரத்தை விடவேண்டும். ஆனால் அனுபவத்தில் என்ன பார்க்கிறோம் பகவான் கூறிய படி பார்த்தால் ஒரு ஜீவனுக்கு மரணம் எண்பது அல்லது தொண்ணூறு வயதில் தான் வரவேண்டும் காரணம் அப்பொழுது தான் சரீரம் ஜீரணமாகிறது ஆனால் மரணம் என்பது பிறந்ததிலிருந்து எந்த வயதில் வேண்டு      மானாலும் நிகழ்வதை பார்க்கிறோம். ஒரு ஜீவனுக்கு சிறு வயதில் மரணம் நிகழ்கிறது அந்த ஜீவனின் ஸ்தூலசரிரம் அந்த வயதில் ஜீரணமாகி விட்டதா என்றால் சாஸ்திரம் சொல்கிறது ஜீரணமாகி விட்டது என்று. அது எப்படி என்று பார்ப்போம். நம்முடைய உதாரணத்தில் ஒருவன் ஒரு உடையை அணிகின்றான் அந்த உடையை சில காலங்கள் பயன்படுத்துகின்றான் அவன் பொருளாதார ரீதியில் வசதி படைத்தவன் அவனுக்கு இரண்டு மாதத்திற்கு மேல் அந்த உடை அவனுக்கு பிரயோஜனம் இல்லாமல் ஆகி விடுகிறது. அதேசமயம் ஒரு ஏழைக்கு அவன் உபயோகிக்கும் ஆடையானது நைந்து கிழிந்து அந்த ஆடை இனி அணிய முடியாது என்ற நிலை வரை அந்த ஆடை அவனுக்கு தேவையாகிறது. ஆகவே ஒரு ஆடையானது புதியதா, பழையதா, களைய வேண்டியதா, இல்லையா என்பதை ஆடை முடிவு செய்யாது அதை அணிபவன் தான் முடிவு செய்வான். ஆடையின் ஸ்திதி   -யை வைத்து ஆடை பழையதா, இல்லையா என்பதையும ஜீர்ணமானதா, இல்லையா என்பதையும் முடிவு செய்ய கூடாது. அதேபோல ஒரு ஜீவாத்மா ஒரு சரீரத்தை எடுக்கின்றான் இந்த சரீரத்தை எந்த காரணத்திற்கு என்ன பாவ, புண்ணியத்தை தீர்பதற்காக எடுக்கின்றானோ அது பிறந்த நாளிலிருந்து நூறு வயது வரைக்கும் எப்பொழுது வேண்டுமானாலும் தீர்ந்து போகலாம். சிறு வயதில் எடுத்து வந்த பாவ, புண்ணியம் தீர்ந்து விடுகிறது என்றால் அந்த ஜீவாத்மாவுக்கு அந்த உடல் ஜீரணம், அப்பொழுதே எடுத்து வந்த சரீரத்தை களைந்து விட்டு அடுத்த பாவ, புண்ணியத்திற்கு தகுந்தாற் போல் வேறு சரீரத்தை நாடுகிறான். ஆகவே ஸ்தூலசரிரம் பழையதாகி விட்டதா, இல்லையா என்பதையும் ஜீர்ணமாகி விட்டதா என்பதையும் முடிவு செய்வது ஜீவாத்மாவே தவிர வேறு யாராலும் முடிவு செய்ய முடியாது காரணம் வெளிபட்ட பாவ, புண்ணியத்தை எடுத்து வந்தது இந்த ஜீவாத்மா. இந்த சரீரம் எத்தனை வயதாகி விட்டது என்று நாம் சொல்லிக் கொள்ளலாம் ஆனால் இந்த ஜீவனுக்கு இந்த சரீரம் எவ்வளவு வயதாகி விட்டது நம்மால் சொல்ல முடியாது நாம் போடும் கணக்கீடு அல்ல ஜீவாத்மாவின் கணக்கீடு. இந்த ஜீவாத்மாவுக்கு எடுத்து வந்த பாவ, புண்ணியம் குறைய, குறைய இந்த சரீரம் ஜீவாத்மாவுக்கு பழையதாகி கொண்டே வருகிறது. பாவ, புண்ணியம் அதிகமாக இருக்க, சரீரத்தில் எந்த மாதிரி நோய்கள் இருந்தாலும் ஜீவாத்மாவுக்கு அந்த சரீரம் பழமையாக வில்லை காரணம் எடுத்து வந்த பாவ, புண்ணியம் தீரும் வரை இந்த சரீரம் இருந்தாக வேண்டும். ஆகவே சரீரத்தின் வயது, மரணத்தின் வயது ஜீவாத்மாவுக்கு தான் தெரியும் அதை தெரிந்து கொள்ள முயற்சி செய்கிறேன் நாம் என்ன தான் செய்தாலும் அதை அறிய முடியாது. பகவான் இந்த மாதிரி விஷயங்களெல்லாம் அறியக் கூடாது என்று வைத்துள்ளார். இது போன்ற அறியக்கூடாத விஷயங்கள் எல்லாம் அறியும்படி இருக்குமானால் வாழ்க்கையின் சுவாரஸ்யமே இல்லா -மல் போய்விடும். ஆகவே இயற்கையின் திட்டமே சில விஷயங்கள் நம்மால் அறிய கூடாது என்பது தான். ஆகவே இந்த சரீரத்தின் வயது எடுத்து வந்த பாவ, புண்ணியத்தின் படி அந்த ஜீவாத்மாவுக்கு தான் தெரியும். அதை தான் இங்கு பகவான் ஜீர்ணமான வஸ்திரம் என்ற சொல்லில் கூறுகிறார். நாம் உடலிலுள்ள ஆரோக்கியம், வயதை வைத்து ஆயுள் காலத்தை நிர்ணயிக்க கூடாது. இது ஸ்லோகத்தில் உள்ள உதாரணத்தின் இரண்டாவது கருத்து.

இந்த ஸ்லோகத்தில் ‘தேஹி’ என்ற சொல்லை பகவான் பயன்படுத்தி இருக்கிறார். தேஹி என்றால் தேஹத்தை உடையவன். ஆத்மாவை குறிக்கும். ஆத்மாவானது பழைய சரீரத்தை விட்டு புதிய சரீரத்தை எடுத்து கொள்கிறது. எப்படி மனிதன் பழைய ஆடையை களைந்து விட்டு புதிய ஆடையை எடுத்து கொள்வதை போல. இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய கருத்து இந்த காரியத்தை ஆத்மா செய்வதாக இந்த இடத்தில் கூறுவது போல் தெரிகின்றது. இந்த காரியத்தை உண்மையில் ஆத்மா செய்யவில்லை செய்வது ஜீவாத்மா, சூஷ்மசரீரம். சூஷ்மசரீரம் ஜடமாக இருக்கிறதே அது எப்படி செய்ய முடியும் என்றால் ஆத்மாவினுடைய அனுஹிரத்தினாலு சூஷ்மசரீரம் இந்த காரியத்தை செய்து வருகிறது. ஆகவே இந்த காரியமானது ஆத்மா செய்வது போல் நமக்கு தெரிகிறது. சூஷ்ம சரீரத்தினுடைய காரியம் ஆத்மாவிற்கு செல்கிறது. ஆகவே தேஹி என்றால் முக்கிய ஆத்மாவை குறிக்கின்றது. அப்படி முக்கிய ஆத்மாவை புரிந்துக் கொண்டு இந்த இடத்தில் எப்படி புரிந்து கொள்ள வேண்டுமென்றால் முக்கிய ஆத்மாவின் இருப்பில் சூஷ்மசரீரம் இந்த காரியத்தை செய்து வருகின்றது. சரீரத்தை எடுத்து சரீரத்தை விட்டு வருகிறது. எப்படி மனிதன் ஆடையை எடுத்து, விடுகிறானோ அது போல். இந்த உதாரணத்திலிருந்து என்ன கருத்தை எடுத்து கொள்ள வேண்டுமென்றால் ஆடையை மாற்றும் போது மனிதன் மாறுவதில்லை, அவனிடம் விகாரம் வருவதில்லை அதைபோல ஆத்மாவானது  ஸ்தூல, சூஷ்ம சரீரம் மாறும் போது ஆத்மாவுக்கு மாற்றம் எதுவும் கிடையாது. இந்த சூஷ்மசரீரம் புதிய ஸ்தூலசரீரத்தினுள் போகும் போதோ, சரீரத்தை விடும் போதோ ஆத்மாவிடம் எந்த விதமான மாற்றமும் கிடையாது. இவ்விதம் மாற்றங்கள் நடக்கும் போதும் ஆத்மாவிடம் எந்த மாற்றமும் கிடையாது. இதை தான் பகவான் இந்த ஸ்லோகத்தில் சாரமாக கூறுகிறார்.

No classes added yet.

Our Visitor

000566
Users Today : 4