Poornayogam

Sanatana Dharma – The Eternal Way of Life

Home » Sreemad Bhagavatgita Lesson – 02 Sankiya yogam – Tamil » ஸ்லோகம் – 04

ஸ்லோகம் – 04

अर्जुन उवाच ।

कथं भीष्ममहं सङ्ख्ये द्रोणं च मधुसूदन ।

इषुभिः प्रतियोत्स्यामि पूजार्हावरिसूदन ॥ २-४ ॥

கதம் பீஷ்மமஹம் ஸங்க்யே த்ரோணம் ச மதுஸூதன |

இஷுபி: ப்ரதியோத்ஸ்யாமி பூஜார்ஹவரிஸூதன ||

கதம் – எப்படி;

பீஷ்மமஹம் = பீஷ்மம் + அஹம்;  பீஷ்மம் – பீஷ்மரை; அஹம் – நான்; ஸங்க்யே – யுத்தத்தில்; த்ரோணம் ச – துரோணரையும்;         மதுஸூதன – மது என்ற அரக்கனை கொன்றவரே;

இஷுபி: – பாணங்களால்; ப்ரதியோத்ஸ்யாமி – எதிர்த்து போரிடுவேன்?             பூஜார்ஹாரிஸூதன = பூஜார்ஹெள + அரிஸுதன;

பூஜார்ஹெள – பூஜிக்க தகுந்தவர்களாகிய;

அரிஸூதன – பகைவரைக் கொல்பவரே

ஸ்லோக பொருள்:

அர்ஜுனன் கூறுகிறான்.

மது என்ற அரக்கனை கொன்றவனே, பகைவரை கொல்பவரே! எப்படி பீஷ்மரையும், துரோணரையும் இந்தப் போரில் பாணங்களால் எய்து எதிர்த்து போரிட முடியும்.  அவர்களிருவரும் வணங்குவதற்குரியவர்கள் அவர்களை என்னால் எப்படி கொல்ல முடியும்?

விளக்கம்:

இந்த போரை(யுத்தத்தை) நான் செய்ய விரும்பவில்லை. அவர்கள் என்னை கொன்றாலும், நான் அவர்களைக் கொல்ல மாட்டேன் என்று கூறி மனதளர்வுடன் தன் தேரில் அமர்ந்த அர்ச்சுனனிடம் பகவான் அவனது வருத்தத்தை பொருட்படுத்தாமல் ஒரு நண்பனைப் போல் பேசி நிந்திக்கிறார்.

பகவானின் நிந்தனையை கேட்ட அர்ச்சுனன், நான் இவ்வளவு துயரப்பட்டு பகவானிடம் பேசியும், பகவான் அதை சற்றும் பொருட்படுத்தவோ, கண்டு கொள்ளவோ இல்லாமல் நிந்திக்கிறாரே, என்று நினைத்த அவனது மனதில் சில மாற்றங்கள் ஏற்படுகிறது. அவன் அவனது மனதை சற்று ஆழ்ந்து பார்க்கிறான். அவனது மனம் தன்னிடத்திலேயே திறக்கிறது. இப்போது அவனுடைய கலங்கிய மனம் சற்று தெளிவடைய தொடங்குகிறது.

பொதுவாக எல்லோரும் திறந்த மனதுடன் இருக்க வேண்டும் என்று சொல்கிறோம். ஆனல் நம் மனதே நம்மிடம் திறந்த மனதுடன் இருப்ப தில்லை. மேலும் எல்லோருமே மற்றவர்களிடமும்  தன் மனதை மறைத்தே வாழ்கிறார்கள். அதன் விளைவு அவர்களிடமே அவர்களுடைய மனதையும், புத்தியையும் மறைத்து விடுகிறார்கள்.

இறைவனின் திட்டம், அல்லது தர்மம் என்பதில் எந்த வித பிழையும் நேராது. ஒருவன் மற்றவர்களிடம் உண்மையை மறைத்தும், வஞ்சித்தும் வாழ்ந்தால் இறைவன் அவர்களுக்கு அவன், அவனையே வஞ்சித்து வாழும் சூழ்நிலையை உண்டாக்கி விடுவார். அவர்களிடமே, அவர்கள் திறந்த மனதுடன் இருக்க மாட்டார்கள். நாம் சில மனிதர்களை சந்திக்க பயப்படுகிறோம். அதுபோல் நாம் நம்முடைய மனதை சந்திக்க பயம் கொள்கிறோம். அதனால் தான் நாம் நம்முடைய மனதுடன் இருக்க விரும்புவதில்லை. அதற்காக தான் நாம் பொழுது போக்குக்காக வெளி பாதார்த்தங்களை (தொடர்புகளை) நாடுகிறோம். நம் மனதிடம் நாம் இருக்கும் போது  நம்மைப் பற்றிய உண்மைகளை நாம் ஏற்க மறுக்கிறோம். ஆகவே தான் நாம் நம் மனதுடன் தனிமையில் இருக்க பயம் கொள்கிறோம்.

வாழ்க்கையில் எதை அடைய வேண்டும் என்றால், நம்முடைய மனதை தான் அடைய வேண்டும். காரணம் நம்முடைய மனம் நம்மிடம் இல்லை, நம் மனம் வெளி பதார்த்தங்களை கொண்டு நிரம்பி இருக்கிறது. ஆகையால் தான் பிரார்த்தனையில் முக்கியமாக எனது மனதை என்னிடம் கொடு,  என்னுடைய மனம் எனது நண்பனாக இருக்க வேண்டும், என்னுடைய மனம் என்னை ஏமாற்றக் கூடாது என்று பிரார்த்திக்கிறோம். நம்முடைய மனம் நம்மை ஏமாற்றாமல் இருக்க வேண்டுமெனில் நாம் யாரையும் ஏமாற்றக் கூடாது. ஆகவே சரியான புருஷார்த்தம் அடைய வேண்டுமெனில் நம்முடைய மனம் நம்மிடம் திறந்த மனமாக இருக்க வேண்டும் என்பது தான்.

இங்கு அர்ச்சுனனின் மனம் திறக்கிறது என்றால் அவன் எத்தனையோ பிறவி களில் செய்த புண்ணியத்தின் பலன். இப்போது அர்ச்சுனன் தன்னுடைய சம்சாரத்தை தெளிவாக உணர்கிறான்.

பகவானின் நிந்தனையின் விளைவாக அவனது மனக்கலக்கம் கொஞ்சம், கொஞ்சமாக தெளிவடைய தொடங்குகிறது. அவனுடைய புத்தியானது மோஹத்தின் வசப்பட்டு எப்படியெல்லாம் அவனை ஏமாற்றி வந்ததோ அது மாறி புத்தியானது தெளிவடைகிறது. அவனுடைய சம்சாரத்தை (துக்கத்தை) தெளிவாக உணர்கிறான்.

எனக்கு இராஜ்யம் வேண்டாம், இது அதர்மம், யுத்தத்திற்கு பின் ஜாதி தர்மம், குல தர்மம் சீர் குலைந்து விடும் ஆகவே நான் யுத்தம் செய்ய விரும்ப வில்லை என்று அர்ச்சுனன் யுத்தம் செய்யாமலிருக்க ஒரு பெரிய பட்டியல் இட்டு கூறினான். ஆனால் உண்மையில் பீஷ்மர், துரோணர் ஆகியோரிடம் ஏற்பட்ட பற்று தான் காரணம் என்பதை அர்ச்சுனனால் ஏற்றுக் கொள்ள முடியாமல் மேலே கூறிய காரணங்களை ஏற்றி வைத்தான். இப்போது அர்ச்சுனன் தன்னுடைய ராஹத்தையும், அதனால் ஏற்பட்ட மோஹத்தையும் உணர்கிறான். அவனது மனமும், புத்தியும் திறக்கிறது, சிறிது சிறிதாக உண்மையை உணர்கிறது.

உண்மையில் தான் போர் செய்ய விரும்பாதது பீஷ்மர், துரோணர், ஆகியோர் களின் மேல் ஏற்பட்ட பற்றுதல் தான் காரணம் என்பதை உணர்ந்து. பீஷ்மரை யும், துரோணரையும் நான் எதிர்த்து வாதிடுவதே தகாதது. அத்தகையவர் களை நான் எப்படி போரில் வில்லெடுத்து போராடுவேன், அதற்கான துணிவு எனக்கு எப்படி உண்டாகும்? பாட்டனாரோடு போர் புரிந்தவன், ஆச்சாரியாரை எதிர்த்தவன் என்ற அவப்பெயர் வந்து விடும் அல்லவா? என்று கூறினான்.

அர்ச்சுனன், பகவானை இரண்டு அடைமொழி கொடுத்து அழைக்கிறான். ஒன்று மதுஸூதனா, மன்றொன்று அரிஸூதனா.

மதுஸூதனா என்பதற்கு பொருள் மது என்ற அரக்கனை கொன்றவரே, அரிஸூதனா என்பதற்கு பொருள் அரி என்றால் பகைவன், பகைவனை அழித்தவரே. இந்த அடைமொழி மறைமுகமாக இரண்டு விஷயங்களை அர்ச்சுனன் குறிப்பாக உணர்த்துகிறான். அரக்கனை அல்லது பகைவனை போரிட்டு கொல்வது சுலபம். ஆனால் நான் என்னுடைய குருவையும், பாட்டனாரையும், உறவினர்களையும் போரிட்டு கொல்ல என்னால் எப்படி துணிய முடியும் என்று அர்ச்சுனன் குறிப்பாக உணர்த்துவதாக சில விளக்க ஆசிரியர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

அடுத்து வரும் ஸ்லோகங்களில் அர்ச்சுனன் தன் மனநிலையை கூறுகிறான். நல்ல சிஷ்யனாக மாறுவதற்கான எல்லா தகுதியையும் அடைகிறான்.

No classes added yet.

Our Visitor

000568
Users Today : 6