Poornayogam

Sanatana Dharma – The Eternal Way of Life

Home » Sreemad Bhagavatgita Lesson – 02 Sankiya yogam – Tamil » ஸ்லோகம் – 03

ஸ்லோகம் – 03

क्लैब्यं मा सम गमः पार्थ नैतत्त्वय्युपपद्यते ।

क्षुद्रं हृदयदौर्बल्यं त्यत्तवोत्तिष्ट परन्तप ॥ २-३ ॥

க்லைப்யம் மா ஸ்ம கம: பார்த்த நைதத்த்வய்யுபப்த்யதே |

க்ஷுத்ரம்ஹ்ருதயதெளர்பல்யம் த்யக்த்வோத்திஷ்ட பரந்தப ||

பதப்பொருள்:

க்லைப்யம் – பேடி தன்மை; மா ஸ்ம கம: – அடையாதே;

நைதத்வ்ய்யுபப்த்யதே = ந + ஏதத் + த்வயி + உபபத்யதே

ந – இல்லை; ஏதத் – இது; த்வயி – உன்னிடத்தில்; உபபத்யதே – பொருந்தம்

(உன்னிடத்தில் இது பொருந்தாது)

க்ஷுத்ரம்ஹ்ருதயதெளர்பல்யம் = க்ஷுத்ரம் + ஹ்ருதயம் +  தெளர்பல்யம்

க்ஷுத்ரம் – இழிவான; ஹ்ருதயம் – உள்ளம்; தெளர்பல்யம் – பலவீனம்

த்யக்த்வோத்திஷ்ட = த்யக்த்வா + உத்திஷ்ட

த்யக்த்வா – துறந்துவிட்டு; உத்திஷ்ட – எழுந்திரு

பரந்தப – எதிரியை வாட்டுபவனே.

ஸ்லோக பொருள்:

பார்தா, பேடிதன்மையை அடையாதே, அது உனக்கு பொருந்தாது, எதிரியை வாட்டுபவனே, இழிவான உள்ளத்தளர்ச்சியை துறந்து விட்டு எழுந்திராய்.

இங்கு பகவான் அர்ச்சுனனை ‘பார்த்த’ என்று அழைத்தார் அதன் பொருள், அர்ச்சுனனின் தாயான குந்திதேவிக்கு ப்ருதை என்று வேறெரு பெயர் உண்டு ஆகையால் ‘ப்ருதையின் மகனே’ என்று பொருள்படும் சொல்லாகிய ‘பார்தா’ என்று அர்ச்சுனனை அழைத்தார்.

விளக்கம்:

அர்ச்சுனனின் நிலையை கண்டு கிருஷ்ணரின் மனம் இளகவில்லை. மன கலக்கத்தால் ஒரு கோழையைப் போல் நடந்துக் கொள்வது அவன் பெற்றுள்ள பண்புக்கும், பயிற்சிக்கும் பொருந்தாதது. அர்ச்சுனனை பொறுத்த மட்டில் போர் என்பது பயங்கரமான செயல் அல்ல. அவன் உண்மையில் எதிரிகளைப் பறந்தோட செய்பவன். அவனுக்கும், பலவீனத்திற்கும் வெகு தூரம், இதை நன்கறிந்த கிருஷ்ணர், அர்ச்சுனனது பலவீனத்தை கண்டு இழித்து பேசி, அவனது மனகலக்கத்தை அடியோடு களைந்து விடு என உத்தம நண்பரும், சத்குருவுமான ஶ்ரீகிருஷ்ணர், ஒரு நண்பனாக இருந்து பேசினார்.

இங்கு பகவான் ஶ்ரீகிருஷ்ணர், அர்சுனனுடைய மனகலக்கத்தை கண்டு கொண்டதாகவே காண்பிக்கவில்லை, ஏன்? இங்கு ஒரு சின்ன விசாரத்தில் ஈடுபடுவோம்.

பகவான் அர்ச்சுனனுடைய துயரத்தை கண்டு கொள்ளாமல் அவனிடம் அவன் தன் கடமையை நிறைவேற்ற வேண்டியது மிகவும் அவசியம் என்ற விழிப்புணர்வை குருவாக இருந்து பேசவில்லை ஒரு நண்பனாக இருந்து பேசுகிறார். ஏன் குருவாக இருந்து பேசவில்லை என்றால் அர்ச்சுனன் ஒரு சிஷ்யனாக இல்லை, எப்பொழுது சிஷ்யனாக மாறுகிறானோ, அப்பொழுது கிருஷ்ணர் குருவாக இருந்து உபதேசம் செய்வார். ஆகவே ஒரு நண்பனைப் போல் பேசுகிறார்.

எல்லா ஜீவராசிகளும் குறிப்பான மனிதர்களை எடுத்துக் கொண்டால் ஏதாவது ஒரு சோகத்தை (துன்பத்தை) அனுபவிக்கிறார்கள். அவர்கள் ஏழை யாகவோ அல்லது பெரும் செல்வந்தர்களாகவோ இருந்தாலும் மனிதன் என்ற உடலை எடுத்த எல்லா ஜீவர்களும் துயரப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஒரு மனிதன் எல்லா வசதிகளையும்பெற்று, தேவைக் கதிகமான செல்வங்களை உடையவனாக இருந்தாலும், வெளி பார்வைக்கு அவன் மகிழ்ச்சியாக இருப்பதாக தோன்றினாலும் அவன் மனதளவில் மகிழ்ச்சியாக இருக்கிறானா என்றால் கிடையாது. ஏதாவது ஒரு வகையில் துன்பத்தையும், அதிருப்தியும் அனுபவித்து கொண்டு தான் இருப்பான். இதில் சந்தேகம் வேண்டாம். உண்மையில் எல்லா மனிதர்களும் துயரப் படுகிறார்கள். பிறந்த குழந்தை முதல் இறக்கும் தறுவாயில் இருக்கும் எல்லா ஜீவர்களுக்கும் மனதளவில் ஏதாவது குறை இருக்கத் தான் செய்யும். மேலோட்டமாக பார்த்தால் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிந்தாலும் உண்மையில் ஏதாவது ஒரு வகையில் அவர்கள் மனதில் ஒரு குறை இருக்கத்தான் செய்கிறது. ஆகவே எல்லா ஜீவர்களுக்கும் சோகம், சந்தேகம், துயரம், குழப்பம், மோஹம் இப்படிப்பட்ட உணர்வுகள் இருக்கத்தான் செய்கிறது. கொஞ்சம் மனதிற்குள் கவனம் செலுத்தினால் கோபம், பொறாமை, குரோதம் போன்ற பாவனைகள் மனதில் இருப்பதை அறியலாம். பொறாமையற்று இருக்கிறேன் என்று லெளகீக வாழ்க்கையில் ஒருவரும் சொல்ல முடியாது. அவர்களுக்கு அதற்கான சந்தர்ப்பம் வரும் போதோ அல்லது தன்னோடு ஒப்பீடு செய்ய ஒரு நிகழ்வு ஏற்படுமானால் இந்த பொறாமை என்ற பாவனை நம்மையறியாமல் மேலோங்குவதைக் காணலாம். பொறாமை என்பது மற்றவர்களின் முன்னேற்றத்தை சகித்துக் கொள்ள முடியாமையாக இருப்பது. நம்மை மற்றவர்கள்  நேசிக்கப்பட வேண்டும், அங்கீகரிக்க வேண்டும், மற்றவர்கள் என்னை புகழ வேண்டும் போன்ற பாவனைகளும் மோஹமே. இந்தக் கூட்டங்களை தான் “சம்சாரம்” என்று சொல்லப்படுகிறது.

இந்த “சம்சாரம்” என்பது எல்லோருக்கும் பொதுவாக இருந்தாலும், இது ஏற்படுவதற்கான காரணம் (நிமித்தம்) ஒவ்வொரு மனிதனுக்கும் வேறுபாடாக அமையும்.

சோக நிமித்தம் மாறுபடும், சோகத்தில் மாறுபாடு இல்லை. நிமித்தம் என்பது காலத்துக்கு காலம் மாறுபடும், மனிதருக்கு மனிதர் மாறுபடும்.

ஒரே மனிதனுடைய துயரத்திற்கான காரணம் காலத்துக்குக் காலம் மாறுபடும். ஒரு காலத்தில் எந்த சூழ்நிலை ஒரு துயரத்துக்கு காரணமாக இருந்ததோ, அதே சூழ்நிலை வேறொரு காலத்தில் துயரத்திற்கு காரணமாகாது.

சிறு குழந்தையிலிருந்து வயதாகி மரணதருவாய் வரை துயரம் என்பது தொடர்ந்து வந்துக் கொண்டே இருக்கும். காரணம் தான் மாறிக் கொண்டே இருக்கும்.

ஒவ்வொரு முறையும் துயரம் வரும் போது அதை நீக்குவதற்கு அந்த துயரத்தின் காரணம் அறிந்து அதற்கு என்ன நிவர்த்தியோ அதை செய்து நாம் துயரத்தை மாற்றி வருகிறோம். (சூழ்நிலையில் வரும் இந்த துயரத்தை மேலோட்டமாக நம் கண்ணுக்கு தெரிந்த நேரடியான பிரச்சினை அல்லது துயரம் என்று அறியப்படுகிறது.)

அர்ச்சுனனுக்கு இப்போது ஏற்பட்டிருக்கும் துயரம் சூழ்நிலையின் தாக்கத்தால் ஏற்பட்டிருக்கும் துயரம். அர்ச்சுனனை பொறுத்தமட்டில் யுத்தம் என்பது ஒரு பயங்கர செயல் அல்ல, ஏனெனில் ஒரு ஷத்திரியன் என்ற முறையில் அவன் எத்தனையோ யுத்தத்தில் ஈடுபட்டவன், ஆனால் இந்த போரில் எதிர் அணியில் இருப்பவர்கள் வணக்கத்தக்கவர்களான ஆச்சாரியார்கள், மூத்தவர்கள், பாட்டன்மார்கள், புதல்வர்கள், மற்றும் பேரன்கள். ஆகையால் தன் உறவினர்களை போரில் போரிட்டு கொல்ல வேண்டும் என்ற சூழ்நிலையில் ஏற்பட்டது தான் இந்த துயரம்.

பகவான் கீதையில் அர்சுனனுக்கு ஏற்பட்ட துயரத்திலிருந்து விடுதலை அடைவதற்கான உபாயத்தை (மார்க்கத்தை) மட்டும் சொல்லியிருந்தால் இந்த கீதையை அர்ச்சுனன் மட்டுமே படிக்க வேண்டும். அர்ச்சுனனுக்கு மட்டுமே பொருந்தும், வேறு யாருக்கும் பொருந்தாது. ஆனால் இன்று வரை கீதையை எல்லோரும் படித்து வருகிறோம் என்றால் இந்த கீதை சூழ்நிலையின் தாக்கத்தால் ஏற்பட்டிருக்கும் துயரத்திற்கு மட்டும் மார்க்கம் சொல்லவில்லை என்று தெரிய வருகிறது.

பகவான் நமக்கு என்ன உபதேசம் செய்கிறார் என்றால் நமக்கு மேலோட்டமாக – நேரடியாக தெரிகின்ற பிரச்சனைக்கு கீழே ஒரு பிரச்சினை இருக்கின்றது அதை அடிப்படை பிரச்சனை என்று சொல்லுவார்கள் அதாவது, நம் சோகத்திற்கெல்லாம் ஒவ்வொரு காரணம் சொல்வோம் அந்த காரணத்திற்கெல்லாம் அடிப்படையாக ஒரு காரணம் இருக்கிறது. அந்த காரணம் நம் கண்ணுக்கும், நம் சிந்தைக்கும் தெரிவதில்லை. அது தான் நம் சோகத்திற்கெல்லாம் உண்மையான காரணம். இந்த உண்மையான காரணம் தான் எல்லா சோகத்திற்குள்ளும் ஊடுறுவி இருக்கிறது. அது நம் கண்ணுக்கு, சிந்தைக்கு தெரியாது அது எப்படியென்றால், ஒரு கட்டிடம் என்பது எதை ஆதாரமாக கொண்டுள்ளதோ அந்த அஸ்திவாரம் என்பது வெளியே நம் கண்ணுக்கு தெரியாமல் அந்த கட்டிடத்தின் ஒவ்வொரு செங்கல்களையும் தாங்கி நிற்கின்றதோ, அதைபோல் தான் நம்முடைய எல்லா துயரத்திற்கும் ஒரு அடிப்படையான காரணம் ஒன்று இருக்கிறது. அந்த காரணம், அதற்கான நிவர்த்தியையும் தான் கீதை வழியாக பகவான் அர்ச்சுன்னை நிமித்தமாக கொண்டு உபதேசம் செய்கிறார்.

ஆகையால் இந்த கீதை என்ற சாஸ்த்திரம் என்பது எல்லா மனிதர்களுக்கும் பொதுவானது. ஆனால் இதை எத்தனை பேர் படிக்கிறார்கள்? அல்லது யாருக்கு இந்த சாஸ்த்திரம் உபதேசிக்கப்பட வேண்டும்? என்ற வினா எழுகிறது. இதற்கான விடை ஒரு உதாரணம் மூலம் புரிந்துக் கொள்ளலாம். நம்முடைய உடலில் ஒரு நோய் இருக்கிறது. அந்த நோய்க்கான மருந்து டாக்டர் கையில் இருக்கிறது, நோய்கான மருந்து டாக்டர் கையில் இருப்பதனால் நோய் குணமாகி விடுமா? என்றால் குணமாகாது. நோய் இந்த மருந்தால் குணமாக வேண்டுமானால் அதற்கான முயற்சி என்ற பல படிகளை கடந்து வர வேண்டும்.

முதல் படி நம்மிடம் நோய் இருக்கிறது என்று தெரிய வேண்டும். இரண்டாவது படி நோய் இருக்கிறது என்று தெரிந்தாலும் அதை பொருட்படுத்தாமல் இருக்கும் அலட்சிய போக்கை மாற்றி நோய்க்கு தீர்வு காண வேண்டும் என்ற நிச்சயதார்த்தம். மூன்றாவது படி இந்த நோய் குணமாக நம் அறிவு பயன்படாது என்று உணர்தல். நான்காவது படி இந்த நோய் யார் குணப்படுத்துவார்களோ அவர்களிடம் அணுக வேண்டும் என்ற நான்கு படிகளை கடந்து வரும் நோயாளிக்கு தான் நோயிலிருந்து விடுதலை கிடைக்கும்.

இதை போல் துயரத்திலிருக்கும் ஒருவன் அந்த துயரத்திலிருந்து நிவர்த்தி அடைய வேண்டுமானால் நிவர்த்திக்கான படிகளை கடந்து வர வேண்டும், அவை என்னவென்று பார்ப்போம்.

முதல்படி நாம் மேலோட்டமாக பார்த்தால் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிந்தாலும் உண்மையில் ஏதாவது ஒரு வகையில் மனதில் ஒரு குறை அல்லது துயரம் இருக்க தான் செய்கிறது என்று கண்டு கொள்ளல், இரண்டாவது படி இந்த துயரத்திலிருந்து விடுதலை அடைய வேண்டும் என்று தீவிர இச்சை, மூன்றாவது படி என்னுடைய துயரத்தை, என்னுடைய புத்தியைக் கொண்டு விலக்க முடியாது என்று புரிந்துக் கொள்ளல் (இயலாமையை உணர்தல்). நான்காவது படி குருவை சரண்டைதல். இந்த நான்கு படிகளை யார் கடந்து வருகிறார்களோ அவர்கள் தான்  துயரத்திலிருந்து விடுதலை அடைய முடியும்.

முதல் படி: வாழ்க்கையில் அனுபவமும், அறிவும் சேர்ந்து இருக்க வேண்டும் என்ற நியதி கிடையாது. நாம் எதையெல்லாம் அனுபவிக்கிறோம் அதைப் பற்றிய அறிவு வரவேண்டும் என்ற நியதியும் கிடையாது. வேறு கோணத்தில் சொன்னால் வயது ஆக, ஆக அறிவு வளர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆகவே வயது வேறு, அறிவு வேறு. வயது ஏறுவது உடலை பொறுத்தது. ஒருவர் வாழ்க்கையின் அனுபவம் தான்  சம்சாரத்தை கண்டு பிடிக்க உதவி செய்யும், அந்த அனுபவ சூழ்நிலையை சரியாக புரிந்து கொண்டு இந்த அறிவை அடைய வேண்டும். சம்சாரம் என்பது என்ன என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும். நம்முடைய மனதில் இருக்கின்ற நிறைவின்மை தான் சம்சாரம் என்கிற துயரத்திற்கு காரணம். பிறகு நமக்குள் இருக்கின்ற துவேசம், மற்றவர் வளர்ச்சியி்ல் நமக்கு இருக்கின்ற பொறாமை, மற்றும் குரோதம், கோபம், உலோபம், பழிவாங்கும் உணர்ச்சி இவை யாவும் சம்சாரமே.

இரண்டாவது படி நான் சம்சாரி என்று சிலருக்கு தெரிந்தாலும் இந்த சம்சாரத்திலிருந்து விடுதலை பெற வேண்டும் என்ற இச்சை வருவதில்லை. அந்த இச்சை வர வேண்டும் என்றால் நிறைய புண்ணியம் செய்திருக்க வேண்டும், கர்ம யோகம் படி வாழ்க்கை வாழ்ந்திருக்க வேண்டும். சம்சாரம் என்பது என்ன என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும். மேலும் எதெல்லாம் சம்சாரமோ, அதெல்லாம் நம்மிடம் இருப்பதே வெட்கப்பட வேண்டியது. அதிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்று எண்ணாமல் அதை பெருமையாக நினைத்து கொண்டிருக்கும் நினைப்பே மோஹம். மேலும் நாம் மோஹத்திற்குள் அகப்பட்டிருக்கின்றோம் என்று தெரிந்தால் கூட சில விபரீதமான எண்ணங்களினால் அந்த மோஹத்திலிருந்து விடுதலை அடைய விருப்பம் வராது. எப்போது நம்மிடம் இருக்கின்ற குறைகளை அறிந்து, இந்த குறைகளோடு தான் நாம் வாழ்க்கை வாழ்ந்து வருகிறோம்  என்ற அறிவும், அந்த நடத்தையே நாம் வெட்கப்பட வேண்டிய ஒன்று என்ற எண்ணம் நமக்கு எப்போது தோன்றுகிறதோ, அது தான் விடுதலைக்கான முயற்சியின் ஆரம்பம்.

நாம் சம்சாரத்துடன் தான் இருக்கிறோம் என்று புரிதலான முதல்படி, அந்த சம்சாரத்திலிருந்து விடுதலை பெற வேண்டும் என்று இச்சையாக மாறுவது இரண்டாவது படி. அடுத்து இதுவரை சம்சாரத்தை அனுபவித்து வந்த இந்த புத்தியானது அல்லது அறிவானது இந்த சம்சாரத்தை நீக்க எந்த விதத்திலும் பயன்படாது என்று உணர்வது மூன்றாவது படி, அப்படி உணர்ந்தவுடன் சரியான குருவிடம் சரண்டைவது தான் நான்காவது படி. இப்படி நான்கு படிகளை கொண்ட துக்கநிவர்த்தி உபாயத்தில் அர்ச்சுனன் இரண்டு படிகளை கடந்து வந்துள்ளான். மேலும் இரண்டு படிகளை கடந்த பிற்பாடு தான் பகவான் குருவாக இருந்து உபதேசத்தை ஆரம்பிக்க உள்ளார்.

No classes added yet.

Our Visitor

000566
Users Today : 4