Poornayogam

Sanatana Dharma – The Eternal Way of Life

Home » Sreemad Bhagavatgita Lesson -01 Arjuna Vishada Yogam – Tamil » ஸ்லோகம் – 28 முதல் 30 வரை

ஸ்லோகம் – 28 முதல் 30 வரை

-कृपया परयाविष्टो विषीदन्निदमब्रवीत् ।

अर्जुन उवाच ।

दृष्ट्वेमं स्वजनं कृष्ण युयुर्सुं समुपस्थितम् ॥ १-२८ ॥

க்ருபயா பரயாSSவிஷ்டோ விஷீதன்னிதமப்ரவீத் |

அர்ச்சுன உவாச:

த்ருஷ்ட்வேமம் ஸ்வஜனம்க்ருஷ்ண யுயுத்ஸும் ஸமுபஸ்திதம் || (1-28) ||

அவன் மனமானது பற்றினால் பாதிக்கப்பட்டுவிட்டது.  பந்தப்பாசத்தால் ஆட் கொள்ளப்பட்டான்.  துயரத்தோடு பின்வருமாறு பேசினான்.

அர்ஜுனன் கூறத்தொடங்கினான்.

க்ருஷ்ணா, இங்கே இருக்கின்ற என்னைச் சார்ந்தவர்களைப் பார்த்தவுடன் போர் புரிய விரும்பி வந்திருப்பவர்களைக் கண்டு

सीदन्ति मम गात्राणि मुखं च परिशुष्यति ।

वेपशुश्च शरीरे मे रोमहर्षश्च जायते ॥ १-२९ ॥

ஸீதந்தி மம காத்ராணி முகம் ச பரிசுஷ்யதி |

வேபதுஸ்ச சரீரே மே ரோமஹர்ஷ்ஸ்ச ஜாயதே || (1-29) ||

என்னுடைய உடலுறுப்புக்கள் சோர்வடைந்து விட்டது, வாய் வறண்டு போய் விட்டது. என்னுடைய உடலில் நடுக்கம் ஏற்படுகின்றது. மயிர்க்கூச் செறிகின்றது,  உடல் சிலிர்த்து போகின்றது.

गाण्डिवं स्रंसते हस्तात्त्वक्चैव परिदस्यते ।

न च शक्नोम्यवस्थातुं भ्रमतीव च मे मनः ॥ १-३० ॥

காண்டீவம் ஸ்ரம்ஸதே ஹஸ்தாத்த்வக்சைவ பரிதஹ்யதே |

ந ச சக்னேம்யவஸ்தாதும் ப்ரமதீவ ச மே மன: || (1-30) ||

காண்டீபம் என்கின்ற வில்லானது கையிலிருந்து நழுவி விடுகின்றது.  உடல் எரிகின்றது.  நிற்பதற்கு கூட என்னால் முடியவில்லை.  உட்காரவும் முடிய வில்லை. என்னுடைய மனமானது கலங்குகிறது. மயக்கம் ஏற்படுகின்றது

விளக்கம்:

எதிரணியின் படை அணிவகுப்பில் படைதளபதிகளாக நிற்பவர்கள் தன் ஆசிரியர்கள, தன் பாட்டன்கள், மாமன்மார்கள், சகாதரர்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என்ற உணர்வு அர்ச்சுனனை ஆட்கொண்டது. பகவான் ஶ்ரீகிருஷ்ணர் எண்ணியப்படியே சொந்த பந்தங்களுடனான தன் உறவு முறையின் காரணமாக அர்ச்சுனன் குழப்ப நிலையை அடைந்தான். மிகவும் நேர்த்தியான மனிதர்கள்கூட சில சமயம் பந்தச் சூழலில் மாட்டிக் கொள்ளும் போது குழப்ப நிலையை அடைந்து தன் இலக்கையே மறந்து விடுகின்றனர்.

அர்ச்சுன்னுக்கு ஏற்பட்ட மனமாற்றம் என்ன? அதை பற்றிய சிறு விசாரம் செய்வோம். அர்ச்சுன்னுக்கு மனதில் என்னென்ன பாவனைகள் வருகிறது என்று பார்ப்போம். முதலில் அவனுக்கு வருவது ‘ராகம்’ என்கிற பாவம். ‘ராகம்’ என்றால் பற்று. ராகம் என்பதை பற்று, சினேகம் ஆசை, பாசம், பிரியம், காமம் என்று பல சொற்களால் குறிப்பிடலாம். இங்கு பற்று என்பது அவர்கள் என்னை சார்ந்தவர்கள், நான் அவர்களை சார்ந்தவன் என்கிற சம்பந்த ரூபத்தில், பிணைப்பு என்ற பாவனையில் வருகிறது. இந்த பற்று எல்லா மனிதர்களிடமும் இருக்கிறது.

இந்த பற்றுக்கு ஒரு பொருள் தேவை, அந்த பொருளாக இருப்பது சக மனிதர்களும், மற்ற உயிரனங்களும். இது ஒரு நிலை. மற்றொரு நிலை வெளி பொருள்கள், வெளிபொருள் என்பது நமக்கு சுகத்தையும், இன்பத்தையும் கொடுக்கும் சாதனம். (இங்கு சாதனம் என்ற சொல் அது இல்லாமல் நம்மால் இருக்க முடியாது என்கிற வரைக்கும் நம் மனம் அதில் ஒட்டி கொண்டிருக்கும் பொருளை குறிப்பிடுகிறது). ராகம் அல்லது பற்று என்பது சக மனிதர்கள், மற்ற உயிரினங்கள், வெளி பொருட்களின் நாம் வைக்கின்ற சம்மந்தம் அல்லது பிணைப்பு. ராகம் அல்லது பற்று என்பதன் மூலகாரணம் என்ன என்பதை இரண்டாவது அத்தியாயத்தில் விளக்கமாக பார்க்க உள்ளோம். இங்கு நமக்கு தெரிந்து கொள்ள வேண்டியது இந்த ராகம் எதனால் வளர்க்கப்படுகிறது என்பது. இந்த ராகம் சங்கத்தினால் அல்லது சம்பந்தத்தினால் வளர்க்கப்படும்.

சங்கம் என்பது அதோடு சேர்ந்து இருப்பதனால் பற்றானது நம்முடைய மனதிலிருப்பது வளர்க்கப்படும்

அடுத்து சங்கல்பத்தினாலும் பற்று வளர்கிறது. சங்கல்பம் என்றால் ஒரு பொருளையோ, மனிதர்களையோ நினைத்து கொண்டே இருந்தாலும் அதன் மேல்பற்று ஏற்படுகிறது.

ஒரு மனிதராகட்டும் அல்லது ஒரு பொருளாகட்டும் பார்த்தவுடன் பற்றுதல் வந்து விடாது. அதாடு சங்கமோ, சங்கல்பமோ வைக்க, வைக்கதான் பற்று வளர்கிறது.

அடுத்து ராகத்தினால் ஏற்படும் விளைவுகள் என்பதை பார்ப்போம்.

நாம் ஒரு மனிதரையோ, அல்லது பொருளையோ விரும்புகிறோம். விரும்பு வதை அடைய ஆசைப்படுகிறோம். அந்த விருப்பம் நிறைவேற தடையாக யாரேனும் இருந்தால் அவர்கள் மேல் நமக்கு வெறுப்பு ஏற்படுகிறது.

இந்த வெறுப்பானது, தடையாக இருக்கும் மனிதன் நம்மை விட வலிமையிலும், செல்வாக்கிலும், பொருளிலும் தாழ்ந்தவனாக இருப்பின் நமக்கு அந்த மனிதனிடம் குரோதம் (கோபம்) ஏற்படும்.

அதே சமயம் அந்த மனிதன் நம்மை விட எல்லாவிதத்திலும் உயர்ந்தவனாக இருப்பின் அந்த மனிதனிடம் நமக்கு பயம் ஏற்படுகிறது.

ராகத்தினுடைய விளைவாக வருவது குரோதம், பயம். இந்த குரோதமும், பயமும் எப்போது வரும் என்றால் நாம் ஆசைப்பட்ட பொருள் கிடைக்க தடை ஏற்படும் போது. ஆனால் வாழ்க்கையில் ஒரு நியதி என்னவென்றால் நாம் விரும்புகின்ற அல்லது அடைந்த மனிதர்களோ, பொருட்களோ என்றும் சாஸ்வதமானதோ, நிலையானதோ அல்ல. அது ஒரு காலத்தில் அழிவுக்கு உட்பட்டது. ஆகவே நாம் விரும்பிய, அல்லது அடைந்த பொருளிற்கு, அல்லது மனிதர்களுக்கு அழிவு ஏற்படும் போது நமக்கு துயரம் அல்லது சோகம் ஏற்படுகிறது. ஆக ராகத்தின் அடுத்த விளைவாக வருவது சோகம்.

இதுவரை ராகத்தின் விளைவாக வருவது குரோதம், பயம், சோகம் என்று பார்த்தோம்.

இப்போது அர்ச்சுன்னின் மனநிலைக்கு வருவோம். அர்ச்சுனன் யுத்தத்தை துவங்க வேண்டிய நெருக்கடியான வேளையில் பீஷ்மரையும், துரோண ரையும் உட்பட கெளரவ சேனையில் உள்ளவர்களை தன்னவர்களாக பார்த்து  அவர்கள் என்னை சார்ந்தவர்கள், நான் அவர்களை சார்ந்தவன் என்கிற சம்பந்த ரூபமான பற்றினால் (ராகத்தினால்) ஆட் கொள்ளப்பட்டான்.

அர்ச்சுனனின் மனதில் முதலில் பற்று அல்லது ராகம் என்கிற பாவனை.

உண்மையில் ‘தான்-தன்னுடையவை’ அவற்றின் அழிவை நினைத்தால் மனம் கலங்குவது இயற்கையே. இங்கு அர்ச்சுனன் தான் யாருக்காக போர் புரிந்தால் அர்த்தமும், பெருமையும் கிடைக்குமோ அந்த தன்னவர்களையே இந்த போரில் தன்னால் கொல்லப்படுவார்கள் என்பதை எண்ணினான்.  இந்த எண்ணமானது அர்ச்சுனனுக்கு சோகத்தை ஏற்படுத்தியது.

அர்ச்சுனனுக்கு முதலாவதாக ஏற்பட்ட மனமாற்றம் எதிரணியில் உள்ள பீஷ்மர், துரோணர் உட்பட்டோர் தன்னை சார்ந்தவர்கள் என்ற பற்று(ராகம்).

இரண்டாவது இந்த பற்றின் விளைவாக வந்த சோகம். தன்னவர்கள் இந்த யுத்தத்தில் தன்னால் கொல்லப்படுவார்கள் என்ற சோகம்.

29-ம்,30-ம் ஸ்லோகங்களில், என்னுடைய உடலுறுப்புக்கள் சோர்வடைந்து விட்டது, வாய் வறண்டு போய் விட்டது. என்னுடைய உடலில் நடுக்கம் ஏற்படுகின்றது. மயிர்க்கூச் செறிகின்றது,  உடல் சிலிர்த்து போகின்றது. காண்டீபம் என்கின்ற வில்லானது கையிலிருந்து நழுவி விடுகின்றது.  உடல் எரிகின்றது.  நிற்பதற்கு கூட என்னால் முடியவில்லை.  உட்காரவும் முடிய வில்லை. என்னுடைய மனமானது கலங்குகிறது. மயக்கம் ஏற்படுகின்றது. என்று அர்ச்சுனன் கூறினான்.

இங்கு அர்ச்சுனனுக்கு நேர்ந்து கொண்டிருப்பதெல்லாம் அவனுடைய மனதில் உண்டான தளர்வானது உடல்வரை அடைந்த பிரதிபலிப்பு தான். நம் உடலினால் ஏற்படும் தளர்வு அல்லது பாதிப்பு நம் மனம் வரை செல்வது மிகவும் குறைவு. ஆனால் மனதில் ஏற்படும் அனேக கலவரங்கள உடலைப் பாதிக்கின்றன. ஒரு இலைக்கு ஏற்பட்ட காயம் வேர் வரை சென்று பாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் வேரில் ஏற்படும் பாதிப்பு இலைகளை அவசியம் பாதிக்கும. அதுபோலவே அர்ச்சுனனுக்கு ஏற்பட்ட சம நிலை இழந்த மனநிலை அவனது உடலையும் சம நிலை இழக்க வைத்தது.

அர்ச்சுன்னுக்கு நேர்ந்து கொண்டிருப்பதெல்லாம் அவனுடைய மனதில் தோன்றிய சுழற்சியின் உடல்வரை அடைந்த பிரதிபலிப்புதான். நம் வாழ்க்கையில் உடலினால் ஏற்படும் குழப்பம் மனம் வரை செல்வது மிகவும் குறைவு.  மனதின்  அனேக கலவரங்கள் உடலைப் பாதிக்கின்றது. அர்ச்சுன னின் இந்நிலையான மயிர்கூச்செரிவதும், வில் நழுவுவதும், கைகால் நடுங் குவதும் ஆகிய நிலை மனதின் அடிதளத்தில் என்ன நடைபெறுகிறதோ அதுவே சரீரத்தின் ஒவ்வொரு பகுதியிலும் பிரிதிபலிக்கின்றது என்பதை நமக்கு உணர்த்துகிறது.

அர்ச்சுனன், ‘என் மனம் என்னைக் கைவிட்டு விட்டது. நான் ஒரேயடியாக வீர்யமற்று பலமற்றுப் போய் விட்டேன்.’ என்கிறான்.

பலம் என்பது என்ன?

ஒன்று உடலின் மாமிச தசைகளின் பலம்.

மற்றொரு பலம் ‘வில்’ பவர் – மனோபலம். துணிவிலிருந்து பிறப்பது. உண்மையில் துணிவிலிருந்து பிறப்பது தான் உண்மை பலம்.

மனதின் சங்கற்பம் உடல் வரை பிரிதிபலிக்கிறது என்பதை தெளிவு படுத்த ஒரு யோக சாதனையை இங்கு நாம் தெரிந்து கொள்வோம்.

திபெத்தின் லாஸா சர்வ கலாசாலையில் படிக்கும் மாணவர்களுக்கு யோக சாதனையில் ஒரு பாடம் கட்டாய பாடமாக இருந்தது. ஒரு யோக சாதனை ஆராய்ச்சி அங்கே செய்யப்பட்டு வந்தது. அதில் மாணவர்கள் தேர்வு அடைய வேண்டியது கட்டாயமாக இருந்தது. அதை ‘ஹீட்யோகா’ என்றார்கள். சரீரத் தின் உள்ளிருந்து மனதின் சக்தியால் சரீரத்திற்கு உஷ்ணம் தருவிக்க வேண் டும். வெளியே உடம்பை உறையவைக்கும் பனி, மாணவன் உள்ளாடை மட்டுமே அணிந்து நிற்கிறான். அவன் உடலிலிருந்து வியர்வை கொட்டிக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்ல தேர்வு நடப்பது இரவில், திறந்த வெளி ‘ஜேல் நதிக்கரையில், பனி பள்ளத்தாக்கில், அவர்கள் அருகில் கோட்டு,         சட்டை, காலங்கி முதலிய உடைகள் ஈரமாக்கப்பட்டுக் கிடக்கும். யார் இரவு முடிவதற்குள் தன் சரீரத்தில் அந்த உடைகளை அணிந்து, உலர்ந்து விடும் அளவு உஷ்ணத்தை உண்டு பண்ணுகிறார்களோ அவர்களுக்கு அதிக மதிப்பெண்கள் கிடைக்கும். அதிலும் எவ்வளவு அதிக துணிகளைக் காய வைக்கிறார்களோ அந்தளவு அதிக மதிப்பெண்கள் கிடைக்கும்.

மேலை நாட்டிலிருந்து இந்த பரிசீலனைக்காக வந்த டாக்டர்கள் கூட அந்தக் குளிரையும், இந்த கடுமையான தேர்வையும் கண்டு மிகவும் பிரமித்தனர். வெளியிலோ பனி பெய்துக் கொண்டிருக்கிறது. கோட்டின் மேல் கோட்டு அணிந்து கொண்டிருந்த போதும் அவர்கள் உடல் நடுங்கி கொண்டிருந்தது.

மாணவர்களோ திறந்த உடம்புடன், அவர்கள் சரீரத்தில் எது நடந்திருக்க முடியாததோ அது நடந்து கொண்டிருந்தது. மாணவர்களுடைய மனம், பனி பெய்வதை ஒப்புக் கொள்ள மறுத்தது.

“பனி இல்லை, வெயில் காய்கிறது, தீவிர உஷ்ணமாகி வருகிறது, சரீரம் உஷ்ணத்தால் தகிக்கிறது” என்று மனம் கூறிக் கொண்டே இருக்கிறது. அந்த சங்கற்பத்தை உடல் ஏற்கிறது அதனால் சரீரம் வியர்வையை பெருக்குகிறது.

மாணவர்களின் உடலில் இத்தனை மாறுதல்களுக்கு வேறெந்த காரணமும் இல்லை, மாணவர்களின் மனதில் தோன்றிய சுழற்ச்சி உடல் வரை அடைந்த பிரதிபலிப்புதான்.

இங்கு அர்ச்சுனன் தன்னுடைய மனோ பலத்தை இழந்து விட்டான். மனோ பலத்தை இழப்பதற்கு வெளிப்படையில் எந்தவித காரணமும் காணப்பட வில்லை, வெளியே எல்லா விஷயங்களும் பழையப்படியே தான் இருந்தன, மாற்றம் அவன் உள்ளே நடந்தது.

அர்ச்சுனனுக்கு முதலில் ஏற்பட்ட மாற்றம் எதிரணி படையில் உள்ள பீஷ்மர், துரோணர் உட்பட்டோர் தன்னை சார்ந்தவர்கள் என்ற பற்று(ராகம்).

இரண்டாவது இந்த பற்றின் விளைவாக வந்த சோகம். தன்னவர்கள் இந்த யுத்தத்தில் தன்னால் கொல்லப்படுவார்கள் என்ற சோகம்.

குறுகிய காலத்தில் ஏற்பட்ட இந்த  மாற்றம் மாவீரனாகிய அர்ச்சுனனை பலவீனமாக்கி தன்னுள் இருக்கும் அபரிதமான சக்தியை மறந்து ஆற்றல் அற்றவனாக்கி விட்டது. அதீத சக்தி கொண்ட ஒரு கருவண்டால் கடினமான மரத்தில் கூட துளையிட முடியும், ஆனால் தாமரை மலரிலிருந்து வரும் நறுமணத்தால் ஈர்க்கப்பட்ட அவ்வண்டினால் சூரியன் மறைந்தவுடன்       தன்னைச் சூழ்ந்து கொண்டு சிறைப் பிடிக்கும் தாமரை இதழ்களிடமிருந்து தப்ப முடிவதில்லை. மலரின் நறுமணமானது அவ்வண்டினை தன்வசம் இழக்க செய்து வண்டுவினுடைய அதீத சக்தியைக் கூட பலவீனமடைய செய்கிறது. அர்ச்சுனனுக்கு எதிரணி படையில் உள்ள பீஷ்மர், துரோணர் உட்பட்டோர் தன்னை சார்ந்தவர்கள் என்ற பற்று(ராகம்). மாவீரனாகிய அர்ச்சுனனை பலவீனமாக்கி தன்னுள் இருக்கும் அபரிதமான சக்தியை மறந்து ஆற்றல் அற்றவனாக்கி விட்டது.

No classes added yet.

Our Visitor

000559
Users Today : 3