Poornayogam

Sanatana Dharma – The Eternal Way of Life

Home » Sreemad Bhagavatgita Lesson – 02 Sankiya yogam – Tamil » ஸ்லோகம் – 05

ஸ்லோகம் – 05

गुरूनहत्वा हि महानुभावन् श्रेयो भोक्तुं भैक्ष्यमपीह लोके ।

हत्वार्थकामांस्तु गुरूनिहैव भुञ्जीय भोगान् रूधिरप्रदिग्धान् ॥ २-५ ॥

குருனஹத்வா ஹி மஹாநுபாவான் ச்ரேயோ போக்தும் பைக்ஷ்யமபீஹ லோகே |

ஹத்வாSர்த்தகாமாம்ஸ்து குரூனிஹைவ புஞ்ஜீய போகான் ருதிரப்ரதிக்தான் ||

குருனஹத்வா = குருன் + அஹத்வா:

குருன் – பெரியவர்களை; அஹத்வா – கொல்லாமல்;

மஹாநுபாவான் – மேன்மை பொருந்திய; ஹி – நிச்சயம்;

ச்ரேய: – நல்லது; போக்தும் – உண்பது;

பைக்ஷ்யமபீஹ லோகே = பைக்ஷ்யம் அபி + இக லோகே:

பைக்ஷ்யம் அபி – பிக்ஷான்னம் கூட; இக லோகே – இவ்வுலகில்:

ஹத்வாSர்த்தகாமாம்ஸ்து = ஹத்வா + அர்த்தகாமம் + து:

ஹத்வா – கொன்றால்; அர்த்தகாமம் – தனசம்பத்தாகவும், போக வஸ்துகளாகவும் உள்ள; து – ஆனால்;

குரூனிஹைவ = குரூன் + இஹ ஏவ: குரூன் – பெரியவர்களை;       இஹ ஏவ – இவ்வுலகிலேயே; புன்ஜீய – அனுபவிப்பேன்;

போகான் – போக விஷயங்களை; ருத்ரப்ரதிக்தான் – ரத்தம் கலந்த:

ஸ்லோக பொருள்:

மேன்மை பொருந்திய பெரியோரைக் கொல்லாமல் பிக்ஷையேற்று உண்பது சாலச் சிறந்தது. ஆனால் முதியோர்களைக் கொன்றால் ரத்தம் கலந்த பொருளையும், போகத்தையும் இம்மையிலேயே அனுபவிப்பவனாவேன்.

இந்த மனநிலை அவன் தேஹாபிமானம் நீங்கியவனாக இருக்கிறான் என்பதை காட்டுகிறது. இவர்களை கொன்று இந்த போரில் வென்று அவர்கள் ரத்தம்தோய்ந்த அரசபோகத்தையும்,செல்வத்தையும், இன்பங்களையும் தான் நான் அனுபவிக்க முடியும். அவர்கள் அழிவினால் அடையும் போகங்கள் எனக்குவேண்டாம். இது அவனிடத்தில் உள்ள வைராக்கியத்தை காட்டுகிறது.

குரூன் என்ற சொல் வயதிலும், அறிவிலும் மூத்தவர்கள் எனப் பொருள் படுகிறது.

பீஷ்மர் நைஷ்டிக பிரம்மசாரியாவார், இச்சா மிருத்யு அல்லது விரும்பிய பொழுது மரணத்தை அடையும் வல்லமையுடையவர். அவர் தன்னலம் கருதாத தபோ வலிமையுடையவர். துரோணரோ சகல சாஸ்த்திரங்களையும் கற்றறிந்தவர்; ஆசார சீலமுடையவர். கிருபரும் அத்தகையவரே. ஆகையால் இவர்கள் எல்லோரும் மஹானுபாவர்களாவார்கள்.

பிட்சை எடுத்து வாழ்வது என்பது மேலோட்டமாக பிட்சை எடுக்கும் எல்லோரையும் சொல்ல வில்லை. “பைக்ஷ்யம்” என்னும் சொல் பிக்ஷை அன்னத்தை குறிக்கும் சொல். மேலும் க்ஷத்திரியர்கள் பிட்சை எடுக்க கூடாது, அதை உண்டு உடலை வளர்க்க கூடாது அது நிந்திக்கத்தக்க செயல்.

சாதாரண பிட்சைக்காரன், பிக்ஷை எடுக்கும் உணவையும், ‘சந்நியாசி’ என்று அறியப்படுகிற ‘பிட்சு’ தன் பசியை போக்க கிரஹஸ்தர்களிடமிருந்து பெற்று கொள்ளும் உணவையும் “பைஷ்யம்” என்று கூறப்படுகிறது.

பிச்சைக்காரனுக்கும், பிட்சுவுக்கும் அடிப்படையிலேயே நிரம்ப வித்தியாசம். எப்போதுமே இரண்டு எதிரெதிர் குணங்கள் தோற்றத்திற்கும், அனுபவத்திற் கும் ஒன்று போல் இருக்கும், நிறைகுடமும், காலிகுடமும் போல். நிறைக் குடம் நீர் நிரம்பி இருப்பதால் சப்தம் வராது, காலிகுடம் நீர் இன்றி காலியாக இருப்பதால் சப்தம் வராது. அது போல் தமோ குணத்தில் இருப்பவனும் அமைதியாக இருப்பான், சத்வ குணத்தில் இருப்பவனும் அமைதியாக இருப்பான். தமோ குண அமைதி சோம்பலின் விளைவு, சத்வ குண அமைதி வாழ்க்கை அனுபவத்தை கடந்தநிலையின் அமைதி. வெளிபாடு இரண்டும் ஒன்று போல் தோன்றினாலும் அடிப்படையில் எதிரெதிர் குணம்.

பிட்சைகாரன் பிட்சை எடுப்பதோடு நிறுத்தி கொள்கிறான். பிட்சு தன்னிடம் இருப்பதை எல்லாம் கொடுத்து விட்டு பிட்சை எடுக்கிறான். பிச்சைகானுக்கு எவ்வளவு கிடைத்தாலும் திருப்தி அடைய மாட்டான். பிட்சு கிடைப்பதில் திருப்தி அடைகிறான்.

ஒருவன் ஏழ்மையில் இருப்பது உயர்ந்த நிலை அல்ல, ஏழ்மையை தேர்ந்தெ டுத்து அதில் திருப்தியாக இருப்பது தான் உயர்ந்த நிலை.

‘போரிடுவதை விட நான் பிட்சை எடுத்து உயிர் வாழ்வேன்’, என்ற அர்ச்சுனனுடைய எண்ணப் போக்கில் ஒரு புதிய திருப்பம் நேரிடுகிறது. அவனுக்கு பொருட்களின் மேல் இருக்கும் அபிமானம், தன் சரீர அபிமானம் அவனை விட்டு விலகுகிறது.

மேலும் அடுத்த ஸ்லோகத்தில் அர்ச்சுனன் தன் புத்தி தனக்கு பயன்படாது என்ற நிலைக்கு வருகின்றான் என்பதை உணர்த்துகிறது.

 

No classes added yet.

Our Visitor

000566
Users Today : 4