सञ्जय उवाच
एवमुक्त्वा हृषीकेशं गुडाकेशः परन्तप ।
न योत्स्य इति गोविन्दमुक्त्वा तूष्णीं बभूव ह ॥९॥
ஏவமுகத்வா ஹ்ருஷீகேசம் குடகேச: பரந்தப |
ந யோத்ஸ்ய இதி கோவிந்தமக்த்வா தூஷ்ணீம் ப்பூவ ஹ || 9 ||
சஞ்சய் உபவாச – சஞ்சய் கூறினார்,பரந்தப – அரசே,, குடாகேசா – உறக்கத்தை வென்ற அர்ச்சுனன், ஹ்ருஷீகேசம் -அந்தர்யாமியான ஶ்ரீகிருஷ்ண பரமாத்மாவிடம், ஏவம் – இவ்வாறு, உக்த்வா – கூறிவிட்டு (பின்). கோவிந்தம் – ஶ்ரீகேவிந்தனிடம், ந யோத்ஸ்யே – போர் புரிய மாட்டேன். இதி – என்று, ஹ – தெளிவாக, உக்த்வா -கூறி, தூஷ்ணீம் – மெளனமாக, ப்பூவ – ஆகிவிட்டார்.
சஞ்சயன் கூறினார், அரசே உறக்கத்தை வென்ற அர்ச்சுனன் அந்தர்யாமியான ஶ்ரீகிருஷ்ண பரமாத்மாவிடம் தன்னுடைய மனகலக்கத்தோடு கூடிய சோகத்தை கூறி சரண்டைந்து விட்டு பின் கோவிந்தனிடம் போர் புரிய மாட்டேன் என்று தெளிவாக கூறி மெளனமாக ஆகி விட்டார்.
பத்தாவது ஸ்லோகம்
तमुवाच हृषीकेशः प्रहसन्निव भारत ।
सेनयोरुभयोर्मध्ये विषीदन्तमिदं वचः ।। १०
தமுவாச ஹ்ருஷீகோ: ப்ரஹஸன்னிவ பாரத |
ஸேனயோருபயோர்மத்யே விஷிதந்தமிதம் வச; || 10 ||
பரதகுலத்தோன்றலே – த்ருதராஷ்ட்ரரே! ஹ்ருஷீகோ – அந்தர்யாமியான ஸ்ரீக்ருஷ்ணன், உப யோ: – இரண்டு, ஸேநயோ: – படைகளுக்கும், மத் யே – நடுவில், – விஷீதந் தம் – துயரப்பட்டுக் கொண்டிருக்கும்.
தம் – அர்ஜுனனிடம், ப்ரஹஸந் இவ – சிரித்தாற்போல, இதம் – இந்த,
வச: – வார்த்தைகளை, உவாச – கூறினார்.
(பரதவம்சத்து உதித்தவரே என்று திரிதராஷ்ட்டிரர் அழைக்கப்படுகிறார். பரதனுடைய ஆட்சியில் இருந்தமையால் இந்தியா பாரதவர்ஷம் என்று பெயர்.)
பரதகுலத்தோன்றலே! த்ருதராஷ்ட்ரரே! அந்தர்யாமியான ஸ்ரீக்ருஷ்ணன் இரண்டு படைகளுக்கும் நடுவில் துயரப்பட்டுக் கொண்டிருக்கும் அர்ஜுனனிடம் சிரித்தாற்போல இந்த வார்த்தைகளைக் கூறினார்:
விளக்கம்:
பரதகுலதோன்றலே| திருதராஷ்டிரரே! அந்தர்யாமியான ஶ்ரீ கிருஷ்ணன் இரண்டு படைகளுக்கும் நடுவில் அர்ச்சுனனின் வார்த்தைகளையம், சரணாகதியையும் கேட்டபின் ஶ்ரீ கிருஷ்ணருடைய முகத்தில் புன்னகை மலர்ந்தது. பகவானுடைய புன்னகை தன் மகனுடைய சோகம் ததும்பிய துயரம் தோய்ந்த முகத்தைப் பாரத்த பின்பும், அவனைப் பாரத்துப் புன்னகைக்கும் ஒரு தகப்பனுடையதைப் போன்றது, காரணம் தந்தைக்கு தன் தனயனின் இந்த துயரம் தற்காலிகமானதுதான் என்பது தெரியும். பயனுள்ள உபதேசங்களை கேட்டபின் தன் குழந்தை விரைவிலேயே தன்னுடைய குழப்பமான உணர்ச்சிகளிலிருந்து விலகி வந்து புரிதலோடு கூடிய மிக பெரிய சிகரங்களை எட்டுவான் என்று அவருக்கு தெரியும். ஶ்ரீ கிருஷ்ணர் அர்ச்சுனனைப் பார்த்து பரிதாப உணர்வுடன் புன்னகைக்கவில்லை, அவருடைய புன்னகை நம்பிக்கையின் புன்னகை. காரணம் அர்ச்சுனனை இந்நிலையிலிருந்து வெளியே கொண்டு வந்து அவனை தன்னைத் தானே புரிந்து கொள்ள வைத்து விட முடியும் என்ற நம்பிக்கை அவனுக்கு பரிபூரணமாக இருந்ததால் எழுந்த புன்னகை.
பகவான் புன்னகை பூத்ததில் பரந்த கருத்து அடங்கியிருக்கிறது. உலகெங்கிலும் இரவில் இருள் சூழ்ந்து செயலற்றுக் கிடக்கிறது., பின்பு புன்முறுவல் பூத்தாற்போல் கீழ்வானம் வெள்ளென வெளுக்கிறது. இனி சூரியோதயமாகி உயிர்களை எழுப்பிச் செயலில் ஈடுபடுத்தப் போகிறது என்பதற்கு அது முன் அறிகுறி, அங்ஙனம் பகவானது புன்சிரிப்பு இனி வருகின்ற யோகத்திற்கும், ஞானத்திற்கும் முன் அறிகுறி.
மனசஞ்சலத்தோடு மெளனமுற்ற அர்ச்சுனன் முற்றிலுமாக தன்னை பகவானிடம் சரண்ணடைத்து தம்முடைய ஆழ்ந்த சோகம் எப்படி தீரும், இவ்வுலகிலும், பரலோகத்திலும் ராஜ்ய சுகத்தைப் பெற்றும் இந்த சோகத்திலிருந்து மீள முடியும் என்று தோன்றவில்லை என்று சொன்னவுடன் அர்ச்சுனன் தமது உபதேசத்திற்கு தகுதி பெற்று விட்டார் என்று கணித்து அவருடைய கலக்கத்தையும், சோகத்தையும் முற்றிலுமாக போக்கிவிடும் உத்தேசத்தோடு பகவான் முதலில் அழிவற்ற நித்ய வஸ்துஎது? அழியக்கூடிய அநித்ய வஸ்து எது என்று விளக்குவதன் மூலம் ஸாங்கிய யோக ரீதியில் கூடயுத்தம் புரிவது அவசியம் தான் என்று நிருப்பிப்பதற்காக தன்னுடைய உபதேசத்தை ஆரம்பிக்கிறார்.
மேலும் எட்டாவது ஸ்லோகத்தோடு ஆரம்பத்தில் நாம் ஒரு சிஷ்யனுக்கு இருக்க வேண்டிய நான்கு தகுதி என்ன என்று பார்த்தோம். அந்த நான்கு தகுதியையும் அர்ச்சுனன் கடந்து ஒரு சிஷ்யனுடைய தகுதியோடு பகவானை சரண்டைந்துள்ளான்.
அந்த நான்கு என்பது முதலாவதானது சம்சாரத்தை கண்டு பிடிக்க வேண்டும். எல்லா ஜீவராசிகளும் சம்சாரியாக இருந்தாலும் அந்த சோகம் என்பது எல்லாருக்கும் தொடர்ந்து இருந்தாலும் அந்த சோகத்துக்கான உபாயத்தை வாங்கி சோகத்தை நீக்குவதற்கு ஒருவன் தகுதியடைய வேண்டும், சோகத்தை அனுபவித்து இருந்தால் மட்டும் போதாது அந்த சோகத்தை கண்டு கொள்ள வேண்டும் இது முதல் படி. அந்த சோகத்தை கண்டுப்பிடித்த பிறகு அதிலிருந்து வெளிவர வேண்டும் என்று தீவிர இச்சை இருக்க வேண்டும் அது இரண்டாவது படி, அடுத்து இந்த சோகத்திலிருந்து நீங்க தன்னுடைய புத்தி தனக்கு பயன்படாது என்று உணர வேண்டும். இது மூன்றாவது படி நான்காவதாக வேறு ஒருவர் புத்தி மிது நம்பிக்கை வருதல் அவரிடம் சரண்டைதல். இந்த நான்கையும் யார் செய்கிறார்களோ, அவர்கள் பகவானிடமிருந்து, சாஸ்த்திரத்திலிருந்து உபாயத்தை வாங்கி சம்சாரத்தை நீக்க முடியும். இந்த நான்கையும் அர்ச்சுனன் செய்து விட்டான்
இந்த பகுதியில் நாம் பார்த்த நான்கு விதமான படிகளை ஒருவன் கடந்து சென்றால் அவன் எல்லா துயரத்தையும் நீக்கி மோக்ஷத்தை அடைகிறான் என்று பார்த்தோம். இதே கருத்து சாஸ்த்திரத்தில் மோக்ஷத்திற்கான உபாயத்தை அடைவதற்கு யார் தகுதி உடையவர் என்பதற்கு முறைபடுத்தி வேறு சில சொற்களில் பேசப்படுகின்றது. இதற்கு “அதிகாரித்துவம்” என்று சாஸ்த்திரத்தில் வழங்கப்படுகிறது.
தகுதி, அதிகாரித்துவம் என்றால் பகவானுடைய உபதேசத்தை கேட்டு அதனால் பயனடைய வேண்டுமென்றால் சில தகுதிகள் நமக்கு இருக்க வேண்டும். அந்த தகுதிகள் சாஸ்த்திரத்தில் முறைப்படுத்தி சொல்லி இருக்கிறது. நான்கு விதமான தகுதிகள் பேசப்படுகின்றன. அந்த நான்கு தகுதிகளாவன: விவேகம்,, வைராக்கியம், ஷட்-சம்பத், முமுக்ஷுத்வம். சமஸ்கிருதத்தில் இந்த நான்கு தகுதிகளை சாதன-சதுஷ்டயம் என்று அறியப்படுகிறது. இனி ஒவ்வொன்றாக சுருக்கமாக பார்த்து அடுத்த சுலோகத்திற்கு நுழைவோம்.
முதல் தகுதி விவேகம். விவேகம் என்றால் அறிவு, பிரித்து பார்த்தல்.
ஒரு பொருளை எப்போது நாம் பிரிக்க வேண்டும் என்றால் எப்போது ஒரு பொருள் மற்றொருபொருளுடன் தம்மில் கலந்து இருக்கிறதோ அப்போது பிரிக்க வேண்டும். இங்கு எதுவும், எதுவும் தம்மில் கலந்துள்ளது என்பதை ஆய்வோம். இங்கு “நித்ய, அநித்ய வஸ்து விவேவ:” அப்படியென்றால் நித்யமான பொருளும், அநித்தியமான பொருளும் அல்லது உண்மையும், பொய்யும் இந்த இரண்டும் அடையாளம் தெரியாமல் கலந்து விட்டது. விவேகம் என்றால் எது நிலையானது, எது நிலையற்றது என்று பிரித்து பார்த்தல். இந்த பிரித்து பார்த்தல் தான் சிஷ்யனுக்கு முதல் தகுதி. ஆரம்பத்தில் சிஷ்யனுக்கு எது நிலையானது என்ற அறிவு இருக்காது ஆனால் நிலையற்ற வஸ்து எது, எது என்று முதலில் சிக்ஷ்யன் அறிந்து கொள்ள தயாராக வேண்டும். விவேகம் என்பது பகுத்து அறியும் சக்தியாகும். விவேகம் அல்லது பகுத்தறிவு திறன் உண்மையையும், உண்மை அல்லாததையும், நிலையானதையும், நிலையற்றதையும், ஸத்தையும், அஸத்தையும் பாகுபடுத்தி அறிய உதவுகின்ற தூய மனத்தின் ஒரு அபூர்வ சக்தியாகும். விவேகம், இறைவனுடைய கருணையின் மூலமாகவும், முற்பிறவிகள் பலவற்றில் செய்த நற்கருமங்களின் மூலமாகவும், சத்சங்கம் அல்லது சாஸ்த்திர படிப்பு களின் மூலமாகவும், தன்னலமற்ற சேவை அல்லது பலனை எதிர்பராமலும், ஆணவமின்றியும் செய்யப்படும் வேலையின் மூலமாகவும் உதயமாகின்றன பிரம்மன் மட்டுமே சத்தியம், மற்றவை எல்லாம் அசத்தியம் என்ற உறுதியான கோட்பாடே விவேகமாகும்.
இரண்டாவது வைராக்கியம், இறையுணர்வை பெறுவதற்கு இது ஒரு முக்கியமான தேவை. மனிதன் ராகம் அல்லது ஆசை அல்லது பற்றின் காரணமாக இந்த உலகத்தோடு பிணைக்கப்பட்டிருக்கிறான். அவன் வைராக்கியத்தின் மூலம் விடுவிக்கப்படுகிறான். இது உலகபோகங்கள் அனைத்திடமும் கொண்டுள்ள பற்றுதலையும், ஆசையையும் விடுதலாகும். இது சத் விவேகத்திலிருந்து பிறந்து அதனால் காக்கப் படுகிறது. சத்தையும், அசத்தையும் பாகுபடுத்தி அறியக்கூடிய விவேகத்திலிருந்து பிறக்கும் வைராக்கியம் தான் நிரந்தரமானதாக இருக்கும். அப்பேர்ப்பட்ட வைராக்கியம் தான் உங்களுக்கும் ஆன்மீக வளர்ச்சியையும் ஒளி விளக்கத்தையும் பெற உதவியாக இருக்கும், வைராக்கியம் உண்மையான அறிவிற்கும், அந்தரங்க ஞானத்திற்கும் அறிகுறி.
“பார்க்கப்படுகின்ற அல்லது கேட்கப்படுகின்ற வஸ்துக்களிடம் ஆசைப் படாமலும், அந்த வஸ்துக்களின் மேல் உள்ள மோஹத்தை கட்டுபடுத்தி விட்டதாக உணர்வு ஏற்படுகின்றதோ அந்த குறிப்பிட்ட மனோ நிலைக்கு வைராக்கியம் என்று பெயர்”.
சாதன-சதுஷ்டயத்தில் மூன்றாவதான இந்த ஷட்-சம்பத்தானது மனிதனு டைய அகத்தே இந்த சக்தியை உற்பத்தி செய்கின்றது. இங்கு அறுவித நற்குணங்களின் தொகுப்பை ஷட்-சம்பத் என்று பொருள்படுத்துகிறது. ‘சம்பத்’ என்றால் ‘செல்வம்’ என்று பொருள். ‘ஷட்’ என்றால் ‘ஆறு’ என்று பொருள். இந்த ‘ஆறுவிதமான நற்பண்புகளை’ மனிதனின் ‘ஆறு வித செல்வம்’ என்று “சாஸ்த்திரம்” சொல்கிறது. அவைகளாவன: சமம், தமம், உபரதி, திதீக்ஷை, சிரத்தை, சமாதானம்.
சமம் என்பது சாந்தம், அதாவது ஆசைகளை ஒழிப்பதன் மூலம் மன அமைதி பெறுதல் என்பது பொருள். இது நிஸ்சலனம் அல்லது அமைதி என்றும் பொருள்படும். இது மன அடக்கத்தை குறிக்கிறது.
தமம் எனபது புலனடக்கம். இது புலன் நுகர்ச்சி சாதனங்களை கட்டுப் படுத்துவதைக் குறிக்கிறது.
உபரதி என்பது பரிபூரணப் பூரிப்பு அல்லது திருப்தி நிலையைக் குறிக்கிறது.
திதீக்ஷை் என்பது பொறுமை அல்லது சகிப்புதன்மையாகும். இது மனம், உடல் இரண்டிற்கும் உரியது. இது வாழ்க்கையின் எந்த நிலையிலும் பொறுமையுடன் இருத்தலாகும். உஷ்ணம், குளிர்ச்சி; சுகம், துக்கம்: புகழ்ச்சி, இகழ்ச்சி முதலியவற்றைப் போன்ற இருமைகளை பொறுத்துக் கொள்வதாகும்.
சிரத்தை என்பது நம்பிக்கை இது பரம்பொருள், சாஸ்த்திரங்கள், குரு, அவருடைய உபதேசங்கள் ஆகியவற்றில் நம்பிக்கை வைத்தலும் ஆகும்.
சமாதானம் என்பது சமமான மனோநிலை. இது மனத்தினுடைய ஐக்கியம் அல்லது ஒருமைப்பாடுமாகும். அதாவது மனமானது புறத்தே சிதறலின்றி, லட்சியத்தில் மட்டும் ஒன்றியிருத்தலாகும்.
இவைகள் பொதுவாக ஆன்மீக வாழ்வில் இருக்க வேண்டிய ஆறுவித நற் பண்புகள் மற்றும் யோக்கியதாம்சங்களாகும். இந்த ஷட்-சம்பத்தானது விவேகத்தையும், வைராக்கியத்தையும் பலப்படுத்தி, ஸ்திரப்படுத்தி வைக்கின்றன.
அடுத்து நான்காவது முமுக்ஷுத்துவம், முமுக்ஷுத்துவம் என்பது ஆத்மானுபூதி அடைவதற்கான தீவிர வேட்கையாகும். இது விடுதலைக்காக தகிக்கின்ற விருப்பமாகும். இது பிறப்பு, இறப்பு, சக்கரத்திலிருந்தும் அவற்றோடு சேர்ந்த தீமைகளாகிய மூப்பு, பிணி, மயக்கம், துக்கம் ஆகியவற்றிலிருந்து விடுபட வேண்டுமென்கின்ற தீவிர வேட்கையாகும். ஒருவன் முற்கூறப்பட்ட விவேகம், வைராக்கியம், ஷட்-சம்பத் ஆகிய மூன்று பண்புகளையும் பெற்றிருப்பானாகில் முமுக்ஷுத்துவம் தானாகவே வந்துவிடும்.
சாதனசதுஷ்டயம் என்கிற நான்கு தகுதிகளையும் பெற்ற சாதகன் சுருதிகளை ஒரு பிரம்ம நிஷ்டை குரு வழியாக கேட்கும் பொழுது அவனுக்கு விரைவில் ஆத்ம சாக்ஷாத்காரம் அல்லது ஆத்மானுபூதி கிட்டும்.
மேலும் இந்த நான்கு தகுதிகளும் வரும் அத்தியாயங்களில் விரிவாக பார்க்க உள்ளோம்.
அடுத்து பதினொன்றாம் ஸ்லோகத்திலிருந்து பகவான் உபதேசத்தை தொடங்குகிறார்
No classes added yet.






Users Today : 2