மாயை
உலகத்தை மாயை என்று சொல்கிறோம். இந்த உலகத்தில் இத்தனை காரியங்கள் கண்கூடாக நடந்து கொண்டிருக்கும் போது எப்படி மாயை என்று சொல்லலாம்? என்ற கேள்வி எழுகிறது. எல்லாம் மாயை, சத்தியமாக எதுவும் இல்லை என்று பெளத்தம் சொல்கிற மாதிரி வேதாந்த மதம் சொல்லவில்லை. ‘பிரபஞ்சமெல்லாம் மாயை தான்; ஆனால் இதற்கு ஆதாரமாக பிரம்மம் என்பது பரம சத்தியமாயிருக்கிறது’ என்று சொல்கிறது.
மாயை என்பது கானல் நீர் மாதிரியானது. கானல் நீர் கண்ணுக்குத் தெரிகிறது. ஆனால் உண்மையில் அதில் நீர் இல்லை, கானல் நீர் உண்மையான நீர் இல்லை என்று அறிந்தவரகளுக்கும் கூடக் கானல் நீர் தெரியத்தான் செய்கிறது. அவ்விதமே உலகை மாயம் என உணர்ந்த ஞானிகளுக்குக் கூட லோகம் தெரியத்தான் செய்கிறது.
அடியோடு இல்லாத வஸ்துவல்ல உலகம். ஞானம் வருகிற வரையில் உள்ள தோற்றம் அது. கனவு காண்கிற வரையில் கனவு மெய்யாக இருந்து, நாம் விழித்துக் கொண்ட பின் இல்லாது போவது போல், நாம் அஞ்ஞானத்தில் தூங்கிக் கொண்டிருக்கிற வரையில் உலகம் மெய்யாக இருந்து, நாம் ஞான நிலையில் விழித்துக் கொண்டவுடன் மறைந்து போகிறது. இவ்வாறு முழு பொய்யாக இல்லாமல், தோன்றி மறைகிற உண்மையாக உள்ள உலகத்தை ‘பிராதி பாஸிக ஸத்தியம்’ என்பார்கள். ‘பிராதி பாஸிக ஸத்தியம்’ என்றால், தோன்றி மறையும் ஒரு தோற்றப்பொருள். இது எப்போதும் இல்லாதது என்று சொல்லப்படாமல், தற்காலிகமாக உண்மையைப் போல் தோன்றுவது. ‘பிராதிபாஸிக ஸத்யம்’ என்பது வேதாந்தத்தில் பயன்படுத்தப்படும் சொல்.
மாயை என்பது ‘ஸத்’ அல்லது ‘அஸத்’ என்று விவரிக்க இயலாததும், மூன்று குணங்கள் (சத்துவ, ரஜோ, தமஸ்) கொண்டதும், ஞானத்திற்கு எதிரானதாகவும் உள்ள ஒன்று. ‘மாயை’ ‘அஞ்ஞானம்’ என்றும் அறியப் படுகிறது. இந்த அக்ஞானத்திலிருந்தே (இந்த அஞ்ஞானம் தான் ஜடப்பொருள் என்றும் அறியப்படுகிறது) படைப்பானது தொடங்குகிறது. இந்த அஞ்ஞானத் தால் தோன்றியுள்ள ஆகாயம் முதல் பூமி வரையுள்ள எல்லா ஜடப் பொருட் களும் ‘அவஸ்துவே’ ஆகும். எவையெல்லாம் புலன்களால் உணரப்படு கின்றனவோ, உறுப்புக்களுடன் கூடியுள்ளனவோ, மாறுபாடு அடையும் தன்மையுடையனவோ அவையனைத்தும் அழியக்கூடியதாகும். எனவே அவை அனைத்தும் ‘அவஸ்து’ ஆகும். பிரம்மத்தை தவிர மற்றனைத்தும் (பிரம்ம லோகம் வரையிலுள்ள எல்லா உலகங்களும்) இத்தகைய இயல்பை உடையதாக இருப்பதால் ‘அவஸ்து’வே ஆகும்.
இந்த மாயைக்கு இரு சக்திகள் உள்ளன. அவை ‘ஆவரணசக்தி’, ‘விக்ஷேபசக்தி’. எது ஆத்மாவின் சச்சிதானந்த ஸ்வரூபத்தை மறைத்து உள்ளதோ அது ஆவரணசக்தி. எது உலகத்தை பிரம்மத்திடமிருந்து வெளிகொண்டு (ஏற்றி வைக்கிறதோ) வருகிறதோ, அதாவது உலகமானது தெளிவாக காணும்படி வெளிப்படுத்துகிறதோ அது விக்ஷேபசக்தி
ஆவரணசக்தி: பிரம்மம்(ஆத்மா)மானது எல்லையற்றது, சச்சிதானந்த ஸ்வரூபம், பூர்ணமானது. மாயையோ ஜடம், வரையறைக்குட்பட்டது. இந்த மாயையானது ஆத்மாவை மறைப்பதென்பது; மேகம் சிறியதாக இருந்தாலும் பல யோஜனைகளுக்கு பரந்து விரிந்துள்ள சூரிய மண்டலத்தைப் பார்த்துக் கொண்டிருப்பவனின் பார்வையை மறைப்பதன் மூலம் எப்படி சூரிய மண்டலத்தை மறைத்து விடுவதுப் போல் தோன்றுகிறதோ, (உண்மையில் மேகமானது சூரியனை மறைப்பதில்லை, அதை பார்த்து கொண்டிருப் பவனின் பார்வையின் வழியை மறைக்கிறது. சூரியன் எப்பொழுதும் ஒளிர்ந்து கொண்டு தான் இருக்கிறது) இது போலவே அஞ்ஞானமானது (மாயையானது) ஆத்மாவை(பிரம்மத்தை) மறைப்பது போல் தோன்றுகிறது. இது மாயையின் ஆவரணசக்தி.
விக்ஷேபசக்தி: அக்ஞானத்தின்(மாயையின்) ஆவரணசக்தியினால் ஆத்மா வின் தன்மை, இயல்புகளை மறைத்த மாயை ஆத்மாவிடம் ஆத்மாவின் இயல்பு அல்லாத செய்பவன்(கர்த்தா), அனுபவிப்பவன் (போக்தா), இன்பம், துன்பம், மோகம், என்னும் இயல்புகளை ஏற்றி உலகியலை சார்ந்த மனிதனாக மாற்றி விடுவது தான் மாயையினுடைய இந்த விக்ஷேப சக்தி.
இது எவ்விதம் சாத்தியப்படும் என்பதை புரிந்து கொள்வதற்கு பாம்பு – கயிறு உதாரணம். மாலை நேரம் மங்கலான இருளானது கயிற்றின் உண்மை இயல்பை மறைத்து பாம்பாக தோற்றமளிக்க செய்து விடுகிறது. இந்த உதாரணத்தில் மங்கலான இருளானது ஆவரண(மறைத்தல்) சக்தியாகவும், விக்ஷேபசக்தியாகவும் (ஏற்றிவைத்தல்) செயல்பட்டு ‘உண்மையான இருத்தலை’ மறைத்து ‘இல்லாத’ ஒன்றை ஏற்றி வைத்து ‘இல்லாத ஒன்று இருப்பதை’ போன்ற தோற்றமளிக்க செய்கிறது. இது தான் அஞ்ஞானம், மாயை.
சுருக்கமாக ஞாபகத்தில் வைக்க வேண்டியது: “இருத்தலை மறைத்து இல்லாத ஒன்றை இருத்தலின் மேல் ஏற்றி வைத்து அந்த இல்லாத ஒன்று இருப்பதை போன்று தோற்றமளிக்க செய்யும் சக்தியே மாயை”.
அடுத்து மாயை என்பது சுதந்திர சக்தியல்ல அது பிரம்மத்தை சார்ந்து இருத்தல் தன்மையுடையது.
“ப்ரஹமாச்ரயா ஸத்வ ரஜஸ் தமோ குணாத்மிகா மாயா அஸ்தி”
ப்ரஹ்ம + ஆஸ்ரயா = ப்ரஹமாச்ரயா
ஸத்வ ரஜஸ் தமோ குணாத்மிகா = ஸத்வ ரஜஸ் தமோ என மூன்றை குணங்களை கொண்ட
மாயா = மாயா
ப்ரஹமாச்ரயா அஸ்தி = பிரஹ்மத்தை சார்ந்த இருத்தல் தன்மையுடையது.
சார்ந்து இருத்தல் என்பது எந்த மாதிரி சார்ந்திருப்பது என்று பார்க்க வேண்டும். ஒரு புத்தகம் மேசை மீதோ அல்லது அலமாரி மீதோ இருக்கிறது. அப்படியென்றால் அந்த புத்தகம் மேசையை அல்லது அலமாரியை சார்ந்து இருக்கிறது என்று சொல்லலாம். இங்கே ஒன்றை சார்ந்து ஒன்று இருக்கிறது என்னும் போது இரண்டு வெவ்வெறு பொருட்களில் ஒரு தனி பொருள் இனியொரு தனி பொருள் ஒன்றை சார்ந்து உள்ளது என்று நாம் புரிந்து கொள்கிறோம். அப்படியென்றால் புத்தகம் என்கிற தனி பொருள் மேசை அல்லது அலமாரி என்கிற வேறொரு தனி பொருளை சார்ந்து அதன் மேலே இருக்கிறது என்று நாம் புரிந்து கொள்கிறோம். ஆனால் மாயை, பிரம்மம் விஷயத்தில் அப்படியில்லை. மாயை, பிரம்மம் விஷயத்தை நாம் புரிந்துக் கொள்ள வேண்டியது நிஜம், நிழல் என்ற தத்துவ முறை படி. அப்படியென்றால் நாம் மதிய வேளையில் வெயிலில் நடந்து செல்லும் போது சூரிய ஒளி நம் உடலின் மீது பட்டு நம் நிழல் பூமியில் விழுகிறது. இந்த நிழலானது நம் உடலை சார்ந்து இருக்கிறது. இதில் உடல் பிரம்மம் நிழல் மாயை. இந்த தத்துவப்படி தான் மாயை பிரம்மத்தை சார்ந்து இருக்கிறது என்று புரிந்துக் கொள்ள வேண்டும். இதிலிருந்து மற்றொரு உண்மையையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். பிரம்மம் சுதந்திரமான ஒன்று. அது சத் ஸ்வரூபம் (இருத்தல்) ஆனாது. ஆனால் மாயைக்கு சுதந்திரமான ஒரு இருத்தல் என்பது இல்லை. அது பிரம்மத்தை சார்ந்து தான் இருக்கிறது. ஆகையால் மாயை ‘மித்யா’ ஸ்வரூபம். நமக்கு தெளிவான புரிதலுக்கு இரண்டு உதாரணம் பார்ப்போம்.
பானை என்ற ஒன்று களிமண்ணை சார்ந்து இருக்கிறது. நகை என்ற ஒன்று தங்கத்தை சார்ந்து இருக்கிறது. பானை, நகை இவற்றை நாம் ஆராய்ந்தோமானால் பானை, நகை என்பது வஸ்துவல்ல, நாமமும், ரூபமும் மட்டுமே. பானை என்ற நாம ரூபம் களிமண் என்ற வஸ்துவை சார்ந்தது என்றும், நகை என்ற நாம ரூபம் தங்கம் என்ற வஸ்துவை சார்ந்தது என்று நமக்கு புரிய வரும். பானை, நகை என்ற நாம ரூபம் ‘விளங்க’ வேண்டுமெனில் களிமண், தங்கம் என்ற வஸ்துவை சார்ந்து தான் இருக்க வேண்டும். அதுபோலவே மாயை என்ற ஒன்று ‘விளங்க’ வேண்டுமெனில் பிரம்மத்தை சார்ந்து தான் இருக்க வேண்டும். எந்த ஒன்று தன்னளவில் இருத்தலின்றி மற்றொன்றை சார்ந்து ‘விளங்குகின்றதோ’ அது ‘மித்யா’ என்று சாஸ்த்திரம் கூறுகிறது.
மாயை தன்னளவில் ஜடமாக உள்ளது. மாயை பிரம்மத்தை சார்ந்துள்ளது என்று பார்த்தோம். அந்த பிரம்மமானது சுதந்திரமான இருப்பை உடையதும், சைதன்யத்தையும் (உணர்வும், சேதனமும்) உடையது. இந்த மாயையானது பிரம்மத்திடமிருந்து இருப்பையும், சேதனத்துவத்தையும் பொய்யாக தன்னில் வாங்கி கொண்டு ஜடமான மாயை தனக்கென்று ஒரு இருப்பும், தனக்கென்று ஒரு உணர்வும் உள்ளது போன்ற நிலை அடைந்து பிரம்மத்தை போலவே செயல்படுகிறது.
இப்போது நம் முன்னால் இரண்டு தத்துவம் இருக்கிறது. ஒன்று பிரம்மம், இரண்டாவது மாயா. இந்த இரண்டு தத்துவமும் தனித்தனியாக பிரித்து பார்த்தோமானால் பிரம்மம் ‘பிரம்மமாக’ இருக்கிறது. மாயா பிரம்மத்திடம் இருந்து பெற்ற இருப்பும், ஞானமும் சேர்ந்து அறிவு ஸ்வரூபமாக இருக்கிறது.
இப்போது மாயையிடம் என்னென்ன இருக்கின்றது எனப் பார்ப்போம். பிரம்மத்திடமிருந்து பெற்ற இருப்பும், ஞானமும் சேர்ந்து அறிவு ஸ்வரூப மாக இருக்கும் மாயையிடம் ஆதாரமாக பிரம்மனும் இருக்கிறது. “பிரம்மனின் துணைக் கொண்டு பிரம்மனிடம் சேர்ந்து இருத்தலுடனும், அறிவு ஸ்வரூபமாகவும் இருக்கும் இந்த மாயையே ‘ஈஸ்வரனாக’ அறியப் படுகிறார்”. பிரம்மத்தை சேர்த்து பிரம்மத்தின் தன்மையையும் உள்ளடக்கி மேலோட்டமாக மாயையுடன் இருப்பவர் தான் ஈஸ்வரன்.
ஈஸ்வரன் = பிரம்மன் + மாயா
ஈஸ்வரன் என்பவர் உலகத்தை படைத்தவர். இந்த ஈஸ்வரனிடம் என்னென்ன அம்சங்கள் இருங்கின்றன. ஈஸ்வரனிடம் பிரம்மம் + மாயா என்ற இரண்டு தத்துவங்கள் இருக்கின்றன.
இப்போது பிரம்மத்துக்கு இரு நிலைகள். ஒரு நிலை மாயையோடு சேர்ந்த நிலை, இனியொரு நிலை மாயையோடு சேராத நிலை. மாயையோடு சேராத நிலையே உயர்ந்த நிலை. அதுவே குணங்கள் யாவும் கடந்த நிலை. இந்த நிலையை ‘நிர்குண பிரம்மம்’ என்கிறோம். நிர்குணம் என்றால் குணங்கள் இல்லாதது என்று பொருள். குணங்களை கடந்த உயர்ந்த நிலை யிலுள்ள பிரம்மத்தோடு குணங்களை உடைய மாயை சேரும் போது அந்த நிலையை ‘சகுண பிரம்மம்’ என்கிறோம். சகுணம் என்றால் குணங்களோடு கூடியது என்று பொருள். இந்த சகுண பிரம்மன் தான் ‘ஈஸ்வரன்’ என்று அறியப்படுகிறார்.
ஈஸ்வரன் என்பவர் உலகத்தை படைத்தவர், அந்த ஈஸ்வரனிடம் பிரம்மம் + மாயா என்ற இரண்டு தத்துவங்கள் இருக்கின்றன என பார்த்தோம் ஆனால் உலகம் படைக்கப்படும் போது அந்த பிரம்மத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.
நாம் காணும் இந்த பிரபஞ்சம் மூன்று நிலையை உடையது. சூலபிரபஞ்ச நிலை, சூஷ்ம்பிரபஞ்சநிலை, காரணபிரபஞ்சநிலை.
காரண பிரபஞ்சம் என்பது நாம் அனுபவித்து கொண்டிருக்கும் சூலபிரபஞ்ச மும், அதன் முந்தைய அவஸ்தையான சூஷ்மபிரபஞ்சமும் காரண அவஸ்தையிலிருந்து தான் வந்தது. அந்த காரண அவஸ்தை தான் காரணபிரபஞ்சம். இந்த ‘ஈஸ்வரன்’ தான் காரணபிரபஞ்சம்.
காரணபிரபஞ்சத்திலிருந்து தான் சூஷ்ம, சூலபிரபஞ்சம் உற்பத்தியாகின்றன என்றால் காரண பிரபஞ்சமாக இருக்கும் ஈஸ்வரனிடமிருந்து தான் சூஷ்ம, சூலபிரபஞ்சம் உற்பத்தியாகின்றன என்று நமக்கு விளங்குகிறது. அடுத்து ஈஸ்வரனிடமிருந்து சூஷ்ம, சூலபிரபஞ்ச சிருஷ்டி எப்படி என்று பார்ப்போம். உதாரணத்தோடு பார்ப்போம். ஒரு பானையை செய்கின்றோம் என்றால் முதலாவதாக களிமண் தேவை. களிமண்ணிற்கு ‘உபாதானகாரணம்’ என்று பெயர். அடுத்து அந்த பானையை வடிவமாக கொண்டு வருவதற்கு ‘அந்த’ ஞானமுடைய ஒருவன் தேவை. அதற்கு ‘நிமித்தகாரணம்’ என்று பெயர். பானை விஷயத்தில் ‘களிமண்’ உபாதானகாரணமாகவும், ‘குயவன்’ நிமித்த காரணமாகவும் இருக்கின்றன. ஆனால் ‘பிரபஞ்ச சிருஷ்டியில்’ ‘ஈஸ்வரனே’ உபாதானகாரணமாகவும், நிமித்த காரணமாகவும் இருக்கிறார்.
பிரபஞ்ச திருஷ்டியில் ஈஸ்வரனே உபாதான காரணமாகவும் நிமித்த காரணமாகவும் இருக்கிறார் எப்படி என்பதை விளக்கமாக பார்ப்போம். சாஸ்த்திரத்தில் சிலந்தி பூச்சியை உதாரணமாக எடுத்து விளக்கம் கொடுப்பது பிரசித்தம். சிலந்தியானது தானே உபாதானகாரணமாகவும், நிமித்தகாரணமாகவும் இருந்து தன்னுடைய வலையை பின்னுகிறது. வலையை பின்னுவதற்கான பொருளை தன்னிடமிருந்தே எடுத்துக் கொண்டு தன் அறிவை கொண்டே வடிவமைத்து வலையை சிருஷ்டிக்கிறது.
இந்த ஈஸ்வரனிடம் என்னென்ன அம்சங்கள் இருக்கின்றன. மாயையும், பிரம்மத்திடம் இருந்து பெற்றுக் கொண்ட சைதன்யமும்(அறிவும்,உணர்வும்). பிரம்மத்திடமிருந்து பெற்று கொண்ட சைதன்யத்தோடு ‘மாயை’யை தன் உடலாக கொண்டவர் ‘ஈஸ்வரன்’. ஈஸ்வரன் தன் உடலாக கொண்ட மாயையை உபாதானமாகவும், பிம்மத்திடமிருந்து பெற்று கொண்ட சைதன்யத்தை நிமித்தமாகவும் கொண்டு இந்த உலகத்தை படைத்துள்ளார்.
ஈஸ்வரன் தன்னிடமிருக்கும் அறிவை நிமித்தமாக கொண்டு, அந்த அறிவின் துணை கொண்டு, உடலாக கொண்ட மாயையை உருமாற்றமடைய வைத்து உலகை படைத்தார். இங்கு முக்கியமாக புரிந்து கொள்ள வேண்டியது ‘மாயை உருமாற்ற’த்தை அடைந்து உலகமாக மாறுகிறது. உருமாற்றம் என்பதை சமஸ்கிருதத்தில் பரிணாமம் என்று பெயர். பரிமாணம் என்றால் மாற்றத்தை அடைவது, (உ.ம்) பாலானது மாற்றத்தை அடைந்து தயிராக மாறியது. அதே போல் மாயை உருமாற்றத்தை அடைந்து உலகமாக மாறியது.
உலகம் அல்லது பிரபஞ்சம் ‘மாயை’யின் உருமாற்றம். அப்படியெனில் ஒரு கோணத்தில் நம்முடைய ‘வியவஹாரம்’ முழுவதும் மாயையோடு தான். மற்றொரு கோணத்தில் பார்த்தால் ‘மாயை’யை ஈஸ்வரனின் உடலாக கொண்டும் ஈஸ்வரனின் சைதன்யத்தின் துணையோடும் இந்த உலகம் படைக்கப்பட்டிருப்பதாலும் நம்முடைய ‘வியவஹாரம்’ முழுவதும் ‘ஈஸ்வரனோடு’ தான். ஈஸ்வரனை அணுகும் போது நாம் எப்படி பயபக்தி யுடன் அணுக வேண்டுமோ அதே போல் உலக வியவஹாரங்ரகளிலும் பயபக்தியுடன் அணுகுதல் நன்மை பயக்கும்.
.
No classes added yet.






Users Today : 3