Poornayogam

Sanatana Dharma – The Eternal Way of Life

Home » Sreemad Bhagavatgita Lesson – 02 Sankiya yogam – Tamil » ஸ்லோகம் – 16

ஸ்லோகம் – 16

नासतो विध्‍यते भावो नाभावो वीध्‍यते सत: ।
उभयोरपि दृष्टोऽन्‍तस्‍त्‍वनयोस्‍तत्‍वदर्शिभि: ॥ १६ ॥

நாஸதோ வித்யதே பாவோ நபாவோ வித்யதே ஸத: |

உபயோரபி த்ருஷ்டோSந்தஸ்த்வநயோஸ்தத்வதர்ஸிபி: || 16 ||

அஸ்த: – இல்லாததற்கு; பாவா – இருப்பது என்பது; ந வித்யதே – இல்லை; து – மேலும்; ஸத: – உண்மையாக இருப்பதற்கு;                             அபாவ: – இல்லாமை என்பதும்; ந வித்யதே – இல்லை;            அநயோ: – இந்த; உபயோரபி – இரண்டின்; அந்த: – தத்வம்;                                   தத்த்வதர்ஸிபி: – தத்வ ஞானிகளால்; த்ருஷ்ட – கண்டறியப்பட்டது.

இல்லாததற்கு இருப்பது என்பது இல்லை. மேலும் உண்மையாக இருப்பதற்கு இல்லாமை என்பதும் இல்லை. இந்த இரண்டின் தத்வம் தத்வ ஞானிகளால் கண்டறியப்பட்டது.

விளக்கம்:

இந்த ஸ்லோகம் மிக முக்கியமான ஸ்லோகங்களில் ஒன்றாகும். இந்த ஸ்லோகத்தின் சாரம் “ஆத்மா ஸத்திய: அநாத்மா மித்யா”. ஆத்மா ஸத்திய: என்றால் ஆத்மா ‘என்றும் உள்ளது’ அல்லது ‘உள்ளது’, அநாத்மா மித்யா. இது இந்த ஸ்லோகத்தின் சாரம் மட்டுமல்ல முழு வேதத்தின் சாரம், வேதாந்தத்தின் சாரம், உபநிஷத்தின் சாரம், சாஸ்திரத்தின் சாரம் இது தான். இதை புரிந்து கொள்வதற்குத் தான் திதிக்ஷா முதல் சகல சாதனைகளும் செய்கிறோம்.

முதலில் அஸத் என்ற பொருளுக்கு இரண்டு பொருள் இருக்கிறது. ஒரு பொருள் நம் எல்லோருக்கும் தெரிந்த பொருள், பிரசித்தியான பொருள். இனியொரு பொருள் யாருக்குமே தெரியாத பொருள். ஒரு பொருள் ‘அத்தியந்த அஸத்’ எல்லா காலத்திலும் அனுபவத்தில் இருக்காத பொருள், இதை வேரொரு வார்த்தையில் கூறினால் சூனியம் என்று கூறலாம். சூனியம் என்று சொன்னால் அது எல்லா காலத்திலும் கிடையாது. அதுக்கு இருத்தல் என்பதே கிடையாது அதற்கு அஸத் என்று சொல்லலாம். ஸத் என்றால் இருக்கின்றது. அஸத் என்றால் இல்லை. இல்லை என்ற சொல்லினுடைய பொருள் அது எப்பொழுதுமே கிடையாது நம்முடைய அனுபவத்திற்கு எந்த காலத்திலும் அது வராது. அஸத் என்பதற்கு இனியொரு பொருள் மித்யா. மித்யா என்றால் எந்த ஒரு பொருள் நம்முடைய அனுபவத்திற்கு மட்டும் இருக்குமோ, ஆனால் உண்மையில் விசாரம் செய்து பார்த்தால் இருக்காது அதெல்லாம் மித்யா என்று சொல்லப்படுகிறது. மித்யா என்பது ஒரு பொருளினுடைய இருத்தலை பற்றிய அடைமொழி. மித்யா என்றால் அது அனுபவத்திற்கு இருக்கும் அதனால் ஸத் என்று கொள்ளலாம் என்றால் முடியாது காரணம் விசாரம் செய்து பார்த்தால் அந்த பொருள் இருத்தல் என்பது இருக்காது. இந்த மித்யா என்பதை ஸத் என்றும் சொல்ல முடியாது காரணம் உண்மையில் அது கிடையாது. அஸத் என்று சொல்லலாமா என்றால் அஸத்தின் லட்சணம் என்பது அது அனுபவத்திற்கு கூட இருக்க கூடாது ஆனால் மித்யா என்பது அனுபவத்திற்கு இருக்கிறது ஆகையால் அஸத் என்றும் சொல்ல முடியாது. உதாரணமாக கயிறை ஒருவன் பார்க்கிறான். அந்த கயிறை ஸத் என்று எடுத்து கொள்வோம். அந்த கயிற்றை இருளில் அவன் அதை பாம்பாக பார்க்கிறான். பாம்பாக பார்த்தவுடன் அவன் அதை கண்டு பயந்து பதட்டம் அடைகிறான். அதை வேரொருவன் பார்த்து பாம்பு அல்ல, கயறு என்கிறான், பிறகு ஞானம் வந்து கயறு தெரிகிறது. பாம்பு அவனுக்கு தெரிந்த காலத்தில் அந்த பாம்பை அஸத் என்று சொல்லலாமா என்றால் முடியாது காரணம் உண்மையான பாம்பை கண்டால் என்ன அனுபவம் ஏற்படுமோ அதே அனுபவம் அவனுக்கு ஏற்பட்டதால் அதை அஸத் என்று சொல்ல முடியாது. ஸத் என்று சொல்லலாமா என்றால் அவனுக்கு ஞானம் வந்தால் பாம்பு இல்லை என்று அவனே சொல்வான். ஆகையால் கயிற்றில் தெரிகின்ற பாம்பின் இருப்பு ஸத் என்றும் சொல்ல முடியாது, அஸத் என்றும் சொல்ல முடியாது சாஸ்திரம் சொல்கிறது அது மித்யா என்று. சாதாரண மனிதர்களுக்கு  ஸத்துக்கும், அஸத்துக்கும் இடையில் இருக்கின்ற மித்யா என்ற தத்துவம் தெரியாது. மனிதர்கள் ஒன்றை ஸத் என்று புரிந்துக் கொள்கிறார்கள் அல்லது அஸத் என்று பரிந்துக் கொள்கிறார்கள். இந்த மனிதர்களின் ஸத், அஸத் விவேகம் எப்படி இருக்கிறதென்றால் எதை அனுபவிக்கிறார்களோ அதை ‘இருக்கின்றது’ என்று முடிவு செய்துள்ளார்கள். எது அனுபவத்தில் இல்லையோ அதை ‘இல்லை’ என்று கொள்கிறார்கள். இங்கு சாதாரண மனிதர்கள் எதை அனுபவத்தில் அனுபவிக்கிறார்களோ அதற்கு‘ஸத்தியம்’ என்ற அந்தஸ்தை கொடுக்கிறார்கள். எதை அனுபவத்தில் அனுபவிக்கவில்லையோ அதற்கு‘அஸத்’ என்ற நிலையை கொடுக்கிறார்கள். கயிறு, பாம்பு விஷயத்தில் கயிற்றில் பாம்பை பார்த்து கொண்டிருப்பவன் பாம்பிற்கு ‘பாம்பு இருக்கிறது’ என்ற நிலையை கொடுத்தது மட்டுமல்லாமல் கயிறு இருப்பதே அவனுக்கு தெரியவில்லை. இது போலவே இந்த உலகம் அனுபவத்திற்கு இருக்கிறது ஆகவே இந்த உலகம் சத்தியம். பரம்பொருள் அனுபவத்திற்கு இல்லை ஆகவே பரம்பொருள் இல்லை என்பது அறியாமை யில் இருக்கின்ற சாதாரண மக்களின் நிலை. இது எப்படியிருக்கிறதென்றால் கயிற்றை பாம்பு என்று பாரத்து, கயிறு இருக்கின்றது என்று தெரியாமல் அதை அஸத் என்று என்று பாவித்து பாம்பை ஸத் என்று  கொள்வது போல் இருக்கின்றது. அறியாமையில் எதை ஸத் என்று பாவித்து கொண்டிருக்கிறோமோ அது ஸத் இல்லை, எதை அஸத் என்று பாவித்து கொண்டிருக்கிறோமோ அது அஸத் இல்லை என்று பகவான் கூறி இங்கு ஸத், அஸத் விவேகம் எதன் அடிப்படையில் இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு நியதியை சொல்கிறார். ஒரு பொருள் இருக்கிறது, அல்லது இல்லை என்பது நம் இந்திரீயங்களின் அனுபவத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கிறோம்.  பகவான் கூறுகிறார் ஒரு பொருள் இருக்கிறது அல்லது இல்லை என்பதை தீர்மானிப்பது இந்திரீயங்களின் அனுபவத்தின் என்று அடிப்படையில் அல்ல அறிவின் அடிப்படையில் தான் நிர்ணயிக்கபட வேண்டும் என்கிற புதிய அறிவை நமக்கு புகட்டுகிறார். ஸத், அஸத் விஷயத்தில் அனுபவத்தின் அடிப்படையில் போனால் நம்மை தவறான பாதையில் வழிநடத்தி செல்லும் ஆகையால் அறிவின் அடிப்படையில் போனால் நம்மை சரியான இடத்தில் கொண்டு விடும் என்கிறார். ஒரு உதாரணம் பார்ப்போம் நாம் யாத்திரை செல்கிறோம் நமக்கு தாகம் எடுக்கிறது, தூரத்தில் தண்ணீர் தெரிகிறது நம்முடைய அனுபவத்தில் தூரத்தில் தண்ணீரை பார்க்கிறோம் அதன் அடிப்படையில் தாகத்தை தீர்க்க தண்ணீரை நோக்கி செல்கிறோம் அருகே செல்ல, செல்ல தான் தெரிகிறது அது கானல் நீர் என்று, அது போல் தான் ஸத், அஸத் விஷயத்தில் அனுபவத்தின் அடிப்படையில் போனால் கானல் நீரை நோக்கி போவதாக இருக்கும், அறிவின் அடிப்படையில் போனால் சரியான இடத்தில் சென்றடைவோம். ஸத், அஸத் விஷயத்தில் அறிவு என்று சொல்வது எந்த அறிவு என்றால் இங்கு பகவான் கூற போகும் அறிவு, அது என்னவென்று பார்ப்போம்.

இனி நாம் ஸத் என்பதன் இலக்கணத்தை பார்ப்போம், இரண்டு விதமான இலட்சணத்தை பார்க்க உள்ளோம். ஒரு பொருளை ‘ஸத்தியம்’ என்று சொல்ல வேண்டுமென்றால் அது மூன்று காலத்திலும் இருக்க வேண்டும். மூன்று காலம் என்பது கடந்த காலம், நிகழ்காலம், வரும்காலம் இந்த மூன்று காலத்திலும் எது இருக்கின்றதோ அது ‘ஸத்’. இது முதல் லட்சணம். எது சுயமாகவும், சுதந்திரமாகவும் இருக்குமோ அது ஸத் அல்லது சத்தியம். இது இரண்டாவது இட்சணம்.

அடுத்து மித்யாவின் லட்சணங்களை பார்ப்போம். எது நிகழ்காலத்தில் மட்டும் இருக்குமோ முன்பும் இல்லாமல், பின்பும் இல்லாமல் இடையில் (நிகழ்வில்) மட்டும் இருக்குமோ அது அஸத் அல்லது மித்யா, எது ஒன்றை சார்ந்து இருக்குமோ அது அஸத் அல்லது மித்யா.

இந்த லட்சணங்களை உதாரணத்தோடு பொருத்தி பார்த்தால் நமக்கு விளங்கும். முதல் லட்சணம் கயிறு இருக்கிறது அதில் பாம்பு தோன்றுகிறது. இந்த கயிறு பாம்பாக தோன்றுவதற்கு முன்பும், பாம்பாக தோற்றமளித்து கொண்டிருக்கும் பொழுதும், பாம்பு தோற்றத்திலிருந்து போன பிறகும் இந்த கயிறு இருக்கும். பாம்பு என்ற திருஷ்டியின் அடிப்படையில் இந்த கயிறு மூன்றுகாலங்களிலும் இருப்பதால் இந்த கயிறை ‘ஸத்’ என்று கொள்ளலாம். அடுத்து இரண்டாவது லட்சணம் பாம்பினுடைய துணையில்லாமலேயே இந்த கயிறுக்கு இருப்பு தன்மை உடையதால் இது சுதந்திரமாக இருக்கிறது. ஆகையால் இந்த கயிறை ‘ஸத்’ என்று கொள்ளலாம்.

இனி பாம்பு விஷயத்தில், இந்த பாம்பு மூன்று காலங்களில் இது கிடையாது. கயிறு கயிறாக காட்சியளிக்கும் காலத்தில் பாம்பு இல்லை, அறியாமையால் நிகழ்காலத்தில் இந்த கயிறு பாம்பாக தோற்றமளிக்கிறது, பின்பு ஞானம் வந்து கயிறாக காட்சியளிக்கும் காலத்தில் பாம்பு இல்லை. ஆகவே இந்த பாம்பு நிகழ்காலத்தில் மட்டுமே இருக்கிறது. இது முதல் லட்சணம். அடுத்து சுதந்திரமாக இந்த பாம்பு காட்சியளிக்க முடியாது, கயிற்றை நீக்கி விட்டால் இந்த பாம்பு இல்லை. ஆகவே இந்த பாம்பினுடைய இருப்பு என்பது கயிறை சார்ந்து இருக்கிறது. இது இரண்டாவது லட்சணம். ஆகவே இந்த இரண்டு லட்சணங்களின் அடிப்படையில் இந்த பாம்பு ‘மித்யா’.

இதே லட்சணத்தை வேரொரு உதாரணத்தோடு பார்ப்போம், களிமண் இருக்கின்றது அதிலிருந்து பானையை உருவாக்குகிறோம். பானை, களிமண் இரண்டும் இருக்கிறது. இதில் பானை சத்தியமா, களிமண் சத்தியமா என்றால் விசாரம் செய்து பார்த்தால் களிமண் சத்தியம், பானை மித்யா என்று தெரியவரும். காரணம் களிமண் என்பது பானை உருவாவதற்கு முன்பும் இருந்தது, இந்த களிமண் தான் பானையாகவும் தோற்றமளிக்கிறது, பானை உடைந்து விட்டால் களிமண் தான் இருக்கிறது. ஆகவே களிமண் பானைக்கு முன்பாகவும் இருந்தது, பானை என்கிற நாம, ரூபமாகவும் இந்த களிமண் இருக்கிறது, பின் பானை உடைந்த பின்பும் களிமண் தான் இருக்கிறது ஆகவே பானை என்ற திருஷ்டியில் மூன்று காலங்களிலும் களிமண் இருப்பதால் இந்த களிமண் ‘ஸத்’ அல்லது ‘ஸத்தியம்’ என்றுக் கொள்ளப்படுகிறது. பானை விஷயத்தில் பானை என்கிற நாம ரூபம் வர்த்தமான(நிகழ் காலத்தில்) காலத்தில் மட்டும் இருப்பதால் அது ‘மித்யா’.

பானை என்பது களிமண்ணை சார்ந்து இருக்கிறது. களிமண் இல்லை யென்றால் பானை என்கிற நாம, ரூபம் இல்லை ஆகையால் பானை ஒன்றை சார்ந்து இருப்பதால் அது மித்யா. களிமண் பானையை சார்ந்து இல்லை, பானை இல்லையென்றாலும் சுதந்திரமாக இருப்பதால் களிமண் ஸத்தியம்.

இந்த விசாரத்தினுடைய கடைசி முடிவு என்பது; காரணம் ஸத்தியம், காரியம் மித்யா. இந்த உண்மை தெரியாததால் காரியம் ஸத்தியம் என்று நினைப்பது தான் சம்சாரம்.

மேலே உள்ள உதாரணத்தோடு கூடிய விளக்கம் நம்முடைய தத்துவதிற்கு பொருத்தி விளக்கம் பார்ப்போம்.

இந்த ஸ்லோகத்தை நாம் எப்படி அறிமுகப்படுத்தினோம் ஆத்மா ஸத்தியம், அநாத்மா மித்யா. ஒவ்வொரு ஜீவனையும் இரண்டு அம்சமாக பிரித்து அதில் ஒரு அம்சம் ஆத்மா என்றும், இனியொரு அம்சம் அநாத்மா என்றும் ஆத்மாவின் லட்சணம் என்னவென்றால் எது அறிகின்றதோ, த்ரிக்(அறிவு) சொரூபமோ அது ஆத்மா, எது அறியப்படும் பொருளோ (திருஷ்யம்) அது அநாத்மா என்றும், இந்த ஆத்மா அறிவு சொரூபம், அநாத்மா ஜட சொரூபம்(உடல்) என்றும் ஏற்கனவே நாம் பார்த்திருக்கிறோம். மூன்று உடல் அறிமுகப்படுத்தினோம், காரண சரீரம், சூஷ்ம சரீரம், ஸ்தூல சரீரம். இந்த ஆத்மா, அநாத்மா என்ற இரண்டில் எது ஸத்தியம், எது மித்யா என்ற கேள்வி வரும் போது பகவான் ஆத்மா ஸத்தியம், அநாத்மா மித்யா என்று உபதேசம் செய்கிறார். ஆத்ம, அநாத்மா விவேகத்தில் முக்கியமான முடிவான விவேகம் ஆத்மா ஸத்தியம், அநாதமா மித்யா. எப்படி என்று இந்த இரண்டு தத்துவங்களையும் சேர்ந்து பார்ப்போம். ஆத்மாவுக்கு நாம் கொடுத்த லட்சணம் அறிவு சொரூபம். அறிவது ஆத்மா. இப்போது நாம் எதை நிரூப்பிக்க வேண்டும் என்றால் மூன்று காலத்திலும் ஆத்மா இருக்கின்றது என்பதை. மூன்று காலத்தில் என்றால் நாம் இறந்ததற்கு பிறகு ஆத்மா இருந்ததா, அல்லது இந்த உடல் வருவதற்கு முன்பு நான்(ஆத்மா) இருந்தேனா என்று அனுபவத்தில் நிரூபிக்க முடியாது. ஆனால் நம்முடைய பிறப்பிற்கு பிறகு இந்த வாழ்க்கை வாழ்ந்து வருகையில் எல்லா காலத்தி லும் ஆத்மா இருக்கின்றதா? எல்லா அனுபவத்திலும் ஆத்மா மாறாமல் இருக்குமா? என்ற அளவு பார்க்க முடியும். அதற்கு ‘அவஸ்தா த்ரைய  விவேகம்’ என்று பெயர். அவஸ்தா த்ரைய விவேகம் என்றால் எல்லா அனுபவங்களிலும் இந்த ஆத்மா என்கிற இருத்தலை உணர்ந்து கொள்வது ஆகும். இப்பொழுது விழித்து கொண்டிருக்கும் நிலையில் நான் அறிபவன் என்கிற ஆத்மா இருக்கின்றது என்பதில் சந்தேகம் இல்லை. பிறகு இந்த உடலாகிய ஸ்தூல சரீரம் அதையும் இருக்கின்றது என்று சொல்கிறோம் காரணம் அதுவும் அனுபவிக்கப்படுகிறது, இருக்கின்றது. இந்த உடலும் இருக்கிறது, அனுபவிக்கப்படுகிறது. இதை அனுபவிக்கின்ற நானும் இருக்கின்றேன் அப்படியிருக்க இந்த ஆத்மா மட்டும் எப்படி ஸத்தியமாகும், இந்த உடல் மித்யாவாகும் என்றால் அடுத்த நிலைக்கு போக வேண்டும் கனவு நிலைக்கு. கனவு நிலைக்கு நாம் சென்றால் கனவை காண்கின்ற நாம் இருக்கின்றோம், இந்த உடலான ஸ்தூல சரீரம் உதறப்பட்டு விடுகின்றது. அதனால் உறங்கிய பிறகு நமது உடலை யாராவது நிந்தித்தாலோ அல்லது இந்த உடல் எந்த இடத்தில் இருக்கிறது என்பதோ தெரியாது ஆகவே இந்த உடல் அபிமானம் இல்லாமல் இந்த உடல் அனுபவத்தில் இல்லாத போதும் கூட உடல் நிஷேதம் செய்ததற்கு பிறகும் கூட நான் இருக்கின்றேன் அதில் சந்தேகமில்லை அடுத்து ஆழ்ந்த உறக்கத்தில் சென்றால் நம்முடைய மனமும் ஒடுங்கி விடுகிறது அப்பொழுதும் நான் இருக்கின்றேன் இவ்விதம் ஆழ்ந்த உறக்கம், கனவுநிலை, விழிப்பு நிலை ஆகிய மூன்று நிலையிலும் நான் இருக்கின்றேன் ஆகவே எல்லா காலத்திலும், எல்லா அனுபவத்திலும் இருக்கின்ற நான் நித்தியம், உடல்கள் வந்து செல்வதனால் அவைகள் அநித்தியமானது, ஆனால் நான் எல்லா அனுபவத்திலும் இருக்கின்றேன். இனியொரு கருத்து  ஆத்மா நிர்விகாரம் என்றும் பகவான் சொன்னார். இந்த உடலில் குழந்தை பருவம், வாலிப பருவம், வயோதிகம் என்று வந்தால் இந்த ஆத்மா மாறாமல் இருக்கின்றது. அது எப்படி தெரிகிறது என்றால் எழுபது வயதான ஒருவர் இருபது வயதில் எதை அனுபவித்தாரோ அதே நான் தான் எழுபது வயதிலும் இருக்கிற காரணத்தினால் தான் எல்லா நிகழ்வுகளையும் ஞாபகப்படுத்தி சொல்கிறார் ஆகவே அந்த அறிபவனாகிய ஆத்மாவிற்கு எந்த மாறுதலும் கிடையாது. ஆனால் இந்த உடல் மாறிக் கொண்டே வருகிறது. நாம் எப்படி மித்யா என்ற கருத்துக்கு செல்கிறோமென்றால் முதலில் இந்த உடல் எல்லா காலத்திலும் இல்லை என்பதை புரிந்துக் கொண்டு அடுத்ததாக இந்த உடல் மாற்றத்தை அடைகின்றது என்பதையும் புரிந்துக் கொள்ள வேண்டும். ஒரு பொருள் மாற்றத்தை அடைகிறது என்ற சொல்லினுடைய அர்த்தம் என்னவென்றால் ஒரு பொருள் முன் அவ்விதம் இல்லை இப்பொழுது அவ்விதம் இருக்கிறது இதற்கு பிறகு அவ்விதம் இருக்க போவது இல்லை. சுருக்கமாக சொன்னால் இல்லாதது இப்பொழுது இருக்கிறது மீண்டும் இவ்வாறு இருக்க போவது இல்லை. நாம் ஸத்தியத்திற்கு என்ன லட்சணம் பார்த்தோம் எது மூன்று காலத்திலும் மாறாமல் இருக்குமோ அது ஸத்தியம். ஆனால் இந்த உடல் மாற்றத்தை அடைவதனால் மூன்று காலத்திலும் அப்படியே இருக்கிறது என்று சொல்ல முடியாது. ஆகவே இந்த உடல் மாறுகின்ற காரணத்தினால் இந்த உடல் மித்யா, இந்த மனம் மித்யா. மித்யாவின் லட்சணம் என்ன வென்று பார்த்தோம் எது மூன்று காலத்திலும் இல்லாமல் நிகழ்காலத்தில் மட்டும் இருக்குமோ அது மித்யா. எது மாற்றத்தை அடைகின்றதோ அது மூன்று காலத்திலும் தொடர்ந்து இப்போது இருப்பது போல் இருப்பதில்லை மாறிக்கொண்டே இருக்கும், எது மாற்றத்தை அடைகின்றதோ அது மித்யா. ஆகவே உடல் மித்யா. இந்த மாற்றத்தை கவனிப்பவன் மாறாமல் இருப்ப தனால் ஆத்மா ஸத்தியம் என்பது முதல் கருத்து. இனி இரண்டாவதாக ஆத்மாவை சார்ந்து இந்த உடல் இருக்கிறது, இந்த உடல் பரதந்திரம், ஆத்மா சுதந்திரம். இதை பல கோணத்தில் விளக்கலாம். இங்கு நாம் அவஸ்தா திரயத்தை வைத்தே விளக்கலாம். ஸ்தூல சரீரத்தின் உதவி இல்லாமல் கூட சூஷ்ம சரீரத்தில் அபிமானம் வைத்து நான் இருக்கிறேன். நம்முடைய மனம் ஒடுங்கியதற்கு பிறகும் கூட நான் இருக்கிறேன். ஆனால் என்னுடைய துணை இல்லாமல் சுதந்திரமாக சூஷ்ம சரீரமோ, ஸ்தூல சரீரமோ கிடையாது. ஆகவே நான் இருந்தால் நான் எப்போது அபிமானம் வைக்கிறேனோ அப்போது உடல் செயல்படுகிறது. நான் அபிமானத்தை எடுத்து விட்டால் உடல் செயல்பாடு கிடையாது. இந்த உடலில் இருக்கிற அபிமானத்தை நீக்கி விட்டேனென்றால் இந்த உடல் மற்ற பொருட்களை போல் ஜடமானது. இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால் உடல் செயல்பட என்னுடைய அதாவது நான் என்பவனுடைய அபிமானம் தேவை ஆனால் உடல் இல்லாமலே நான் என்ற இருத்தல் இருக்க முடியும், ஆழ்ந்த உறக்கத்திலே எந்த உடலினுடைய துணையில்லாமல் நான் இருக்கின்றேன், நான் இருந்தேன். ஆகவே ஆத்மாவானது சுதந்திரம், ஆத்மா மூன்று காலத்திலும் இருப்பதனால் அது ஸத்தியம், இந்த உடலானது விகாரம் அடைவதனால் மாறிக் கொண்டே வருவதனால் ஒன்றை சார்ந்து இருப்பதனால் அது மித்யா.

நாஸதோ வித்யதே பாவோ நபாவோ வித்யதே ஸத: |

இங்கு பகவான் நாஸதோ வித்யதே பாவோ: என்று சொல்லியிருக்கின்றார். அஸத: பாவா: ந வித்யதே என்றால் இல்லாமைக்கு இருப்பு கிடையாது என்று பார்த்தோம். இதனுடைய பொருள் ‘இல்லாதது இல்லை’. இல்லாதது இல்லை என்று யாராவது சொல்ல வேண்டியது இல்லை, அது உபதேசமும் இல்லை அப்படியென்றால் பகவான் என்ன சொல்ல வருகிறார், இங்கு அஸத: என்றால் நிகழ்காலத்தில் மட்டும் இருப்பது என்று பொருள். பாவ: என்றால் எப்பொழுதும் இருப்பது என்பது பொருள். ந வித்யதே என்றால் இல்லை என்று பொருள். மூன்று காலத்தில் நிகழ்காலத்தில் மட்டும் ஒரு பொருள் இருந்தால் எப்பொழுதும் இருத்தல் என்பது கிடையாது. இதை பகவான் எதற்காக சொல்கிறார் என்றால் இந்த இடத்தில் தான் நமக்கு மோஹம் இருக்கிறது. என்ன மோஹம் என்றால் நிகழ்காலத்தில் ஒரு பொருளை பார்த்தோம் என்றால் நாம் என்ன முடிவு பண்ணுகிறோம் அது எப்பொழுதும் இருக்கிறது என்று முடிவு பண்ணுகிறோம். இந்த உலகத்தை பார்க்கிறோம், இந்த உடலை பார்க்கிறோம் இது நிழ்காலம். இந்த நிகழ்காலம் அனுபவத்தில் இருக்கிறது, இந்த அனுபவம் தொடர்ந்து இப்படியே இருக்கும் என்று நாம் நினைத்து கொண்டிருக்கிறோம், இப்படி நினைத்து கொண்டு இருப்பது எப்படி தெரிகிறதென்றால் நமது நடத்தை, செய்கை எல்லாம் அந்த எண்ணத்தை பிரதலிப்பதாகவே இருப்பதை காணலாம். உதாரணமாக பணத்தை சேகரித்து வைக்கிறோம், ஒன்றிற்கு மேல் பல ஆடம்பர வீடுகளை கட்டுகிறோம் இப்படி பல விஷயங்களை செய்து கொண்டிருக்கிறோம். காரணம் நாம் பார்க்கின்ற இந்த உலகம் இப்படியே இருந்து கொண்டு இருக்கும், இந்த உடலும் இப்படியே இருந்து கொண்டிருக்கும் என்ற நினைப்பே. இந்த உடலை நாம் இல்லை, பொய் என்றால் நாம் ஏற்றுக் கொள்வோமா? ஏற்று கொள்ள மாட்டோம் காரணம் இவை அனுபவத்தில் இருக்கிறது. இந்த அனுபவத்தை அல்லது இந்த எண்ணத்தை பகவான் வெறும் தோற்றம் என்று நம்மை உபதேசிக்கிறார். பகவான் கூறுகிறார் நிகழ்கால அனுபவத்தில் இருக்கிறது என்று எதை நினைக்கின்றாயோ அது வெறும் தோற்றம் மட்டுமே. அஸத: என்றால் வெறும் தோற்றமாக மட்டும் இருக்கிறது என்று பொருள். நிகழ்காலத்தில் மட்டும் இருப்பதை நீ முழுமையாக இருப்பதாக எண்ணிவிடாதே, நிகழ் காலத்தில் மட்டும் ஒரு பொருள் இருந்தால் அது மித்யா. அதற்கு ஸத்தியம் என்ற தகுதி இல்லை. மூன்று காலத்திலும் இல்லாததை இல்லை என்று பகவான் சொல்ல வில்லை. அது இல்லை என்று பகவான் சொல்லாமலே நமக்கு தெரியும். பிறகு என்ன உபதேசம் பண்ணுகிறார் நிகழ்காலத்தில் மட்டும் இருப்பது இல்லாததற்கு சமம், காரணம் அது மித்யா. நாம் பார்த்து கொண்டிருக்கும் போதே மாறி கொண்டே இருக்கும் இந்த உலகம் அது இருந்து கொண்டே இருப்பது போல் தெரிகிறது இது தான் பகவானுடைய மாயை. இந்த உலகம் இல்லை வெறும் தோற்றம் என்கிற அறிவை கொடுத்திருந்தால் இந்த சம்சாரமும் கிடையாது, உலக சக்கிரமும் ஒடாது. தண்ணீர் ஓடி கொண்டே இருக்கின்றது. அதை பார்த்தால் எப்படி தெரிகிறது தண்ணீர் ஒடுவது போல் தெரியாமல் தண்ணீர் ஒரே இடத்த்தில் இருப்பது போல் தெரிகிறது. அது போல் ஒன்று ரொம்ப வேகமாக மாறிகொண்டே இருப்பது நமக்கு அப்படியே இருப்பது போல் தோற்றமளிக்கும், அதேபோல் வேகமாக ஓடி கொண்டு ருப்பது அல்லது சுற்றி கொண்டிருப்பது நமக்கு அந்த பொருள் அசையாதது போல் தோற்றமளிக்கும் அதுபோல் இந்த பிரபஞ்சம் மாறி கொண்டே வருகிறது ஆனால் அது அப்படியே இருப்பது போல் நமக்கு தெரிகிறது. எங்கே உபதேசம் பண்ண வேண்டும் என்றால் எந்த இடத்தில் உண்மை யிலேயே ஒரு பொருள் இல்லாமல் ஆனால் இருப்பது போல் பாவனை வருகிறதோ அங்கு தான் உபதேசம் பண்ண வேண்டும். கயிறு இருக்கிறது அதை ஒருவர் பாம்பாக பார்த்து கொண்டிருக்கும் போது தான் உபதேசம் பண்ணணும். காரணம் அவன் அனுபவத்தில் இருக்கிறதை ஸத்தியமாக நினைக்கின்றான். எனவே பகவான் உபதேசம் பண்ணுகிறார். ‘அஸத: பாவ: ந வித்யதே’ என்றால் மூன்று காலத்தில் நிகழ்காலத்தில் மட்டும் இருப்பது அல்லது உன்னுடைய அனுபவத்தில் மட்டும் தோன்றுகிறதோ அதற்கு உண்மையில் இருப்பு என்பது கிடையாது அது மித்யா. இங்கு அனுபவத்தின் அடிப்படையில் நாம் ஒரு முடிவு எடுப்பதை தவிர்த்து அறிவு பூர்வமான முடிவை வலியுறுத்துகிறார். உதாரணமாக சூரியனின் உதயம் அனுபவத்தில் உதிப்பது போல் தேன்றினாலும் உண்மையில் உதிப்பது போன்ற அது ஒரு தோற்றமே என்று அறிவு நமக்கு புகட்டுகிறது, அடுத்து கானல் நீர் அது அனுபவத்திற்கு நீர் இருப்பது நமக்கு தெரிந்தாலும் அறிவு நமக்கு அது வரண்ட பூமி நீர் வெறும் தோற்றமே என்ற உண்மையை புகட்டுகிறது.

இந்த ஸ்லோகத்தின் முதல் வரியே முழு வேதாந்தம். இந்த முதல் வரியில் முதல் பகுதியில் ஜகத் மித்யா என்ற கருத்தை சொல்லி முடித்து விட்டார். அடுத்த பகுதிக்கு வருகிறார் ‘நபாவோ வித்யதே ஸத:’ இதற்கு மொழி பெயர்ப்பு  ‘இருத்தலுக்கு இல்லாமை என்பது இல்லை’. ஸத: என்பது ‘இருத்தலுக்கு’ (மூன்று காலத்திலும் இருப்பது) என்று பொருள். மூன்று காலத்திலும் இருக்கும் ஒன்று அது என்றைக்கும் இல்லாமல் போகாது. அது அனுபவத்துக்கு வருமோ, வராமல் போகுமோ அது மூன்று காலத்திலும் இருக்கத் தான் செய்யும். இங்கு ஒரு சந்தேகம் எழுகிறது, மூன்று காலத்திலும் இருக்கும் ஒரு வஸ்து அனுபவத்தில் எப்படி இல்லாமல் போகும் என்றால் கயிறு இருக்கிறது அந்த கயிற்றில் ஒருவன் பாம்பை பார்க்கிறான் பாம்பை பார்க்கும் பொழுது கயிறு இல்லாமல் போய் விடும். கயிற்றினுடைய திருஷ்டி இல்லாமல் போய் விடும். பிறகு ஞானம் வந்த உடன் கயிறு வந்து விடும். பாம்பை பார்க்கும் போது கயிறு அங்கு இல்லை, பாம்பு போனதற்கு பிறகு கயிறு வந்திருக்கிறது. கயிற்றினுடைய இருப்பும் கூட மூன்று காலத்திலும் இருந்தது என்று சொன்னால் பாம்பை பார்த்து கொண்டிருக்கும் காலத்தில் கயிறு இல்லையே என்றால் பாம்பை பார்த்து கொண்டிருக்கும் பொழுது கயறு உன்னுடைய அனுபவத்திற்கு இல்லை என்பதால் கயறு இல்லை என்று சொல்ல முடியாது. ஒரு பொருளின் மீது இனியொரு பொருளை ஏற்றி வைத்தால் அந்த அதிஷ்டானம் தெரியாமல் இருக்கலாம். ஆனால் எப்பொழுதும் இருப்பது அனுபவத்தில் தெரியாமல் இருந்தாலும் கூட அதிஷ்டானம் என்பது இருக்கத்தான் செய்யும். இந்த ஆத்மா அல்லது பிரம்மத்தின் மீது இந்த ஜகத்தையோ, அல்லது இந்த சரீரத்தையோ ஏற்றி வைத்து பிரம்மம் என்ற ஒன்று தெரியவில்லையே என்று சொல்கிற காலத்திலும், ஞானம் வந்து பிரம்மத்தை உணர்கிற காலத்திலும் இருக்கின்ற பிரம்மம் இருக்கத்தான் செய்யும் எல்லா காலத்திலும் இருக்கின்ற பிரம்மத்திற்கு இல்லாமை என்பது கிடையவே கிடையாது. இந்த ஸ்லோகத்தின் முதல் வரியின் இரண்டாவது பகுதியில் ஸத: என்பதற்கு பொருள் ஆத்மா அல்லது பிரம்மம் என்று புரிந்து கொள்வோம். ஆத்மா ‘அபாவ: ந வித்யதே’ என்பது ஆத்மாவுக்கு இல்லாமை என்பது கிடையாது. இந்த ஸ்லோகத்தின் முதல் வரியின் சாரம் பிரம்மம் எப்பொழுதும் இருக்கிறது ஆகையால் பிரம்மம் சத்தியம், ஜகத் அஸத் என்று சொல்லி விடலாம் ஆனால் நிகழ்காலத்தில் அனுபவத்தில் இருப்பதால் அஸத் என்று சொல்ல முடியாது ஆகையால் ஜகத் மித்யா.

‘பிரம்மம் ஸத்தியம், ஜகத் மித்யா’

இனி இந்த ஸ்லோகத்தின் இரண்டாவது வரி

‘உபயோரபி த்ருஷ்டோSந்தஸ்த்வநயோஸ்தத்வதர்ஸிபி:’

இந்த இரண்டினுடைய நிச்சயமானது தத்துவத்தை அறிந்தவர்களால் கண்டறியப்பட்டது.

இத்துடன் இந்த ஸ்லோகத்தின் விளக்கம் முடிவடைந்தது.

இந்த ஸ்லோகத்திற்கு ஶ்ரீசங்கராச்சாரி அவர்கள் ஒரு விளக்கம் எழுதி உள்ளார் அந்த விளக்கத்தில் முக்கியமான ஒரு பகுதி மட்டும் சுருக்கமாக பார்ப்போம்.

ஆச்சாரியார் அவர்கள் கூறுகிறார். இந்த பிரபஞ்சம் மட்டும் மித்யா அல்ல, அதற்கு காரணமான அனைத்தும் மித்யா என்று கூறுகிறார். அதற்கு பூர்வபட்சம் (எதிர்வாதம் புரிபவர்) வந்து அனைத்தும் மித்யா என்றால் கடைசியில் மிஞ்சுவது ஒன்றும் இல்லாத சூன்யம் தான் என்று கூறினான். இதற்கு நம் அனுபவத்தை வைத்து பதிலளிக்கிறார். நம் அனுபவத்தில் ஒரு பொருளைப் பார்த்தால் இரண்டு விதமான உணர்வு அல்லது புத்தியானது தோன்றுகிறது. ஒன்று அந்த பொருளின் ‘இருத்தல்’ ஆகிய இருக்கிறது என்ற அறிவு, பிறகு அந்த பொருளைப் பற்றிய அறிவு. ஒரு பொருளை பார்க்கும் பொழுது உதாரணமாக ஒரு புத்தகத்தை பார்க்கிறோம் அந்த புத்தகம் இருக்கிறது என்று நம் மனதில் தோன்றுகிற இந்த விருத்தியை நாம் இரண்டு அம்சமாக பிரிக்கின்றோம். ஒரு அம்சம் ‘இருத்தல்’ இனியொரு அம்சம் அந்த புத்தகம் என்கிற ‘விஷய பகுதி’. சமஸ்கிருதத்தில் ‘புத்தகம் அஸ்தி’  என்பர். அஸ்தி என்றால் இருக்கிறது என்று பொருள். ஆகவே புத்தகத்தைப் பற்றிய விருத்தி மனதில் வரும் பொழுது ‘புத்தகத்தை பற்றிய ஒரு அறிவு’ அந்த புத்தகம் இருக்கிறது எனகிற ‘இருத்தல்’ என்கிற மற்றொரு அறிவு ஏற்படுகிறது. அடுத்து புத்தகத்தை விட்டு விட்டு பேனாவை பார்த்தோம் என்றால் பேனா என்கிற ஒரு நாம ரூபம் ஒன்று அது இருத்தல் என்கிற மற்றொரு அறிவு. பேனா விட்டு கடிகாரத்தை பார்க்கிறோம் கடிகாரம் என்கிற பொருள் அறிவு ஒன்று அது இருத்தல் என்கிற மற்றொரு அறிவு. இந்த ‘இரண்டு அறிவு விருத்தியை’ ஆச்சாரியார் ஒன்று ‘ஸத் புத்தி’ என்றும், மற்றொன்று ‘அஸத் புத்தி’ என்றும் இரண்டு அம்சமாக கூறுகிறார்.         ‘ஸத் புத்தி’ என்பது எல்லா விருத்தியிலும் இருத்தல், இருத்தல் என்கிற உணர்வானது அல்லது அறிவானது தொடர்ந்து இருக்கிறது. ‘அஸத் புத்தி’ என்பது எது இருக்கிறது என்று சொல்கிறோமோ அது மாறி கொண்டே வருகிறது. ஆகவே நம்முடைய அறிவில் மாறி கொண்டே வருகிற அம்சத்தை ‘அஸத் புத்தி’ என்றும், மாறாத அம்சத்தை ‘ஸத் புத்தி’ என்றும் சொல்கின்றார். அனுபவத்தில் என்ன தெரிகிறது ‘இருத்தல்’ என்பது மாறாமல் இருக்கின்றது அதை தான் ‘ஸத்’ என்று சொல்கின்றோம். அது தான் “பிரம்மம்”, அதுதான் “ஆத்மா”. இவ்விதம் பதில் சொல்கின்றார்.

சூன்யம் என்பதை எப்படி நிராகரணம் செய்கின்றார், ஒன்றுமே இல்லை சூன்யம் தான் எஞ்சி நிற்கிறது என்பதற்கு பதில் எப்படி சொல்கின்றார் என்றால் நாம் எதைப் பார்த்தாலும் நமக்கு வருகின்ற எல்லா அறிவிலும் இருத்தல் என்பது தொடர்ந்து வருவதால் அந்த இருத்தல் என்பது இருக்கின்றது, அந்த இருத்தல் என்பது இல்லை என்று சொல்ல முடியாது.  அறியாமை இருக்கின்றது என்று சொன்னால் கூட அறியாமை என்ற ஒன்று, இருத்தல் என்ற ஒன்று என்ற இரண்டு அம்சம் இருக்கிறது. அறிவு இருக்கிறது என்று சொன்னால் கூட அறிவு என்ற ஒன்று, இருத்தல் என்று ஒன்று என்ற இரண்டு அம்சம் இருக்கிறது. இந்த இரண்டு அம்சத்தில் ஒரு அம்சமான பொருளை பற்றியதான விஷய அம்சம் மாறி கொண்டே இருக்கிறது மற்றொரு அம்சமான ஸத் அம்சம் விஷய அம்சம் மாறினாலும் இருத்தல் என்பது மாறாமல் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது. ஆகவே பொருளை பற்றியதான அஸத் புத்தி மாறி கொண்டே இருக்கும் ஒரு அம்சம் அது ‘மித்யா’, இனியொரு அம்சமான ‘இருத்தல்’ எப்பொழுதும் மாற்றமின்றி தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும் ஸத் அம்சம் அது ‘ஸத்தியம்’ அது ‘பிரம்மம்’ அது ‘ஆத்மா’  என்று விளக்கி சூன்யம் என்பதை நிராகரித்து ‘இருத்தல்’ என்பது எப்பொழுதும் இருக்கிறது என்று நிலை நாட்டுகிறார்.

No classes added yet.

Our Visitor

000794
Users Today : 2