Poornayogam

Sanatana Dharma – The Eternal Way of Life

Home » Sreemad Bhagavatgita Lesson -01 Arjuna Vishada Yogam – Tamil » ஸ்லோகம் – 01

ஸ்லோகம் – 01

धृतराष्ट्र उवाच ।

धर्मक्षॆत्रे कुरुक्षॆत्रॆ समवेता युयुज्सवः ।

मामकाः पाण्डवाक्श्चैव किमकुर्वत सञ्जय ॥ (१-१) ॥

திருதராஷ்ரடிர உவாச-

தர்மஷேத்ரே குருஷேத்ரே ஸமவேதா ய்யுத்ஸவ: |

மாமகா: பாண்டவாச்சைவ கிமகுர்வத ஸஞ்சய || (1-1) ||

திருதாஷ்ட்ரன் கேட்கிறார்.

சஞ்ஜயா! தர்மக்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் யுத்தம் செய்ய விரும்பியவர்களாக வந்திருப்பவர்கள், என்னைச் சார்ந்தவர்களும், பாண்டவர்களும் என்ன செய்கிறார்கள்?

மஹாபாரதம் வனபர்வம் 83வது அத்தியாயத்திலும். சல்ய பர்வம் 53வது அத்தியாயத்திலும் குருக்ஷேத்திரத்தின் பெருமை விஷேசமாக விளக்கப் படுகிறது. அது சரஸ்வதி ந்தியின் தென் புறத்திலும், த்ருஷத்வதீ நதியின் வட புறத்திலும் உள்ள இடைப்பட்ட பகுதியில் இருக்கிறது என்று கூறப்படு கிறது. அதன் நீள, அகலம் ஐந்துக்கு ஐந்து யோஜனை தூரம் என்று கூறுகிறார்கள, (‘யோஜனை’ என்பது பழங்காலத்தில் தூரத்தை அளக்க பயன் படுத்தப்பட்ட ஒரு வேதகால அளவாகும். இதன் சரியான அளவு நிச்சயமாக தெரியவில்லை. அறிஞர்களிடையேக் கருத்து வேறுபாடே நிலவுகிறது. இது நான்கு முதல் ஒன்பது மைல் வரை இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.)

இந்த இடம் அம்பாலாவுக்குத் தெற்கேயும், டில்லிக்கு வடக்கேயும் உள்ளது. இப்பொழுதும் குருக்ஷேத்திரம் என்ற இடம் அங்கே உள்ளது. இதற்கு மற்றொரு பெயர் ‘ஸமந்தபஞ்சகம்’ என்பது. ‘சதபதப்ராஹ்மணம்’ முதலிய நூல்களில் இங்கு அக்னி, இந்திரன், ப்ரம்மா முதலிய தேவர்கள் தவம் செய்தார்கள். குரு மஹாராஜாவும் இங்கே உயரிய தவம் செய்தார். அங்கே பல யாகங்களும் நடந்தது. மஹாபாரத்தில் இந்த இடம் ‘தவக்ஷேத்திரம்’ என்று அழைக்கப்படுகிறது. தவங்கள் செய்வதற்காக அர்ப்பணம் செய்யப் பட்ட இடம் என்பதே இதன் பொருள்.

த்ருதராஷ்டிரர் ‘மாமகா’ என்ற சொல்லினால் தம் கட்சியைச் சார்ந்த அனைத்து யுத்த வீரர்களையும் துரியோதனன் முதலான தம் நூற்றியோரு குமார்களையும் சேர்த்து குறிப்பிடுகிறார். பாண்டவர் என்ற சொல்லினால் யுதிஷ்டிரர் கட்சியைச் சார்ந்த அனைத்து வீரர்களையும், யுதிஷ்டிரர் முதலான ஐந்து சகோதரர்களையும் குறிப்பிடுகிறார். பார்வையற்ற அரசனாகிய திருதராஷ்டிரன், தன் புத்திரர்களைத் தன் தம்பியின் புத்திரர்களிடமிருந்து பிரித்துக் கூறுவதிலிருந்து திருதராஷ்டிரரின் மனநிலை வெளியாகிறது. தார்மீக நெறியற்று, நியாயமற்றுச் செயல்படும் திருதராஷ்டிரன் போர்களத்தில் என்ன நடக்கிறதோ என்று அறிந்துக் கொள்ளும் பதற்றத்துடன் தன் சாரதியும், ஆலோசகனும் ஆகிய சஞ்சயனி டம் போர்கள நிகழ்வுகள் குறித்துத் தனக்கு விளக்குமாறு கேட்கிறான்.

அறியாமையுடனும், நேர்மையற்றும் இருப்பவர்கள் வாழ்க்கை முறையில் இருக்கும் நிதர்சன உண்மைகளை ஒப்புக் கொள்ள மறுப்பார்கள். ‘தான் யார்’  என்பதை உணர்வதே வாழ்க்கையின் ஒட்டு மொத்த இலக்காகும். இந்த அரிய உண்மையைப் புரிந்துக் கொள்ளாமல் அறியாமையில் மூழ்கியுள்ள பலர் தங்களுக்காக மட்டுமே வாழ்வதுடன் மற்றவர்களைப் பற்றித் துளியும் அக்கறைக் கொள்வதில்லை. குடும்பம், சமுதாயம் அல்லது ஒரு கட்டமைப் பில் வயதில் மூத்தவர்கள் சிறியவர்களுக்கான உரிமைகளை மறுக்காமல் தர வேண்டும். அவ்வாறு நிகழாத போது தான் உரிமைகள் மறுக்கப்பட்ட அநீதி இழைக்கப்பட்டவர்களின் மனதில் வெறுப்பு உருவாகிறது. ஒரு நல்ல குளத்தை அழுகிப்போன ஒரு மீன் அந்த குளம் முழுவதையும் மாசுள்ளதாக ஆக்குவது போல் நெறியற்ற ஒருவனால் ஒரு சமூகமே தவறான வழிக்குத் தள்ளப் பட்டு விடும்.

சுயநலமான, முட்டாள்தனமான, பேராசைக் குணமுடைய தலைவர்களால் மாபெரும் அரசுகள் பேரழிவிற்கு உள்ளாகியுள்ளன. ஒரு மன்னன் அல்லது தலைவன் எப்போதும் நேர்மையுடனும், நீதிவழுவாமலும் மற்றவர்களுக்கு ஒரு உதாரணமாக திகழவேண்டும். அத்தகைய உதாரணத்திற்கு முற்றிலும் எதிரானவன் தான் திருதராஷ்டினன்.

 

No classes added yet.

Our Visitor

000566
Users Today : 4