देहिनोऽस्मिन्यथा देहे कौमारं यौवनं जरा ।
तथा देहान्तरप्राप्तिर्धीरस्तत्र न मुहयति ॥ १३ ॥
தேஹினோSஸ்மின்யதா தேஹே கெளமாரம் யெளவனம் ஜரா |
ததா தேஹாந்தரப்ராப்திர் தீரஸ்தத்ர ந முஹ்யதி || 13 ||
யதா – எப்படி; தேஹின: – தேகத்தை உடைய ஆத்மாவுக்கு; அஸ்மின் தேஹே – இந்த தேகத்தில்; கெளமாரம் – குழந்தைப்பருவம்; யெளவனம் – வாலிப பருவம்; ஜரா – முதுமையும் (வருகின்றதோ) ததா – அவ்வாறே: தேஹாந்தரப்ராப்திர் – வேறு உடலும் வந்து சேர்கிறது; தத்ர – அவ்விஷயத்தில்; தீர: – தீர புருஷன் அல்லது ஞானி; ந முஹ்யதி – கலங்குவதில்லை.
ஒரு ஜீவனுக்கு குழந்தைபருவம், வாலிப பருவம், முதுமை வரும் போதெல்லாம், உண்மையில் ஆத்மாவில் ஒரு மாறுதலும் ஏற்படாமல் சூல(பரு) உடலில்தான் அம்மாறுதல்கள் ஏற்படுகின்றனவோ, அதுபோல் ஒரு உடலிலிருந்து மறு உடலுக்கு போவதெல்லாம் ஆத்மாவுக்கு ஏற்படுவதல்ல சூஷ்ம சரீரத்திற்கு தான். இந்த உண்மையை அறியாத மக்கள் வேறு உடலை அடைவதில் வருத்தப்படுகிறார்கள்; தீரர்கள்(ஞானிகள்) வருத்தப்படு வதில்லை. ஏனெனில், அவர்களைப் பொறுத்தவரையில் ஆத்மாவுக்கும், உடலுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. ஆகவே நீ வருந்துவது உசிதமன்று என்று பகவான் உணர்த்துகிறார்.
விளக்கம்:
அநாத்மா, ஆத்மா என்ற இரண்டு சொற்கள் நம்மால் அறிமுகப்படுத்தபட்டன. ஆத்மா த்ரிக் அறிபவன், அநாத்மா த்ரிஷியம் அறியபடுபவது என்றும் பார்த்தோம். இந்த அநாத்மா மூன்று உடலகள் எனவும் பார்த்தோம். காரண சரீரம், சூஷ்ம சரீரம், சூலசரீரம். ஆகவே ஒவ்வொரு ஜீவனும் ஆத்ம, அநாத்மாவினுடைய கூறு. இந்த மூன்று உடலும், ஆத்மாவும் சேர்ந்து ஜீவன், மனிதன், அல்லது உயிரினம் என்று சொல்கிறோம். இந்த மூன்று உடலில் சூல சரீரம் என்பது நாம் பார்த்து அனுபவிக்கும் இந்த உடல். சூஷ்ம சரீரம் என்பது நம்முடைய மனம். இந்த சூஷ்ம சரீரம் கண்ணுக்கு தெரியாமல் சூஷ்மமாக இருப்பதாலேயே அதற்கு சூஷ்ம சரீரம் என்று பெயர். இயற்கையிலேயே ஒரு நியதி இருக்கிறது ஒரு பொருள் சூஷ்மமாக மாறுகின்றதோ, அல்லது சூஷ்மமாக இருக்கின்றதோ அது பிரதிபிம்பம் செய்யும், பிரதிபிம்பம் செய்ய அதற்கு சக்தி இருக்கிறது. உதாரணமாக சப்தம் இருக்கிறது அது மிகவும் சூஷ்மமான ஒன்று. அது எதிரொலியாக பிரதிபலிக்கும். சப்தத்தை விட சூஷ்மமான ஒளியும் (வெளிச்சம்) பிரதிபலிக்கும். ஆகவே ஒரு வஸ்து அல்லது பொருள் சூஷ்மமாக ஆக அது தனக்கு சாதகமான சூழலில் பிரதிபலிக்கும் என்பது நியதி. சூரிய ஒளியை எடுத்துக் கொள்வோம் அந்த ஒளியானது எத்தனையோ இடத்தில் வீழ்கின்றது, பாறையில் வீழ்கின்றது, தண்ணீரில் வீழ்கின்றது, கண்ணாடியில் வீழ்கின்றது. பாறையில் பட்ட வெளிச்சம் ஒரளவு தான் பிரதிபலிக்கும், தண்ணீரில் அதை விட தெளிவாக இருக்கும், தூய்மையான கண்ணாடியில் அந்த சூரியனையே பார்க்கலாம்.
சூரியனுடைய சூஷ்மமான ஒளி கதிர்களை தூய்மையான கண்ணாடியானது தனக்குள் அதை பிரகாசப்படுத்தி காட்டும். இதைபோல ஆத்மாவிடம் சில தத்துவங்கள் இருக்கின்றது. ஆத்மாவினுடைய சொரூபம் ‘நித்தியம்’. ‘நித்தியம்’ என்பதை வேறு வார்த்தையில் சொன்னால் ‘ஸத்’ என்று சொல்லலாம். ஸத் என்றால் எப்பொழுதும் இருப்பது. மேலும் ஆத்மா த்ரிக் சொரூபம் என்றும் பார்த்தோம். ‘த்ரிக்’ என்றால் ‘அறிவது’ ஆகவே எது அறிய கூடியதாக இருக்குமோ அது அறிவு சொரூபமோ, ஞான சொரூபமோ, சைதன்ய சொரூபமோவாகத் தான் இருக்கும். ஆகவே ஆத்மாவிற்கு அறிவு, ஞானம் என்பது சொரூபம். இப்பொழுது ஆத்மாவின் அறிவு, ஞானம் என்ற தன்மையானது சூஷ்மமான மனதில் பிரதிபிம்பம் செய்யப்படுகிறது. நம்முடைய உடல் என்பது சூலமான ஜடபொருள், சூலமான ஜட பொருள் பாறை போல் கடின தன்மையாக இருந்தால் எதையும் பிரதிபலிக்காது. ஆனால் மனது ஜட பொருளாயினும் சூஷ்மமான, தூய்மையான, தெளிமை யான தன்மையால் ஆத்மாவினுடைய அறிவானது இந்த மனதில் பிரதி பிம்பிக்கிறது. இந்த ஆத்மாவினுடைய அறிவின் பிரதிபிம்பத்தால் ஜடமான மனம் ஜட தன்மையிலிருந்து மாறுபட்டு பிரகாசத்தை அடைகிறது. உதாரணத்தோடு பார்த்தால் இந்த விளக்கம் புரியும் ஒரு கண்ணாடி இருக்கிறது, சூரியன் இருக்கிறது இந்த சூரியன் கண்ணாடிக்குள் தெரிகிறது இப்பொழுது நாம் எத்தனை சூரியனை பார்க்கிறோம் என்றால் இரண்டு சூரியனை, ஒன்று உண்மையான பிம்ப சூரியன், இரண்டாவது கண்ணாடியில் தெரிகின்ற பிரதிபிம்ப சூரியன். பிரதிபிம்பம் தெரிகின்ற கண்ணாடி எப்படி இருக்கிறதென்றால் மிக, மிக பிரகாசமாக இருக்கும். இது போல் நம்முடைய மனம் ஆத்மாவினுடைய அறிவை வாங்கிக் கொண்டு பிரகாசத்தை அடைகிறது. ஆகையால் நம்முடைய மனம் அறியும் சக்தியை அடைகிறது. இந்த ஆத்மாவினுடைய அறிவை இந்த மனம் தனக்குள் பெறவில்லை யென்றால் இந்த மனம் ஜடமாக தான் இருக்கும். ஆகவே இந்த மனம் எல்லா காலத்திலும் ஆத்மாவினுடைய பிரதிபிம்பத்தை வைத்துக் கொண்டு இருக்கிறது. சமஸ்கிருதத்தில் ‘பிரதிபிம்பத்தை’ ‘ஆபாசம்’ என்று கூறுவர். தமிழில் ஆபாசம் என்றால் மோசமான சொல்லாக கருதப்படுகிறது ஆனால் சமஸ்கிருதத்தில் ஆபாசம் என்றால் ‘அதுபோல்’ என்று பொருள். ஆத்மாவினுடைய சொரூபம் ‘சித்’ சொரூபம் என்றும் பார்த்தோம். ஆகையால் மனதிலுள்ள ஆத்மாவின் பிரதிபிம்பத்தை சாஸ்த்திரம் ‘சித் ஆபாசம்’ என்று கூறுகிறது. இந்த சித்ஆபாசம் ‘சிதாபாசம்’ என்று எளிமையாக அறியப்படுகிறது.
அப்படியென்றால் ஜீவன் என்பது ஆத்மா+ சிதாபாசம் + மனம்(சூஷ்மசரீரம்) என்றாகிறது.
மரணம் என்று ஒரு ஜீவனுக்கு நடக்கும் போது என்னவாகிறது என்று பார்ப்போம். மரணம் என்று ஒரு அவஸ்தை வரும் போது நம்முடைய சூஷ்ம சரீரம் காரணசரீரத்துடன் (சூஷ்ம சரீரம் இப்போது அறிவோடு கூடிய சரீரமாகிறது காரணம் ஆத்மாவினுடைய அறிவை பிரதிபிம்பமாக பெற்று ஞானத்தோடு பிரகாசமடைந்துள்ளது.) இந்த சூலசரீரத்திடமிருந்து விடுதலை அடைந்து வேறு சரீரத்தை எடுத்து அதனுடைய பாவ, புண்ணியத்திற்கு தகுந்தாற்போல் வாழ்க்கையை தொடங்குகிறது. வேறு லோகத்திற்கும் செல்லலாம் அல்லது வேறு சரீரத்தையும் எடுக்கலாம். மரணத்தில் என்ன நடக்கிறது என்று எளிமையாக கூறுவதென்றால் சிதாபாசத்தோடு கூடிய மனம் தற்போதுள்ள சூல சரீரத்தை விட்டு வெளியேறுகிறது. வெளியேறுகிற தென்றால் அவரவர் பாவ புண்ணியத்திற்கேற்ற புதிய சரீரத்தை எடுக்கிறது. ஆத்மா எங்கிருக்கிறதென்றால் அது எல்லா இடத்திலும் இருக்கிறது அதில் ஒரு மாற்றமும் நடைபெறாது. பொதுவாக உயிர் என்று ஒரு சொல் இருக்கிறது. சதாரணமாக ஒருவர் இறந்து விட்டால் அவர் உயிர் போய் விட்டது என்று சொல்லுவோம். அந்த உயிர் என்பது தான் சிதாபாசமும், மனமும். இந்த உயிர் தான் ஒரு இடத்திலிருந்து இனியொரு இடத்திற்கு செல்வது. ஆத்மா எங்கும் செல்வதில்லை எல்லா இடத்திலும் இருக்கிறது. நமக்கு ஒரு சந்தேகம் எழுகிறது நமது ஜடமான உடலும் உணர்வு பூர்வமாக இருக்கிறதே அது எப்படி? எப்படியென்றால் நம் மனதிற்கு இயற்கையாகவே ஆத்மாவின் அறிவை வாங்க கூடிய சக்தி இருக்கிறது என்று பார்த்தோம், நம் உடலுக்கு அந்த சக்தி கிடையாது. ஆத்மாவின் அறிவை பெற்று அறிவு தன்மையாக இருக்கும் மனதானது, தான் தங்கியிருக்கும் உடலுக்கும் இந்த அறிவு தன்மையை கொடுக்கிறது அதனால் தான் ஜடமான உடல் அறிவு அல்லது உணர்வுபூர்வமாக இருக்கிறது. இந்த மனதானது உடலை விட்டு சென்றவுடன் இந்த உடலும் ஜடமாகிறது. இந்த உடல் சேதனமாக தெரிவதற்கு காரணம் ஆத்மாவல்ல, மனதிலிருக்கின்ற சிதாபாசம். ஆகவே இந்த மனமும், மனதிலிருக்கின்ற ஆத்மாவினுடைய பிரதிபிம்பமும் உடலுக்கு அறிவை கொடுக்கின்றது, அது உடலை விட்டு செல்வது தான் மரணம். பகவான் கூறுகிறார் இந்த விதமான எல்லா அவஸ்தைகள் நடக்கும் போது ஆத்மா என்பது எந்த மாறுதலும் இல்லாமல் இருக்கின்றது ஆகவே ஆத்மா நிர்விகாரம், எது விகாரம் அடையாதோ அது நித்யம். இந்த பதிமூன்றாவது ஸ்லோகம் நிர்விகாரம் என்ற கருத்துக்கு எடுத்து கொண்டாலும் ஆத்மா நித்யம் என்பதற்கான விளக்கமாகவும் அமைந்து உள்ளது.
No classes added yet.






Users Today : 3