Poornayogam

Sanatana Dharma – The Eternal Way of Life

Home » Vedantam – Tamil » மனம்(ஸூஷ்ம சரீரம்)

மனம்(ஸூஷ்ம சரீரம்)

முன்னுரை

ஓம் ஸ்ரீ குருப்யோ நம:

வேதங்களும் உபநிஷதங்களும் மனிதனைப் பற்றி கூறும் உண்மைகள் அளவற்றவை. நாம் பொதுவாக மனிதனை உடலாக மட்டுமே எண்ணி வாழ்கிறோம். ஆனால் வேதாந்தம் மனிதன் ஸ்தூல சரீரம், சூஷ்ம சரீரம், காரண சரீரம் ஆகிய மூன்று நிலைகளோடு கூடியவன் என்றும், அவற்றிற்கெல்லாம் சாட்சியாக விளங்குவது ஆத்மா என்றும் போதிக்கிறது. இந்த உண்மையை அறிந்தால்தான் மனித வாழ்க்கையின் நோக்கம் தெளிவடைகிறது.

இந்நூல், வேதாந்தத்தில் மிகவும் நுணுக்கமானதாகக் கருதப்படும் சூஷ்ம சரீர தத்துவத்தை எளிய தமிழில் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் விளக்க முயல்கிறது. உபநிஷதங்கள், பகவத்கீதை, நாராயண சூக்தம், சாந்தோக்ய உபநிஷத், கடோபநிஷத் போன்ற சாஸ்திர ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு, மனிதனின் உள் அமைப்பை ஆராயும் ஆன்மீகப் பயணத்திற்கு இந்த நூல் வழிகாட்டுகிறது.

சூஷ்ம சரீரம் என்பது கண்களால் காண முடியாத ஒன்று. ஆனால் அதுவே நமது எண்ணங்கள், உணர்வுகள், நினைவுகள், அறிவு, பிராண சக்தி மற்றும் புலன்களின் இயக்கங்களுக்கான ஆதாரமாக விளங்குகிறது. இதன் பதினேழு அவயவங்கள், அவற்றின் செயல்பாடுகள், மனம்–புத்தி–சித்தம்–அஹங்காரம் ஆகிய அந்தக்கரணத்தின் இயல்புகள் ஆகியவை இந்நூலில் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன. இ

இந்த நூல் வெறும் தத்துவ விளக்கமாக மட்டும் இல்லாமல், மனிதன் தன்னைத் தானே அறிந்து கொள்ளும் ஆன்மீகப் பயணத்திற்கு ஒரு நடைமுறை வழிகாட்டியாகவும் அமைகிறது. சாஸ்திரங்களில் கூறப்படும் உயர்ந்த கருத்துகளை அன்றாட வாழ்க்கையுடன் இணைத்து புரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் அமைக்கப்பட்டுள்ளது.

ஆன்மீக அறிவு என்பது படிப்பதற்கான ஒரு பொருள் மட்டுமல்ல; வாழ்வில் அனுபவித்து உணர வேண்டிய உண்மை. அந்த உண்மையை நோக்கிச் செல்லும் ஒவ்வொரு ஆன்மீகத் தேடலாளருக்கும் இந்நூல் ஒரு சிறிய விளக்காக அமையும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

எனது குருமார்களின் திருவடிகளுக்கு இந்த நூலை சமர்ப்பிக்கிறேன். அவர்களின் அருளும், இறைவனின் கருணையும் இந்த நூலைப் படிக்கும் அனைவருக்கும் உள்ளார்ந்த அமைதி, தெளிவு, தன்னறிவு ஆகியவற்றை அருளட்டும்.

ஓம் தத் ஸத்

  1. K. ஆறுமுகம் (மணி) ஆச்சாரி
    ஆசிரியர்

ஓம்

குருப்யோ நம:

மனம்(ஸூஷ்ம சரீரம்)

மனிதன் இரண்டு அம்சங்களோடு கூடிய ஒரு ஜீவன் என்று சாஸ்த்திரங்களினால் அறியப்படுகிறது. அந்த இரண்டு அம்சம் எனப்படுவது, ஒன்று ப்ரஹ்ம(பரமாத்மா) அம்சம், இரண்டாவது ஜீவாத்மா. (ஜீவாத்மா குறித்து விளக்கமாக வரும் பாடங்களில் படிக்க உள்ளோம்).

உடம்பு, மனம், பிராணன், ஆன்மா என்ற பலவற்றின் தொகுதி மனிதன்.

பொதுவாக மனிதன் தன்னை ஜூவனுடன் அதாவது மனத்துடனும், உடம்புடனுமே தன்னை ஒன்றுபடுத்தி காணப் பழகியுள்ளான். அவை இரண்டும் நிழல், உண்மையற்றவை, மாறக்கூடியவை. ஆனால் மனிதனுள் உள்ள ஆன்மா நிஜம். இறைவனிலிருந்து மாறுபடாதது. இறையம்சமான அதனுடன் ஒன்றுப்படுத்தி கொள்ளும் போது மனிதன் தனது மகிமையில் திளைக்கிறான். அனாத்மாவான உடல், மனம் கொண்டு வரும் அனுபவங்களுடன் தன்னை ஒன்றுப் படுத்திக் கொள்ளும் போது இன்ப, துன்பக்களுக்கு உள்ளாகி பிறவிச் சுழலில் உழல்கிறான்.

மனித உடம்பு மூன்று சரீரங்களோடு கூடியது. அவையாவன;

1)ஸ்தூல உடல்(ஸ்தூலசரீரம்), 2)நுண்ணுடல்(ஸூஷ்மசரீரம்), 3)காரண  உடல்(காரணசரீரம்).

ஸ்தூலசரீரம்: ஆகாசம், வாயு, அக்கினி, தண்ணீர், பூமி ஆகிய பஞ்ச பூதங்களினால் ஆனது. ‘ஷட்விகார’த்திற்கு உள்ளானது. ‘ஷட்விகாரம்’ என்பது ஆறு மாற்றங்களுக்கு உட்பட்டது. ஆறு மாற்றங்கள் என்பது 1)அஸ்தி (கருவில் இடம் பெறுவது), 2)ஜாயதே (பிறப்பது), 3)வர்த்ததே (வளர்ச்சி), 4)விபரிணமதே (இளமை, வாலிபம், முதுமை போன்ற நிலைமாறுபாடுகளுக்கு உள்ளாவது). 5)அபஷீயதே (மூப்பின் காரண மாகத் தளர்ச்சிக்கு உள்ளாதல்) 6)விநச்யதே (மரணம்) ஆகிய ஆறு மாற்றங்களுக்கு உள்ளான இந்த ஸ்தூல சரீரம் தன்னாலும், பிறராலும் காணக்கூடியது. சுமார் நூறு ஆண்டு காலம் ஆயுள் கொண்டது.

ஸூஷ்ம சரீரம்: விளக்கமாக பார்க்க உள்ளோம். இந்த உடல் தன்னாலோ, பிறராலோ காண இயலாதது, பிரளய காலம் வரை ஆயுள் உடையது.

காரண சரீரம்: இது உண்மையில் தனி உடலல்ல, ஸ்தூல மற்றும் நுண்ணுடல்கள்(ஸூஷ்ம சரீரம்) வெளிப்படும் முன்னால் இருக்கின்ற விதை நிலை. எப்படி விதையே மரமாக வெளிப்படுகிறதோ, அப்படியே காரணசரீரம் தான் ஸ்தூல மற்றும் ஸூஷ்ம சரீரமாக வெளிப் படுகிறது. பிரளய காலத்தில் இந்த இரண்டு சரீரமும் காரணசரீரமாக ஒடுங்கிவிடுகின்றன. முக்தி நிலையில் மட்டுமே இந்த உடல் அழிகிறது. தன்னாலோ, பிறராலோ இந்த உடல் காண இயலாது.

அடுத்து ஸூஷ்ம சரீரம் குறித்த விளக்கம் பார்ப்போம்.

இங்கு நாம் பார்க்க இருப்பது மனிதனின் ஸூஷ்ம சரீரத்தை பற்றியது. மற்ற உயிரினங்களும் ஸூஷ்ம சரீரத்தோடு தான் வாழ்கிறது என்றாலும் அவைகளுக்குள் அவயவங்களுக்குள் உள்ள எண்ணிக்கையில் வித்தியாசம் இருப்பதால் நாம் விசாரத்திற்கு எடுத்திருப்பது மனிதனின் ஸூஷ்ம சரீரம்.

ஸூஷ்ம சரீரத்தின் லக்ஷ்ணம்:

“ஸூஷ்ம சரீராணி ஸப்த் தச அவயவானி லிங்க சரீராணி ||

ஸப்த தச என்பதின் அர்த்தம்; ஸப்த = ஏழு, தச = பத்து;

ஏழு + பத்து = பதினேழு

அவயவானி = அவயவங்கள்

லிங்கம் = அடையாளம், அறிகுறி. (காட்டிக் கொடுக்கின்ற அடையாளம்)

சரீராணி = சரீரங்கள், உடல்கள்.

பதினேழு அவயவங்கள் உள்ள இலிங்க சரீரங்களே ஸூஷ்ம சரீரங்கள் ஆகும்.

நம்முடைய ஸ்தூலசரீரம் என்பது மிக எளிதாக புரிந்து கொள்ளலாம். அது இறந்ததற்கு பிறகு அது ஒரு ஜடம் தான் என்று. நாம் உணர்வோடு இருக்கும் போதுதான் உணர்வோடு இருக்கிறது. நாம் தூங்கும் போதும் இந்த உடல் ஜடமாகத்தான் இருக்கிறது. ஆனால் மனதோடு கூடிய இந்த ஸூஷ்ம சரீரம் உணர்வு பூர்வமாகவே இருக்கிறது.

இந்த உணர்வு என்பது “சைதன்யம்”

இந்த மனமானது தான் “சைதன்யம்” என்கிற உணர்வை நமக்கு ஆத்மாவிடமிருந்து பிரதிபலிக்க செய்கிறது. இந்த மனம் என்பது இல்லையென்றால் ஆத்மதத்துவம், சைதன்யம், சித்சொரூபம் என்பதை சொல்லவோ, புரிந்துக் கொள்ளவோ முடியாது. ஆத்ம சைதன்யத்தை நேரடியாக நம் முன்னால் பார்க்கவில்லை ஆனால் சித் சொரூபம் என்று சொல்கிறோமே அதை மனம் தான் காட்டிக்கொடுக்கிறது. மனம் என்பது தமோ குணத்திலிருந்து ஜடதத்துவமாக உருவான பஞ்சஸூஷ்ம பூதத்திலிருந்து தோன்றியது. ஐந்து ஸூஷ்ம பூதம் ஜடம் என்றால் அதிலிருந்து தோன்றிய மனமும் ஜடம் தான், அதிலிருந்து தோன்றிய ஸ்தூல பஞ்சபூதமும் ஜடம் தான், அதிலிருந்து தோன்றிய இந்த ஸ்தூல சரீரமும் ஜடம் தான். இப்படி ஜடமான பஞ்ச பூதத்திலிருந்து தோன்றிய மனம் உணர்வு பூர்வமாக இருப்பதற்கு காரணம் இந்த மனது சைதன்யத்தை பிரதிபிம்பித்து கொண்டே எப்போதும் இருப்பதால். ஆகவே இந்த மனது சைதன்யம் என்ற உணர்வை நமக்கு உணரவைக்கிறது. இந்த மனதோடு கூடிய ஸூஷ்ம சரீரமானது இலிங்க சரீரமாகவும் அறியப்படுகிறது. இலிங்க சரீரம் என்பது தத்துவ ரீதியாக சொல்வது, ஸூஷ்மசரீரம் என்பது அனுபவ ரீதியாக சொல்வது.

ஸூஷ்ம சரீரத்தின் பதினேழு அவயவங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

“அபஞ்சீக்ருதபஞ்சமஹாபூதை: க்ருதம், ஸத்கர்ம ஜன்யம், ஸுகதுக்காதி போக ஸாதனம், பஞ்சஞானேந்த்ரியாணி பஞ்சகர்மேந்திரியாணி, பஞ்சப்ராணாதய: மனஸ்சைகம் புத்திஸ்சைகா ஏவம் ஸப்த்தச கலாபி:ஸஹ யஸ்திஷ்டாதி தத்ஸூக்ஷ்ம சரீரம் |”

அபஞ்சீக்ருதபஞ்சமஹாபூதை:க்ருதம் = ஸூஷ்மம், அதாவது ஸ்தூல நிலையிலுள்ள பஞ்ச பூதங்களுக்கு முன்புள்ள பஞ்ச பூதங்களினால் செய்யப்பட்டது,

ஸத்கர்ம ஜன்யம் = கர்ம வினைப் படி கிடைப்பது

ஸுகதுக்காதி போக ஸாதனம் = ஸுகம், துக்கம் போன்ற இருமையின் அனுபவங்களை அனுபவிக்கும் ஸாதனம்.

பஞ்சஞானேந்திரியாணி = பஞ்ச என்றால் ஐந்து, ஞானேந்திரியாணி என்றால் அறிவை (வெளியிலுள்ள பொருட்களை குறித்த) கொடுக்கும் கருவி.

பஞ்சகர்மேந்திரியாணி = கர்ம என்றால் செயல்;                          செயல்பட உதவும் ஐந்து இந்திரியங்கள்.

பஞ்சப்ராணாதாய: = ஆற்றலை(சக்தி) கொடுக்கும் ஐந்து பிராணதத்துவம்

மனஸ்சைகம் = மனஸ் + ஏகம் = மனம் ஒன்று

புத்திஸ்சைகா = புத்தி + ஏகம் = புத்தி ஒன்று

ஏவம் = இவ்விதம்; ஸப்ததச = பதினேழு; கலாபி: = அவயவங்கள்

இவ்விதம் பதினேழு அவயவங்கள்

ஸஹ யஸ்திஷ்டதி = இத்துடன் (பதினேழு அவயங்களுடன்) சேர்ந்து எது இருக்கிறதே

தத் ஸூஷ்ம சரீரம் = அது ஸூஷ்ம சரீரம்.

ஸ்தூல நிலையிலுள்ள பஞ்ச பூதங்களுக்கு முன்புள்ள பஞ்ச பூதங் களினால் ஆனதும், கர்மவினைப்படி ஸுகம், துக்கம் போன்ற இருமையின் அனுபவங்களை அனுபவிக்கும் இடமாகவும், பஞ்ச ஞானேந்திரியம் என்னும் வெளியிலுள்ள பொருட்களை குறித்த அறிவை  கொடுக்கும் புலன்களையும். இந்த உடல் செயல்பட உதவும் ஐந்து கர்மேந்திரியங்களையும், இந்திரீயங்களுக்கு ஆற்றலை (சக்தியை) கொடுக்கும் ஐந்து பிராண தத்துவமும், மனம், புத்தி, ஆகிய பதினேழு அவயங்களுடன் கூடியது தான் ஸூஷ்ம சரீரம்.

ஞானேந்திரிங்கள்:

ஞானேந்திரியாணி ச்ரோத்ர-த்வக்-சக்ஷு-ஜிஹ்வா-க்ராணாக்யானி||

முதலில் இந்திரீயங்கள் என்றால் என்ன என்பதை புரிந்து கொள்வோம், நாம் ஒரு பொருளை பார்க்கிறோம். பார்க்கும் போது அந்த பொருளை நமக்கு வடிவத்தோடும், வர்ணத்தோடும் விளங்கவைக்கும் ஒரு சக்தி நம்மிடம் இருக்கிறது. அதேபோல் ஒலியையும், சுவையையும், மணத்தையும், தொடு உணர்வையும் விளங்க வைக்கும் சக்தி நம்மிடம் இருக்கிறது. சற்று விளக்கமாக பார்ப்போம், நாம் ஒரு பொருளை பார்க்கிறோம், எதில் பார்க்கி றோம் என்றால் கண்ணால் பார்க்கிறோம் என்கிறோம், உடனே எது கண் என்று கேட்டால், கண் முகத்தின் இந்த இடத்தில் இருக்கிறது என்று நாம் பார்க்க பயன்படுத்தும் ஸ்தூலமான கண்ணை காட்டுவோம், ஆனால் சாஸ்த்திரம் நமக்கு சொல்கிறது, ஸ்தூல வடிவமாக நமக்கு இருக்கும் இந்த கண் என்பது பார்க்கும் சக்தியை வெளிப்படுத்தும் ஒரு உறுப்பு மட்டுமே. அதுபோல் முறையே ஸ்தூல வடிவாக இருக்கும் காது என்பது கேட்கும் சக்தியையும், ஸ்தூல வடிவாக இருக்கும் நாசி(மூக்கு) என்பது நுகரும் சக்தி யையும், ஸ்தூல வடிவாக இருக்கும் நாக்கு என்பது சுவைக்கும் சக்தி  யையும், உடல் முழுவதும் பரந்து இருக்கும் தோல் என்பது தொட்டு உணரும் சக்தியையும் வெளிப்படுத்தும் ஒவ்வொரு உறுப்புகள். இந்த உறுப்புகள் சாஸ்த்திரத்தில் “கோளகம்” என்று அறியப்படுகிறது. அதில் வெளிபடும் சக்தியை உள்ளடக்கிய அவயவங்கள் தான் இந்திரியங்கள் என அறியப்படுகிறது.

ஸ்ஷ்மசரீரம் என்று அறியப்படும் கண்ணுக்கு புலப்படாத பதினேழு அவய  வங்களில் மேலே குறிப்பிட்ட இந்த ஐந்து சக்தியை கொண்ட அவயவங்கள் தான் ஞானேந்திரியங்கள். பஞ்சஞானேந்திரியம் என்றும் அறியபடுகிறது.

“ஞானேந்திரியாணி ச்ரோத்ர-த்வக்-சக்ஷு-ஜிஹ்வா-க்ராணாக்யானி||”    (இதன் பொருள் பார்ப்போம்)

ச்ரோத்ர = காது, த்வக் = தோல், சக்ஷு = கண், ஜிஹ்வா = நாக்கு, க்ராணம்=நாசி(மூக்கு) என்பவையே ஞானேந்திரியங்கள் ஆகும்.

வெளி பொருட்களைக் குறித்த அறிவானது இவைகளால் ஏற்படுவதால் இவை ஞானேந்திரியங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

அடுத்து ஒருவருக்கு கண் பார்வையில் ஏதாவது குறைபாடோ, அல்லது பார்வை தெரியவில்லை என்றோலோ, காது கேட்பதில் குறைபாடோ அல்லது காது கேட்கவில்லை என்றாலோ அதன் காரணம் கண், காது என்ற கோளகத்தில் (உறுப்பு) ஏற்பட்டுள்ள குறைபாடால் வருவதே, அல்லாமல் ஞானேந்திரியத்தின் பார்க்கும் சக்தி, கேட்கும் சக்திகளில் எந்த வித குறை   பாடோ, அல்லது ஏற்ற தாழ்வோ கிடையாது. குறைபாடு அந்தந்த சக்தியை வெளிபடுத்தும் கோளகத்தில் ஏற்படும் தடங்கலே காரணம். கோளகங்கள் எந்த குறைபாடின்றி ஒழுங்காக இருந்தால் பார்க்கும், கேட்கும் சக்தி முழுமையாக வெளிப்படும். நம்முடைய கோளகத்தில் குறைபாடு இருந்தால் மருத்துவர் நம்முடைய கோளகத்தின் குறைபாட்டை தான் சரிபண்ணி கொடுப்பாரே அல்லாமல் காணும் சக்தியை, அல்லது கேட்கும் சக்தியை அவரால் கொடுக்கவும் முடியாது அதற்கான தேவையும் இல்லை, அந்த சக்தியானது நம்முடைய ஸூஷ்ம சரீரமான ஞானேந்திரியத்தில் உள்ளது. உதாரணமாக நமக்கு நாசி (மூக்கு) என்ற கோளகத்தில் திடீரென்று சளி ஏற்பட்டள்ளது. சளி ஏற்பட்டுள்ள அந்த ஒரிரண்டு நாட்கள் எந்த பொருளையும் மணந்தறிய முடியாத நிலை ஏற்பட காரணம் அந்த கோளகத்தில் நுகரும் சக்தியை வெளிபடுத்துவதில் ஏற்பட்டுள்ள தடையே, அந்த தடை நீங்கிய உடனே அந்த கோளகத்தில் நுகரும் சக்தி வெளி படுகிறது. ஆகவே குறைபாடு என்பது சக்தி  வெளிபடும் கோளகத்தில் தானே அல்லாமல் இந்திரியத்தில் அல்ல.

கர்மேந்திரியங்கள்

வாக் பாணி பாத பாயூபஸ்தானீ தி பஞ்சகர்மேந்த்ரியாணி |

வாக்=வாக்கு, பாணி=கை, பாதம்=பாதம், பாயு=குதம், உபஸ்தம்=ஜன்ன உறுப்பு.

வாக்கு, கை, பாதம், குதம், ஜனனஉறுப்பு என்று கூறப்படுபவை கர்மேந் திரியங்கள் (அல்லது செயற்கருவிகள்) ஆகும்.

கர்மேந்திரியத்திலிருந்து தான் நம் உடல் உறுப்புக்களுக்கு செயல்படும் சக்தி கிடைக்கிறது. இந்த ஐந்து கர்மேந்திரியங்கள் இல்லையென்றால் எந்த செயலும் செய்ய முடியாது.

வாக்கு என்பது பேசும் சக்தி, நாக்கு என்ற உறுப்பு இரண்டு இந்திரியங் களுக்கு போகிறது. ஒன்று ஞானேந்திரியமாக செயல்பட்டால் சுவைக் கும் சக்தி, இரண்டு கர்மேந்திரியமாக செயல்பட்டால் பேசும் சக்தி. முறையே பாணி என்பது கைகள், பாதம் என்பது கால், பாயு என்பது மலத்தை தியாகம் செய்யும் உறுப்பு, உபஸ்தம் என்பது சிறுநீர் வெளியேற்ற மற்றும் ஜன்ன உறுப்பு ஆகியன, நம் உடல் உறுப்புக்கள் செயல்பட சக்தியாக இந்த கர்மேந்திரியங்கள் இயங்குகின்றன.

ஸூஷ்ம சரீரம் பதினேழு அவயங்களுடன் கூடியது, அவைகள் ஐந்து ஞானேந்திரியங்கள், ஐந்து கர்மேந்திரியங்கள், ஐந்து பிராணன்கள், மனம், புத்தி என்பன.அவற்றில் ஐந்து ஞானேந்தியங்கள், ஐந்து கர்மேந் திரியங்கள் என்னென்ன என்று பார்த்தோம். அடுத்து ஐந்து பிராணனை பற்றி பார்ப்போம்.

பிராணன்

பிராணன் மற்றும் பிராணனின் இயல்பு பற்றியும் வேதங்களில் பல்வேறு கருத்துக்கள் காணப்படுகின்றன. நாம் இந்த ஸூஷ்ம சரீரம் என்ற தலைப்புக்கு எந்த அளவு புரிதலுக்கு தேவையோ அந்தளவுக்கு பார்ப்போம். வரும் பாடங்களில் மேலும், மேலும் தெளிவுபட விளக்க மாக பார்க்க உள்ளோம்.

பிராணன் என்றால் என்ன என்று பார்ப்போம், பிராணன் என்பது சக்தி, அல்லது செயல்படும் சக்தி அதாவது இந்த உடலில் இருக்கின்ற சக்திக்கு தான் பிராணன் என்று சொல்லப்படுகிறது. அந்த சக்தி ஐந்து விதமாக வெளிப்படுவதனால் பஞ்சப்பிராணன் என்று சொல்கிறோம். பிராணன் என்ற வார்த்தைக்கு பொருள் என்ன என்றால் காற்று அல்லது வாயு என்றும் அறியப்படுகிறது. இந்த காற்று வெளியே இருந்தால் வாயு என்றும் அது நம்முடைய உடலுக்குள் செல்லும் போது அந்த வாயுவுக்கு பிராணன் என்று பெயர். ஐந்து பிராணன் பற்றி பார்ப்பதற்கு முன் பிராணனின் முக்கியதுவத்தைப் பற்றி உபநிஷதங் கள் ஒரு கதையாக நமக்கு விளக்கி புரியவைக்கிறது.

ஒரு முறை புலன்கள், மனம் மற்றும் பிராணனுக்கிடையே தங்களில் முக்கியமானவர் யார் என்ற கேள்வி எழுந்தது. ஒவ்வொன்றும் தங்க ளையே முக்கியமானதாகக் கருதினர். தங்களுக்குள் ஒரு முடிவிற்கு வர இயலாததால படைப்பு கடவுளாகிய பிரம்மதேவனை அணுகினர். ‘உங்களில் யார் வெளியேறுவதால் உடம்பு செயலற்று சவமாகி விடுகி றதோ அதுவே முக்கியமானது’, என்று தீர்வு கூறினார் பிரம்மதேவர். முதலில் வாக்கு வெளியேறியது. வாக்கு வெளியேறியதால் மனிதன் ஊமையானான், ஆனால் வாழ முடிந்தது. எனவே வாக்கு தனது தோல்வியை ஒப்புக்கொண்டு மீண்டும் செயல்பட தொடங்கியது. அடுத்தது கண்கள், கண்கள் வெளியெறிய போதும் மனிதன் வாழ்ந் தான். இவ்வாறு ஒவ்வொரு புலன்களும் வெளியேறின, தங்கள் தோல்வியை ஒப்புக்கொள்ளவும் செய்தன.

இறுதியில் பிராணன் வெளியேற எத்தனித்தபோது பிராணனுடன் தாங்களும் வெளியே இழுக்கப்படுவதாக எல்லா புலன்களும் உணர்ந்தன. எனவே பிராணன் வெளியேறினால் தாங்கள் யாரும் செயல் பட முடியாது என்பதை எல்லா புலன்களும் உணர்ந்தன. எனவே அவை தங்கள் தோல்வியை ஒப்புக் கொண்டு பிராணனிடம், ‘உத்தமனே, நீயே எங்களில் முக்கியமானவன், தயவு செய்து எங்களை விட்டு பிரியாதே’ என்று கேட்டுக்கொண்டன. ஆகவே பிராணன் முக்கியமான ஒன்று என்பது இங்கே கூறப்படுகிறது.

மேலும் இந்த இடத்தில் நாம் தவறாகவும் புரிந்து கொள்ளக் கூடாது. பிராணன் என்றால் புலன்களின் மொத்த செயல்பாடு என்று சாங்கிய மதத்தில்  ஒரு கருத்து சொல்லப்படுகிறது. பிராணன் என்பது புலன் களின் செயல்பாடு என்று வைத்துக் கொண்டால் ஆழ்ந்த உறக்கத்தில் மனம் உட்பட புலன்கள் அனைத்தும் ஒடுங்கி விடுகின்றன. அப்படி யானால் புலன்களின் செயல்பாடான பிராணனும் ஒடுங்கிவிடும். பிராணன் ஒடுங்கினால், இதயத்துடிப்பு போன்ற உடல் இயக்கங்கள் உட்பட அனைத்தும் நின்று விடும். ஆனால் அது நிகழ்வதில்லை. எனவே பிராணன் என்பது புலன்களின் செயல்பாடு அல்ல.

பிராணன், கருவிகள்(புலன்கள்) இயங்குவதற்கான ஆற்றலை அளித்து, செயல் நிகழ்வதற்கான ஆதாரமாகத் திகழ்கிறது. உடம்பு மற்றும் மனத்தின் இயக்கங்கள் அனைத்தும் பிராணனாலேயே நிகழ்கின்றன. பிராணன் எந்த உடம்பில் இயங்குகிறதோ அந்த உடம்பின் அளவை உடையதாக இருக்கிறது.

உடம்பின் பல்வேறு இயக்கங்களை உடம்பிலுள்ள பிராணன் நடத்துவது போல் பிரபஞ்ச இயக்கங்களைப் பிரபஞ்ச-பிராணன் நடத்துகிறது.

அடுத்து இந்த பிராணன் எப்படியெல்லாம் செயல்பட்டு கொண்டிருக் கிறது என்பதை ஐந்து விதமான செயல்பாடுகளிலிருந்து புரிந்து கொள்ளலாம். இந்த ஐந்து விதமான செயல்பாடே ஸூஷ்ம சரீரத்தின்  பஞ்ச பிராணன் என அறியப்படுகிறது.

வாயவ: ப்ராண-அபான-வ்யான-உதான-ஸமானா: ||

பிராணன், அபானன், வியானன், உதானன், ஸமானன் என்னும் இவை ஐந்து வாயுக்கள் ஆகும்.

இந்த ஐந்து செயல்பாடில் முதலாவதாக பிராணன் என்றே குறிப்பிட படுகிறது. பிராணன் என்பதற்கு பொதுவான பெயரும், குறிப்பான ஒரு பெயரும் உள்ளது. குறிப்பான பெயராக உள்ள பிராணன் என்பது வெளிவிடும் காற்று, நாம் வெளிகாற்றை உள்ளிழுத்து பின் வெளிவிடுகின்ற காற்று பிராணன்.

இந்த ஐந்தையும் ஒவ்வொன்றாக பார்ப்போம்.

‘ப்ராணோ நாம ப்ராக்க மனவான் நாஸாக்ரஸ்தானவர்த்தி’ ||

ப்ராக்க மனவான் என்றால் வெளியே செல்வது, மேல் நோக்கிச் செல்வது என்று பொருள்;

நாஸாக்ரஸ்தானவர்த்தீ என்றால் மூக்கின் நுனியிலிருப்பது     என்று பொருள்.

வெளி நோக்கி செல்வதும், மூக்கின் நுனியிலிருக்கும் வாயுவிற்கு பிராணன் என்பது பெயராகும்.

பிராணனிற்கு  இதயம் தான் இருப்பிடம் என்று கூறியிருந்தாலும் அது கண்கூடாக மூக்கின் நுனியில் உணரப்படுவதால், இவ்விதம் கூறப்பட்டுள்ளதுகூறப் பட்டுள்ளது.

 

‘அபானோ நாம ஆவாக்க மனவான் பாயாவாதிஸ்தானவர்த்தீ’ ||

ஆவாக்க மனவான் என்றால் உள்ளே தள்ளுகின் காற்று, கீழ் நோக்கி செல்வது என்று பொருள்;

பாயாவாதிஸ்தானவர்த்தீ என்றால் குதம் போன்ற இடங்களில் இருப்பது என்று பொருள்.

உள்ளே தள்ளுகின்ற காற்றும், கீழ் நோக்கிச் செல்லும், மற்றும் குதம் போன்ற இடங்களில் உள்ள வாயுவிற்கு அபானன் என்று பெயர்.

நம் உடலில் கழிவுப் பொருட்களை வெளியேற்றுவதற்கு இந்த வாயுவு தான் காரணமாக இருக்கிறது. ஜன்ன உறுப்புக்கள் போன்றவற்றில் இருக்கும் வாயு இதுதான்.

‘வ்யானோ நாம விஷ்வக்க மனவான், அகிலசரீரவர்த்தீ ||

விஷ்வக்க மனவான் என்பது உடல் முழுவதும் சென்று  கொண்டிருக்கின்ற வாயு.

அகிலசரீரவர்த்தீ என்பது உடம்பின் எல்லா இடத்திலும் வியாபித்துள்ளது.

வ்யானன் என்ற சக்தியை தான் ‘Circulatory power’ என்று அறியப் படுகிறது. இந்த உடம்பில் இரத்தம் எல்லா இடத்திலும் ஓடி கொண்டிருப்பது போல் இந்த வாயு உடல் முழுவதும் சஞ்சரித்து கொண்டிருக்கிறது. இந்த வாயுவின் துணை கொண்டுதான் இரத்தம் உடல் முழுவதும் ஒடிக் கொண்டிருக்கிறது.

உறுதியாக, மிகவும் முயற்சியுடன் செய்ய வேண்டியுள்ள செயல்களை மூச்சு விடாமலும், மூச்சை இழுத்து கொள்ளாமலும், மூச்சடக்கி செய்யும் சக்தி இந்த வியான வாயு தான்.

 

‘உதானோ நாம கண்டஸ்தானீய: ஊர்த்வகமனவான்

உத்க்ரமண வாயுவாயு’ ||

உதான வாயு என்பது நம் உடல் அசாதாரண (சில சூழ்நிலைகளில்) காலகட்டத்தில் தலை கீழாக செயல்பட வைக்கும் சக்தி. நாம் ஆகாரம் உட்கொள்கின்றோம், அது ஜீரணமாகி நம் உடலுக்கு தேவையான ஊட்ட சத்தாக மாற்றமடைகிறது. அந்த ஆகாரம் சில நேரங்களில்  நம் உடல் ஏற்று கொள்ளாமல் அஜீரணத்தோடு நம் வயிற்றில் தங்கினால் அது நம்முடைய ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் விஷமாக மாறும் வாய்ப்பு அதிகம், அந்த அசாதாரண சூழ் நிலையில் இந்த உதான வாயு சக்தியானது அதை வெளியேற்ற Reverse (தலைகீழாக) கீழிருந்து மேலாக செயல்பட்டு வமனம்(வாந்தி) செய்விக்கிறது.

இதனுடைய முக்கிய செயல் என்பது மரண காலத்தில் ஜீவனை உடலை விட்டு வெளியேற்றி கொண்டு செல்வது. மரணம் ஏற்படும் போது ஜீவன், உடலை விட்டு வெளியேறுவதற்கு உத்க்ரமணம் அல்லது உத்க்ராந்தி என்பது பெயராகும்.

இதனுடைய ஸ்தானம் என்பது கண்டம் அதாவது கழுத்து பாகம்.

‘ஸமானோ நாம சரீர மத்யகத-ஆசித-பீத-அன்னாதி- ஸமீகரண கர:’ ||

ஸமானம் என்கிற வாயு நம்முடைய உடலின் மத்திய பகுதியில் அதாவது வயிற்று பகுதியில் உள்ளது. உண்ட உணவையும், குடித்த நீர் போன்றவற்றையும் சம்மாக கலந்து செரிக்க வைக்கும் வாயு சக்திக்கு ஸமானன் என்று பெயர்.

உண்ட உணவை செரிக்க வைத்து அன்னரஸம், இரத்தம், வீர்யம், உடலுக்கு தேவையற்ற கழிவு போன்ற வடிவங்களாக மாற்றுவது இந்த ஸமான வாயு.

இந்த ஐந்து விதமான செயல்பாடே ஸூஷ்மசரீரத்தின்  பஞ்சபிராணன் என அறியப்படுகிறது.

நம்மிடையே வேறு சில மத கோட்பாட்டாளர்கள் குறிப்பாக சாங்கியர் கள் மேலும் ஐந்து வாயுக்களை பற்றி சொல்கின்றனர், அவற்றையும் மேலோட்டமாக பார்ப்போம். அவையாவன:

நாகன், கூர்மன், க்ருகலன், தேவதத்தன், தனஞ்செயன் என்பன.

நாகன் என்பது வாந்தி அல்லது ஏப்பத்தை ஏற்படுத்துகிறது.

கூர்மன் என்பது கண்ணிமைகளை மூடவும், திறக்கவும் செய்கிறது.

க்ருகலன் என்பது தும்மலையும், பசியையும் ஏற்படுத்துகிறது.

தேவதத்தன் என்பது கொட்டவி விடுமாறு செய்கிறது.

தனஞ்செயன் உடலை நன்கு வளர்க்கிறது.

இந்த ஐந்து வாயுக்களும் முன்பு கூறிய பஞ்ச பிராணன்களிலேயே அடக்கமாகி உள்ளன.

நாகன்–உதானத்திலும், கூர்மன்–வ்யானனிலும், க்ருகலன்-ஸமானனி லும், தைவதத்தன்–அபானனிலும், தனஞ்செயன்–ஸமானனிலும் அடக்க மாகி உள்ளன. ஆகையால் ஸூஷ்ம சரீரத்தில் பஞ்சபிராணன் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

நம்முடைய ஸூஷ்மசரிரம் பதினேழு அங்கங்களுடையது. அவை யாவன ஐந்து கர்மேந்திரியங்கள், ஐந்து ஞானேந்திரியங்கள், ஐந்து பிராணன், மனம், புத்தி என்பன. இவற்றில் ஐந்து கர்மேந்திரியம், ஐந்து ஞானேந்திரியம், ஐந்து பிராணன்கள் பற்றி விளக்கம் பார்த்து முடித் துள்ளோம். இன்றைய பாடம் புத்தி, மனம்.

இந்திரீயங்களை, ‘கருவிகள்’ என்றும், அவற்றில் ஞானேந்தியங்களை யும், மனம், புத்தி இவற்றை ‘புலன்கள்’ என்றும், இந்த புலன்களை ‘கரணம்’ என்றும் அறியப்படுகிறது. இந்த கரணம் என்பது மேலும் இரண்டாக பிரித்து ‘பாஹ்யகரணம்’, ‘அந்தகரணம்’ என்றும் அறியப் படுகிறது.

பாஹ்யகரணம் என்றால் வெளி பொருட்களோடு தொடர்பு கொண்டு ஞானத்தை கொடுக்கும் கருவி. ஐந்து ஞானேந்திரியங்களான பார்க்கும் சக்தி, கேட்கும் சக்தி, நுகரும் சக்தி, ருசிக்கும் சக்தி, தொட்டு உணரும் சக்தி, இவைகள் பாஹ்யகரணம் என்று அழைக்கின்றனர்.

அந்தகரணம் என்றால் பாஹ்யகரணங்களின் பின்னணியில் இருந்துக் கொண்டு அவற்றின் செயல்களை ஒருங்கிணைத்து, நமக்கு உள்ளே இருந்து ஞானத்தை ஏற்படுத்துகின்ற உள்ளே உள்ள புலனையே அந்தகரணம் என்று அழைக்கின்றனர். தண்ணீரில் அலைகள் இருப்பது போல் இந்த அந்தகரணத்தில் உள்ள அல்லது எழுகின்ற எண்ண ஓட்டங்களை ‘வ்ருத்திகள்’ என்று அழைக்கின்றனர். விருத்திகளின் இயல்புகளுக்குத் தகுந்தாற்போன்று அந்தகரணமானது சித்தம், புத்தி, மனம், அஹங்காரம் என்னும் நான்கு வகையாக மாறுபட்டு செயல் படுகிறது. சில விளக்காசிரியர்கள் இந்த மனம், மற்றும் புத்தி எனும் இந்த இரண்டிலேயே சித்தமும், அஹங்காரமும் அடங்கியுள்ளன. எனவும் சித்தம் என்பது புத்தியிலும், அஹங்காரமானது மனதிலும் அடங்கியுள்ளது.

ஆனால் நாம் நான்கையும் தனி, தனியாக பார்க்க உள்ளோம்.

“மனோநாம ஸங்கல்ப-விகல்பாத்மிக-அந்த-கரண-வ்ருத்தி:” ||

மனம் என்பது சங்கல்பம்-விகல்பம் ஸ்வரூபமுடைய அந்தகரணத்தின் செயல்பாடுகள் ஆகும்.

சங்கல்பம் எனில் எண்ணுதல், சிந்தித்தல், முதலியவைகளாகும். விகல்பம் எனில் சந்தேகப்படுதல், குழம்புதல் முதலியவைகளாகும். நாம் ஒரு விஷயத்தை குறித்து எண்ணும் போது ‘இதுவாக இருக்கும்’ என்றும், அல்லது ‘அதுவாக இருக்குமோ?’  என்று நிலைபாடில்

‘இதுவாக இருக்கும்’ என்ற எண்ணம் சங்கல்பம்;                     ‘அதுவாக இருக்குமோ?’ என்ற எண்ணம் விகல்பம்.

நாம் ஒரு செயலை குறித்து எண்ணும் போது ‘இப்படி செய்யலாம்’  என்ற எண்ணம் முதலில் எழுகிறது, அந்தகணமே ‘வேறு மாதிரியும் செய்யலாமா?’ என்ற எண்ணமும் எழும், இந்த இரண்டு விதமான எண்ண ஓட்டத்தில்

இப்படி செய்யலாம் என்ற எண்ணம் சங்கல்பம்;                       வேறு மாதிரியும் செய்யலாமா? என்ற எண்ணம் விகல்பம்.

அந்தகரணத்தில் (அந்தகரணம் என்பது மனம், சித்தம், புத்தி, அஹங் காரம் என்ற நான்கு இயல்புகளை கொண்ட ஸூஷ்ம சரீரம்) ஒரு விஷயத்தைக் குறித்து சங்கல்ப-விகல்ப எண்ணங்கள் எழும் போது அது மனம் என்று அழைக்கப்படுகிறது.

“புத்திர் நாம நிச்சயாத்மிக- அந்த-கர்ண வ்ருத்தி” ||

அந்தகரணத்தில் ஒரு விஷயத்தில் எழும் சங்கல்ப-விகல்ப எண்ணங் களில் நிச்சயமான, உறுதியான ‘இது இப்படி, அப்படிஅல்ல’ என்ற ஞானத்தை ஏற்படுத்தும் அந்தகரண விருத்தி தான் புத்தி ஆகும். இங்கு நாம் புரிந்து கொள்ள வேண்டியது புத்தி நிச்சயிக்கும் எல்லா ஞானமும் சரியாக தான் இருக்கும் என்பதில்லை, தவறாகவும் இருக்கலாம் அதை தான் விபரீத ஞானம் எனப்படுவது.

சங்கல்ப-விகல்பமான எண்ணங்களில் ஒன்றை முடிவாக நிச்சயிப்பது இந்த புத்தியின் வேலை. நிச்சய முடிவு சரியான ஞானமாகவும் இருக்கலாம், தப்பான ஞானமாகவும்  இருக்கலாம்.

அடுத்ததாக, நம்முடைய எல்லாவித உணர்வுகளும் மனதில் தான் எழும். அன்பு, கருணை, பாசம், பக்தி போன்ற நேர்மறை உணர்வுகள் (எண்ணங்கள்); கோபம், சோகம், பொறாமை, எரிச்சல் போன்ற எதிர்மறை உணர்வுகள்(எண்ணங்கள்) யாவும் மனதில் தான் எழும். எந்த ஒரு உணர்வும் நமக்கு அனுபவ எண்ணங்கள் இல்லாமல் வருவதில்லை. அந்தந்த அனுபவ எண்ணங்கள் வந்து தான் அந்தந்த உணர்வுகளை கொடுக்கும். ஆகையால் தான் ஒருவரை அன்புள்ளம் கொண்டவர், கோபக்காரன், இரக்கம் கொண்டவன் என்றெல்லாம் கூறுகிறோம். இதனை தெளிவாக சித்தம் என்ற அந்தகரண வ்ருத்தி யில் பார்ப்போம்.

அடுத்தது சித்தம்.

அனுஸந்தானாத்மிக-அந்தகரண-வ்ருத்தி: சித்தம் ||

அனுஸந்தானம் என்றால் முன்பு நடந்ததை நினைவுப்படுத்தி கொள்வது ஆகும்.

நம்முடைய அனுபவங்களையெல்லாம் ஞாபகங்களாக பாதுகாத்து வைத்திருக்கும் (ஆங்கிலத்தில் சொன்னால் ‘ஸ்டோர்’ செய்து வைத்திருக்கும்) இடம் தான் சித்தம்.

அனுபவங்களை எல்லாம் ஞாபகத்தில் வைத்திருக்கும் இடம் சித்தம். உதாரணம் பார்ப்போம் நாம் காலையில் சிற்றுண்டியாக சில உணவு பதார்த்தங்களை உண்கிறோம். பல மணி நேரம் கழித்து மதிய நேரத்தில் நம் அனுபவ நிகழ்வான காலையில் சிற்றுண்டி சாப்பிட்ட இடம், பதார்த்தங்கள் என்ன என்று நினைவு படுத்த முயன்ற போது நம் மனதில் காலை நிகழ்வுகளும் பாதார்தங்களும் திரும்ப ஞாபகமாக நம் நினைவுக்கு வருகிறது. அப்படியென்றால்  காலை நிகழ்வுகள், சாப்பிட்ட பாதார்தங்களின் வடிவம் யாவும்  நம்முடைய ஸூஷ்ம சரீரத்தில்  ஒரு இடத்தில்  ஞாபகமாக பாதுகாத்து ஸ்டோர் செய்து வைத்துள்ளது. அந்த இடம் தான் ‘சித்தம்’ என அழைக்கப்படுகிறது.

நம் சித்தத்தில் எப்படி பதிவாகிறது என்பதை பார்ப்போம். நாம்  ஒரு பொருளை பார்க்கிறோம். நம் ஸ்தூல சரீரத்தில் நம்முடைய பார்க்கும் சக்தி செயல்படுவது கண் என்ற கோளகம் வழியாக தான். அந்த ஸ்தூலமான கோளகம் வழியாக, பார்க்கும் சக்தியான கண் என்ற ஞானேந்திரியத்துடன் இந்த அந்தகரணமானது ஒருங்கிணைந்து வெளியிலுள்ள பொருளின் மேல் வியாபித்து அந்த பொருளினுடைய வ்ருத்தியை பதிவு செய்கிறது. இந்த வ்ருத்தி தான் பொருளை குறித்த ஞானத்தை நமக்கு தருகிறது. அப்பொழுது தான் அந்த பதார்த்தம் நமக்கு வடிவத்தோடு காட்சிக்கு தெரியும். இத்தனை செயல்பாடும் முறையே நடந்தேறினால் மட்டுமே ஒரு  பொருளை குறித்த ஞானம் நமக்கு அடைய முடியும். இல்லையென்றால் அந்த பொருள் நம் முன் இருந்தாலும் நமக்கு தெரியாது. அந்தகரணத்தில் பதிவான இந்த வ்ருத்தியானது அந்தகரணத்திலேயே ஒரிடத்தில் சேமித்து வைக்கப் படுகிறது. சேமித்து வைக்கப்படும் அந்த இடம் தான் அந்தகரணத்தின் ‘சித்தம்’ என்று அறியப்படுகிறது. இந்த சித்தத்தில் சேமித்து வைத்துள்ள பதிவு தான் நமக்கு ஞாபகமாக திரும்பவும் நம் நினைவுக்கு வருகிறது.

மேலும் இந்த சித்தத்திற்கு பதிவுகளை சேமித்து வைக்கும் திறன் எந்தளவுக்கு இருக்கின்றதோ அதே போல் தேவையற்ற பதிவுகளை நீக்கி விடும் திறனும் அமையப் பெற்றுள்ளது. நீக்கி விடும் திறனுக்கு ‘மறக்கும் சக்தி’ என்று சொல்லலாம். இந்த மறக்கும் சக்தி ஒரு வரம். இந்த சக்தி மனிதனுக்கு அமைய பெற வில்லை என்றால் அவனால் மகிழ்ச்சியாக வாழ முடியாது.

மேலும் ஒன்றை தொடர்ந்து சித்தத்தில் தக்கவைத்து கொள்ள வேண்டுமென்றால் மனனம் (மனப்பாடம்) அல்லது ஒரு செயலையே மீண்டும், மீண்டும் தொடர்ந்து செய்து கொண்டிருத்தல் என்ற தொடர் முயற்சியால்  அந்த பதிவை சித்தத்தில் தக்க வைத்து கொள்ளலாம்.

ஒருவன் சிறு வயதிலேயே அன்பான, அரவணைப்பான சூழலில் வளர் கிறானோ, அவனது சித்தத்தில் அன்பும், அரவணைப்பும் அனுபவ வ்ருத்தி யாக பதிவாகி நிலை கொள்கின்றது. சித்தத்தில் எது பதிவாகி நிலை கொள்கிறதோ அந்த வ்ருத்தி தான் அவனது மனம், புத்தியிலும் பிரதிபலிக்கிறது. எனவே அவனது அந்தகரணத்தில் ‘அன்பு’ என்ற வ்ருத்தி மேலோங்கி இருப்பதால் அவன் மற்றவர்களிடமும் அன்புடன் நடந்து கொள்கிறான். அவனை அன்புள்ளம் கொண்டவர் என்று சமூகம்  பாராட்டுகிறது.

இதுபோல் தான் மற்ற குணங்களும் ஒருவனுக்கு அமைய பெறுகிறது. அவர்களை கோபக்காரன், இரக்ககுணம் கொண்டவன் என்றெல்லாம் கூறுகிறோம்.

ஆகவே ஓருவன் நல்லவனாகவோ, கெட்டவனாகவோ இருப்பது அவனது சித்தத்தில் நிலை கொண்டுள்ள உள்ள அனுபவ வ்ருத்தியை கொண்டுள்ளது. இதை தான் ‘வாசனா வ்ருத்தி’ என சாஸ்த்திரம் கூறுகிறது.

இதை தான் ஒரே வரியில்

அனுஸந்தானாத்மிக-அந்தகரண-வ்ருத்தி: சித்தம் ||

என்று சித்தத்திற்கு லக்ஷ்ணம் கூறப்பட்டுள்ளது.

அடுத்து அஹங்காரம் அடுத்த பாடமாக பார்ப்போம்.

அந்தகரணமானது மனம், புத்தி, சித்தம், அஹங்காரம் என்னும் நான்கு வகையாக மாறுபட்டு செயல்படுகிறது. அதில் மனம்,  புத்தி, சித்தம் இவற்றின் விளக்கம் பார்த்தோம். அடுத்து இன்றைய பாடமாக ‘அஹங்காரம்’ பற்றி பார்ப்போம்.

அபிமானாத்மிக அந்த:கரண-வ்ருத்தி:அஹங்கார: ||

அஹங்காரம் என்ற வார்த்தையை இரண்டு அர்தத்தில் நாம் பயன் படுத்தி வருகிறோம்.

ஒன்று, பண்புகள் என்று வரும் இடத்தில் ‘அஹங்காரம் கூடாது’ என்று நாம் கூறுகிறோம். அஹங்காரம் என்பதை ‘கர்வம்’ என்ற பொருளில் அங்கு எடுத்து கொள்கிறோம்.

இரண்டாவது, அந்தகரணத்தில் ‘அஹங்காரம்’ என்பது, எந்த ஒரு எண்ணமானது ‘நம்மையே குறிக்கின்றதோ’ அந்த வ்ருத்தியையே அஹங்காரம் என்று கொள்ளப்படுகிறது.

ஒவ்வொரு எண்ணத்திற்கும் ஒரு விஷயத்தை அல்லது ஒரு பதார்தத்தை சொல்லப்படுகிறது. இந்த அஹங்கார வ்ருத்திக்கு விஷயமாக வருவது ‘நான்’ என்கிற எண்ணம்.

விளக்கமாக சொல்வதென்றால் நம்முடைய சூல, சூஷ்ம, காரணசரீரம் ஆகிய மூன்று சரீரத்தில் ஏதாவது ஒரு அம்சத்தில்(பகுதியில்) அல்லது ஒரு உறுப்பில் ‘நான்’ என்கிற எண்ணம் ஏற்படுகிறதோ அந்த எண்ணம் தான் அஹங்காரம்.

உதாரணம் பார்த்தால் புரிந்து விடும்.

நாம் ஒரு பொருளை பார்க்கிறோம், பார்ப்பது கண் என்ற இந்திரீயம் ஆனால் நாம் எப்படி சொல்கிறோம். ‘நான் பார்க்கிறேன்’ என்று சொல் கிறோம். இங்கு கண் என்கிற இந்திரீயத்திடம் நான் என்கிற அபிமானத்தை வைக்கிறோம்.

இதுபோல் தான் நாம் ஒரு சப்தத்தை கேட்கிறோம், கேட்பது காது என்கிற இந்திரீயம் ஆனால் ‘நான் கேட்கிறேன்’ என்று தான் சொல்கி றோம். இங்கு காது என்கிற இந்திரீயத்திடம் நான் என்கிற அபிமானத்தை வைக்கிறோம்.

அடுத்து நாம் கைகள் என்ற கர்மேந்திரியத்தால் ஒரு செயல் செய்கிறோம், ஆனால் நாம் எப்படி சொல்கிறோம் ‘நான் இந்த செயலை செய்கிறேன்’ என்று சொல்கிறோம். அதுபோல் கால்களால் நடந்து செல்கிறோம் ஆனால் ‘நான் நடந்து செல்கிறேன்’ என்று சொல்கிறோம். இங்கு கைகள், கால்கள் என்கிற கர்மேந்திரியங்களில் நான் என்கிற அபிமானத்தை வைக்கின்றோம்.

அடுத்து நாம் நன்றாக தூங்குகின்றோம், நாம் தூங்கும் போது நம்முடைய கர்ம, ஞான இந்திரீயங்களின் செயல்திறன் மற்றும் மனம் உட்பட்ட அந்தகரணம் அனைத்தும் காரணசரீரத்தில் ஒடுங்கிவிடுகி றது. ஆனால் நாம் விழித்து எழுந்ததும் நாம் என்ன சொல்கிறோம், நான் நன்றாக தூங்கினேன் என்கிறோம்.

இந்த ‘நான்’ என்கிற ‘அபிமானம்’ தான் ‘அஹங்காரம்’.

நம்முடைய கர்ம, ஞானிந்திரீயங்களின் செயல் திறன் மற்றும் மனம் உட்பட்ட அந்தகரணம் அனைத்தும் ஒடுங்கும் ஒரு ஸ்தானம் நம்முடைய சரீரத்தில் உள்ளது. சாஸ்த்திரம் அந்த ஸ்தானத்தை “ஹிருதயம்” என்று நமக்கு அறிமுகப்படுத்துகிறது.

ஹிருதயம்

இங்கு ஹிருதயம் (இதயம்) என்று பேசப்படுவது ‘லப்டப்’ என்று துடித்து கொண்டிருக்கின்ற பெளதீக இதயம் அல்ல. பெளதீக இதயம் இருப்பது எல்லோருக்கும் தெரியும். நாம் இங்கே சிந்தனைக்கு எடுத்துள்ள ஹிருதயம் என்பது பெளதீக ஹிருதயத்தினுள் இருக்கும் சிறுவெளி, ஸாக்ஷாத் ஆத்மாவின் ஸ்தானம். இது ஆன்மீக இதயம். இதற்கு மூன்று அடை யாளங்களை நராயணஸூக்தம் குறிப்பிடுகிறது. ஒன்று; தொப்புளுக்கு மேலே ஒரு சாண் தூரத்தில் உள்ளது. பெளதீக இதயமும் அதே தூரத்தில் தான் உள்ளது. இரண்டு; சுடர் வரிசையால் சூழப்பட்டுள்ளது. மூன்று; அந்த இதயமும் பிரகாசிக்கிறது. இந்த மூன்று அடையாளங்களும் பெளதீக இதயத்திற்குப் பொருந்தாது. நாம் மேலே சொன்ன சிறுவெளிக்கு பொருந்தும் லக்ஷ்ணம்.

இந்த ஹிருதயத்தையும் அதில் குடியிருக்கும் பரம்பொருளைப் பற்றியும் உபநிஷத் மந்திங்கள் கூறுவதை ஒவ்வொன்றாக பார்ப்போம்

கடோபநிஷத் இரண்டாம் அத்தியாயம், முதல் வல்லியில் பன்னிரண்டாவது மந்திரம், பதிமூன்றான்றாவது மந்திரம்

அங்குஷ்ட மாத்ர: புருஷ: மத்ய ஆத்மனி திஷ்ட்டதி |

ஈசானம் பூதபவ்யஸ்ய ந ததோ விஜுகுப்ஸதே ||

ஏதத் வை தத் || (கட 2:2:12)

அங்குஷ்ட மாத்ர: புருஷ: ஜ்யோதிரிவ அதூமக: |

ஈசானோ பூதபவ்யஸ்ய ஸ ஏவ அத்ய ஸ உ ச்வ: |

ஏதத்வை தத் || (கட 2:2:13)

எங்கும் நிறைந்தவரும், கடந்த மற்றும் எதிர்காலங்களுக்குத் தலைவரும் ஆன இறைவன் உடம்பின் நடுவில் இதயக் குகையில் புகையற்ற ஓளி்போல் பெருவிரல் அளவில் இருக்கிறார். இந்த மந்திரத்தின் சாரம் இது.

இந்த பன்னிரண்டாவது மந்திரம் தியானத்திற்குரிய ஒரு நல்ல மந்திரம். ஆத்மா அல்லது பரம்பொருள் எங்கும் நிறைந்த  பூர்ண வஸ்து. எங்கும் நிறைந்த அந்த வஸ்துவை எங்கே அறிந்து கொள்ள முடியும், எங்கே தியானிக்க முடியும். எங்கும் நிறைந்த பரம்பொருளை மனமானது மற்ற இடங்களில் அறிய முடியாது. அப்படியென்றால் அதை அறிய ஒரு ஸ்தானம் தேவை. கங்கை இருக்கிறது அந்த கங்கையின் வேகமான நீர் ஒழுக்கில் யாரும் எங்கு வேண்டுமானாலும் இறங்கி நீராட முடியாது. அதற்க்கென்று ஒர் இடம் அமையப்பெற்றிருக்கும் அங்கு தான் கங்கையை அருகில் சென்று அணுக முடியும். அதுபோல் தான் பரம்பொருள் எங்கும் நிறைந்துள்ளது, நாம் அதை அறியவும், தியானம் பண்ணவும் அதற்குறிய ஸ்தானத்தை உபநிஷத் நமக்கு கூறுகிறது, இந்த ஆத்மாவை, பரம் பொருளை நம்முடைய மனதில் தான் நாம் அறியமுடியும். நம்முடைய மனதிற்கு ஆதாரமாகத் தான் ஆத்மாவை அறிய முடியும் என்று ஆத்மாவினுடைய உபலப்தி ஸ்தானம் (உபலப்தி என்றால் அறியப் படுகின்ற ஸ்தானம்) கூறப்படுகிறது.

இதயத் தாமரை ஒரு கட்டை விரல் அளவுடையது. அந்த இதயத்தாமரை யினுள்ளிருக்கும் சிறு வெளியான ஆகாச வெளியில் குடியிருக்கும் பரம் பொருள் ஜோதியாக சுய பிரகாசமாக இருக்கிறார்.

இந்த மந்திரங்களில் அங்குஷ்ட மாத்ர: புருஷ: அடுத்து ஜ்யோதிரிவாதூமக: என்ற இரண்டு சொற்களின் பொருள் விளக்கம் பார்ப்போம்.

(பொதுவாக உபநிஷதம் குரு முகமாக தான் கற்றறிய வேண்டும். அல்லாமல் புத்தகம் பார்த்து படித்தால் முதல் விஷயம் அது புரியாது, அப்படி புரிந்தாலும் சரியான ஞானமாக இருக்கும் என்றும் கூற முடியாது.)

புருஷன் என்றால் எல்லாவற்றிலும் நீக்கமற நிறைந்தவன் என்று பொருள்.

அங்குஷ்டமாத்ர என்பது இறைவன் நம் இதயத்தில் ஆன்மாவாக விளங்கு கின்ற நிலையில் அவருக்கு இங்கு ஒரு பரிணாமம் கூறப்பட்டுள்ளது. ஆன்மா பெருவிரல் அளவில் இருப்பதாக இந்த மந்திரங்கள் கூறுகின்றன. தியானத்திற்கு வசதியாக பெருவிரல் அளவு என்று கூறப்பட்டுள்ளது.

ஓம் || அத யதிதமஸ்மின் பரஹ்ம்புரே தஹரம் புண்டரீகம் வேச்ம தஹரோSஸ்மின் அந்தராகாசதஸ்மின் யதந்தஸ்தத் அன்வேஷ்டவ்யம் தத்வாவ விஜிஜ்ஞாஸிதவ்யமிதி ||

அத – இப்போது; அஸ்மின் – இந்த; ப்ரஹ்ம்புரே – தெய்வ நகரத்தில்; தஹரம் – சிறிய; புண்டரீகம் – தாமரை; வேச்ம – மாளிகை;         அஸ்மின் – அதில்; தஹர – சிறிய; அந்தராகாச – அகவெளி;         தஸ்மின் – அதன்; அந்த: – உள்ளே; தத் – அது;              அன்வேஷ்டவ்யம் – தேட வேண்டும்; தத் வாவ – அதையே; விஜிஜ்ஞாஸிதவ்யம் – அறிய வேண்டும்

இந்தத் தெய்வ நகரத்தில் சிறிய தாமரை போன்ற மாளிகை ஒன்று உள்ளது. அதனுள் சிறிய வெளி உள்ளது. அதனுள் என்ன உள்ளதோ அதையே தேட வேண்டும். அதையே அறிவதற்கு விரும்ப வேண்டும்.

மனித உடம்பைத் ‘தெய்வ நகரம்’ என்று இந்த மந்திரம் கூறுகிறது. சாதாரண நகரம் இல்லை, தெய்வ நகரம், தெய்வம் வாழும் நகரம்.

இந்த நகரத்தினுள்ளே ஒரு அழகிய அரண்மனை, அதுதான் இதயம். அது தாமரை வடிவில் உள்ளது. தெய்வ நகரமாகிய இந்த உடம்பினுள் இறைவன் உள்ளார் என்பதை இந்த மந்திரம் கூறுகிறது. ஆனால் எப்படி உள்ளார் என்பதை தைத்திரீய ஆரண்யகம் (நாராயண ஸுக்தம்) தெளிவாக கூறுகிறது.

நாராயண ஸுக்தம்: மந்திரம்-8

ஸந்தக்ம் சிலாபிஸ்து லம்பத்யாகோச ஸன்னிபம் | தஸ்யாந்தே        ஸுஷிரக்ம் ஸூக்ஷ்மம் தஸ்மின் ஸர்வம் ப்ரதிஷ்ட்டிதம் || 8 ||

ஆகோச ஸன்னிபம் – தாமரை மொட்டுப் போன்ற;                          ஸந்ததம் – நாற்புறங்களிலும்; சிலாபி: – நாடிகளால்; லம்பதி – தொங்குகிறது; தஸ்ய – அதன்; அந்தோ – உள்ளே; ஸூக்ஷ்மம் – நுண்ணிய;            ஸுஷிரம் – ஆகாசம்; ஸர்வம் – அனைத்தும்; தஸ்மின் – அதில்; ப்ரதிஷ்ட்டிதம் – நிலைபெற்றுள்ளன.

தாமரை மொட்டுப் போன்ற இதயம் நாற்புறங்களிலும் நாடிகளால் சூழப்பட்டு தொங்குகிறது. அதன் உள்ளே நுண்ணிய ஆகாசம் உள்ளது. அனைத்தும் அதில் நிலைப்பெற்றுள்ளது.

மேலே மந்திரத்தில் ‘அனைத்தும் இதய ஆகாசத்தில் நிலைப் பெற்றுள்ளது’. அதை சாந்தோக்ய உபநிஷத் மந்திரம் உறுதி படுத்துகிறது. அந்த மந்திரத்தின் பொருள் பார்த்து நாராயண சூக்தத்தின் மந்திரங்களை ஆய்வோம்.

சாந்தோக்ய உபநிஷதம் எட்டாம் அத்தியாயம், ஒன்றாம் பகுதி மூன்றாவது மந்திரம்:

யாவான் வா அயமாகாச: தாவான் ஏஷோSந்தர்ஹ்ருதய ஆகாச உபே அஸ்மின் த்யாவா ப்ருதிவீ அந்தரேவஸமாஹிதே உபாவக்னிச்ச வாயுச்ச ஸூர்யாசந்த்ரமாஸாவுபெள வித்யுன்னக்ஷத்ராணி யச்சாஸ்யேஹாஸ்தி யச்ச நாஸ்தி ஸர்வம் ததஸ்மின் ஸமாஹிதமிதி || 3 ||

அயம் ஆகாச: – இந்த ஆகாசம்; யாவான் – எவ்வளவு; அந்தர் ஹிருதயே – இதயத்தின உள்ளே; தாவான் – அந்த அளவு; த்யாவா – வானமும்,       ப்ருதிவீ – பூமியும்; அந்த: ஏவ – உள்ளேயும்; ஸமாஹிதே – உள்ளன;        இஹ – இங்கே; யத் ச – என்னென்ன; அஸ்தி – உண்டோ;                         ந அஸ்தி – இல்லையோ; தத் – அவை; ஸர்வம் – அனைத்தும்;    அஸ்மின் – இங்கே; ஸமாஹிதம் – உள்ளன.

புற ஆகாசம் எவ்வளவு பரந்ததோ இதயத்திலுள்ள ஆகாசமும் அவ்வளவு பரந்தது. அதனுள் வானமும், பூமியும், அக்கினியும் வாயுவும், சந்திரனும் சூரியனும், மின்னலும் நட்சத்திரங்களும் எல்லாம் உள்ளன. இந்த உலகில் என்னென்ன உண்டோ, அவை அனைத்தும் இதய ஆகாசத்தில் உள்ளன.

அண்டத்தில் உள்ளது, பிண்டத்திலும் உண்டு என்பதை இந்த மந்திரம் நமக்கு எடுத்துரைக்கிறது.

நாராயண சூக்தம்; மந்திரம்-9

ஆகாசத்தினுள் பிராணன் அல்லது உயிர் உறைகிறது:–

தஸ்ய மத்ய மஹானக்னிர்விச்வார்ச்சிர்விஸ்வதோமுக: |

ஸோக்ரபுக் விபஜன் கவி: || 9 ||

மஹானக்னிர்விச்வார்ச்சிர்விஸ்வதோமுக: – மஹான்,அக்னி,விஸ்வ       அர்ச்சி, விஸ்வதோமுக: என்றும். ஸோக்ரபுக்: – ஸ:,அக்ரபுக் என்றும் திஷ்ட்டன்னாஹாரமஜர: – திஷ்ட்டன்,ஆகாரம்,அஜர என்றும் பதம் பிரித்து பொருள் பார்க்க வேண்டும்.

தஸ்ய – அதன்; மத்யே – நடுவில்;                                  விச்வ அர்ச்சி: – எங்கும் ஒளி வீசுவதாகவும்;                  விஸ்வதோமுக – எல்லாத் திசைகளிலும் செல்வதாகவும்;           மஹான் – சிறந்த; அக்னி – அக்கினி; ஸ: – அது;                    அக்ரபுக் – முதலில் உண்பதாகவும்; ஆஹாரம் – உணவை;           விபஜன் – பிரித்துக் கொடுப்பதாக; திஷ்ட்டன் – நிலைத்து நிற்பதாக;    அஜர – பழுது படாததாக; கவி: – அனைத்தையும் காண்பதாக.

எங்கும் ஒளி வீசுவதாகவும், எல்லா திசைகளிலும் செல்வதாகவும் உள்ள சிறந்த அக்கினி அந்த ஆகாசத்தின் நடுவில் உள்ளது. பிராணனாகிய அந்த அக்கினி முதலில் உண்பதாகவும், உணவை பிரித்து கொடுப்பதாகவும், நிலைத்து நிற்பதாகவும், தான் பழுது படாததாகவும், அனைத்தையும் காண்ப தாகவும் உள்ளது.

இதய ஆகாசத்தில் அக்கினியாக பிராணசக்தி உள்ளது. இதுவே நம்மிலுள்ள இயங்கு சக்தி. உணவை ஜீரணிப்பது, உணவிலிருந்து பெற்ற சக்தியை எல்லா இடங்களுக்கும் எடுத்து செல்வது, கழிவை வெளியோற்றுவது என்று உடம்பின் இயக்கத்திற்கான பல்வேறு வேலைகளை பிராணனே செய்கிறது. இதயத்தின் நடுவே இந்தப் பிராணன் நிலைக் கொள்கிறது. உடம்பின் அனைத்து பகுதிகளிலும் பரவியுள்ளதால் அனைத்தையும் காண்பதாக உள்ளது.

நாராயண ஸூக்தம் மந்திரம்-10

பிராணனின் உயிராக ஜீவாத்மா உள்ளது:-

திர்யகூர்த்வமதச்சாயி ரச்மயஸ்தஸ்ய ஸந்ததா |

ஸந்தாபயதி ஸ்வம் தேஹமாபாத தலமஸ்தக |

தஸ்ய மத்யே வஹ்னிசிகா அணீயோர்த்வா வ்யவஸ்தித: || 10 ||

தஸ்ய – பிராணனின்; ரச்மய: – கிரணங்கள்; திர்யக் – குறுக்கிலும்;           அத: – கீழும்; ஊர்த்வம் – மேலும் சாயி – பரவி;                              ஸந்தத – எங்கும் வியாபித்திருக்கின்றன;                                     ஆபாத தல மஸ்தக: – உள்ளங்கால் முதல் உச்சந்தலைவரை;                     ஸ்வம் தேஹம் – சொந்த உடம்பை; ஸந்தாபயதி – சூடுள்ளதாகச்செய்கிறது; தஸ்ய – அதன்; மத்யே – நடுவில்; அணீய: – மெல்லியதான;           வஹ்னிசிகா – அக்னிச் சுடர்;  ஊர்த்வா – மேல்நோக்கி;              வ்யவஸ்திக – அமைந்திருக்கிறது.

பிராணனின் கிரணங்கள் குறுக்கிலும் மேலும் கீழும் பரவி எங்கும் வியா பித்திருக்கின்றன. உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை உடம்பை சூடு உள்ளதாகச் செய்கிறது. இதன் நடுவில் மெல்லியதான அக்கினி சுடர் மேல் நோக்கி அமைந்திருக்கின்றது.

பிராணன் உடம்பை விட்டு பிரிவதே உயிர் பிரிவது அல்லது மரணம் எனப்படுகிறது. உடம்பின் சூடு நீங்கி, அது விறைப்பதை வைத்து ஒருவர் இறந்தது விட்டதை ஊர்ஜிதம் செய்து கொள்வதை வழக்கத்தில் காண முடியும். உடம்பிற்கு அந்தச் சூட்டை அளிப்பது பிராணன். அந்தப் பிராணனா கிய அக்னிச்சுடர் மேல் நோக்கி பிரகாசிக்கிறது. இந்தச் சுடரே ஜீவான்மா.

நாராயண ஸூக்தம், மந்திரம்-11

நீல தோயத மத்யஸ்தாத் வித்யுல்லேகேவ பாஸ்வரா |

நீவார சூகவத் தன்வீ பீதா பாஸ்வத்யணூபமா || 11 ||

நீல தோயத மத்யஸ்தாத் – கருமேகத்தின் நடுவில்;

பாஸ்வரா – மின்னுகின்ற

வித்யுத் லேகா இவ – மின்னல் கொடி போல்;

நீவாரசூகவத் – நெல்லின் கூர்முனை போல்;

தன்வி – மெல்லியதாக;

பீதா – பொன்னிறமாக;

அணுஉபமா – அணுவைப் போல்;

பாஸ்வதி – பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.

கருமேகத்தின் நடுவில் மின்னுகின்ற மின்னல் கொடிபோல், நெல்லின் கூர்முனை போல், பொன்னிறமாக, அணுவைப்போல நுண்ணியதாக அந்த ஆன்மா பிரகாசித்து கொண்டிருக்கிறது.

ஜீவான்மா நுண்மையானது. அது நுண்ணியது, ஒளி மிக்கது என்பதை உபநிஷதங்கள் பல விதமாகப் பேசுகின்றன. நூற்றுகணக்காகப் பிளந்த முடியின் ஒரு பங்கு அளவுடையது ஜீவான்மா என்று சுவேதாசுவதர உபநிஷத் கூறுகிறது.

சுவேதாசுவதர உபநிஷதம், ஐந்தாவது அத்தியாயம்; மந்திரம்-9

வாலாக்ர- சதபாகஸ்ய சத்தா கல்பிதஸ்ய ச |

பாகோ ஜீவ: ஸ விஜ்ஞேய: ஸ சானந்த்யாய கல்பதே || 5.9 ||

ஒரு மயிரிழையின் நுனியை நூறு பாகமாக்கி அதை மறுபடி நூறு பாக மாக்கினால் எவ்வளவு சூஷ்மமாயிருக்குமோ அப்படி சூஷ்மமானவன் அந்த ஜீவன் என்று அறிய வேண்டும்

நாராயண ஸூக்தம், மந்திரம்-12

ஜீவாத்மாவினுள் இறைவன் திகழ்கிறார்:-

தஸ்ய: சிகாயா மத்யே பரமாத்மா வ்யவஸ்தித: |

ஸ ப்ரஹ்ம ஸ சிவ:ஸ ஹரி:ஸேந்த்ர: ஸோSக்ஷர: பரம: ஸ்வராட் || 12 ||

தஸ்ய – அந்த; சிகாயா – சுடரின்; மத்ய – நடுவில்; பரமாத்மா – இறைவன்; வ்யவஸ்தி – வீற்றிருக்கிறார்; ஸ: – அவரே; ப்ரஹ்ம – பிரம்மா; சிவ: – சிவன்; ஹரி – விஷ்ணு; இந்த்ர – இந்திரன்; அக்ஷர – அழிவற்றவர்; ஸ்வராட் – சுய ஒளியுடன் பிரகாசிப்பவர்; பரம: – தனக்கு மேல் யாரும் இல்லாதவர்.

அந்த சுடரின் நடுவில் இறைவன் வீற்றிருக்கிறார். அவரே பிரம்மா, அவரே சிவன், அவரே விஷ்ணு, அவரே இந்திரன். அவர் அழிவற்றவர், சுய ஒளியுடன் பிரகாசிப்பவர். தனக்கு மேல் யாரும் இல்லாதவர்.

சாந்தோக்யஉபநிஷதம், மந்திரம் (8. 6. 1)

இதயத்தின் நாடிகள்:-

அத யா ஏதா ஹ்ருதயஸ்ய நாட்யஸ்தா: பிங்கலஸ்ய அணிம்ன: திஷ்டந்தி சுக்லஸ்ய நீலஸ்ய பீதஸ்ய லோஹிதஸ்ய இத்யலெள வா ஆதித்ய: பிங்கல ஏஷ சுக்ல ஏஷ நீல ஏஷ பீத ஏஷ லோஹித: || 1 ||

ஏதா: – இந்த; ஹிருதஸ்ய – இதயத்தின்; நாட்ய: – நாடிகள்; தா – அவை; பிங்கலஸ்ய – சிவப்பு கலந்த மஞ்சள்; அணிம்ன – நுண்ணியவை;     திஷ்டந்தி – உள்ளன; சுக்லஸ்ய – வெண்ணிறமான; நீலஸ்ய – நீலநிறமான; பீதஸ்ய – மஞ்சளான; லோஹிதஸ்ய – சிவப்பான; அலெள – அங்க;     ஆதித்ய – சூரியனில்.

இதயத்தின் நாடிகள் நுண்ணியவை. அவை சிவப்பு கலந்த மஞ்சள், வெள்ளி, நீலம், மஞ்சள், சிவப்பு நிறத்தில் உள்ளன. அங்கே தெரிகின்ற சூரியனும் சிவப்பு கலந்த மஞ்சளாக, வெண்ணிறமாக, நீலமாக, மஞ்சளாக, சிவப்பாகத் தெரிகிறான்.

இதயம் என்பது பிராணனின் இருப்பிடம். உணர்ச்சிகள், செயல்பாடுகள் என்று அனைத்தும் இங்கிருந்தே கட்டுபடுத்தப்படுகின்றன. விஞ்ஞானம் மூளையை மையமாக சொன்னாலும் நமது சாஸ்த்திரங்கள் இதயத்தையே மையமாகக் கொள்கின்றன. இந்த இதயம் சிறு வெளி என்று நமது இதயத்தில் உள்ள இதய ஆகாசம்,

(நவீன விஞ்ஞான ஆராய்ச்சி முடிவுகள் காலத்தால் மாற்றத் திற்கு உட்பட்டது. ஆப்த வாக்கியம் என்பது ரிஷிகளின் தவ வலிமையால் சர்வஞ்சனான ஈஸ்வரனின் ஐக்கியத்தினால் கண்டு சொல்லப்பட்ட வாக்கு.  என்றும் மாறாத உண்மை. ஆகையால் நம்முடைய சாஸ்த்திரத்தை சிரத்தை யோடு அணுக வேண்டும். நவீன விஞ்ஞானம் மனித மனத்தின் ஸ்தானம் இதுவரை அவர்களால் குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை. நம்முடைய சாஸ்த்திரம் மனித மனத்தின் ஸ்தானம் நம் இதயத்திலுள்ள சிறு வெளி என்னும் இதய ஆகாசம் என்று எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்பே சொல்லி வைத்துள்ளது.)

இந்த இதயத்திலிருந்து நூற்றொரு நாடிகள் புறப்படுகின்றன. இவற்றின் மூலமே கட்டளைகள் இடப்படுகின்றன. அனுபவங்கள் பெறப்படுகின்றன. நாடிகள் சாதாரண கண்களுக்கு புலனாகாதவை.

இந்த நாடிகள் பல்வேறு நிறங்களில் அமைந்திருப்பதாக இந்த மந்திரம் கூறுகிறது. நாடிகளில் பாய்கின்ற பல்வேறு நிறங்களிலுள்ள மிக நுண்ணிய திரவங்களே அந்த நிறங்களுக்கு காரணம் என்கிறார் சங்கரர். சூரியனும் இதே நிறங்களில் தெரிகிறான். அதாவது சூரிய கதிர்களும் இந்த பல்வேறு நிறங்களை கொண்டுள்ளது. எனவே சூரியகதிர்களுக்கும், மனித உடம்பில் அமைந்துள்ள நாடிகளுக்கும் தொடர்பு இருப்பதை இந்த மந்திரம் நமக்கு எடுத்துரைக்கிறது.

சாந்தோக்ய உபநிஷதம், மந்திரம்(8. 6 2)

தத்யதா மஹாபத ஆதத உபெள க்ராமெள கச்சதீமம் சாமும் சைவமே  வைதா ஆதித்யஸ்ய ரச்மய உபெள லோகெள கச்சந்தீமம் சாமும் சாமுஷ்மாத் ஆதித்யாத் ப்ரதாயந்தே தா ஆஸு நாடிஷு ஸ்ருப்தா ஆப்யோ நாடிப்ய: ப்ரதாயந்தே தேSமுஷ்மின் ஆதித்யே ஸ்ருப்தா: ||

நீண்டு செல்கின்ற நெடுஞ்சாலை இரண்டு கிராமங்களின் வழியாக சென்று இரண்டு கிராமங்களையும் இணைக்கின்றன. அது போல் சூரியனின் கிரணங் கள் உலகங்களை இணைக்கின்றன. அந்த சூரிய கிரணங்கள் நம்முடைய நாடிகளில் சென்றடைந்து, நாடிகளிலிருந்து பரவி சூரியனில் செல்கின்றன. சூரிய கிரணங்களும், மனித உடம்பிலுள்ள நாடிகளும் ஒன்றையொன்று இணைந்தப்படி ஒன்றுடன் ஒன்று பின்னிக் கிடக்கின்றன.

சாந்தோக்ய உபநிஷதம், மந்திரம்(8. 6. 3)

ஆழ்ந்த தூக்கத்தில் புலன்கள் ஒடுங்குவது:

தத்யத்ரைதத் ஸுப்த: ஸமஸ்த: ஸம்ப்ஸன்ன: ஸ்வப்னம் ந விஜானாத் யாஸு ததா நாடிஷு ஸ்ருப்தோ பவதி தம் ந கச்சன பாப்மா ஸ்ப்ருசதி தேஜஸா ஹி ததா ஸம்பன்னோ பவதி ||

தத் – எனவே; யத்ரே – எப்போது; ஏதத் – இவ்வாறு; ஸுப்த: – தூங்குபவன்; ஸமஸ்த: – எல்லாம்; ஸம்ப்ரஸன்ன: – அமைதியாக; ஸ்வப்னம் – கனவு;    ந விஜானாதி – காண்பதில்லை; ததா – அப்போது;                                  ஆ ஸு நாடிஷு – இந்த நாடிகளில்; ஸ்ருப்த: பவதி – செல்கிறான்;            தம் – அவனை; க: சன பாப்மா – ஒரு பாவமும்;                        நஸ்ப்ருசதி – தீண்டுவதில்லை; ஹி – ஏனெனில்; ததா – அப்போது;       தேஜஸா – ஒளியால்; ஸம்பன்ன: பவதி – நிறைக்கப்படுகிறான்.

ஆழ்ந்து உறங்குபவனின் எல்லா புலன்களும் அமைதியுற்று விடுகின்றன; அவன் கனவும் காண்பதில்லை. அப்போது அவன் இந்த நாடிகளில் சென்று விடுகிறான். அங்கே அவனை ஒரு பாவமும் தீண்டுவதில்லை. ஏனெனில் அவன் ஒளியால் நிறைக்கப்படுகிறான்.

விழிப்பு நிலைக்கும், ஆழ்ந்த தூக்கத்திற்கும் இடைநிலையாக்க் கனவு உள்ளது. ஆழ்ந்த தூக்கத்தில் புலன்கள் அமைதியுற்று மனதில் ஒடுங்கு கின்றன. மனம் ஜீவாத்மாவில் ஒடுங்குகிறது. ஜீவாத்மா நாடிகளில் ஒடுங்கு கிறான். அங்கு அவனை வினை பயன் எதுவும் தீண்டுவதில்லை, பாவத்தைப் போலவே புண்ணியமும் அவனை நெருங்குவதில்லை. உலகின் எந்த எண்ணங்களும் அவனை தொடு வதில்லை.

கடோபநிஷதம், மந்திரம்(2. 3. 16)

மரணமற்ற நிலை:-

சதம் சஏகா ச ஹிருதயஸ்ய நாட்ய: தாஸாம் மூர்தானம்பி நி:ஸ்ருதைகா | தயோர்த்வமாயன் அம்ருதத்வமேதி விஷ்வங்ஙன்ய உத்க்ரமணே பவந்தி ||

ஹிருதயஸ்ய – இதயத்தின்; நாட்ய: – நாடிகள்; சதம் ச ஏகா – நூற்றொன்று; தாஸாம் – அவற்றுள்; ஏகாம் – ஒன்று; மூர்தானாம் – உச்சந்தலையை; அபிநி:ஸ்ருதா – பிளந்து செல்கிறது;                  தயா – அதன்வழியாக; ஊர்த்வம் – மேலே; ஆயன் – செல்பவன்;                              அம்ருதத்துவம் – மரணமற்ற நிலையை; ஏதி – அடைகிறான்;               அன்ய – மற்றவை; உத்க்ரமணே – வெளியேறுவதில்;                    விஷ்வக் – பல திசைகளாக; பவந்தி – ஆகின்றன.

இதயத்தின் நாடிகள் நூற்றொன்று. அவற்றுள் ஒன்று உச்சந்தலையைப் பிளந்து செல்கிறது. அதன் வழியாக மேலே செல்பவன் மரணமற்ற நிலையை அடைகிறான். மற்ற நாடிகளின் வழியாக வெளியேறுபவன் பல்வேறு உலகங்களில் செல்கிறான்.

மனிதனுடைய இதயத்திலிருந்து வெளி செல்லும் நாடிகள் நூற்றிஒன்று. அவற்றுள் ஸுஷும்ணா நாடியும் ஒன்று. இந்த ஸுஷும்ணா நாடி உச்சந்தலையிலுள்ள ‘பிரம்மரந்திரம்’ என்ற துவாரம் வழியாக செல்கிறது. உச்சந் தலையில் ‘பிரம்மரந்திரம்’ உட்பட இந்த உடம்பில் பதினென்று துவாரங்கள் இருக்கின்றன. இந்த ஸுஷும்ணா நாடி தவிர மற்ற நாடிகள் மீதி பத்து துவாரங்களில் ஏதாவது ஒன்றில் நிறைவடைகின்றன. ஒருவனு டைய மரணகாலத்தில் அவனது உயிர் இந்த ஸுஷும்ண நாடி மூலமாக பிரம்ம ரந்திரம் துவாரம் வழியாக வெளியே செல்பவன் மரணமற்ற உயர்ந்த நிலையை அடைகிறான். மரணமற்ற நிலை என்பது ‘அமரநிலை’ எனப்படும்.

 

நிறைவுரை

ஓம்

மனித வாழ்க்கையின் உயர்ந்த நோக்கம், தன்னை உடலாகவோ, மனமாகவோ, அறிவாகவோ கருதும் அறியாமையிலிருந்து விடுபட்டு, தனது உண்மையான ஆத்ம ஸ்வரூபத்தை அறிந்து கொள்வதே ஆகும். அந்த உயர்ந்த இலக்கை நோக்கிச் செல்லும் ஆன்மீகப் பயணத்தில், ஸூஷ்ம சரீரம் பற்றிய தெளிவான புரிதல் மிகவும் இன்றியமையாததாகும். இந்நூல், மனிதனின் ஸ்தூல, ஸூஷ்ம மற்றும் காரண சரீரங்களின் தன்மையை அறிமுகப்படுத்தி, குறிப்பாக ஸூஷ்ம சரீரத்தின் அமைப்பு, அதன் பதினேழு அவயவங்கள், மனம், புத்தி, சித்தம், அஹங்காரம், பஞ்ச ஞானேந்திரியங்கள், பஞ்ச கர்மேந்திரியங்கள், பஞ்ச பிராணன்கள் மற்றும் இதய ஆகாசத்தின் ஆன்மீக ரகசியம் ஆகியவற்றை வேதாந்த சாஸ்திரங்களின் அடிப்படையில் விளக்குகிறது.

இந்த நூலில் இடம்பெற்றுள்ள கருத்துகள் வெறும் தத்துவ விளக்கங்களாக மட்டுமல்ல; மனிதன் தன்னைப் பற்றியும், உலகைப் பற்றியும், இறைவனைப் பற்றியும் சரியான பார்வையைப் பெறுவதற்கான வழிகாட்டுதலாகும். மனம் எவ்வாறு செயல்படுகிறது, அனுபவங்கள் எவ்வாறு சித்தத்தில் பதிவாகின்றன, அஹங்காரம் எவ்வாறு உருவாகிறது, ஆத்ம சைதன்யம் மனத்தின் மூலம் எவ்வாறு வெளிப்படுகிறது என்பன போன்ற ஆழமான வேதாந்த உண்மைகள் இந்நூலில் எளிய முறையில் விளக்கப்பட்டுள்ளன.

வேதாந்தத்தைப் படிப்பதன் நோக்கம் வெறும் அறிவைப் பெருக்குவது அல்ல; அந்த அறிவை வாழ்வில் நடைமுறைப்படுத்தி மனத் தூய்மையையும் ஆன்மீக முதிர்ச்சியையும் அடைவதே ஆகும். எனவே, இந்நூலை ஒருமுறை வாசிப்பதோடு நிறுத்தாமல், மீண்டும் மீண்டும் படித்து, சிந்தித்து (மனனம் செய்து), தகுந்த குருவின் வழிகாட்டுதலோடு ஆழமாக ஆராய்ந்தால், இதில் கூறப்பட்டுள்ள தத்துவங்கள் வாழ்க்கையில் புதிய ஒளியை அளிக்கும்.

இந்தச் சிறிய முயற்சி, வேதாந்தப் பயணத்தைத் தொடங்க விரும்புவோருக்கும், ஏற்கனவே சாஸ்திரங்களைப் பயிலும் மாணவர்களுக்கும், ஆன்மீக ஆர்வலர்களுக்கும் ஒரு பயனுள்ள துணை நூலாக அமைய வேண்டும் என்பதே எனது மனமார்ந்த விருப்பம். இந்நூலில் ஏதேனும் குறைகள் இருந்தால், அவை அனைத்தும் என்னுடைய அறிவுக் குறைவே; இதில் உள்ள சாஸ்திர உண்மைகள் அனைத்தும் வேதம், உபநிஷத்துகள் மற்றும் ஆசார்யர்களின் அருள்மொழிகளே.

பரம்பொருளின் அருளாலும், குருபரம்பரையின் அனுக்ரஹத்தாலும், இந்த நூலை வாசிக்கும் அனைவரும் மன அமைதி, சித்த சுத்தி, ஆத்ம ஞானத்திற்கு உரிய தகுதி ஆகியவற்றைப் பெற்று, இறுதியில் பரமபுருஷார்த்தமான மோட்சத்தை அடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

ஓம் தத் ஸத்

அன்புடன்,

K.ஆறுமுகம் (மணி) ஆச்சாரி,

திருவனந்தபுரம்.

 

ஆசிரியர் கருத்து

ஓம் ஸ்ரீ குருப்யோ நம:

மனிதன் தன்னை உடலாகவும், மனமாகவும் மட்டுமே அடையாளப்படுத்திக் கொள்வதால்தான் வாழ்க்கையில் இன்ப–துன்பங்களின் சுழற்சியில் சிக்கிக் கொள்கிறான். ஆனால் வேதாந்தம், மனிதன் உடலோ மனமோ அல்ல; அவற்றிற்கு சாட்சியாக விளங்கும் அழிவற்ற ஆத்மா என்பதையே தெளிவாக எடுத்துரைக்கிறது. அந்த ஆத்ம தத்துவத்தை அறிந்து கொள்ள, மனிதனின் ஸூஷ்ம சரீரம் பற்றிய சரியான புரிதல் அவசியமாகிறது.

இந்த நூல், வேதாந்தப் பயிலரங்குகளில் நான் வழங்கிய பாடங்களின் சாரத்தை எளிமையாகத் தொகுத்து வழங்கும் ஒரு சிறிய முயற்சியாகும். வேதம், உபநிஷத்துகள், பகவத்கீதை மற்றும் ஆசார்யர்களின் விளக்கங்களை அடிப்படையாகக் கொண்டு, ஸூஷ்ம சரீரத்தின் அமைப்பு, அதன் பதினேழு அவயவங்கள், மனம், புத்தி, சித்தம், அஹங்காரம், பஞ்ச ஞானேந்திரியங்கள், பஞ்ச கர்மேந்திரியங்கள், பஞ்ச பிராணன்கள், இதய ஆகாசம் மற்றும் ஜீவாத்மா–பரமாத்மா தத்துவம் ஆகியவை எளிய தமிழில் விளக்கப்பட்டுள்ளன.

இந்நூல், வேதாந்தத்தைப் புதிதாகப் பயிலத் தொடங்குபவர்களுக்கும், ஏற்கனவே சாஸ்திரங்களைப் படித்து வருபவர்களுக்கும் ஒரு அறிமுக நூலாகவும், மீள்பார்வை நூலாகவும் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் எழுதப்பட்டுள்ளது. சாஸ்திர விஷயங்கள் குருமுகமாகக் கற்கப்பட வேண்டியவை என்பதையும், இந்நூல் அந்தப் பயணத்திற்கு ஒரு வழிகாட்டியாக மட்டுமே கருதப்பட வேண்டும் என்பதையும் பணிவுடன் குறிப்பிடுகிறேன்.

இந்த நூலை வாசிக்கும் அனைவரும் இதனை ஒருமுறை படித்து வைப்பதற்குப் பதிலாக, மீண்டும் மீண்டும் சிந்தித்து (மனனம் செய்து), தங்கள் அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புபடுத்திப் புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். அப்போதுதான் இந்நூலின் உண்மையான பயன் வெளிப்படும்.

இந்தப் பணியை நிறைவேற்றுவதற்கு அருள்புரிந்த பரம்பொருளுக்கும், குருபரம்பரைக்கும் எனது பணிவான நமஸ்காரங்களை சமர்ப்பிக்கிறேன். மேலும், என்னை ஊக்குவித்த அனைத்து ஆன்மீக அன்பர்களுக்கும், மாணவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்நூலில் ஏதேனும் பிழைகள் இருந்தால், அவை அனைத்தும் என்னுடைய அறியாமையால் ஏற்பட்டவையே. சான்றோர்கள், வேதாந்த அறிஞர்கள் மற்றும் வாசகர்கள் தங்களது அன்பான கருத்துகளையும் திருத்தங்களையும் தெரிவித்து, எதிர்காலப் பதிப்புகள் மேலும் சிறப்புற அமைய உதவுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

எல்லோரும் சாஸ்திர ஞானம் பெற்று, மனத் தூய்மையுடன் ஆத்ம ஞானத்தை அடைந்து, வாழ்வின் பரம இலக்கான மோட்சத்தை நோக்கி முன்னேற இறைவன் அருள்புரிவானாக.

ஓம் தத் ஸத்

 

K.ஆறுமுகம் (மணி) ஆச்சாரி,

திருவனந்தபுரம்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

No classes added yet.

Our Visitor

000568
Users Today : 6