Poornayogam

Sanatana Dharma – The Eternal Way of Life

Home » Sreemad Bhagavatgita Lesson – 02 Sankiya yogam – Tamil » ஸ்லோகம் – 14 முதல் 15 வரை

ஸ்லோகம் – 14 முதல் 15 வரை

ஸ்லோகம்-14,15 இந்த இரண்டு ஸ்லோகங்களில் அநாத்மாவினுடைய அடிப்படையில் பகவான் பேசுகிறார்.

ஆத்மா என்றும் உள்ளது, நித்யமானது என்று அறிந்து, ஆத்மா அழிவதில்லை என்பதில் நிலைபெற்றிருந்தாலும் சதாரணமாக நம் அனுபவத்தில் ஒரு ஜீவனின் மரண நிகழ்வில் அநாத்மாவை குறித்து தான் அதிக துயரம் கொள்கிறோம். ஆகவே பகவான் ஆத்மாவை குறித்த உபதேசத்திற்கு கூடவே இந்த இரண்டு ஸ்லோகங்களில் அநாத்மாவி னுடைய அடிப்படையில் பகவான் பேசுகிறார். அநாத்மாவை குறித்து நம்முடைய பாவனை எப்படி இருக்க வேண்டும் என்று இந்த ஸ்லோகங் களில் விளக்குகிறார்.

ஸ்லோகம்:

मात्रास्‍पर्शास्‍तु कौन्‍तेय शीतोष्णसुखदु:खदा: ।

आगमापायिनोऽनित्‍यास्‍तांस्‍तितिक्षस्‍व भारत ॥ १४ ॥

மாத்ராஸ்பர்ஸாஸ்து கெளந்தேய சிதோஷ்ணஸுகது:கதா: |

ஆகமாபாயிநோS நித்யாஸ்தாம்ஸ் திதிக்ஷஸ்வ பாரத || 14 ||

கெளந்தேய – குந்தியின் மைந்தனே; சீத உஷ்ண ஸுகது:கதா: – தட்பவெப்பம், மற்றும் ஸுகதுக்கங்களைக் கொடுக்க கூடிய;                      மாத்ராஸ்பர்ஸ: து – புலன்களுடன் போக விஷயங்களின் சேர்க்கைகள்; ஆகமாபாயிந; – உண்டாகி அழிபவை; அநித்யா – அநித்யமானவை;       பாரதா – பாரதா; தாந் – அவற்றை; திதிக்ஷஸ்வ – பொறுத்துக்கொள்.

குந்தியின் மைந்தா பொறிகள், புலன்களிடத்து பொருந்துதலால் குளிர்  வெப்பம், இன்பம் துன்பம் முதலியன உண்டாகின்றன. தோன்றலும் மறைதலும் நிலையாமையும் அவைகளின் இயல்பு. பாரதா, அவைகளைப் பொறுத்துக்கொள்.

மாத்ராஸ்பர்ஸ:  என்ற சொல்லுக்கு விளக்கம்:

மாத்ரா: என்ற சொல்லுக்கு இந்திரீயங்கள் என்று பொருள். கண், காது, மூக்கு முதலிய ஐந்து ஞானேந்திரியங்களுக்கு மாத்ரா: என்று பெயர். சமஸ்கிருதத்தில் ‘மா’ என்று சொன்னால் அளத்தல் என்று பொருள் ஆகவே இந்த சப்தம், ரூபம் முதலியவைகள் எதனால் அளக்கப்படுகின்றதோ, அறியப் படுகின்றதுவோ அது மாத்ரா:. அது இந்திரீயங்கள். அடுத்த சொல் ஸ்பர்ஸ: என்றால் சம்பந்தம். எது எதனோடு சம்பந்தம் வைக்கின்றதோ அதற்கு ஸ்பர்ஸ: என்று பொருள். இந்திரீயங்கள் விஷயங்களோடு சம்பந்தம் வைக்கும் அதாவது மனதோடு கூடிய அந்தந்த இந்திரீயங்கள் தொடுதல், உருவம், சுவை, மணம் என்னும் விஷயங்களோடு கூடும் போது ஏற்படும் சம்பந்தங்களை மாத்ராஸபர்ஸா”: என்று கூறுகிறார்.

சிதோஷ்ணஸுகது:கத: என்பதற்கு தட்ப-வெப்பம், ஸுக-துக்கம் போன்ற  எல்லா இரட்டைகளையும் குறிக்கும். விஷயங்களுக்கும், புலன்களுக்கும் ஏற்படும் சம்பந்தத்தை (சேர்க்கையை) ‘சிதோஷ்ணஸூகது:கதா:’ என்று குறிப்பிடுகிறார்.

ஆகமாபாயிந: அநித்யா: தாந் திதிக்ஷஸ்வ – புலன்களிடம் போகப் பொருட்கள் வந்து சேர்வதை, உண்டாகி, அழிவது, அநித்யம் என்று கூறி, அவற்றைப் பொறுத்துக் கொள்; புலன்களுடன் போக பொருட்கள் சேர்வதால் சுகமும், துக்கமும் ஏற்படுகின்றன. அந்தச் சேர்க்கையும் கூட நொடியில் மறையக் கூடியது. இதில் ஒரு துளிக் கூட உண்மையான சுகம் இல்லை. அவற்றை பொறுத்து கொள். அவை அநித்யம் என்றறிந்து அவை வந்தாலும், போனாலும் விருப்பு – வெறுப்புகளையோ, மகிழ்ச்சியோ – துன்பங்களையோ அடையாதே. உற்றார் –  உறவினரின் சேர்க்கை கூட இப்படி தான். மனமும், புலன்களும் சேர்ந்து மற்ற பொருட்களுடன் கூடி விலகுவது போல்த்தான் உறவினருடன் கூடிப் பிரிவதும். ஆகவே, எல்லாவிதமான சேர்க்கையி னாலும், பிரிவினாலும் ஏற்படும் ஸுக – துக்கங்களையும் பொறுத்து கொள்வாயாக என்று பகவான் கூறுகிறார்.

விளக்கம்:

அநாத்மாவை (அநாத்மா என்றால் உலகத்திலுள்ள அனைத்தும்) குறித்து நம்முடைய பாவனை எப்படி இருக்க வேண்டும் என்றால் ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இருக்க வேண்டும். அநாத்மாவின் தன்மை மாற்றத்தை உட்கொண்டது என்று பார்த்துள்ளோம், ஆகவே இங்கு அநாத்மா குறித்து என்றால் இந்த உலகத்திலுள்ள மாற்றங்களை குறித்து என்றும் பொருள். இந்த உலகத்திலுள்ள மாற்றங்களை நாம் ஏற்றுக்கொண்டால் நமக்கு துயரங்கள் இல்லை, ஏற்று கொள்ளாத மாற்றங்கள் தான் நமக்கு துயரங்களை கொடுக்கிறது. சம்சாரத்தை வேறு விதத்தில் லக்ஷ்ணம் கொடுக்க வேண்டுமென்றால் ஏற்றுக் கொள்ளாமை தான் சம்சாரம். அநாத்மா விஷயத்தில் நாம் மாற்றங்களை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் என்று பகவான் சொல்கிறார். இந்த உலகத்திலுள்ள எல்லா விஷயங்களும் மாறிக் கொண்டுதான் இருக்கிறது. இந்த உடல் மாற்றங்களை அடைவது போல் தான் மனமும் மாற்றமடைகிறது. ஆகவே உலகத்திலுள்ள அனைத்தும் மாற்றங்களுக்கு உட்பட்டது. சாதாரணமாக நாம் என்ன சொல்லுவோம் மாற்றம் துயரத்திற்கு காரணம் என்று,  உண்மையில் அப்படியில்லை எந்த மாற்றத்தை நாம் ஏற்று கொள்ள வில்லையோ அந்த மாற்றம் தான் நம் துயரத்திற்கு காரணமாகிறது, ஏற்றுக் கொள்ளும் மாற்றம் துயரத்திற்கு காரணம் ஆகாது. பொதுவாக நாம் ஒரு மாற்றத்தை மாற்றுவதற்கு முயற்சி பண்ணுகிறோம் அந்த முயற்சி, தோல்வியிலும், துக்கத்திலும் தான் அந்த முயற்சி சென்றடையும் ஆகவே மாற்றங்களை எக்காரணம் கொண்டும் மாற்ற இயலாது என்று புரிந்து கொண்டு அதை ஏற்றுக் கொண்டால் அந்த மாற்றம் துயரத்திற்கு காரணம் ஆகாது. ஆகவே வாழ்க்கையில் ஏற்படும் வெற்றி-தோல்வி; பிறப்பு-மரணம்; மகிழ்ச்சி–துயரம்; புகழ்–இகழ் என்று எதுவும் ஆகட்டும் மாற்றங்களை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் என்று பகவான் கூறுகிறார்.

மேலுல் பகவான் கூறுகிறார் நம் அனுபவத்தில் சில சூழ்நிலைகளில் சில விஷயங்கள் நாம் ஏற்று கொள்வதற்கு முன் சில முயற்சியினால் மாற்ற முடியும் என்றால் முதலில் மாற்ற முயற்சியை மேற்கொள்ள வேண்டும். நியதி என்னவென்றால் ஒரு சூழ்நிலை மாறுமா, மாறாதா என்ற சந்தேகம் இருக்கும் போது முதலில் முயற்சி செய்ய வேண்டும் மாற்றுவதற்கு முயற்சி செய்து அதனுடைய பலன் எப்படி இருந்தாலும் அந்த பலனை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒரு சூழ்நிலையில் கண்டிப்பாக மாறாது என்ற விஷயத்தில் முழுமையாக நாம் அதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும், சில சூழ்நிலையில் ஒரு விஷயம் மாறுமா, மாறாதா என்ற சந்தேகம் வருமானால் நல்லதாக ஆக்க முயற்சி செய்ய வேண்டும் இறுதியில் பலனை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அடுத்து இனியொரு கருத்தையும் பகவான் கூறுகிறார், சகிப்பு தன்மையை வளர்த்தி கொள்ள வேண்டும். ஒன்றை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டு மென்றால் சகித்து பழக வேண்டும். இந்த சகிப்பு தன்மைக்கு சமஸ்கிருதத் தில் திதிக்க்ஷா என்று கூறுவர். சகித்து பழகியவனால் தான் மோக்ஷத்தையே அடைய முடியும் என்று பகவான் கூறுகிறார். இந்த சகிப்பு தன்மை, பொறுமை, இல்லை என்றால் அவனுக்கு மோக்ஷத்திற்கு தகுதி இல்லை என்று பகவான் கூறுகிறார். சகிப்பு தன்மையை பகவான் இங்குமுக்கியமாக அறிமுகப்படுத்துகிறார் காரணம் சகிப்பு தன்மை இருந்தால் தான் வாழ்க்கையில் முன்னேறி செல்லமுடியும். எடுத்துக் கொண்ட விஷயத்தில் கடைசிவரை நிலைத்து நிற்பது தான் சகிப்பு தன்மை.

இயற்கையில் சில மாற்றங்கள், கஷ்டங்கள் வரத்தான் செய்யும். எல்லா மனிதர்களுக்கும் வெற்றி- தோல்வி, கஷ்டம்- நஷ்டம், சுக, துக்கங்கள் வந்து தான் தீரும் அவைகளை நாம் ஏற்றுக் கொள்ளதான் வேண்டும். மேலும் பகவான் கூறுகிறார் சில சூழ்நிலைகளில் நமக்கு ஒரு துக்கம் வந்தால் அந்த துக்கம் தொடர்ந்து இருக்காது அதே போல் தான் சுகமும் எந்த சுகமும் தொடர்ந்து இருக்காது ஆகவே நமக்கு வரும் வெற்றி- தோல்வி, கஷ்டம்- நஷ்டம், சுக, துக்கங்கள் அனைத்தும் அநித்தியமே ஆகையால் இவை         -யனைத்தையும் சமமாக பாவித்து ஏற்று கொள்ள தான் வேண்டும். இதுதான் பகவானுடைய உபதேசம். நமக்கு வரும் சுக,துக்கங்கள் என்ற சூழ்நிலை தொடர்ந்து நிலைக்காது அது அநித்தியம் என்ற உண்மையை நாம் புரிந்து கொள்வோமெனில் வாழ்க்கையில் கஷ்டம் நீடித்திருக்குமோ, சுக போக வாழ்க்கை நம்மை விட்டு விலகி விடுமோ என்ற பயம் நம்மை விட்டு சென்று விடும். நமக்கு எது அதிக துன்பம் தரும் என்றால் நமக்கு துக்கம் வந்து விடுமோ, நம்மிடம் இருக்கின்ற சுக போகங்கள் நம்மை விட்டு போய் விடுமோ என்ற பீதியே. வாழ்க்கையின் நிதர்சன உண்மையான அநாத்மா சம்பந்தமான அனைத்தும் அநித்தியம் என்ற உண்மையை நாம் புரிந்து கொள்வோமாகில் சுக, துக்கங்களை சமமாக பாவித்து வாழ்க்கையின் எந்த சூழலையும் நம் கட்டுக்குள் வைத்து கொள்வோம்.

இந்த ஸ்லோகத்தில் மாத்ராஸ்பர்ஸா: என்ற சொல்லில் மாத்ரா: என்பதற்கு இந்திரீயங்கள் என்றும், ஸ்பர்ஸா: என்பதற்கு சம்பந்தம் என்றும் பொருள் பார்த்து இந்தீரீயங்கள் அல்லது புலன்களோடு உள்ள சம்பந்தம் தான் சுக, துக்கம் காரணம் என்று பார்த்தோம். மாத்ராஸ்பர்ஸா என்பதற்கு இரண்டா    -வது பொருள் என்ன என்று பார்ப்போம் மாத்ரா: என்றால் எது அறியப்         –படுகிறதோ அது மாத்ரா:  இந்த உலகம் அறியப்படும் பொருள் ஆகவே இந்த உலகம் மாத்ரா: அடுத்து ஸ்பர்ஸ: என்றால் எது அனுபவிக்கப்படு             -கிறதோ அது ஸ்பர்ஸா: அப்படியென்றால் எது அறியப்படுகிதோ, எது அனுப -விக்கப்படுகிறதோ அவைகள் சுக, துக்கங்களுக்கு காரணமாகின்றன. இது இரண்டாவது பொருள். எது அறியபடுவதாகவும், அனுபவிக்கப்படுவதாகவும் இருக்கின்றதோ அது சுக, துக்கங்களை கொடுக்கும். ஆகவே அறியப்படுகின்ற அனுபவிக்கப்படுகின்ற இந்த உலகம் நமக்கு சுக, துக்கங்களை கொடுக்கிறது.

அடுத்து நாம் ஏற்றுக்கொள் என்று சொல்கிறோம், ஒரு சூழ்நிலையில் ஒரு துன்பம் வருகிறது அதை ஏற்று கொள்ள வேண்டுமெனில் எந்த அறிவோடு நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றால் ஏற்று கொள்ளும் செயலை செய்வது புத்தியின் வேலை. மனது என்பது சுக, துக்கங்களை அனுபவிக்கும் அந்தகரணம். அந்த மனதிற்கு துக்கத்தையும், சுகத்தையும் சமமாக பாவிக்கும் பாவனையுடன் ஏற்று கொள்ள செய்வது இந்த புத்தியின் வேலை. அதற்கு அந்த புத்திக்கு ஏற்று கொள்வதற்கான அறிவை கொடுக்க வேண்டும் அந்த அறிவை தான் பகவான் ஆகமாபாயிந: என்ற சொல்லால் உபதேசிக்கிறார். ஏற்று கொள் என்று சொன்னால் போதாது ஏன் ஏற்றுக் கொள்ள வேண்டும் அதன் அவசியம் என்ன என்பது தான் உபதேசம். ஆகமாபாயிந: என்றால் வந்து செல்வது அல்லது உண்டாகி அழிவது என்று பொருள், அடுத்த சொல்லாக பகவான் அநித்யா: என்று கூறுகிறார். ஆகமாபாயிந:அநித்யா என்றால் இந்த சுக, துக்கங்கள் யாவும் வந்து செல்பவை ஆகவே அநித்யம் என்று பொருள். இங்கு உபதேசம் என்னவென்றால் அநாத்மாவான இந்த உலகம் நமக்கு சுக, துக்கங்களை கொடுக்கிறது அந்த சுக, துக்கங்கள் யாவும் வந்து, செல்பவை உண்டாகி, அழிபவை அநித்யம். இந்த அறிவை புத்தி ஏற்று கொண்டு மனதை எந்த சூழலையும் சம பாவனையுடன் ஏற்று கொள்ள செய்ய வேண்டும்.

மேலும் கஷ்டமான சூழ்நிலையை சம பாவனையுடன் நாம் ஏற்று கொள்வோமெனில்  அந்த சூழ்நிலை நமக்கு கஷ்டமாக தோன்றுவதில்லை. எப்படிபட்ட கஷ்டமான சூழ்நிலையையும் நாமாக ஏற்று கொள்வோமாகில் வாழ்க்கையில் சுக துக்கங்கள் வரும், போகும் நம்மை எந்த விதத்திலும் பாதிப்பை உண்டாக்காது.

ஸ்லோகம்-15

यं हि न व्‍यथयन्‍त्‍येते पुरुषं पुरुषर्षभ ।

समदु:खसुखं धीरं सोऽमृतत्‍वाय कल्‍पते ॥ १५ ॥

யம் ஹி ந வ்யதந்த்யேதே புருஷம் புருஷர்ஷப |

ஸமது:கஸுகம் தீரம் ஸோSம்ருதத்வாய கல்பதே || 15 ||

ஹி – ஏனெனில்; புருஷர்ஷப – புருஷர்களில் சிறந்தவனே;               ஸமது:க ஸுகம் –  ஸுகதுக்கங்களை ஸம்மாக ஏற்கின்ற; யம் – எந்த:    தீரம் – தீரனான; புருஷம் – மனிதனை; ஏதே – இவை (புலன்கள் மற்றும் போகங்களின் சேர்க்கை); ந வ்யதயந்தி – கலங்க வைப்பதில்லையோ;        ஸ: – அவன்; அம்ருதத்வாய – மோக்ஷத்திற்கு; கல்பதே – தகுதி பெறுகிறான்.

ஏனெனில் புருஷர்களில் சிறந்தவனே! ஸுகதுக்கங்களை சமமாக ஏற்கின்ற எந்த தீரனான மனிதனை புலன்கள் மற்றும் போக விஷயங்களின் சேர்க்கை கலங்க வைப்பதில்லையோ அவன் மோக்ஷத்திற்குத் தகுதி பெறுகிறான்.

விளக்கம்: புலன்களுடன் பொருட்கள் வந்து சேர்வதை எதற்காகப் பொறுத்து கொள்ள வேண்டும் என்பதன் காரணம் இந்த ஸ்லோகத்தில் கூறப்படுகிறது. இதை தான் ‘ஹி’ என்ற சொல் குறிக்கிறது.

இங்கு அர்ஜுனனை ‘புருஷர்ஷப’ என்று அழைக்கிறார். ‘ருஷப’ என்னும் சொல் சிறந்ததை குறிக்கும். ‘புருஷர்களில் சூரவீரன் புருஷர்பன். இங்கு அர்ஜுனனை ‘புருஷர்ஷப’ என்று அழைக்கிறார்.

‘தீரன்’ என்ற சொல் உபநிஷத்துகளில் அடிக்கடி உபயோகிக்கும் சொல். பரமாத்மாவை அடைந்தவனையே ‘தீரன்’ என்று பெரும்பாலும் கூறுவது வழக்கம். ஆனால் சில இடங்களில் பரமாத்மாவை அடைய தகுதி பெற்றவனும் தீரன் என்று அறியப்படுகிறான். இந்த ஸ்லோகத்தில் ஸாங்கியயோக சாதனையில் தேர்ச்சி பெற்று முற்றிய ஸாதகனை ‘தீரம்’ என்ற சொல் உணர்த்துகிறது. தீர புருஷனின் இலட்சணம் ‘சுகதுக்கங்களை பேதபாவனையின்றி ஒன்றாகவே ஏற்று, அவற்றை அநித்யம் என்று உணர்ந்து அந்த இருமையில் விகாரம் அடையாதவனே தீரன்’. அவன் தான்  திதீக்ஷைக்கு தகுதியுள்ளவன்.

பொருட்களுடன்(விஷயங்களுடன்) புலன்கள் கூடுவதை ‘மாத்ராஸ்பர்ஸா’; என்றும் ‘ஆகமாபாயிந:’ என்றால் உண்டாகி, அழிபவை என்று முன் ஸ்லோகத்தில் பார்த்தோம். இந்த ஸ்லோகத்தில் ‘ஏதே’ என்ற சொல் இவற்றை குறிக்கும். ‘ந வயதயந்தி’ ‘இவைகள் பாதிப்பதில்லை’ என்றால் பொருட்கள்(விஷயங்கள்) கூடி பிரிவதில் விருப்பு-வெறுப்புக்களோ, மகிழ்ச்சி-துன்பங்களோ அடையாமல் பழக்கிக் கொண்டுவிடுகின்ற ஸாதகன், இந்த நிலையை அடைந்த பிறகு எந்த புலனுடன் எந்த பொருள் கூடினாலும் மனம் கலங்குவதில்லை. மனதில் எந்த விதமான விகாரம் அடைவதில்லை. இத்தகையவன் தீரனாகிறான். சுகதுக்கங்களை சமமாக பாவிக்கிறவன் ஆகிறான்.

மேலே கூறப்பட்ட சமபாவனையுள்ள தீரன் மோக்ஷத்திற்கு தகுதி உடையவனாகிறான். பரமாத்வை அடையத்தக்கவனாகிறான்.

No classes added yet.

Our Visitor

000798
Users Today : 2