Poornayogam

Sanatana Dharma – The Eternal Way of Life

Home » Sreemad Bhagavatgita Lesson – 02 Sankiya yogam – Tamil » ஸ்லோகம் – 11

ஸ்லோகம் – 11

श्रीभगवानुवाच

अशोच्यानन्वंशोचस्त्वं प्रज्ञावादांश्च भाषसे ।

गतासूनगतासुंश्च नानुशोचन्ति पण्डिताः ॥ ११॥

ஸ்ரீபகவாநுவாச

அஸோச்யாநந்வஸோசஸ்த்வம் ப்ரஜ்ஞாவாதம்ஸ்ச பாஷஸே

கதாஸூநக தாஸூம்ஸ்ச நாநுஸோசந்தி பண்டிதா: || 11 ||

ஶ்ரீபகவாநுவாச – ஶ்ரீபகவான் கூறினார்; த்வம் – நீ: அஸோச்யாந் – துக்கப் படத்தகாத மனிதர்களின் பொருட்டு; அந்வஸோச – வருந்துகிறாய்;            ச – மேலும்; ப்ரஜ்ஞாவாதாந் – ஞானியர்களின் சொற்களை போன்று;                   பாஷஸே – பேசுகிறாய்(ஆனால்); கதாஸூந் – உயிர்போனவர்களுக்காகவும்; அகதாஸூந் ச – உயிர் போகாதவர்களுக்காகவும்;                  பண்டிதா: -ஆத்மஞானிகள்; ந அனுஸோசந்தி – வருந்துவதில்லை.

ஶ்ரீபகவான்கூறினார்;  நீ துக்கப்படாத மனிதர்களின் பொருட்டு வருந்துகிறாய். மேலும் ஞானியர்களை போன்று பேசுகிறாய். ஆனால் உயிர் போனவர் களுக்காவும், உயிர் போகாதவர்களுக்காகவும் ஆத்ம ஞானிகள் வருந்துவது இல்லை.

இரு படைகளிலும் தம் சித்தப்பா, பெரியப்பா, தாத்தா, உறவினர்கள், ஆசார்- யர்கள் முதலியவர்களைப் பார்த்து அவர்கள் அழிந்துவிடுவார்களோ என்று கவலைப்பட்டு வருந்திக் கொண்டிருக்கும் அர்ஜுனன், முதல் அத்யாயத்தில் 28, 29, 30-வது ஸ்லோகங்களில் தம் நிலையை வர்ணிக்கிறார். 45- வது ஸ்லோகத்தில், தாம் யுத்ததிற்கு முனைந்துவிட்டது பற்றி வருந்துகிறார்.   47-வது ஸ்லோகத்தில் சஞ்சயன் அவர் நிலையை வர்ணிக்கிறார். இவற்றை குறிப்பாகக் கொண்டு ‘எவர்களுக்காகத் துயரப்பட வேண்டாமோ, அவர்களுக் காக நீ துயரப்படுகிறாய்’ என்று கூறினார்.

முதல் அத்தியாயம் ஸ்லோகம் 31 முதல் 41 வரையிலும், இரண்டாவது அத்தியாயம் 4 முதல் 6 வரையிலும் அர்ஜூனன் குலஅழிவால் ஏற்படும் பெரிய பாவங்களை எடுத்து காட்டி, அஹங்காரத்துடன் துரியோதனன் முதலியோர்களின் இழிந்த குணத்தையும், எது தர்மம் என்றறிந்த தமது நிலையையும் கூறி, பலவிதமான யுக்திகளினால் யுத்தம் செய்வது சரியன்று பகர்ந்ததை ‘பண்டிதர்களை போல் பேசுகிறாய்’ என்று பகவான் கூறினார்.

மேலும் இந்த ஸ்லோகத்தில் இரண்டு வார்த்தைகள் மிகவும் முக்கிய மானவை என்பதோடு நமக்கு தேவையான விவரத்தையும் அளிக்கின்றன. கதாசு மற்றும் அகதாசு. கதாசு என்பதன் அர்த்தம், இறந்தவர். இது இரண்டு மூல சொற்களைக் கொண்டுள்ளது.

கத – நின்று போய் விட்டது, அசு – சுவாசித்தல்

அகதாசு என்றால் இறக்காதவன், வார்த்தைக்கான அர்த்தம் என்று பார்த்தால், ‘யாருடைய சுவாசம் நின்று போக வில்லையோ’, ‘இன்னும் சுவாசித்துக் கொண்டிருப்பவை உயிருள்ளவை’. யாருக்கு மூச்சை உள்ளிழுத்து வெளியேற்றும் என்ற இரண்டு செயலும் வெளியேறி விட்டனவோ அவர்கள் இறந்தவர்கள். மரணம் என்பது மனிதனை உருவாக்கும் ஒட்டு மொத்த உடல் பாகங்களிலிருந்து ஒரு பிரிவு வெளியேறுவதைத் தான் குறிக்கிறது. அந்த பகுதி தான் நிலையற்றது என்று கருதப்படுகிறது. பிறப்பும், இறப்பும் உடலின் ஒரு பழக்கம் மட்டுமே. அழிவு என்று சொல்வதற்கு இதில் ஒன்றுமே இல்லை. மரணம் சாரத்தை எப்போதும் அழிப்பதில்லை. அதை போர்த்தி உள்ள விஷயங்களில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. புதிய போர்வை பிறப்பு என்று கொண்டால், அது விலகுதலை மரணம் என்று சொல்லலாம். கதாஸு – உயிர் போனவர்கள், அகதாஸு – உயிர் போகாதவர்கள், அவர்களுக்காக பண்டிதர்கள் வருந்துவதில்லை என்று பகவான் கூறுவதற்கு இதுதான் கருத்து.

விளக்கம்:  

இந்த ஸ்லோகமானது கீதா சாஸ்த்திரத்தினுடைய துவக்கம். இங்கு தான் பகவத் கீதை உபதேசம் தொடங்குகிறது. ஒரு சாஸ்த்திரத்தின் முதல் ஸ்லோகம் துவக்கமில்லை. அந்த சாஸத்திரத்தின் மையக் கருத்தை சொல்லுகின்ற ஸ்லோகம் தான் துவக்கம். அது அந்த சாஸ்த்திரத்தின் துவக்கத்தில் வந்தாலும் சரி, இடையில் வந்தாலும் சரி. அது தான் துவக்கம். ஆகவே இது உபக்கிரம: ஸ்லோகம் (ஆரம்பமான ஸ்லோகம்). இந்த ஸ்லோகத்தில் சாஸ்திரத்தினுடைய சாரமான அல்லது தாத்பரியமான ‘சோக நிவர்த்தியை’ சொல்லி தொடங்குகிறார். அதாவது ‘ஞானிகள் துயரப்படுவதில்லை’ என்று சொல்லி உபதேசம் தொடங்குகிறார். அதே போல் கீதையை முடிக்கும் போது இதே சாரத்தை (தாத்பர்யதை) சொல்லி முடிப்பார். பதினெட்டாவது அத்தியாயத்தில் அறுபத்தி ஆறாவது ஸ்லோகத்தில் ‘துயரப்படாதே’ என்று சொல்லி முடிப்பார். கீதையினுடைய துவக்கம் 2-11, முடிவு 18-66. அதற்கு இடையில் கீதை வருகிறது. அதற்கு முன் முகவுரை, அதற்கு பின் முடிவுரை..

இப்போது நாம் கீதையினுடைய தத்துவத்துக்குள் காலடி எடுத்து வைக்கிறோம். மேலும் கீதையினுடைய சாரம் என்பது உபநிஷத்தினுடைய சாரம். ஆகவே இந்த ஸ்லோகத்தை விசாரம் செய்தால் உபநிஷத்தின் சாரம் கிடைக்கும் அல்லது கீதையினுடைய சாரம் என்ன என்பது நமக்கு கிடைக்கும். இப்போது அந்த விசாரத்திற்குள் செல்கிறோம். முதலில் நாம் இந்த ஸ்லோகத்தின் கடைசி இரண்டு சொற்களை எடுத்துக் கொள்வோம். கடைசி இரண்டு சொற்கள் ‘நாநுஸோசந்தி பண்டிதா:’என்பது. அதை திருப்பி போட்டு கொள்வோம். ‘பண்டிதா: நாநுஸோசந்தி’ இந்த சொற்களை மொழி பெயர்த்தால் ‘ஆத்ம ஞானிகள்’ ‘துயரப்படுவதில்லை’ என்று பொருள் கிடைக்கும் தற்சமயம் விசாரத்திற்காக ‘ஆத்ம’ என்ற சொல்லை விட்டு வைப்போம். ஞானிகள் என்பதை மட்டும் எடுத்துக் கொள்வோம். இப்போது நமக்கு கிடைத்துள்ள பொருள் ‘ஞானிகள் துயரப்படுவதில்லை’ இதே வார்த்தையை நாம் அடுத்த சொல்லாக எப்படி சொல்லலாம் என்றால் ‘அக்ஞானிகள் துயரப்படுகிறார்கள் என்று சொல்லலாம். முதல் சொல் ‘ஞானிகள் துயரப்படுவதில்லை’ அடுத்த சொல் ‘அக்ஞானிகள் துயரப் படுகிறார்கள்’. அப்படியென்றால் துயரத்திற்கு காரணம் ‘அக்ஞானம்’. இப்போது நாம் இந்த ஸ்லோகத்தின் கடைசி இரண்டு சொற்களை மூன்று படிகளாக பார்த்துள்ளோம். முதல்படி ‘ஞானிகள் துயரப்படுவதில்லை’, இரண்டாவது படி ‘அக்ஞானிகள் துயரப்படுகிறார்கள்’, மூன்றாவது படியானது துயரத்திற்கு காரணம் அக்ஞானம்’. அப்படியானால் அக்ஞானம் துயரத்திற்கு காரணம் என்றால் துயரத்தை நீக்க காரணம் ‘ஞானம்’. அப்படியென்றால் ‘ஞானம்’ சோக நிவர்த்திக்கு காரணம். மேலும் ஞானம், ஞானம் என்று சொல்கிறோமே எதைப் பற்றிய ஞானம். நாம் ஆரம்பத்தில் ஒரு வார்த்தையை விட்டு வைத்துள்ளோம். அந்த வார்த்தையானது ‘ஆத்ம’. அந்த ஆத்ம என்ற வார்த்தையை ஞானம் என்ற சொல்லோடு சேர்க்கும் போது ‘ஆத்மஞானம்’ என்று கிடைக்கிறது. அப்படியானால் ‘ஆத்ம ஞானம்’ சோக நிவர்த்திக்கு காரணம். இது தான் நமக்கு கிடைக்கின்ற சாரம். இந்த ஸ்லோகத்திலிருந்து நமக்கு கிடைக்கின்ற சாரம் ஆத்ம ஞானம் சோக நிவர்த்திக்கு காரணம் இதுதான் உபநிஷத்தின் சாரம், கீதையினுடைய சாரம். முழு கீதையினுடைய பலன் சோகத்தை நீக்குவது. கீதா சாஸத்திரம் எப்படி சோகத்தை நீக்குகிறது என்றால் ஆத்ம ஞானத்தைக் கொடுத்து சோகத்தை நீக்குகிறது. ஆகவே இந்த சாஸ்த்திரத்தின் சாதனம் ‘ஆத்மஞானம்’ சாத்தியம் ‘சோக நிவர்த்தி’ இது தான் பகவான் இந்த ஸ்லோகத்தில் சொல்ல வருகின்ற கருத்து.

அடுத்து நமக்கு ஒரு சந்தேகம் எழுகிறது, நம்முடைய அனுபவத்தில் சோகத் திற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கின்றது. வீட்டிலிருக்கின்ற சூழல்கள், பொருளாதார பற்றாகுறை, அநாரோக்கியம் இது போன்ற எத்தனையோ காரணங்கள் இருக்கின்றது. ஆனால் பகவான் என்ன சொல்கிறார் ஆத்மஅக்ஞானம் தான் சோகத்திற்கு காரணம் என்று சொல்கிறார். அது எப்படி என்று புரிந்து கொள்ள முயற்சி செய்வோம். உதாரணமாக சோகத்திற்கு எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு காரணத்தை எடுத்து கொள்வோம். அதுதான் மரணம் என்கிற காரணம். நமக்கு வேண்டிய ஒருவர் மரணப்படுகிறார் என்றால் அதை குறித்து சோகப்படுவது என்பது இயற்கை. இது எல்லோராலும் ஏற்று கொள்ளப்பட்ட சோகம். இந்த இடத்தில் நாம் ஒரு நியதியை ஞாபகத்தில் வைத்து கொள்ள வேண்டும். அந்த நியதி என்ன வென்றால் எது சுபாவமாக இருக்கின்றதோ அது அதன் தன்மையை எப்போதும் விட்டுக் கொடுக்காது. உதாரணமாக நெருப்பு உஷ்ணமாக இருக்கின்றது, அதன் உஷ்ணத்தை அது விட்டுக் கொடுத்தால் அது நெருப்பே அல்ல. ஆகவே நெருப்பினுடைய சொரூபம் உஷ்ணம் என்றால் அதை யார் தொட்டாலும் சுடும், பகலில் தொட்டாலும் சுடும், இரவில் தொட்டாலும் சுடும். எல்லா காலத்திலும், எல்லா தேசத்திலும், எல்லா மனிதர்களுக்கும் அந்த உஷ்ணம் என்பது பொதுவாக இருக்கின்றது. ஆகவே நெருப்பினுடைய சொரூபம் உஷ்ணம் என்றால் யாரெல்லாம் நெருப்பை அணுகுகிறார்களோ அவர்களுக்கெல்லாம் உஷ்ணத்தை கொடுக்கிறது. இப்பொழுது மரணம் என்பது சோகத்துக்கு காரணம் என்றால் யாருடைய மரணத்தை நாம் கேள்விப்பட்டாலும் நாம் சோகத்திற்கு ஆளாக வேண்டும் ஆனால் அப்படியல்ல. சிலருடைய மரணத்தை கேள்விப்பட்டாலும் அதை ஒரு நிகழ்வாக தான் பார்க்கிறோம். பிறகு நமக்கு வேண்டியவர்கள் யார் மரணப் படுகிறார்களோ, அல்லது சிலரது மரணம் தான் சோகத்துக்கு காரணமாக இருக்கிறது. இப்பொழுது அர்ஜுனனுடைய விஷயத்தில் பீஷ்மர், தூரோணருடைய மரணம் தான் சோகத்துக்கு காரணமாக இருக்கின்றது. மற்றவர்களுடைய மரணம் சோகத்துக்கு காரணமாக இல்லை, மேலும் அவனே மற்றவர்களுடைய மரணத்துக்கு காரணமாகவும் இருக்கின்றான். இதிலிருந்து நாம் ஒரு புரிந்து கொள்ள வேண்டியது மரணம் சோக காரணம் என்று சொல்லக் கூடாது, தனக்கு வேண்டியவர்களுடைய மரணம் தான் சோகத்திற்கு காரணம். ஆகவே யாருடைய மரணம் சோகத்துக்கு காரணம் என்றால் யாருடன் ‘நான்’ சம்பந்தம் படுகிறேனோ அவர்களுடைய மரணம் தான் சோகத்திற்க்கு காரணம். ஆகவே மரணம் போன்ற விதவிதமான சூழ்நிலை சோகத்திற்கு காரணம் இல்லை, அந்த சூழ்நிலையில் நான், எனது என்பது சம்பந்தப்படுகிறதோ அந்த சூழ்நிலை தான் சோகத்திற்கு காரணம். ஆகவே ஒரு சூழ்நிலையில் நான், எனது என்கிறதை நீக்கி விட்டால் அந்த சூழ்நிலை, வெறும் சூழ்நிலை அது ஒரு நிகழ்வு, அது சோகத்திற்கு காரணம் இல்லை. வாழ்க்கையில் விதவிதமான சூழ்நிலைகள், சம்பவங்கள் சோகத்திற்கு காரணம் அல்ல, அந்த நிகழ்ச்சியில் நான், எனது என்ற அபிமானம் இருந்தால் அந்த நிகழ்ச்சி சோகத்திற்கு காரணமாக மாறி அமையும். நாம் அந்த சோகத்தை நீக்க வேண்டுமென்றால் அந்த நிகழ்ச்சியை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை, அந்த சம்பவங்கள் நடக்கலாம் அதில் நான், எனது என்பதை கழித்து விட்டால் அந்த நிகழ்ச்சி, ஒரு நிகழ்ச்சி, ஒரு சம்பவம் மட்டுமே. பகவான் பீஷ்மர், துரோணர் இவர்களை உயிரோடு வைத்து அர்ஜுனனுடைய துயரத்தை நீக்கவில்லை அவர்களுடைய மரணத்தை வைத்தே துயரத்தை நீக்குகின்றார். பகவான் இங்கு சூழ்நிலையை மாற்றி அர்ஜுனனுடைய மனதை மாற்றவில்லை. அர்ஜுனனுடைய மனதில் இருக்கின்ற நான், எனது என்கிற சம்பந்தத்தை மட்டும் மாற்றுகின்றார். அர்ஜுனனுக்கு பீஷ்மர், துரோணரிடம் இருக்கின்ற நான், எனது என்கிற சம்பந்தத்தை நீக்குகிறார் ஆக சூழ்நிலை அப்படியே இருக்கிறது ஆனால் சோகத்தினுடைய காரணம் நீக்கப்படுகிறது. இப்படி தான் பகவத் கீதை நமக்கு தீர்வு கொடுக்கிறது.

சாஸ்த்திரம் நமக்கு விருப்பமான சூழ்நிலையை கொடுத்து நம்மை திருப்தி படுத்த வில்லை. சூழ் நிலையை அப்படியே வைத்திருந்து அந்த சூழ்நிலை சோகத்திற்கு காரணம் என்கிற அறியாமையை நீக்குகிறது. இதிலிருந்து என்ன தெரிகின்றது நமது அறியாமையினால் சூழ்நிலை சோகத்திற்கு காரணம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம், பகவான் சொல்கிறார் சூழ்நிலை, சம்பவங்கள் சோகத்திற்கு காரணம் இல்லை, அந்த சம்பவத்திற்குள் ‘நீ’ இருப்பது தான் காரணம்.. அப்படியென்றால் சோகத்திற்கு காரணம் நம்முடைய புத்தி அல்லது மனம் தான். நாம் சோகத்தை மாற்றுவதற்கு என்ன செய்து கொண்டிருக்கிறோம், வெளி விஷயத்தை மாற்றி கொண்டிருக்கிறோம் ஆனால் உபநிஷதம், சாஸத்திரம் கூறுகின்றது வெளி விஷயத்தில் எந்த மாற்றமும் செய்ய வேண்டாம் உனக்குள் மாற்றம் தேவை அந்த மாற்றத்தை செய்தால் சூழ்நிலைகள், சூழ்நிலைகளாகவே இருக்கும் அதில் ஒரு மாற்றமும் நடைபெறாது அது சோகம் என்ற புத்தியை நீக்கம் செய்யும். ஆக என்ன முடிவுக்கு வந்துள்ளோம் சாதாரணமாக சோகத்திற்கு காரணம் சூழ்நிலை என்று எண்ணி வந்துள்ளோம் ஆனால் அப்படியில்லை அந்த சூழ்நிலையில் ‘நான்’ சம்பந்தப்படுவது தான் சோகத்திற்கு காரணம்.

இனி அடுத்த கேள்வி என்ன? இந்த ‘நான்’ அப்படிங்கிறது யார்? சாதாரணமாக நான் என்கிறதுக்கு என்ன அர்த்தம் புரிந்து வைத்திருக்கிறோம் என்றால் நம்முடைய இந்த உடல், இந்த மனமும் சேர்ந்த இந்த சரீரத்தை தான். இந்த இடத்தில் தான் பகவான் நமது தவறை திருத்தி ‘நான்’ என்கிற சொல்லை சரியாக நமக்கு புரிய வைக்கிறார். பகவான் கூறுகிறார் ‘நீ’ இந்த உடலும், மனமும் அல்ல இதற்கு ஆதாரமாக இருக்கின்ற ஆத்மா தான் ‘நீ’. இந்த உடலும், மனமும் ‘நீ’ அல்ல என்று நீக்கி விட்டால் இந்த உடலுக்கும், மனதிற்கும், சூழ்நிலைக்கும் வருகின்ற கேடோ, நலனோ உனக்கு வருவதில்லை என்று சொல்லி பகவான் ஆத்மஞானத்தைக் கொடுத்து எல்லா சூழ்நிலைகளில் இருந்தும் தன்னை பிரித்து சூழ்நிலைகளை, சூழ்நிலைகளாக வைத்து சோகத்தை நீக்குகிறார்.

எல்லா ஜீவராசிகளும் இயற்கையாகவே ‘நான்’ என்ற சொல்லுக்கு தவறான பொருளை புரிந்திருக்கிறார்கள். இந்த அறியாமை பொதுவாக எல்லோருக் கும் இருக்கிறது. நமக்கு எவ்வளவோ விஷயத்தைப் பற்றிய ஞானம் இருக்கிறது ஆனால் ஒரு விஷயத்தைப் பற்றிய ஞானம் இல்லை. எதைப் பற்றி என்றால் நம்மைப் பற்றி. நான், நான் என்று சொல்லும் பொழுது இந்த நான் என்ற சொல்லினுடைய உண்மையான பொருள் என்ன?  என்ற ஞானம் இயற்கையாகவே கிடையாது. இந்த அக்ஞானத்துடன் தான் எல்லா ஜீவராசிகளும் பிறந்திருக்கிறார்கள். இந்த அக்ஞானத்திற்கு தோற்றம் என்பதே கிடையாது. அறியாமை என்றைக்கு தொடங்கியது என்று நம்மால் சொல்லவே முடியாது, ஆனால் இந்த அக்ஞானத்திற்கு ஞானத்தைக் கொடுத்தால் இந்த அக்ஞானம் சென்று விடும்.  எந்த ஒன்றுக்கு துவக்கம் இல்லையோ அதற்கு முடிவும் கிடையாது ஆனால் இந்த அறியாமைக்கு (அக்ஞானத்திற்கு) துவக்கம் கிடையாது, ஆனால் முடிவு உண்டு. மேலும் ஒரு விஷேசம் என்னவென்றால் இந்த அறியாமை ஒரு முறை சென்று விட்டால் மீண்டும் வராது. ஒருவர் ஒரு ஞானத்தை பெற்று விட்டால் அந்த ஞானத்தை விட்டு வாழ முடியாது அந்த ஞானமும் அவரை விட்டு செல்லாது.

இதற்கு அடுத்தப்படியாக இந்த அக்ஞானத்திற்கு விளைவு என்ன என்று பார்ப்போம். சமஸ்கிருதத்தில் அக்ஞானத்தினால் ஏற்படும் விளைவை சுருக்கமாக ‘அக்ஞானா அத்யாஸ:’ என்று சொல்லப்படுகிறது. அத்யாஸம் என்றால் ‘ஏற்றி வைத்தல்’ அப்படியென்றால் தன்னுடைய சொருப்பத்திற்கு மாறாக வேறென்றை ஏற்றி வைத்தல் உதாரணமாக கயிறு இருக்கிறது மாலை நேரத்தில் அந்த கயிற்றினுடைய உண்மையான சொரூபம் நமக்கு தெரியவில்லை அதன் உண்மையான சொரூபம் நமக்கு தெரியாமல் அந்த கயிறு நமக்கு ஒரு பாம்பாக தெரிகிறது. இதுதான் அத்யாஸம். இந்த அத்யாஸம் எதனால் ஏற்படுகிறது என்றால் அக்ஞானம் அல்லது அறியாமையின் விளைவு. இந்த அத்யாஸத்தில் என்ன நடக்கிறது என்றால் பாம்பினுடைய தன்மை கயிற்றுக்கு வருகிறது, கயிற்றினுடைய தன்மை பாம்பிற்க்கு வருகிறது. இதனால் கயிற்றுக்கு எந்த சம்பந்தமும் இல்லாத தன்மையை நம்முடைய அறியாமையினால் கயிற்றில் ஏற்றி வைக்கிறோம். இனி உதாரணத்திலிருந்து நம்ம நிலைக்கு வந்தால் நான் ‘ஆத்மா’ என்று தெரியாமல் அல்லது நான் என்ற சொல்லுக்கு உண்மையான சொரூபம் என்ன என்று தெரியாமல் எனக்கு அப்பாற்பட்டதை ஒன்றை எடுத்து என் மீது ஏற்றி வைத்துக் கொண்டு நான் அது என்று நினைக்க தோன்றுகிறது. எனவே தன்னைப் பற்றிய அறியாமையினால் தனக்கு அப்பாற்பட்டுள்ள விஷயத்தை எடுத்து தன்னிடம் வைத்துக் கொண்டு அதை ‘நான்’ என்று பாவிக்க தொன்றுகிறது. ஆகவே அக்ஞானத்திலிருந்து அத்தியாஸம் தோன்றுகிறது. நமக்கு அப்பாற்பட்ட ஒன்றை நான் என்று எடுத்துக் கொண்டு அதன் மீது அபிமானம் தோன்றுகிறது. ‘நான்’ என்ற அபிமானத்தோடு ‘நான் என்ற உணர்வும்’ தோன்றி விடுகிறது. முதலில் அறியாமை அது அநாதி, அறியாமையை தொடர்ந்து வருவது அறியாமையின் விளைவு தனக்கு அல்லாத ஒன்றை ஏற்றி வைத்தல் அதனுடைய விளைவு அபிமானம் அதாவது தனக்கு அல்லாத ஒன்றை ‘நான்’ என்று கொள்ளுதல். எப்பொழுது ஒன்றில் அபிமானம் வைக்கிறோமோ அப்போது மனதில் ராஹ:, துவேசங்கள், விருப்பு, வெறுப்புக்கள் முதலிய சம்சாரங்கள் வருகிறது. இத்தனைக்கும் மூல காரணம் அக்ஞானம். இந்த மூல காரணம் என்றைக்குமே வெளியே தெரியாது. அதேபோல நமக்கு எப்போதெல்லாம் பிரச்சனை வருகிறதோ அப்போதெல்லாம் சம்சாரத்திற்கு காரணமான அக்ஞானம் வெளியே தெரியாது. ஆகவே சம்சாரத்திற்கு காரணம் அக்ஞானம் என்று நமக்கு தெரிவதில்லை, சொல்லவும் மாட்டோம்.

அக்ஞானம் காரணம், அதன் விளிவு அத்யாஸம், அதனுடைய விளைவு அபிமானம், அதனுடைய விளைவு ராஹ:, அதனுடைய விளைவு சோகம். நமக்கு சோகம் தான் மேலே தெரிகிறது. ஆனல் இந்த சோகத்திற்கு காரணம் அக்ஞானம் என்பது நமக்கு தெரியாத காரணத்தினால் நாம் இந்த அக்ஞானத்தை வைத்துக் கொண்டு மீதியை எல்லாம் மாற்றிக் கொண்டிருக்கிறோம். எனவே நமது சம்சாரத்திற்கு எந்த மாற்றமும் இல்லை. ஆகவே சோகத்தை மாற்ற வேண்டுமென்றால் இந்த அக்ஞானத்தை நீக்க வேண்டும். இந்த அக்ஞானத்தினால்  தான் விதவிதமான சூழ்நிலைகள் வித விதமான சந்தர்பங்கள் நமக்கு சோகத்திற்கு காரணமாக தெரிகிறது. ‘அக்ஞானம்’ தான் சோகத்திற்கு காரணம், என்பது இந்த ஸ்லோகத்திலிருந்து பகவான் கூற வருகின்ற கருத்து. பிறகு பகவான் எப்படி சோகத்திற்கு நிவர்த்தி செய்கிறார் என்றால் இந்த சூழ்நிலைகளை எல்லாம் மாற்றி நிவர்த்தி செய்யப் போவதில்லை. சூழ்நிலையை அப்படியே வைத்து விட்டு சூழ்நிலையை சந்திப்பவனின் மனநிலையை மாற்றி சோகத்திற்கு நிவர்த்தி காண்கிறார். இவ்விதம் கீதா சாஸ்த்திரத்தின் சாரம் இரண்டு. ஒன்று ‘சோக நிவர்த்தி’ இது தான் கீதா சாஸ்த்திரத்தினுடைய சாரம் அல்லது பலன். இரண்டாவது இந்த சோக நிவர்த்திக்கு ‘ஆத்ம ஞானம். சாதனம். இந்த கீதையில் பகவான் ஆத்ம ஞானத்தை சாதனமாக கொடுத்து. சோக நிவரத்தியை பலனாக கொடுக்கின்றார். ஆத்ம ஞானம் என்றால் தன்னைப் பற்றிய ஞானம், இந்த தன்னைப்பற்றிய ஞானத்தை கொடுப்பதனால் துயரமானது நீக்கப்படும். துயரம் நீங்கிய மனது என்பது அமைதியான சாந்தமான மனம் இது தான் ஜீவன் முக்தி, புருஷார்த்தம்.

இந்த ஸ்லோகத்தில் கீதையின் சாரமாக ஆத்மஞானம் சோகத்தை நீக்கும் உபாயமாக சொல்லப்படுகிறது. இதில் பல சந்தேகங்கள் நமக்கு வரலாம். ஆத்ம ஞானம் என்றால் என்ன? எப்படி இந்த ஆதமஞானம் துயரத்தை நீக்குகிறது என்பதெல்லாம் விளக்கமாக வரும் ஸ்லோகங்களில் பார்க்க உள்ளோம்.

No classes added yet.

Our Visitor

000566
Users Today : 4