இரண்டாவது ஸ்லோகம்
श्रीभगवनुवाच ।
कुतस्त्वा कस्मलमिदं विषमे समुपस्थितम् ।
अनार्यजुष्टमस्वर्ग्यमकीर्तिकरमर्जुन ॥ २-२ ॥
ஶ்ரீ பகவானுவாச
குதஸ்த்வா கச்மலமிதம் விஷமே ஸமுபஸ்திகம் |
அனார்யஜுஷ்டயமஸ்வர்க்யமகீர்த்திகரமர்ஜுன ||
பதம் பிரித்து பொருள்:
குதஸ்வா = குத: + த்வா
குத: – எங்கிருந்து; த்வா – உன்னிடத்து.
கச்மலமிதம் = கச்மலம் + இதம்;
கச்மலம் – அழுக்கு,மனக்குழப்பம்; இதம் – இந்த.
அனார்யஜுஷ்டயமஸ்வர்க்யமகரீர்த்திகரமர்ஜுன
அனார்யஜுஸ்டம் + அஸ்வர்க்யம் + அகீர்த்திகரம் + அர்ச்சுனா
அனார்யஜுஸ்டம் – ஆர்யனுக்கு அடாதது;
அஸ்வர்க்கியம் – சுவர்க்கத்திற்கு தடையாவது;
அகீர்த்திகரம் – புகழைப் போக்குவது; அர்ச்சுனா – அர்ச்சுனன்.
விஷமே – நெருக்கடியில்; ஸமுபஸ்திதம் – அட்டைந்தது.
ஸ்லோக பொருள்:
அர்ச்சுனா, ஆரியனுக்கு அடாததும், சுவர்க்கத்தைத் தடுப்பதும், புகழைப் போக்குவதுமான இந்தளவு மனகலக்கம் இந்நெருக்கடியில் எங்கிருந்து உன்னை வந்தடைந்தது.
விளக்கம்:
இதுவரையில் பேசாதிருந்த பகவான் இப்பொழுது தான் பேச ஆரம்பிக்கிறார்.
இந்த இரண்டாவது ஸ்லோகத்தில் “ஶ்ரீகிருஷ்ண”ருக்கு “பகவான்” என்று அடைமொழி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அடைமொழியான “பகவான்” என்பதற்கு என்ன பொருள் என்றுப் பார்ப்போம்.
பக என்ற சொல்லுக்கு ஆறு ஐஸ்வர்யங்கள் என்று சொல்லப்படுகின்றது. இந்த ஆறு ஐஸ்வர்யங்கள் யாரிடத்தில் முழுமையாக இருக்கின்றதோ அவர்களை பகவான் என்று அழைக்கப்படுகிறார். அந்த ஆறும் என்னென்ன என்று பார்ப்போம்.
ஐஸ்வர்யஸ்ய ஸமக்ரஸ்ய தர்மஸ்ய யஸஸ: ஶ்ரீய:
ஞான வைராக்யயோஷ்சைவ சன்னாம் வஹ: இதி |
ஐஸ்வர்யம் – ஆளுமை; தர்மஸ்ய – புண்ணியம்; யஸஸ் – புகழ்;
ஶ்ரீய: – செல்வம்; ஞானம் – அறிவு; வைராக்கியம் – வைராக்கியம்
ஸமக்ரஸ்ய – பூர்ணமாக(முழுமையாக)
சன்னாம் வஹ இதி – இந்த ஆறும் யாரிடம் இருக்கிறதோ
அவர் பகவான்
“பகவான்” என்ற சொல்லில் “பக” என்பது மேலே சொன்ன “ஆறு குணங்களை”யும், “வான்” என்ற சொல் “முழுமையாக உடையவர்” என்றும் பொருள்.
பகவான் = ஆறு குணங்களையும் முழுமையாக(பூர்ணமாக) உடையவர்.
‘‘ஐஸ்வர்யம்’’ என்று நாம் பொதுவாக சொல்வது அனைத்து செளபாக்கி யத்தையும் உள்ளடக்கிய ஒரு பத சொல்லாகத் தான் பயன்படுத்தி வருகி றோம், ஆனால் இலக்கணப்படி ‘’ஐஸ்வர்யம்’’ என்றால் ‘’ஆளுமை, ஸர்வ வல்லமை’’ என்று பொருள். பூர்ணமான ஆளுமை என்பது அவரை ஆள்வதற்கு வேறு ஒருவர் இல்லாதவர்.
‘’தர்மஸ்ய’’ என்பது ‘’புண்ணிய’’த்தை கூறுகிறது. ஸமக்ரஸ்ய தர்மஸ்ய என்பது முழுமையான புண்ணியம் என்பது பாவமற்ற புண்ணியம் என்று பொருள்.
வைராக்கியம் என்றால் ஆளுமை, புண்ணியம், புகழ், செல்வம், ஞானம் இவை அனைத்தும் இருந்தாலும் அவற்றால் எந்தவித அகங்காரமற்றிருப்பது.
மேலே கூறிய ஆறு குணங்கள் யாரிடம் இருக்கிறதோ அவர் “பகவான்” என்று அழைக்கபடுகிறார்.
ஆரியன் என்ற சொல்லிற்கு பொருள் பார்ப்போம்:
‘’ஆரியன்’’ என்ற பதம் நம் சாஸ்த்திரங்களில் குறிப்பிடுவது ஒரு தேசத்தை சார்ந்தவர்களையோ அல்லது ஒரு குறிப்பிட்ட ஜாதியை சார்ந்தவர்களையோ அல்ல. பண்பட்ட மனதும், சிறந்த வாழ்க்கை முறையும் எவர்களிடத்தில் உள்ளதோ அவர்கள் ஆரியர்கள். ஆரியன் என்ற சொல் மேன் மக்களது பண்பை குறிப்பதாகும். அறநெறியில் நிலைக்கொள்பவன் ஆரியன் ஆகிறான். ஆரியன் என்னும் சொல் ஐயன் என்று திரிவுப்படுகிறது. உயர்ந்தோன் என்பது அதன் பொருள்.
கச்மலம் என்ற சொல்லிற்கு விளக்கம்:
குழம்பிய மனம் பழுதடைந்த தராசுக்கு சமம். பழுதடைந்த தராசில் எடுத்த நிறையும் சரியாக இராது. அர்ச்சுனனது மனம் கலங்கி இருக்கிறது. இதுவரை அவன் பேசியதில் பொருள் ஒன்றுமில்லை. அதை ‘’கச்மலம்’’ அல்லது ‘’குப்பை’’ என்று ஒதுக்குகிறார்.
மனக்கிலேசம் அடைபவனுக்கு இந்த உலகமுமில்லை, மறுஉலகமுமில்லை. இவ்வுலக வாழ்க்கையில் பெறவேண்டியவைகளைப் பெறுபவனுக்குப் புகழ் தானே வந்தமைகிறது. புகழ்பெற வாழாதவன் இவ்வுலகுக்கு உதவாதவன் ஆகிறான். எளிதில் கிடைக்கின்ற இவ்வுலகில் வாழ தெரியாதவன் அரிதாக கிடைக்கும் அமர லோகத்தை எப்படி அடைவான். நெருக்கடியில் மனக் கலக்கத்தை அடைபவன் உயர்ந்தோன் அல்ல. அத்தகையவனுக்கு இந்த உலகமும் இல்லை, மறுஉலகமும் இல்லை.
No classes added yet.






Users Today : 2