न त्वेवाहं जातु नासं न त्वं नेमे जनाधिपाः ।
न चैव न भविष्याम: सर्वे वयमत: परम् || १२ ||
ந த்வேவாஹம் ஜாது நாஸம் ந த்வம் நேமே ஜனாதிபா꞉ |
ந சைவ ந பவிஷ்யாம꞉ ஸர்வே வயமத꞉ பரம் || 12 ||
அஹம் – நான்; ஜாது – எப்பொழுதாவது; ந து ஆஸம் – இருந்ததில்லை (என்பது); ந ஏவ – இல்லவே இல்லை; த்வம் – நீ; (ந ஆஸி – இருந்தில்லை என்பது) ந – இல்லை; இமே – இந்த; ஜனாதிபா: – அரசர்கள்; (ந ஆஸன் – இருந்ததில்லை); ந – இல்லை; அத: பரம் – இனிமேல்: ஸர்வே வயம் – நாமெல்லோரும்; ந பவிஷ்யாம: ச – இருக்க மாட்டோம் என்பதும்; ந ஏவ – இல்லவே இல்லை.
நான் எப்பொழுதாவது இருந்ததில்லை என்பது இல்லவே இல்லை; நீயும் இருந்ததில்லை; இந்த அரசர்களும் இருந்ததில்லை என்பதும் இல்லை; இனிமேலும் நாம் அனைவரும் இருக்க போவதில்லை என்பதும் இல்லை.
இந்த ஸ்லோகத்தின் சாரம் (மையகருத்து) ஆத்மா நித்தியம் என்பது. ஆத்மா நித்தியம் என்றால் என்றும் இருப்பது என்பது கருத்து.
பகவான் இந்த ஸ்லோகத்தில், ஆத்மா என்ற நிலையில் அனைவரும் அழிவற்றவர்கள் என்பதை நிரூபிக்கிறார். ஆகவே “ நீ எவர் அழிந்து விடுவார் கள் என்று நினைக்கிறாயோ, அவர்கள் அனைவரும், நீயும், நானும் கூட இல்லாமல் போக மாட்டோம். இந்த உடல் தோன்றுவதற்கு முன்னும் நாம் அனைவரும் இருந்தோம். இந்த உடல் அழிந்த பிறகும் நாம் இருப்போம். உடல் அழிவதால் ஆத்மா அழியாது. ஆகவே அழிந்து விடுவார்களோ என்று ஐயப்படுவதும், வருந்துவதும் உசிதமல்ல” என்று கூறுகிறார்.
விளக்கம்:
பன்னீரண்டாவது ஸ்லோகத்திலிருந்து இருபத்தி ஐந்தாவது ஸ்லோகம் வரை ஆத்மஞானம் அல்லது ஆத்ம சொரூபத்தை பகவான் விளக்குகிறார். இதில்14-வது,15வது ஸ்லோகங்கள் வேறு கருத்து வரும். இந்த ஆத்மஞானத்திற்கு இனியொரு பெயர் சாங்கியம். இந்த இரண்டாவது அத்தியாயம் ஆத்மஞானத்தை விளக்குவதால் ‘சாங்கிய யோகம்’ என்று தலைப்பு. இந்த அத்தியாயத்தில் மையமாக பேசப்படுவது ஆத்மஞானம். இந்த கீதா சாஸ்த்திரத்தில் ஆரம்பத்திலேயே பகவான் ஆத்மஞானத்தை பற்றி பேசுகிறார். ஒரு சாதனையாக அறிமுகபடுத்துகிறார். ஆகவே ஆத்மஞானம் ஒரு சாதனமாக அறிமுகபடுத்தப்படுகிறது. எதற்காக என்றால் சோக நிவர்த்திக்காக என்று ஏற்கனவே பார்த்துள்ளோம். இந்த ஞானத்தை வாங்கி கொள்ள வேண்டுமென்றால் சில தகுதிகள் எல்லாம் வேண்டும் அதைப் பற்றியெல்லாம் பகவான் பிறகு தான் பேச உள்ளார்.
நான் என்ற சொல்லிற்குள் இரண்டு தத்துவங்கள் உள்ளது. ஒவ்வொரு ஜீவனையும் சாஸ்த்திரம் இரண்டாக பிரிக்கிறது. அதில் ஒன்று என்ன வென்றால் அறிவுடைய தத்துவம் அதாவது உணர்வுடைய அறிவு தத்துவம். இரண்டாவது தத்துவம் என்பது இந்த உடலும், மனமும். நான் என்று சொல்லும்பொழுது அறிவு மயமான உணர்வுடன் இந்த உடலும் மனமும் அடங்குகிறது. இந்த உடலை சாஸ்த்திரம் என்ன சொல்கிறதென்றால் அறிவற்ற ஜடமான அம்சம் என்று சொல்கிறது. ‘நான்’ என்கிற உணர்வுடைய அறிவு இந்த உடலில் அபிமானம் வைக்கும் போது இந்த ஜடமான உடல் உணர்வுடன் இருக்கிறது. ‘நான்’ என்கிற உணர்வுடைய அறிவின் அபிமானத்தை இந்த உடலிலிருந்து எடுத்து விட்டோம் என்றால் இந்த உடல் எந்த உணர்வுமின்றி கட்டைக்கு சமமானதாகி விடும். உதாரணமாக ஆழ்ந்த தூங்கும் நிலையை இதற்கு ஒப்புதலாக கூறலாம். நாம் ஆழ்ந்து தூங்கும் போது இந்த உடம்பின் மீது இந்த உணர்வு அம்சம் விலகி இருக்கிறது.
நான் என்ற சொல்லிற்குள் இரண்டு அம்சங்கள் என்பது ஒன்று உணர்வோடு கூடிய அறிவு அம்சம், மற்றொன்று ஜட அம்சம். இந்த ஜடமான அம்சத்தை உடல் என்று சொல்லலாம் இதை சமஸ்கிருதத்தில் தேஹ: என்று சொல்லப்படும். அல்லது இனியொரு சொல் இருக்கிறது சரீரம். இந்த உடல் அல்லது சரீரத்தை தான் சாஸ்த்திரம் ‘அநாத்மா’ என்று சொல்கிறது. ‘நான்’ என்ற சொல்லில் இரண்டாவதான ஜட அம்சம் ‘அநாத்மா’ என்றால் முதலாவது அம்சமான ‘உணர்வோடு கூடிய அறிவு அம்சம் தான் “ஆத்மா” அல்லது “நான்” என்பதற்கான பொருள்’.
அநாத்மாவான உடலை சமஸ்கிருதத்தில் தேஹம் என்றும் சரீரம் என்றும் பார்த்தோம். என்னுடைய தேஹம் என்று சொல்பவனான உணர்வுடன் கூடிய அறிவுடைய அறிபவனான ஆத்மாவிற்கு தேஹீ என்றும் சரீரி என்று அழைக்கப்படுகிறது.
இனி இந்த அநாத்மாவை சுருக்கமாக பார்ப்போம். சாஸ்த்திரம் ஒவ்வொரு ஜீவனுக்கும் மூன்று விதமான உடல் இருப்பதாக சொல்கிறது. நமக்கு ஒரு சரீரமாக இருக்கும் இந்த உடலை சாஸத்திரம் மூன்றாக பிரிக்கிறது. ஒன்று ‘ஸ்தூல சரீரம்’, கண்ணுக்கு தெரிகின்ற சரீரம். இரண்டாவது நமது கண்ணுக்கு தெரியாது ஆனால் நம்மிடம் இருக்கின்ற ‘மனம்’. நம்முடைய மனதை சாஸ்த்திரம் சரீரம் என்று சொல்கிறது. இந்த மனது நமது கண்ணுக்கு தெரியாததால் ‘சூஷ்ம சரீரம்’ என்று அறியப்படுகிறது. மனம், எண்ணங்களுடைய ஓட்டம், மனதில் எண்ணங்கள உதிக்க வேண்டு மென்றால் கண், காது, போன்ற அங்கங்களின் உதவி தேவை. இவைகளை யெல்லாம் இந்திரியங்கள் என்று சொல்லப்படுகிறது. இந்திரியங்கள் எனபது கண், காது, மூக்கு, வாய், தோல் முதலிய ஐந்து விதமான ஞானத்தைக் கொடுக்கும் கருவி. இந்த இந்திரியங்கள் செயல்படும் இடம் நமக்கு தெரியும். ஆனால் சாஸ்த்திரம் வேறொரு கருத்தையும் சொல்கிறது இந்த கோளகங்கள் இந்திரியங்கள் அல்ல அவைகள் செயல்படும் சக்தியை தான் இந்திரியம் என்று சொல்கிறது. (கோளகங்கள் என்பது நமது கண்ணுக்கு தெரிகின்ற கண், காது, மூக்கு முதலிய உறுப்புக்கள்) இந்த ஐந்து இந்திரீயங்களின் செயல்படும் சக்தி சூஷ்மமாக இருப்பதால் இந்த ஐந்து இந்திரியங்களும் ஞானேந்தியம் என்று அறியப்படும் சூஷ்ம சரீரமாகிறது. அடுத்து சூஷ்ம சரீரமாக வருவது கர்ம இந்திரீயங்கள். மனித உடலில் செயல்களை செய்ய உதவும் ஐந்து உறுப்புக்களாகும், அவை கைகள், கால்கள், வாய், இனப்பெருக்க உறுப்பு, மற்றும் மலவாய். இந்த கர்மேந்திரீயங்களின் செயல் படும் சக்தியும் சூஷ்ம்மாக இருப்பதால் இதுவும் சூஷ்ம சரீரமாகிறது. இதுபோல் பிராண சக்திகள் நம் உடலில் இருக்கின்றது. இதுவும் சூஷ்ம சரீரத்தில் அடங்கும்.
இவ்விதம் இந்த இரண்டு சரீரத்தில் நாம் காணும் இந்த சூலசரீரம் உணவினால் தோன்றி, உணவினால் காக்கப்பட்டு மீண்டும் உணவாகவே போய் விடும். பொற்றோருடைய உணவினால் இந்த உடம்பு வந்தது, பிறகு சாப்பாட்டினால் உடம்பு வளர்ந்து காப்பாற்றப்பட்டது, பிறகு மரணத்திற்கு பின் இந்த உடம்பை எரித்தால் சாம்பலாகி தாவரங்களுக்கு உணவாகிறது அல்லது புதைத்தால் புழு, பூச்சிகளுக்கு உணவாகும் இப்படி அன்னத்தில் தோன்றி, அன்னத்தில் காக்கப்பட்டு, அன்னத்தில் லயமடைவது இந்த ஸ்தூல உடல். சூஷ்ம சரீரம் என்பது கண்ணுக்கு தெரியாத எண்ணங்கள ரூபமான ஒரு உடல். சாஸ்த்திரம், நமக்கு இனியொரு சரீரம் இருப்பதாக சொல்கிறது அது என்னவென்றால் எந்த ஒன்று தோன்றவேண்டுமென்றால் அது திடீர் என்று தோன்றி விடாது அதற்கு காரணம் ஒன்று இருந்து தான் ஆக வேண்டும். ஒரு மரத்தை நாம் பார்க்கிறோம், அந்த மரம் தோன்ற வேண்டுமானால் அதற்கு காரணமாக ஒரு விதை ஒன்று இருக்க தான் வேண்டும், அதே போல் நமக்கு சூஷ்மமாய் ஒரு உடல் இருக்கிறது, சூலமாய் ஒரு உடல் இருக்கிறதென்றால் இந்த உடல் எங்கிருந்தோ வந்திருக்க வேண்டும். இந்த சூஷ்ம, சூல உடல் எங்கிருந்து தோன்றியதோ அந்த உடலுக்கு பெயர் காரண சரீரம் என்று சாஸ்த்திரம் சொல்கிறது. எந்த ஒன்று ஒன்றுக்கு காரணமாய் இருக்கிறதோ அந்த ஒன்று வெளிதோற்றத் திற்கு தெளிவாக விளங்காது. ஒரு மரத்தை தெளிவாக பார்க்கிறோம் அதற்கு காரணமான விதையை பார்த்து தெளிவாக புரிந்துக் கொள்ள முடியுமோ, முடியாது அதற்கு ‘அவ்யக்தம்’ என்று கூறப்படுகிறது. அவ்யக்தம் என்றால் வெளி தோற்றத்திற்கு வராத நிலை. காரண சரீரம் என்றால் நாம் எவ்வளவோ பாவ, புண்ணியங்களை எல்லாம் செய்து வைத்துள்ளோம், அந்த பாவ புண்ணியங்கள் எல்லாம் ஒரு இடத்தில் பற்றி இருக்க வேண்டுமல்லவா அந்த இடம் தான் சாஸ்த்திரம் காரண சரீரம் என்று சொல்கிறது. இந்த காரண சரீரத்தில் பற்றியிருக்கும் பாவ, பண்ணியத்தின் அடிப்படையில் தான் நமக்கு உடல் அமைகிறது. நமக்கு ஒரு நல்ல உடல் கிடைத்திருக்கிறதென்றால் நம்முடைய கர்ம பலத்தின் மூலம் சம்பாதித்தது தான் என்று சாஸ்த்திரம் கூறுகிறது. அது போல் நம் மனதும், ஒருவர் நல்ல மனதுடன் உள்ளார் என்றால் அதுவும் அவர் சம்பாதித்தது தான். ஆக ஒருவர் நல்ல உடலையும், நல்ல மனதையும் அமைய பெற்றுள்ளார் என்றால் அது அவருடைய பாவ, புண்ணியத்தின் அடிப்படையில் தான் கிடைக்கிறது, இந்த பாவ, புண்ணியத்தின் இருப்பிடம் தான் காரண சரீரம். இந்த காரணசரீரத் தின் தோற்றம் என்பது கிடையாது. காரண சரீரத்தின் இலட்சணம் என்பது சூட்சும, சூல சரீரத்தின் காரணமாகவும், வெளிதோற்றத்திற்கு வராததாகவும், பாவ,புண்ணியங்களின் இருப்பிடமாகவும், எப்பொழுது தோன்றியது என்று சொல்ல முடியாததாகவும் இருப்பது காரண சரீரம். இந்த பிரபஞ்சத்தின் பிரளய சமயத்தில் இந்த ஜீவர்கள் அவரவர் காரண சரீரத்தில் தான் ஒடுங்கி இருப்பார்கள், மீண்டும் உலக சிருஷ்டியில் அதே ஜீவர்கள அவர்களின் பாவ, புண்ணியத்தை வைத்து கொண்டு அதே காரண சரீரத்தோடு பிறக்கிறார்கள். ஆகையால் இந்த காரண சரீரத்திற்கு அழிவே கிடையாது. ஞானம் ஒன்றினால் தான் இதற்கு அழிவு. சரீரம் என்பதை மூன்றாக பார்த்தோம். சூல சரீரம், சூஷ்ம சரீரம், காரண சரீரம். இந்த மூன்று சரீரங்களையும் சேர்த்து சரீரம் என்று சொல்கிறோம் அல்லது ‘அநாத்மா’ என்றும் சொல்கிறோம். எப்பொழுதெல்லாம் ‘நான்’ என்று சொல்கிறோமே அப்போ தெல்லாம் இந்த மூன்று சரீரங்களும் அடங்குகிறது.
அடுத்து ஆத்மா பற்றி பார்ப்போம் இந்த மூன்று சரீரத்தை உடையவன் அல்லது இந்த சரீரத்தை அறிபவன் ஆத்மா. ஆத்மாவினுடைய முதல் லட்சணம் சூல, சூஷ்ம சரீரத்தை அறிபவன், காரண சரீரத்தை அறிய முடியாது அதை அனுபவிப்போம், ஆழ்நத உறக்கத்தில் அதை அனுபவிப் போம்.
முதலில் பிரித்து அறிய வேண்டியது ஆத்ம, அநாத்ம விவேகம். ஆத்ம, அநாத்ம விவேகம் என்பது அறிபவன் ஆத்மா, அறியபடுபவன் அனாத்மா. இந்த அறிபவன், அறியபடுபவன் இரண்டையும் சேர்த்து நான் என்று புரிந்து கொண்டிருக்கிறோம். ஆகையால் நாம் இந்த இரண்டையும் பிரித்து அறியவேண்டும், சமஸ்கிருதத்தில் அறிபவன் என்பதை ‘த்ருக்’ என்றும், அறியப்படுவதை ‘திருஷ்யம்’ என்றும் சொல்லப்படுகிறது. இதிலிருந்து நாம் புரிந்து கொள்வது ‘த்ருக்’ என்றால் ‘ஆத்மா’, தி’ருஷ்யம்; என்றால் ‘அனாத்மா’ எனபதை. அடுத்த விவேகம் என்பது இந்த அறிபவன் என்பவன் அறிவுடைய வனாக இருக்க வேண்டுமா? அல்லது ஜடமாக இருக்க வேண்டுமா? என்றால் எது அறிகின்றதோ அது அறிவு சொருபமாக தான் இருக்க வேண்டும். அறிவு சொரூபத்தை ஞான சொரூபம் என்றும் சொல்லலாம். அதற்கு சாஸ்த்திரம் ஒரு சொல் பயன்படுத்துகிறது ‘சித்’ என்று சொல்கிறது. சித் என்றால் அறியும் (அறிவுடைய) ‘ஞானம்’ உடையது. இதை சைதன்யம், சேதனம், உணர்வுதன்மை, என்றெல்லாம் அழைக்கலாம் ஆகையால் ஆத்மாவி னுடைய சொரூபம் ‘ஞானம்’. முதலில் நாம் பார்த்தது அறிபவன் ஆத்மா, அந்த அறியும் ஆத்மா ‘ஞான சொரூபம்’ என்று இப்போது பார்த்தோம். இது போல் வரும் இருப்பத்தைந்தாவது ஸ்லோகம் வரை ஆத்மாவின் சொரூபம் என்னென்ன என்று நமக்கு சொல்லி விளக்க உள்ளார்.
நாம் எப்படி புரிந்து கொள்ள வேண்டுமென்றால் ஆத்மாவின் சொரூபம் என்னனென்னவென்று சொல்கிறாறோ அதற்கு நேர் எதிரான தன்மையை அனாத்மாவின் சொரூபமாக கொள்ள வேண்டும். உதாரணமாக ஆத்மா சேதன சொரூபம் என்று பார்த்தோம் அப்படியென்றால் அநாத்மா ஜட சொரூபம் என்று புரிந்து கொள்ள வேண்டும். இப்படி ஆத்ம, அநாத்மா சேர்த்து புரிந்து கொண்டு வந்து கடைசியில் இந்த ஆத்மாவையும், அநாத்மா வையும் சேர்த்து நான் என்று புரிந்து கொண்டிருப்பது தப்பு உண்மையில் ஜட வஸ்துவான இந்த உடல் நான் அல்ல சேதன வஸ்துவான ஆத்மா தான் நான் என்று சரியான ஞானத்தை பெற வேண்டும். இந்த சரியான ஞானத்தை பெறுவது தான் ஆத்ம, அநாத்ம விவேகம். இப்படி ஆத்ம, அநாத்ம விவேகத் தினால் என்ன பலன் என்றால் நான் ஆனந்த சொரூபமான ஆத்மா, சம்ஸாரம் என்னை சேர்ந்ததல்ல அதனால் வரும் சோகம் எனக்கில்லை அது அநாத்மாவை சேர்ந்தது என்னை சேர்ந்ததல்ல. ஆரம்பத்தில் ஆத்மா, அநாத்மா இரண்டையும் சேர்த்து நான் என்றிருந்ததிலிருந்து ஆத்ம, அநாத்ம விவேகம் மூலம் சரியான ஞானம் பெற்றதிலிருந்து அநாத்மாவை நான் என்பதிலிருந்து விலக்கிய பின் வருகின்ற சோகங்களோ அல்லது நிந்தனைகளோ எனக்கு வருகின்றதல்ல அதெல்லாம் நான் அல்லாத அநாத்மாவை சேர்ந்தது என்ற ஆத்மஞானம் ஏற்படுகிறது.
இந்த ஸ்லோகத்திலும் வரும் ஸ்லோகங்களிலும் ஆத்மாவின் சொரூபத்தை விளக்கி ஆத்மா நித்தியம், அழிவில்லாதது, அநாத்மாவான உடல் அநித்திய மானது, இந்த அழியக் கூடிய அநாத்மாவிற்கு ஏற்படுகின்ற சம்சாரங்கள் நித்தியமான ஆத்மாவான என்னை சேர்ந்ததல்ல என்பதை தெளிவுபடுத்தி சோகநிவர்த்தி என்ற சாத்தியத்திற்கு ஆத்மஞானம் சாதனமாக கொண்டு துயரத்தை நீக்க உள்ளார். இந்த புரிதலோடு அடுத்த ஸ்லோகங்களுக்கு செல்வோம்.
ஒருவர் ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் போது அவர்களுக்கு நேரடியாக ஆத்ம ஞானத்தை உபதேசிக்க கூடாது. முதலில் அவர்களுடைய துயரத்திற்கு ஒரளவு பரிகாரத்தை கொடுத்து அவர்களுடைய துயரத்தின் காரணத்தை அறிந்து அதிலிருந்து அவர்களை மீட்டு கொண்டு வந்த பிற்பாடு படிபடியாகத் தான் அவர்களுக்கு உபதேசம் பண்ண வேண்டும். அந்த உபதேசம் தான் அவனுக்கு பக்குவத்தை கொடுத்து துயரத்திலிருந்து மீட்டு ஞானத்தில் நிலை கொள்ள வைக்கும்.
No classes added yet.






Users Today : 4