Poornayogam

Sanatana Dharma – The Eternal Way of Life

Home » Sreemad Bhagavatgita Lesson – 02 Sankiya yogam – Tamil » ஸ்லோகம் – 07

ஸ்லோகம் – 07

कार्पण्यदोषोपहतस्वभावः पृच्छामि त्वां धर्मसम्मूढचेताः ।

यच्छ्रेयः स्यान्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं शाधि मां त्वां प्रपन्नम् ।।

கார்பண்யதோஷோபஹதஸ்வபாவ: ப்ருச்சாமி த்வாம் தர்மஸம்மூடசேதா: I

யச்ச்ரேய: ஸ்யாந்நிஸ்சிதம் ப்ரூஹி தன்மே சிஷ்யஸ்தேSஹம் சாதி மாம் த்வாம் ப்ரபன்னம் || 7

கார்பண்ய தோஷ உபஹத ஸ்வபாவ – கோழைத்தனத்தால் நல்லியல்பை இழந்த ஸ்வபாவம் கொண்டவனும்;

தர்ம ஸம்மூட சேதா: – தர்ம விஷயத்தில் குழம்பிய மனமுடையவனாய்; த்வாம் – உங்களிடம்; ப்ருச்சாமி -கேட்கிறேன்; யத் – எந்த(சாதனை); நிஸ்சிதம் – உறுதியாக; ஸ்ரேய – மேன்மை; ஸ்யாத் – இருக்கிறதோ;

தத் – அதை; மே – எனக்கு; ப்ருஹி – கூறுங்கள்; அஹம் – நான்;

தே – உங்களுடைய; சிஷ்யன் – சீடன்; த்வாம் – உங்களை;

பிரபந்தம் – சரண்டைந்த; மாம் – எனக்கு; ஸாதி – அறிவுரை கூறுங்கள்.

ஸ்லோக பொருள்:

கோழைதனத்தால் நல்லியல்பை இழந்த ஸ்வபாவம் கொண்டவனும், தர்ம விஷயத்தில் குழம்பிய மனமுடையவனாகிய நான் உங்களிடம் கேட்பதென்னவென்றால் எந்த சாதனை உறுதியாக மேன்மை தரவல்லதோ அதை எனக்கு கூறுங்கள். நான் உங்களுடைய சீடன். ஆகவே உங்களை  சரணடைந்த எனக்கு அறிவுரை கூறுங்கள்.

இந்த ஏழாவது சுலோகத்திலிருந்து அர்ச்சுனன் பகவானிடமிருந்து ஞானத்தை பெற பாத்திரமாக மாறுகின்றான். இந்த ஞானத்தை பெற நான்கு படிகள் கடந்து வரவேண்டும் என்று பார்த்தோம். ஒவ்வோரு படியாக கடந்து வந்த அர்ச்சுனன் ஆறாவது சுலோகத்தில் மூன்றாவது படியை கடந்து இந்த ஏழாவது சுலோகத்தில் நான்காவதான இறுதி படிக்கு வருகின்றான். இறுதி படியான சரணடைதல் என்பது ஒரு செயல் அல்ல,

செயலாக இருந்தால் ஒரு காலத்தில் நாம் தேர்ந்தெடுத்து செய்யலாம், பாவனையாக இருந்தால் அல்லது ஒரு உணர்வாக இருந்தால் ஒரு காலத்தில் செய்ய முடியாது இயற்கையாக நம்மிடமிருந்து வர வேண்டும்.

சரணாகதி என்பது நம் மனதில் வருகின்ற ஒரு பாவனை. இந்த பாவனை ஒருவருக்கு வர வேண்டுமெனில் சரியாக மேலே கூறின மூன்று படிகளையும் கடந்து வந்திருக்க வேண்டும். இப்போது மூன்று படிகளையும் கடந்து வந்த அர்ச்சுன்னுக்கு இந்த பாவனை வருகிறது. இந்த ஏழாவது சுலோகத்தில் அர்ச்சுனன் பகவானிடம் தன்னை ஒப்படைத்து(சரண்டைந்து) தனக்கு ஞானத்தை வழங்குமாறு வேண்டுகிறார்

விளக்கம்: மனதின்கண் அமைந்துள்ள ஏழ்மையானது கார்பண்யம் எனப்படு கிறது. பிறர் பார்த்து இரங்கி வருந்துவதற்கேற்ற நிலையும் கார்பண்யமாம். ஒரு நெருக்கடியில் மனதினுள் வருவித்துக் கொண்ட தளர்வும், துயரமும் அதன் கண் உண்டு.

கார்பண்யம் என்ற சொல்லுக்கு ‘க்ருபண’ என்பது வேர் சொல். க்ருபண என்ற சொல்லுக்கு பல பொருள்கள் உண்டு.

1)செல்வ வசதிப்படைத்த ஒருவன் செல்வத்தில் மிகுந்த பற்றுக் கொண்டு பேராசையுடன், தானமளிக்கும் போதும், தனக்கு தானே சுகபோகங்களை அனுபவிக்கும் போதும் ந்யாயமாகச் செலவழிக்க மனமில்லாமல் ஒரு காசு கூடச் செலவழிப்பதில்லையோ, அந்த கருமியை க்ருபணன் என்பார்கள்.

2)மனித வாழ்க்கையில் சாஸ்த்திர சம்பந்தமான – நல்லோர், பெரியோர்கள் ஏற்றுக் கொண்ட முக்கியமான லக்ஷ்யம் – “பகவானுடைய தத்வம் அறிந்து, அவரை அடைய முயற்சி செய்வது” என்பது. இந்த லக்ஷ்யத்தை மறந்து உலக சுக போகங்களில் தன் வாழ்வை வீண்டிக்கும் அறிவிலியை க்ருபணன் என்று சொல்வதுண்டு.

சாதாரணமாக இரங்கதக்க நிலையில் உள்ளவனையும் ‘க்ருபணன்’ என்று கூறுவது உண்டு. . ஆனால் அர்ஜுனனிடம் காணப்படும் க்ருபணத்தன்மை கருமித்தனமுமன்று, போகப் பற்றுமன்று. ஏனெனில், அர்ஜுனன் இயல் பாகவே மிகவும் உதார மனமுடையவர்; வாரி வாரிக் கொடுப்பவர்; புலன்களை அடக்கியவர். இங்கு “நான் எனக்காக வெற்றியையோ, அரசையோ, ஸுகபோகங்களையோ விரும்பவில்லை. யாருக்கு இவை வேண்டுமோ, அவர்கள் அனைவரும் நம் பந்துக்கள். அவர்கள் இங்கே யுத்தத்தில் உயிரை விடுவதற்குத் தயாராக வந்திருக்கிறார்களே. இந்த பூமி என்ன? மூவுலக அரசு கிடைப்பதாக இருந்தாலும் அதற்காக துர்யோதனாதி யரை மாய்க்க விரும்பமாட்டேன்” (1/32-35) என்று வெளிப் படையாகக் கூறி விட்டார். ‘ஸமஸ்த பூமண்டலங்களின் அரசு பகையின்றிக் கிடைத்தாலும், தேவர்களுக்கே அதிபதியாக நான் ஆனாலும், என்னைத் துயரற்றவனாக ஆக்க முடியாது’ (2/8) என்றும் கூறிவிட்டார். இவ்வளவு தியாகம் செய்யத் தயாராகிவிட்டவர் கருமி அல்லர். போகப் பற்று உடையவரும் அல்லர்.

அர்ஜுனனுக்கு ஏற்பட்டிருக்கும் க்ருபணத்தனம் ஒருவிதமான இழிந்த நிலைதான். அது கருணையுடன் கூடிய கோழைத்தன வடிவிலும், சோக வடிவிலும் வெளிப்படுகிறது. ஸஞ்ஜயன் முதலாவது ச்லோகத்திலேயே, ‘கருணைக்கு ஆட்பட்டு’ என்று கூறி, இந்தக் கோழைத்தனத்தைச் சுட்டிக்காட்டி விட்டார். மூன்றாவது ச்லோகத்தில் பகவானும் ‘அலித்தனம்’ என்று கூறி இந்தக் கருத்தையே வலுப்படுத்தியிருக்கிறார். ஆகவே, இங்கு அர்ஜுனனுக்கு ஏற்பட்டிருக்கும் க்ருபணத்தனமென்பது உறவினர்களின் அழிவு வருமே என்ற கருணையோடு கூடிய கோழைத்தனம்தான் என்பது நன்றாகப் புலப்படுகிறது.

அர்ஜுனன் ஒரு லக்ஷ்ய க்ஷத்ரியன். இயற்கையாகவே சூரன், வீரன். அவருக்குக் கோழைத்தனம் கிடையாது. எப்படியோ இப்பொழுது தாழ்வு மனநிலை உண்டாகி ‘கோழைத்தனம்’ என்ற தோஷம் அவர் இயல்பைத் தாக்கிவிட்டது.

இந்த க்ருபணத்தனம் என்ற தோஷத்தினால் அவருடைய ஒப்பற்ற சூரத்தனம், வீரத்தனம், தைர்யம், சாதுர்யம், சாஹஸம், பராக்ரமம் முதலிய க்ஷத்ரிய இயல்புகள் அழிந்துவிட்டன போல ஆகிவிட்டன. அதனால்தான் அவர் அங்கங்கள் வெலவெலத்து விட்டன; வாய் உலர்ந்துவிட்டது; உடலில் எரிச்சலும், நடுக்கமும் ஏற்பட்டுவிட்டன; மனம் குழம்பிவிட்டது. கருணை யுடன் கூடிய கோழைத்தனம் சூழ்ந்ததாலே அர்ஜுனன் தம்மிடம் இயற்கைக்கு விரோதமான இந்தக் குறிகளைக் கண்டு, ‘க்ருபணத்தனத் தினால் என் இயல்பு பாதிக்கப்பட்டுவிட்டது’ என்று கூறுகிறார்

.’தர்மஸம்மூடசேதா:என்றும் அர்ஜுனன் தம்மைப் பற்றி கூறிக் கொள்கிறார்,

தர்மம் எது? அதர்மம் எது? செய்யவேண்டியது என்ன? செய்யத்தகாதது என்ன? இவற்றைப் பற்றிச் சரியான முடிவு செய்ய முடியாமல் தம் உள்ளம் மயங்குகிறது என்று கூறுகிறார் அர்ஜுனன். அர்ஜுனனுடைய உள்ளம் தற்போது பெரிய தர்ம ஸங்கடத்தில் ஆழ்ந்துவிட்டது. ஒருபுறம் குடிமக்களைக் காப்பது, சொத்துக்களைக் காப்பது என்ற நோக்கில் யுத்தம் செய்வது க்ஷத்ரிய தர்மம்தான். அதில் ஈடுபட வேண்டியது உசிதம்தான் என்றும் நினைக்கிறார். மறுபுறம் அவருடைய உள்ளத்தில் ஏற்பட்டிருக்கும் க்ருபணத்தன்மை யுத்தத்தின் பலவித பயங்கர விளைவுகளைக் காட்டி, பிச்சை எடுக்கலாமா, ஸந்யாஸம் கொள்ளலாமா, காட்டுக்கு ஓடிவிடலாமா என்றெல்லாம் நினைக்க வைக்கிறது. மனதிலே உள்ள அளவற்ற கருணை, புத்தியை ஒருவிதத் தீர்மானத்தையும் செய்யவிடாது, என்ன செய்வது என்று தீர்மானிக்க முடியாமல் திகைக்க வைக்கிறது.

அடுத்து ‘நிஸ்சிதம் ஸ்ரேய’(உறுதியான மேன்மை) எது என்று கூறுங்கள் என அர்ச்சுனன் வேண்டுவதன் விளக்கம் பார்ப்போம்.

கௌரவர் தரப்புப் படையை பீஷ்மர், த்ரோணர், கர்ணன் போன்ற உலகப்புகழ் பெற்ற வெல்ல முடியாத சூரவீரர்கள் கட்டிக் காக்கிறார்களே. தமது படையைக்  காட்டிலும் எதிரிப்படை அளவில் பெரியதாயிற்றே. அதைக் கண்டு அர்ஜுனன் பயந்திருக்கலாம் என்றோ, போரில் தமக்கு வெற்றி கிடைக்காது என்று அர்ஜுனனுக்கு நிராசை ஏற்பட்டுவிட்டது என்றோ, தமக்கு யுத்தம் செய்தால் நன்மையா, செய்யாவிட்டால் நன்மையா என்றெல்லாம் யோசித்து இங்கு எது ச்ரேயஸ் (நன்மை) என்றும், தமது வெற்றி-தோல்விகளில் எது நிச்சயம் என்றும் அர்ஜுனன் பகவானிடம் கேட்கிறார் என்றோ இப்படி எவ்விதமும் சொல்வதற்கு இங்கே இடமில்லை. இந்நிலையில் அவருடைய உள்ளத்தில் பந்தபாசம் விழித்துக் கொண்டு விட்டது. பந்துக்கள் அழிந்துவிடுவார்களே! பெரிய பாவம் ஏற்படுமே! இது நம்முடைய நன்மைக்குக் குந்தகம் ஆயிற்றே என்ற கலக்கம் ஒருபுறம். க்ஷத்ரியனுக்குரிய தர்மமான யுத்தத்தை த்யாகம் செய்யலாமா? அது அதர்மம் ஆகிவிடுமோ? அது என் மேன்மைக்கு ஊறு ஆகுமோ என்ற ஐயம் மறுபுறம். அதனால்தான் நிச்சயமான ச்ரேயஸ் என்ன என்று கேட்கிறார். இந்தக் கேள்வி வெற்றி-தோல்வியைப் பற்றியதன்று. அவருடைய லக்ஷ்யம் சிரேயஸை அடைவது என்பது தான் .’பகவானே! என்ன செய்ய வேண்டு மென்பதை என்னால் தீர்மானிக்க முடியவில்லை. நீங்களே தீர்மானித்துக் கூறுங்கள். எனக்கு உயர்ந்த ச்ரேயஸுக்கான ஸாதனம் எது?’ என்று அர்ஜுனன் கேட்கிறார்.

‘நான் உங்கள் சீடன். சரணடைந்த எனக்கு புத்திமதி கூறுங்கள்’ என்று கூறுவதன் கருத்து என்ன என்று பார்ப்போம்.

அர்ஜுனன் பகவானுடைய ப்ரியமான நண்பர். ஆத்ம தத்வ விஷயமான பேச்சு வேறு. ஆனால் நடைமுறையில் அர்ஜுனனுக்கும், பகவானுக்கும் உள்ள பழக்கம் எல்லா இடங்களிலும் ஸமானமானவர்களிடையே உள்ளது போன்றதாகும். உண்பது, அருந்துவதும் உறங்குவது, போவது, வருவது எதிலும் பகவான் அவருடன் ஸமமாகத்தான் பழகுகிறார். பகவான் உயர்ந்தவர் என்று மனதில் நம்பிக்கையும், மரியாதையும் இருந்தாலும் அர்ஜுனன் பகவானுடன் ஸமமாகத்தான் பழகுகிறார். இன்று அர்ஜூனனுக்குத் தமது வருந்தத்தக்க நிலையை நினைத்துப் பார்த்தவுடன் பகவானை ஸமமாக நினைப்பதற்கான தகுதி தமக்கு இல்லை என்ற அனுபவம் ஏற்படுகிறது. ஸமமாகப் பழகினால் ஆலோசனை கிடைக்கலாம்; உபதேசம் கிடைக்காது. தூண்டுதல் பெறலாம்; ‘இப்படிச் செய்’ என்ற ஆணை கிடைக்காது. “எனக்கு அறிவுரையோ, தூண்டுதலோ போதாது. எனக்கு ஒரு குரு வேண்டும். அவர் உபதேசம் எனக்கு வேண்டும். அவர் ‘இப்படிச் செய்’ என்று ஆணையிட வேண்டும். ‘இதுதான் உனக்கு ச்ரேயஸ்’ என்று வழிகாட்டுபவர் வேண்டும். என்னுடைய சோக, மோஹங்களைக் களைந்து பரம மங்களமான நிலையை அடையச் செய்யவேண்டும். ஸ்ரீக்ருஷ்ணனைக் காட்டிலும் சிறந்த குருநாதர் எங்கே கிடைப்பார்? ஆனால், குருநாதன் உபதேசரூபமான அமுதமழை, சிஷ்யன் என்ற வயலில்தானே பொழியும்” என்று நினைக்கிறார். ஆகவே அர்ஜுனன் ‘பகவானே! நான் உங்கள் சீடன்’ என்று கூறுகிறார்.

சீடர்கள் பலவிதம். தன் குருவிடம் உபதேசமும் பெற்றுக் கொண்டு தன் திறமையில்செருக்குக் கொள்பவனுக்கோ, குருவைத் தவிர மற்றொருவரிடம் விசுவாஸம் கொள்பவனுக்கோ குரு க்ருபையின் உண்மையான லாபம் கிடைக்காது. இங்கு அர்ஜுனன், ‘நான் உங்கள் சீடன்’ என்று கூறுவதுடன் நிறுத்திக் கொள்ளவில்லை. ‘வேறு புகலிடம் எனக்குக் கிடையாது’ என்ற மனதிடத்துடன் கூறுகிறார்: ‘பகவானே! நான் உங்களுக்கு சிஷ்யன் மட்டுமல்ல. உங்களைச் சரணடைகிறேன்.’ ‘ப்ரபந்ந’ என்று கூறுவதற்குப் பொருள் இதுதான். பகவான் எவ்விதத்திலும் உயர்ந்தவர், சக்தி படைத்தவர் என்று உணர்ந்து, அவரிடம் தன்னை முழுமையாக ஸமர்ப்பித்துக் கொள்வதைத்தான் ‘சரணாகதி’ என்றும், ‘ஆத்மநிக்ஷேபம்’ என்றும், ‘ஆத்மஸமர்ப்பணம்’ என்றும் கூறுவர். ஸர்வ வல்லமை படைத்தவர்; அனைத்துமறிந்தவர்; அனைவரது உள்ளத்திலும் உறைபவர்; அளவற்ற நற்குணங்களின் கரையற்ற கடல்; எல்லாவற்றிற்கும் அதிபதி; ஐசுவர்யம், இனிமை, தர்மம், சூரத்தனம், ஞானம், வைராக்யம் முதலியவற்றின் கொள்கலன்; க்லேசம், கர்மம், ஸந்தேஹம், கலக்கம் இவற்றை அழிப்பவர்; மிகவும் ப்ரேமை உடையவர்; உற்ற நண்பர்; நம்முடையவர்; குருநாதன்; பரமேசுவரன் என்று பகவானை நம்ப வேண்டும். தனக்குப் புகலிடமில்லை; பிடித்துக் கொள்பவர் இல்லை; தனக்கு புத்தி இல்லை; பலமில்லை; திண்மை இல்லை என்று தன்னைப் பற்றி நினைக்க வேண்டும். பகவானையே தாங்குபவராகவும், பிடிப்பாகவும், ஞானம், சக்தி, திண்மை, ஸரணாகதனிடம் ஒப்பற்ற அன்பு முதலியன உடையவராகவும், திடமாக வேறொன்றும் வேண்டாம் என்று பொறுப்பை ஒப்புவித்துத் தம்மை எப்பொழுதுமே அவருடைய திருவடிகளில் கிடத்திவிடுவது, கண்கொட்டாமல் அவருடைய அழகான நிலவு போன்ற முகத்தை தர்சனம் செய்வது, பொம்மலாட்டப் பொம்மைபோல எப்பொழுதும் அவர் ஆட்டுவித்தபடி ஆடுவது, அவரையே இடையறாது நினைத்துக் கொண்டிருப்பது – இவைதான் ப்ரபன்னன் ஆவது என்பது. பகவானிடம் இப்படி ப்ரபன்னன் ஆகிவிடுவோம் என்று அர்ஜுனன் விரும்புகிறார். இந்த பாவனையில் மூழ்கி அவர் கூறுகிறார்: ‘பகவானே! நான் உங்கள் சீடன். உங்களைச் சரணடைந்தேன்.

எனக்கு புத்திமதி கூறுங்கள்.’ ‘தே’ (உங்களுடைய), ‘த்வாம்’ (உங்களை) என்ற சொற்களைப் பயன்படுத்தி இதையே கூறுகிறார். எல்லாவற்றிலும் உயர்ந்த உண்மையான ஸரணாகதி என்ற பாவனை, 18/65,18/66 களில் பகவானுடைய மிகுந்த ரஹஸ்யமான உபதேசத்தின் விளைவாக ஏற்படப் போகிறது. அர்ஜுனன் அங்கே கூறுகிறபடி, ‘நீங்கள் கூறியபடி கேட்கிறேன்’ என்று சொல்வதுடன் கீதா உபதேசம் நிறைவு பெறுகிறது. உண்மையில் இந்த ச்லோகத்திலிருந்துதான் (2/7) கீதையின் ஸாதனை ஆரம்பம் ஆகிறது. உபதேசத்திற்கு இதுவே வித்து. ‘ஸர்வதர்மாந் பரித்யஜ்ய’ (18/66) என்ற ச்லோகம் இந்த ஸாதனைகள் முற்றிலும் ஸித்தியடையும் இடம்;

பகவத்கீதையைப் படித்து அதன் உட்பொருளைத் தெரிந்து கொள்ள விரும்பு பவர்கள் இந்த சுலோகத்தின் கருத்தைத் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொண்டு அதை பகவானிடம் பரிந்துவெளிப்படுத்த வேண்டும். ஆத்ம சாதனத்தில் நுழைய வரும் இந்தச் சுலோகத்தைப் பிராத்தனையாகப் பகவானிடம் சமர்ப்பிக்கலாம்.

No classes added yet.

Our Visitor

000794
Users Today : 2