ஸ்லோகம்:19
य एनं वेत्ति हन्तारं यश्चैनं मन्यते हतम् ।
उभौ तौ न विजानीतो नायं हन्ति न हन्यते ॥ १९ ||
ய ஏநம் வேத்தி ஹந்தாரம் யஸ்சைநம் மந்யதே ஹதம் |
உபெள தெள ந விஜாநீதோ நாயம் ஹந்தி ந ஹந்யதே || 19 ||
ய: – எவன்; ஏநம் – இந்த ஆத்மாவை; ஹந்தாரம் – கொல்பவனாக; வேத்தி – நினைக்கிறானோ; ச – மற்றும்; ய – எவன்; ஏநம் – இந்த ஆத்மாவை; ஹதம் – கொல்லப்பட்டவனாக; மந்யதே – நினைக்கிறானோ; தெள – அந்த; உபெள – இருவருமே; ந விஜாநீத: – அறியாதவர்க்ள்; (ஏனெனில்) அயம் – இந்த ஆத்மா; (உண்மையில்) ந ஹந்தி – யாரையும் கொல்வதில்லை; ந ஹத்யதே – யாராலும் கொல்லப்படுவதுமில்லை.
எவன் இந்த ஆத்மாவை கொல்பவனாக நினைக்கிறானோ மற்றும் எவன் இந்த ஆத்மாவைக் கொல்லப்பட்டவனாக நினைக்கிறானோ அந்த இருவருமே அறியாதவர்கள். ஏனெனில் இந்த ஆத்மா உண்மையில் யாரையும் கொல்லுவதுமில்லை; யாராலும் கொல்லப்படுவதுமில்லை.
விளக்கம்:
பத்தொன்பது, இருபது இந்த இரண்டு ஸ்லோகங்கள் உபநிஷத் மந்திரங்கள். கடோபநிஷத்தில் ஆத்ம தத்துவத்தை எடுத்து சொல்கின்ற ஆசிரியரான எமதர்மராஜா இவ்விதம் ஆத்மாவினுடைய தத்துவத்தை விளக்குகிறார். அதை பகவான் மனதில் கொண்டு இந்த இரண்டு ஸ்லோகத்திலும் உபதேசம் பண்ணுகிறார். இந்த ஸ்லோகத்தின் மையக்கருத்து ஆத்மா அகர்த்தா, அபோக்தா. அநாத்மா கர்த்தா, போக்தா. (கர்த்தா என்றால் செயல் செய்பவன், போக்தா என்றால் செயலின் பலனை அனுபவிப்பவன். அகர்த்தா என்றால் எந்த செயலையும் செய்யாதது, அபோக்தா எதையும் அனுபவிக்காதது).
கர்த்தா என்றால் செயல் செய்பவன். நாம் ஒரு செயலை செய்தால் அந்த செயலை ‘நான் செய்தேன்’ என்று நமக்குள் ஒருவன் இருந்து சொல்கிறான். அப்படி சொல்கிறதற்கு தான் அஹங்காரம் என்று பெயர். ‘சாஸ்திரத்தில்’ ஒரு செயலை செய்து அந்த செயலை ‘நான் செய்தேன்’ என்ற ‘எண்ணத்திற்கு’ ‘அஹங்காரம்’ என்று பெயர். அந்த அஹங்காரத்தை தான் ;கர்த்தா’ என்று சொல்கிறோம். கர்த்தா ஒரு செயல் செய்தால் அந்த செயலை சமஸ்கிருதத்தில் ‘கர்மா’ என்று பெயர். நாம் ஒரு செயலை செய்தால் அதற்கு கண்டிப்பாக ஒரு பலன் உண்டு. பலன் இல்லாமல் ஒரு செயலும் இல்லை, ஏதாவது ஒரு பலன் எப்படியும் இருக்க தான் செய்யும். அந்த பலன் நமக்கு சாதகமாகவும் இருக்கலாம் அல்லாமலும் இருக்கலாம். எளிமையாக சொன்னால் கர்த்தா ஒரு கர்மத்தை செய்தால் அதற்கு கர்மபலன் என்று ஒன்று உண்டு. சாஸ்திரம் இந்த கர்ம பலனை இரண்டாக பிரிக்கிறது ஒன்று திருஷ்டபலன், இனியொன்று அதிருஷ்டபலன். திருஷ்டபலன் என்றால் நம் செய்த கர்மாவுக்கு உனடியாக தெரிகின்ற பலன். அதிருஷ்டபலன் நமக்கு தெரியாமல் வருகின்ற பலன். ஆகவே நாம் செய்கின்ற செயல் இரண்டு பலன்களை கொடுக்கிறது. தானம் என்று ஒரு செயலை செய்கிறோம் இந்த கர்மாவின் திருஷ்டபலன் என்பது நம்மிடம் இருக்கின்ற பொருள் அல்லது திரவியம் குறைகிறது அந்த திரவியம் இன்னொருவருக்கு செல்கிறது, சாஸ்திரம் சொல்கிறது இந்த கர்மாவுக்கு அதிருஷ்டபலனாக புண்ணியம் என்பது வருகிறது என்று. அடுத்து நாம் ஒருவருக்கு ஹிம்சையை கொடுக்கிறோம் அல்லது ஒரு பொருளை திருடுகிறோம் இதற்கு திருஷ்ட பலனாக நமக்கு ஒரு மகிழ்ச்சியும், பொருளும் வருகிறது, அதிருஷ்ட பலனாக பாவம் வருகிறது. இதிலிருந்து தெரிய வருவது அதிருஷ்டபலன் என்பது புண்ணியம், பாவம். இந்த புண்ணிய, பாவமெல்லாம் யாரை சார்ந்து இருக்கும் என்றால் எந்த கர்மாவை எந்த கரத்தா செய்தாரோ அவரை சார்ந்து இருக்கும். காலம் வரும் போது இந்த புண்ணிய, பாவமெல்லாம் சுக, துக்கமாக மாறி கர்மாவை செய்த கர்த்தாவை வந்தடையும். இதையெல்லாம் சரியாக நடைமுறை படுத்துபவர் தான் ஈஸவரன். கர்மம் அனைத்தும் ஜடம் அதுவாக வேலை செய்யாது அந்தந்த கர்ம பலனை அந்தந்த கர்த்தாவிடம் கொண்டு சேர்ப்பது ஈஸ்வரன். அது மாறவே மாறாது. ஒரு ஸ்லோகமே சமஸ்கிருதத்தில் இருக்கிறது. அதன் பொருள் சுருக்கம் ஒரு பெரிய பசு பண்ணை அந்த பண்ணையில் ஆயிரக்கணக்கான பசுக்கள், அந்த பசுக்களின் கன்றுக் குட்டிகளும் ஆயிரகணக்கில். அந்த பண்ணையில் பசுக்களையும், கன்றுக் குட்டிகளையும் தனி தனியாக பிரித்து கட்டி வைத்திருப்பார்கள். கன்றுக்குட்டிகளுக்கு பால் அருந்தும் நேரத்தில் அதை அவிழ்த்து விட்டால் அந்தந்த குட்டிகள் சரயாக அந்தந்த தாய் பசுவிடம் சென்று பால் அருந்தும் அதில் எந்த மாறுதலும் ஏற்படாது அதுபோல் ஈஸ்வரன் அவரவர் கர்ம பலன்களை அவரவருக்கு சேர்க்கின்றார். இதிலிருந்து நாம் புரிந்து கொள்வது யார் கர்த்தாவாக இருக்கின்றாரோ அவரே போக்தாவாகவும் (பலனை அனுபவிப்பவர்) இருப்பார். இது நியதி. எவர் எந்த கர்மத்தை செய்கிறார் களோ அந்த கர்மத்தின் பலனை அனுபவித்தே ஆக வேண்டும். இவ்விதம் கர்த்தாவாக இருந்து கர்மத்தை செய்து அந்த கர்மத்தின் பலனாக புண்ணியம், பாவத்தை உருவாக்கி சுக, துக்கத்தை அனுபவித்து கொண்டு வரும் வாழ்க்கையை தான் சாஸ்திரம் சம்சாரம் என்று சொல்கிறது. கர்த்தாவாக இருந்து போக்தாவாக இருப்பதை தான் சாஸ்திரம் சம்சாரம் என்று சொல்கிறது.
ஆத்மா அகர்த்தா, அபோக்தா என்று சொல்வதிலிருந்தே ஆத்மாவுக்கு சுகமும் இல்லை, துக்கமும் இல்லை ஆகவே ஆத்மா ‘அசம்சாரி’ என்று சித்திக்கிறது. அப்படியானால் சம்சாரம் என்பது யாருக்கு என்றால் அநாத்மா வுக்கு தான் சம்சாரம். அநாத்மா தான் கர்த்தா, அநாத்மா தான் போக்தா. ஆத்மா, அநாத்மா விவேகம் செய்யும் பொழுது ஆத்மா ஞான சொரூபம் என்றும், அநாத்மா ஜட சொரூபம் என்றும் பார்த்தோம். ஆத்மா ஞானசொரூபம், அறிவு சொரூபம், சேதன சொரூபம் அது கர்த்தா அல்ல, செயல் செய்வது இல்லையென்றால் ஜட பொருளான அநாத்மா எப்படி கர்த்தாவாக முடியும், எப்படி செயல் செய்யும். இதற்கு விளக்கம் பார்ப்போம். ஆத்மாவினுடைய ஞான சொரூபமானது அநாத்மாவினுடைய மனதில் ஒரு சேதனத்துவத்தை, அறிவை உண்டுபண்ணுகிறது பிரதிபிம்பத்தை போல. சூரியன் பிரகாச சொரூபம் அந்த சூரியனின் முன்னால் கண்ணாடியை வைத்தால் என்ன ஆகிறது பிரகாசமில்லாத கண்ணாடி சூரியனுடைய பிரகாசத்தை வாங்கி கொண்டு தான் பிரகாசத்துடன் இருப்பது போல் இருக்கின்றது. அதே போல் இந்த ஜடமான மனதில் ஆத்மாவினுடைய அறிவு சொரூபம் வந்த உடன் இந்த மனதானது ஆத்மாவை போல் அதுவும் சேதனத்துவத்தை அடைந்துவிடுகிறது. ஆத்மாவினுடைய சேதனத்துவத்தை அடைந்த இந்த மனமானது அறிவுடையதாக, உணர்வுடையதாக மாறி செயல் செய்யும் கர்த்தாவாகவும், அந்த செயலின் பலனை அனுபவிக்கும் போக்தாவாகவும்செயல்படுகிறது. இந்த மனதிற்கு மட்டும் ஆத்மாவினுடைய சைதன்யத்தை பிரதிபிம்பிக்கின்ற சக்தியை ஈஸ்வரன் படைக்க வில்லை யென்றால் ஜீவனும் கிடையாது, சம்சாரமும் கிடையாது. இந்த மனதிற்கு அப்படியொரு சக்தி இருக்கிறது. இந்த அறிவுடன் கூடிய மனதில் நான் என்கிற எண்ணத்துடன் கூடிய அஹங்காரம் தான் செயலை செய்கிறது அந்த செயலின் பலனை அனுபவிக்கிறது. ஆகவே ஜடமான மனது எப்படி கர்த்தாவாகும் என்று சொன்னால் ஆத்மாவினுடைய சாந்நித்யத்தில் மனதிற்கு அறிவு வருகிறது அந்த அறிவை வைத்து கொண்டு மனமும் நம்முடைய சூஷ்ம சரீரமும் கர்த்தா, போக்தாவாக செயல்படுகிறது.
ஆத்மா அகர்த்தா, அபோக்தா இதை தான் இந்த ஸ்லோகத்தில் பகவான் கூறுகிறார். பகவான் ஒரு செயலை எடுத்து உதாரணமாக காட்டி சொல்ல விரும்புகிறார். அர்ஜுனன் நிற்கிற இடம் ரணபூமி, யுத்தபூமி. யுத்த பூமியில் கொலை தான் நடக்கும். ஆகவே பகவான் கொலை செய்தல், கொலை செய்யப்படுதல் என்ற செயலை உதாரணமாக எடுத்து ஆத்மா அகர்த்தா, ஆத்மா அபோக்தா என்ற கருத்தை விளக்குகிறார்.
இந்த ஆத்மா யாரையும் கொலை செய்வதுமில்லை, இந்த ஆத்மாவை யாராலும் கொலை செய்யமுடியாதது என்பதை இந்த ஸ்லோகத்தில் பகவான் “எவன் இந்த ஆத்மா கொல்பவனாக நினைக்கிறானோ மற்றும் எவன் இந்த ஆத்மா கொல்லப்பட்டவனாக நினைக்கிறானோ இருவருமே ஆத்மாவை அறியாதவர்கள். ஏனெனில் இந்த ஆத்மா உண்மையில் யாரையும் கொல்லுவதுமில்லை; யாராலும் கொல்லப்படுவதுமில்லை”.என்று சொல்கிறார்.
இந்த ஸ்லோகத்தில் ஆத்மா கொலை செய்வதில்லை என்பதிலிருந்து ஆத்மா எதையும் செய்வதில்லை ஆகவே ஆத்மா அகர்த்தா. ஆத்மாவை யாராலும் கொலை செய்யமுடியாதது என்பதிலிருந்து ஆத்மா எதையும் அனுபவிக்காதது ஆகவே ஆத்மா அபோக்தா. எனவே இந்த ஸ்லோகத்தின் மைய கருத்து ஆத்மா அகர்த்தா, அபோக்தா. அநாத்மா கர்த்தா, போக்தா
ஸ்லோகம்:20
न जायते म्रियते वा कदाचिन्नायं भूत्वा भविता वा न भूयः ।
अजो नित्यः शाश्वतोऽयं पुराणो न हन्यते हन्यमाने शरीरे ॥ २० ॥
ந ஜாயதா ம்ரியதே வா கதாசிந்நாயம் பூத்வா பவிதா வா ந பூய: |
அஜோ நித்ய: ஸாஸ்வதோSயம் புராணோ ந ஹந்யதே ஹந்யமாநே
ஸரீரே || 20 ||
அயம் – இந்த ஆத்மா; கதாசித் – ஒரு பொழுதும்; ந ஜாயதே – பிறப்பதும் இல்லை; வா – அன்றியும்; ந ம்ரியதே – இறப்பதும் இல்லை; வா – அவ்வாறே; பூத்வா – முன் உண்டாகி; பூய: -பிறகு; ந பவிதா – ஏற்பட கூடியது என்பதும் இல்லை, (ஏனெனில்) அயம் – இந்த(ஆத்மா); அஜ: – பிறப்பற்றவன்; நித்ய: – நித்யமானவன்; ஸாஸ்வத: – எக்காலத்திலும் உள்ளவன்; புராண – பழமையானவன்; ஸரீரே – உடல்; ஹந்யமாநே – கொல்லப்படும் போதும்; (இந்த ஆத்மா); ந ஹந்யதே – கொல்லப்படுவதில்லை.
இந்த ஆத்மா ஒரு பொழுதும் பிறப்பதும் இல்லை, அன்றியும் இறப்பதும் இல்லை, அவ்வாறே முன் உண்டாகிப் பிறகு ஏற்படக் கூடியது என்பதும் இல்லை. ஏனெனில் இந்த ஆத்மா பிறப்பற்றவன்; நித்தியமானவன்; எக்காலத்திலும் உள்ளவன்; பழமையானவன்; உடல் கொல்லப்படும் போதும் இந்த ஆத்மா கொல்லப்படுவதில்லை.
இந்த ஸ்லோகத்தின் சாரம் ‘ஆத்மா ஷட்விகார ரஹித:’ ஷட் என்றால் ஆறு, விகார என்றால் மாற்றம், ரஹித: என்றால் இல்லாதது. ஆறு விதமான மாற்றம் ஆத்மாவுக்கு கிடையாது. அது என்ன ஆறு விதமான மாற்றம் என்றால் சாஸ்திரத்தில் நம்முடைய உடல் ஆறு விதமான மாற்றத்தை அடைவதாக பேசப்படுகிறது. நமது உடல் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கிறது, இந்த மாற்றம் ஆறுவிதமாக பிரிக்கப்படுகிறது. இந்த ஆறு விதமான மாற்றங்கள் என்னென்ன என்று பார்ப்போம். முதல் விதமான மாற்றத்திற்கு ‘அஸ்தி’ என்று பெயர். அஸ்தி என்றால் இருத்தல். இரண்டாவது மாற்றத்திற்கு’ ஜாயதே’ பிறத்தல். நம்முடைய சரீரம் முதலில் ‘இருக்கிறது’ பிறகு ‘பிறக்கிறது’. தாயினுடைய வயிற்றிலிருந்து வெளியே வருவதை ‘ஜாயிதே’ என்று சொல்கிறோம். அப்படி பிறக்க வேண்டுமென் றால் பிறப்பதற்கு முன் இருக்க வேண்டும். அப்படி இருப்பதற்கு தான் ‘அஸ்தி’ என்று சொல்கிறோம். அந்த இருத்தல் என்பது எப்படிப்பட்ட இருத்தல் என்றால் பிறப்பதற்கு முன் கர்பத்தில் இருக்கும் நிலை. மூன்றாவது வர்த்ததே, வர்த்ததே என்றால் வளர்தல். நான்காவது விபரிநமதே. விபரிநமதே என்றால் மாறுதல்(மாற்றமடைதல்)என்று பொருள். ஐந்தாவது அபக்ஷியதே. அபக்ஷியதே என்றால் தேய்தல்(வீழ்ச்சி) என்று பொருள். ஆறாவது விநஸ்யதே. விநஸ்யதே என்றால் அழிவது(மாய்தல்) என்று பொருள். ஆறு மாற்றங்களை சமஸ்கிருதத்தில் சொன்னால் அஸ்தி, ஜாயிதே, வரத்ததே, விபரிநபதே, அபக்ஷியதே, விநஸ்யதே. தமிழில் சொன்னால் இருத்தல், பிறத்தல், வளர்தல், மாறுதல், தேய்தல், மாய்தல். இந்த மாற்றம் மனித உடலுக்கு மட்டுமல்ல எல்லா ஜீவராசிகளுக்கும் இது பொருந்தும்.
இந்த ஸ்லோகத்தில் எந்தெந்த வார்த்தைகளின் மூலமாக ஆத்மாவிற்கு இம் மாறுதல்கள் இல்லை எனபதை உறுத்ப்படுத்துகிறார் என்பதை பார்ப்போம். முதலில் ‘அஸ்தி’ என்று பார்த்தோம், ‘மாறுகின்ற இருத்தல்’ அதை ‘அயம் பூத்வா பூய: ந பவிதா’ என்ற பகுதியில் கூறியிருக்கிறார். ஆத்மா தோன்றி இல்லாமல் போவதோ, அல்லது ஆத்மா இல்லாமலிருந்து தோன்றுவது என்பதோ இல்லையென்று சொல்வதிலிருந்து (உடல்) தோன்றுவதற்கு முன் இருக்கின்ற இருத்தல் என்பது ஆத்மாவிற்கு கிடையாது. ஆத்மா ஸ்வாபத்திலேயே ‘ஸத்’ என்பதால் பிறப்பிற்கு முன் மாறுகின்ற இருத்தல் என்பது ஆத்மாவிற்கு கிடையாது. அடுத்தது ‘ஜாயதே’ பிறத்தல் ‘ந ஜாயதே’ என்ற வார்த்தை இரண்டாவது விகாரமான பிறத்தல் என்பதை நீக்குகிறது. பிறகு ம்ரியதே என்ற வார்த்தை கடைசியாக வருகின்ற மாய்தல் அல்லது இறத்தல் என்ற விகாரத்தை நீக்குகிறது. முதல் இரண்டும் கடைசியாக உள்ள ஆறாவதும் பார்த்து விட்டோம். அடுத்து மூன்றாவது வர்த்ததே (வளர்ச்சி) என்பதை ‘புராண:’ என்ற சொல்லால் நீக்கப்படுகிறது, புராண: என்றால் எப்போதும் ஒரே விதமாக இருப்பது என்று பொருள். அடுத்து ‘ந ஹந்யதே ஹந்யமாநே ஸரீரே’ என்ற சொல் ஸ்லோகத்தின் கடைசியில் இருக்கிறது. ஹந்யதே என்றால் இந்த இடத்தில் வெட்டுபடுதல், மாற்றத்தை உருவாக்கு தல் என்று அர்த்தம் இது நான்கவது விகாரமான மாற்றமடைதல் என்பதை நீக்குகிறது சரீரம் காயமடைந்தாலோ, துண்டுபட்டாலோ, அல்லது மாற்றம் ஏற்பட்டாலோ ஆத்மா மாறுதலடைவதில்லை. ‘ஸாஸ்வத:’ என்ற சொல் எப்பொழுதும் ஒரே நிலையில் இருப்பது எனபதால் ‘அபக்ஷியதே’ தேய்தல் என்ற விகாரம் நீக்கப்படுகிறது.
இவ்விதம் இந்த இரண்டு ஸ்லோகங்களும் கடோபநிஷத மந்திரத்தில் பேசப்பட்ட கருத்து.
No classes added yet.






Users Today : 6