முன்னுரை
ஓம்
வேதங்கள் மனிதகுலத்திற்கு இறைவனால் அருளப்பட்ட நித்திய ஞானப் பொக்கிஷங்களாகும். அவற்றின் இறுதிப் பகுதியாக விளங்கும் உபநிஷதங்கள், மனித வாழ்க்கையின் உன்னத இலக்கான ஆத்மஞானத்தை மிக ஆழமாகவும், அதே நேரத்தில் சுருக்கமாகவும் எடுத்துரைக்கின்றன. அவற்றுள் ஈஸாவாஸ்ய உபநிஷதத்தின் சாந்தி மந்திரம் என்பது முழு உபநிஷதத்தின் சாரத்தையும் தன்னகத்தே கொண்டிருக்கும் ஒரு மகத்தான மந்திரமாகப் போற்றப்படுகிறது.
அந்த சாந்தி மந்திரத்தின் ஒவ்வொரு சொல்லின் ஆழ்ந்த பொருளையும், வேதாந்தப் பார்வையில் அதன் தத்துவச் சாரத்தையும் எளிய தமிழில் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் விளக்க வேண்டும் என்ற எண்ணமே இந்நூல் உருவாகக் காரணமாக அமைந்தது.
இந்த நூலில் இடம்பெற்றுள்ள விளக்கங்கள் அனைத்தும் எனது சொந்தக் கற்பனைகளோ அல்லது தனிப்பட்ட கருத்துக்களோ அல்ல. எனது பூஜ்ய குருநாதர் ஸ்வாமி குருபரானந்தர் அவர்கள் அருளிய வேதாந்த உபதேசங்களை என் மனதில் ஆழமாக உள்வாங்கி, அவற்றை இடையறாது நினைவுகூர்ந்து, அவற்றின் உண்மைப் பொருளை இயன்றவரை சிதையாமல் தொகுத்து வழங்கும் ஒரு முயற்சியே இந்த நூல்.
இந்நூல் மட்டுமல்ல; நான் ஆசிரியராக இருந்து பணியாற்றும் அனைத்து வேதாந்த நூல்களும், குருநாதர் ஸ்வாமி குருபரானந்தர் அவர்கள் அருளிய உபதேசங்களை மனதில் நிலைநிறுத்தி, அவற்றை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக் கொண்டு எழுதப்பட்டவையே என்பதை மிகுந்த பணிவுடன் இங்கு பதிவு செய்கிறேன். இந்த உண்மையை இந்நூலின் மிக முக்கியமான அடிப்படையாகக் கருதுகிறேன்.
குருவின் உபதேசமே வேதாந்தப் பயணத்தின் உயிர்நாடி. குருவின் அருளின்றி சாஸ்திரத்தின் உண்மைப் பொருளை உணர்வது அரிது. எனவே, இந்த நூலில் காணப்படும் நன்மை, தெளிவு, தத்துவச் சாரம் ஆகிய அனைத்தும் என் குருநாதரின் அருளுக்கும், அவருடைய உபதேசங்களுக்கும் உரியவை. இதில் ஏதேனும் குறைகள் இருந்தால் அவை முழுவதும் என்னுடைய அறியாமையினாலும், வரம்புகளினாலும் ஏற்பட்டவையாகும்.
இந்த நூல், வேதாந்தத்தை முதன்முறையாக அறிய விரும்புவோருக்கும், ஏற்கனவே பயின்று வரும் மாணவர்களுக்கும், உபநிஷதங்களை ஆழமாக ஆராய விரும்பும் ஆன்மிக சாதகர்களுக்கும் பயனுள்ளதாக அமையும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.
பரமாத்மாவின் அருளாலும், குருநாதரின் அனுக்ரஹத்தாலும், இந்த நூல் பலரது உள்ளங்களில் வேதாந்த ஞானத்தின் மீது ஈர்ப்பையும், ஆத்மவிசாரத்தின் மீது ஆர்வத்தையும் வளர்த்து, அவர்களை சாந்தி, பூர்ணம் மற்றும் ஆத்மஞானம் என்னும் உயர்ந்த இலக்கை நோக்கி வழிநடத்த இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:
அன்புடன்,
K. ஆறுமுகம் (மணி) ஆச்சாரி
திருவனந்தபுரம்
ஓம்
குருப்யோ நம:
ஈஸாவாஸ்ய உபநிஷதம்
ஒவ்வொரு உபநிஷத்திலும் ஒரு சாந்தி மந்திரம் இருக்கும். இந்த உபநிஷத்தில் சாந்திமந்திரம் ஒரு மூலமந்திரமாக அமைந்து அதில் முழு உபநிஷதமும் உள்ளடங்கி இருக்கிறது. இந்த சாந்தி மந்திரத்திற்கு ‘வஸ்து நிர்தேஸிக’ என்றுப் பெயர். வஸ்து நிர்தேஸிக என்றால் உண்மையை முதலிலேயே சொல்லி விடுதல் என்று பொருள். இந்த மூல மந்திரத்தைப் புரிந்து கொண்டால் நீங்கள் முழு உபநிஷத்தையும் புரிந்து கொள்ளமுடியும்.
உபநிஷத்துகளில் மிக முக்கியமான ஒரு மூல மந்திரம் இந்த சாந்தி மந்திரம்.
“ஓம் பூர்ணமத: பூர்ணமிதம், பூர்ணாத் பூர்ணமுதச்சயதே |
பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவா வசிஷ்யதே!” ||
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி: ||
உபநிஷதங்கள் வற்புறுத்துவது முழுமையையே, பூர்ணத்துவத்தையே.
முழுமை, பூர்ணம் இங்கேயே இப்போழுதே உள்ளது. பூர்ணம் ஒன்றே உண்மை.
இதை இந்த மந்திரம் நமக்கு விளக்குகிறது.
இந்த மந்திரத்தின் விளக்கத்தை பார்ப்பதற்கு முன் மந்திரத்தின் ஒவ்வொரு சொல்லுக்கும் மொழி பெயர்ப்பு (அர்த்தம்) பார்ப்போம்.
ஓம் = “ஓம்” என்ற பிரணவ மந்திரத்தின் விளக்கம் அதற்கென்ற தனி வகுப்பில் விளக்க உள்ளேன். இந்த இடத்தில் வியாசர், ஆபஸ்தம்பர், அதர்வண ஸ்ருதிகளில் உள்ள வாக்கியங்களை (பிரமாணங்களை) மட்டும் பார்ப்போம். தமிழ் மொழி பெயர்ப்பை மட்டும் பார்ப்போம்.
வியாசர்: “ஹரி:ஓம்” என்று உச்சரித்துப் பிறகு செய்யப்படும் கர்மமும் அத்யயனமும் வீர்யத்தைச் செய்கின்றவையாகும்.
ஆபஸ்தம்பர்: வேதத்தை அத்யயனம் செய்பவன் ஓம்காரத்தை முதலில் கொண்டு ஆரம்பிக்க வேண்டும். இப்படி செய்தால் அத்தியயனத்தில் இடையில் உபயோகமில்லாத பேச்சை பேசினாலும் வேதம் லெளகிகமான வார்த்தையுடன் சேராமல் ஆகிறது.
அதர்வண ஸ்ருதி: தேவர்கள், அசுரர்களை ஜயிப்பதற்காக ப்ரணவத்தை பிரார்த்தித்து வரம் வேண்டினர். அப்பொழுது ப்ரணவம் “ வேதம் அத்யயனம் செய்யும் சான்றோர்கள் என்னை உச்சரிக்காமல் வேதத்தை உச்சரிக்ககூடாது. உச்சரித்தால் அது வேதமாக கூடாது” என்றது. ஆகையால் ஓங்காரம் வேதத்திற்கு முன் உச்சரிக்கப்படுகிறது.
பூர்ணமத: = பூர்ணம் அதஹ ;
பூர்ணம் = பூர்ணம் என்றே கொள்ளப்படுகிறது, வரையறைக்கு உட்படாதது.
அதஹ = அது ;
அது என்றால் ஈஸ்வரன் என்று பொருள் கொள்ளபட வேண்டும்.
பூர்ணமிதம் = பூர்ணம் இதம்
இதம் = இது
இது = ஜீவன் என்று பொருள்.
ஓம் பூர்ணமத: பூர்ணமிதம் = ஈஸ்வரன் பூர்ண சொரூபமாக இருக்கிறார்; ஜீவன் பூர்ண சொரூபமாக இருக்கிறார்.
பூர்ணாத் = பூர்ணத்திலிருந்து
பூர்ணத்திலிருந்து என்பதை பூர்ணமான ஈஸ்வரனிடமிருந்து என கொள்ளல் வேண்டும்.
பூர்ணம் = பூர்ணமான ஜீவன்.
உதச்யதே = தோன்றுகிறான்.
பூர்ணாத் பூர்ணமுதச்சயதே =பூரணமான ஈஸ்வரனிடமிருந்து பூரணமான ஜீவன் தோன்றுகிறான். முதல் வரியை முழுமையாக அர்த்தம் பார்ப்போம்.
“ஓம் பூர்ணமத: பூர்ணமிதம், பூர்ணாத் பூர்ணமுதச்சயதே |
ஈஸ்வரன் பூர்ண சொரூபமாக இருக்கிறார். ஜீவன் பூர்ண சொரூபமாக இருக்கிறார். பூர்ணமான ஈஸ்வரனிடமிருந்து பூர்ணமான ஜீவன் தோன்றுகிறார்.
அடுத்த இரண்டாவது வரி
பூர்ணஸ்ய = பூர்ணத்தினுடைய
பூர்ணத்தினுடைய என்பது பூர்ணமான ஜீவனுடைய என்று கொள்ள வேண்டும்.
பூர்ணமாதாய = பூர்ணம் + ஆதாய ;
பூர்ணம் = பூர்ண சொரூபத்தை ;
ஆதாய = நீக்கினால் (எடுத்து விட்டால்)
பூர்ணமேவா வசிஷ்யதே = பூர்ணம் + ஏவ + அவசிஷ்யதே
பூர்ணம் = பூர்ணம்
ஏவ = மட்டும்
அவசிஷ்யதே = எஞ்சியிருக்கிறது.
இரண்டாவது வரியின் முழுமையாக அர்த்தம் பார்ப்போம்.
பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவா வசிஷ்யதே!!
பூர்ணமான ஜீவனுடைய பூர்ண சொரூபத்தை நீக்கினால் (எடுத்து விட்டால்) பூர்ணம் மட்டும் எஞ்சி இருக்கிறது.
இது தான் இந்த மந்திரத்தின் மொழிபெயர்ப்பின் அர்த்தம்.
இந்த மந்திரம் நமக்கு உபதேசிக்க வருவது “பூரணத்திலிருந்து பூரணத்தை நீக்கி விட்டால் பூரணம் மட்டுமே எஞ்சி இருக்கிறது” என்ற வேத மறை பொருளின் ஞானத்தை நமக்கு போதிக்கிறது. விளக்கம் பார்த்தால் நன்கு புரியும்.
பொதுவாக வியாவகார விவகாரத்தில் சாதாரண பொருளியலில் ‘பத்தி’லிருந்து ‘பத்தை’ நீக்கி விட்டால் மீதி என்பது ‘பூஜியம்’ ஆகிறது.
10 – 10 = 0
இந்த உபநிஷத மந்திரம் நமக்கு உபதேசமாக கூறுவது ‘பூரணத்தி’லிருந்து ‘பூரணத்தை’ நீக்கி விட்டால் மீதி என்பது ‘பூரணம்’ மட்டுமே.
பூரணம் – பூரணம் = பூரணம் மட்டும்.
இந்த மந்திர உபதேசத்திலிருந்து உபநிஷதம் நமக்கு என்ன போதிக்கின்றது என்பதை விளக்கம் பார்த்து புரிந்து கொள்வோம். சற்று கவனம் தேவை. முதலில் பூரணம் என்ற பதத்தை எடுத்து விசாரம் செய்வோம்.
பூரணம் என்றால் வரையறுக்கபடாதது, நிறைவானது. (Infinite, limitless) ஒரு பொருள் மூன்று விதத்தில் வரையறுக்க படலாம். அவைகள் 1)தேசத்தால், 2)காலத்தால், 3)வஸ்து(குணத்தால்).
தேசத்தால் வரையறுக்கப்பட்டது என்பது, ஒரு பொருள் ஆகாசத்திற்குள் அடக்கம் என்றால் அந்த பொருள் வரையறுக்கப்பட்டுள்ளது. உதாரணமாக நம் உடல் பூர்ணமானதா, பூர்ணமானதல்லவா என்றால் நம் உடல் பூர்ணமா னதல்ல காரணம் நம் உடல் ஒரிடத்தில் இருந்தால் வேறு ஒரு இடத்தில் இல்லை, இந்த உடலுக்கு அப்பாற்பட்ட இடத்தில் இந்த உடல் இல்லை. ஆகவே இந்த உடல் ஒரு குறிப்பிட்ட அளவு தேசத்தால் (இடத்தால்) வரையறுக்க பட்டுள்ளது. நம் உடல், இந்த உலகம், நாம் காணும் அனைத்தும் வரையறுக்கப்பட்டுள்ளது. எதையெல்லாம் நம் கண்களால் காண முடிகிறதோ அவை அத்தனையும் தேசத்தால் வரையறுக்கபட்டுள்ளது.
காலத்தால் வரையறுக்கப்பட்டது என்பது ஒரு பொருள் அதனுடைய இருப்பு காலத்தால் நிர்ணயம் செய்யபடுகிறது. எந்த ஒன்றிற்கு தோற்றமும், அழிவும் ஏற்படுகிறதோ அது காலத்தால் வரையறுக்கபட்டுள்ளது. நம் உடல் இருக்கிறது அதை எவ்வளவு தான் பேணி ஆரோக்கியத்துடன் பாதுகாத்து வந்தாலும் ஒரு வயதிற்கு மேல் ஆரோக்கியம் குன்றி நோய் வாய்பட நேரிடுகிறது. ஆகவே சரீரம் என்பதும் காலத்தால் வரையறுக்குட்பட்டது.
வஸ்துவால் அல்லது குணத்தால் வரையறுக்கபட்டது என்பது ஒரு பொருள் அதனுடைய தன்மையால் அல்லது குணத்தால் வரையறுக்கப்படுகிறது. உதாரணமாக உயிரினங்கள் என்ற சொல் இந்த உலகில் வாழும் எல்லா ஜீவிகளையும் குறிப்பிடும். அதற்கு ஒரு அடை மொழி கொடுக்கும் போது மொத்த ஜீவிகளிடமிருந்து அடைமொழியில் குறிப்பிட்ட குணம் கொண்ட ஜீவிகளுக்கு மட்டும் அந்த அடைமொழி சென்றடைகிறது. குறிப்பாக உயிரினங்களில் மனிதர்கள் என்ற அடைமொழி கொடுக்கப்படும் போது அந்த சொல் மற்ற எல்லா உயிரினங்களிடம் செல்லாமல் மனிதர்களிடம் மட்டும் செல்கிறது. மனிதர்களில் இளைஞர்கள் என்ற அடைமொழி கொடுக்கும் போது மேலும் மனிதர்களில் இளைஞர்கள் என்ற தன்மை உடையவர்களை மட்டும் அந்த அடைமொழி சென்றடைகிறது. இப்படியே ஒரு பொருளுக்கு குணம் அதிகமாக அதிகமாக அந்த பொருள் அதிகமாக வரையறுக்கப் படுகிறது. ஒரு பொருள் குணம் குறைய, குறைய அதனுடைய வியாபிக் கின்ற தன்மை அதிகமாகி கொண்டே செல்லும். இதுவே வஸ்துவால் அல்லது குணத்தால் வரையறுக்கபடுவது என்பது.
ஒரு பொருள் தேசத்தினாலும், காலத்தினாலும், வஸ்து(குணம்)வினாலும் வரையறுக்கப்பட்டால் அது அபூர்ணம். எந்த ஒன்று தேசத்தினாலும், காலத்தி னாலும், வஸ்து(குணம்)வினாலும் வரையறுக்கபடாததோ அது பூர்ணம்.
ஓம் பூர்ணமத: பூர்ணமிதம், பூர்ணாத் பூர்ணமுதச்சயதே |
பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவா வசிஷ்யதே!” ||
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி: ||
முதல் வரியின் அர்த்தம்
ஓம் பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுச்சயதே |
ஈஸ்வரன் பூர்ண சொரூபமாக இருக்கிறார். ஜீவன் பூர்ண சொரூபமாக இருக்கிறார். பூர்ணமான ஈஸ்வரனிடமிருந்து பூர்ணமான ஜீவன் தோன்றுகிறார்.
ஈஸ்வரன் பூர்ண சொரூபமாக இருக்கிறார், என்றால் ஈஸ்வரன் பிரம்ம சொரூபமாக இருக்கிறார்.
ஜூவன் பூர்ண சொரூபமாக இருக்கிறார், என்றால் ஜூவன் பிரம்ம சொரூப மாக இருக்கிறார்.
பிரம்ம சொரூபமான ஈஸ்வரனிடமிருந்து பிரம்ம சொரூபமான ஜூவன் தோன்றினார்.
எந்த ஒன்று தேசத்தினாலும், காலத்தினாலும், வஸ்து(குணம்)வினாலும் வரையறுக்கபடாததோ அது பூர்ணம். இந்த லக்ஷ்ணம் பிரம்மத்திற்கு மட்டுமே செல்லும். ஆக பூர்ணம், முழுமை, சத் சித் ஆனந்தம், பரமாத்மா என்ற சொற்கள் பிரம்மத்திற்கு மட்டுமே செல்லும்.
இந்த சாந்தி மந்திரம் மூலம் உபநிஷதம் சொல்ல வருவது என்னவென்றால் பூர்ணம் மட்டுமே சத்தியம், இங்கு பூர்ணம் என்பது பிரம்மம், பிரம்மம் மட்டுமே சத்தியம், பிரம்மத்திற்கு வேறாக இருப்பது அத்தனையும் மித்யா. (மித்யா என்றால் தோற்றம்).
“பிரம்மம் அஸ்தி, பிரம்ம பின்னம் சர்வம் மித்யா”
இது தான் இந்த சாந்தி மந்திரத்தின் சாரம். விளக்கம் பார்ப்போம்.
முதலில் ‘பூர்ணமத: பூர்ணமிதம்’ என்ற பதங்களை எடுத்து விளக்கம் பார்ப்போம்.
பூர்ணமத: = பூர்ணம் அதஹ ;
பூர்ணம் = பிரம்மம் என்று பொருள் பார்த்தோம்.
அதஹ = அது ; அது என்றால் ஈஸ்வரன் என்று பொருள் கொள்ளபட வேண்டும் என்று பார்த்தோம்.
பூர்ணமத: என்பதற்கு “ஈஸ்வரன் பிரம்ம சொரூபமாக இருக்கிறார்” என்று நாம் பொருள் கொள்ள வேண்டும்.
“ஈஸ்வரன்” என்பவர் இந்த உலகத்தையும், ஜூவன்களையும் படைப்பவர். ஆக படைப்பிற்கு காரணமானவர் ‘ஈஸ்வரன்’.
இந்த மந்திரத்தை நமக்கு விளக்குவதற்காக உபநிஷதம் ‘நிர்குணமான பிரம்மனுக்கு’ ‘காரணம்’ என்ற தன்மை(குணம்)யை பொய்யாக ஏற்றி வைக்கி றது. ஆக குணமற்ற பிரம்மனுக்கு காரணம் என்ற தன்மை(குணம்)யை ஏற்றி வைக்கும் போது ‘ஈஸ்வரன்’ என்று அறியப்படுகிறார்.
பிரம்மம்(பூரணம்) + காரணம் = ஈஸ்வரன்
வேதாந்தத் தத்துவப்படி ஒரு பொருள் (காரியம்) உருவாவதற்கு இரண்டு காரணங்கள் தேவை.
1)உபாதான காரணம் – மூலப் பொருள்,
2) நிமித்த காரணம் – அறிவுடைய ஒருவன்.
உபாதான காரணமான மூலப்பொருளை ஈஸ்வரன் எங்கிருந்து பெறுகிறான் என்ற கேள்விக்கு உபநிஷதம் “மாயை” என்ற ஒரு தத்துவத்தை அறிமுகப் படுத்துகிறது.
மாயாம் து ப்ரக்ருதிம் வித்யான் – மாயினம் து மஹேச்வரம் |
தஸ்யாவயவ – பூதைஸ்து வ்யாப்தம் ஸர்வமிதம் ஜகத் ||
(ச்வேதாச்வதர உபநிஷதம் || 4.10 ||)
என்பது சுருதி பிரமாணம். இதன் பொருள் பார்ப்போம்.
மாயையை மூல காரணமாகவும், மாயையையுடையவரை மஹேஷ்வரன் என்று அறியவும். அந்த ஈஸ்வரன் தான் ஜீவர்களாகவும், இந்த ஜகத் ஆகவும் வியாபித்துள்ளார். என்பது சுருதி வாக்கு.
முதலில் பார்த்த சமவாக்கியம் (Equation) பிரம்மம் + காரணம் = ஈஸ்வரன்
அடுத்து காரணம் என்பதை இரண்டு பார்த்தோம், 1) உபாதான காரணம் என்றும் 2) நிமித்த காரணம் என்றும் பார்த்தோம். அதன்படி சமவாக்கியம்
பிரம்மம் + உபாதான காரணம் + நிமித்த காரணம் = ஈஸ்வரன் என்றாகிறது.
அடுத்து “உபாதான காரணம்” என்பது “மாயை” என்று பார்த்தோம்.
அதன் படி சமவாக்கியம்
பிரம்மம் + மாயை + நிமித்த காரணம் = ஈஸ்வரன் என்றாகிறது,
அடுத்து நிமித்த காரணம் என்ன என்று பார்ப்போம்.
பொதுவாக எந்த ஒரு பொருளும் படைக்கப்பட வேண்டுமானால் அந்த பொருளை பற்றிய ஞானமுடைய ஒருவர் இருந்தாக வேண்டும். இந்த உலகம் ஈஸ்வரனால் படைக்கபட்டது என்றால் இந்த ஈஸ்வரருக்கு இந்த அறிவு எங்கிருந்து வந்தது என்ற கேள்வி எழுகிறது. அதற்கான பதிலை பார்க்க முதலில் பிரம்மத்தினுடைய லக்ஷ்ணம் என்ன என்று பார்ப்போம். உபநிஷதம் பிரம்மத்திற்க்கு கூறும் லக்ஷ்ணம்
“ஸத்யம் ஞானமனந்தம் ப்ரஹ்ம”,
“பிரம்மமானது ஞானவடிவமானது, ஆனந்தவடிவமானது, எல்லையற்றது”. (தைத்திரீய உபநிஷதம்)
“விஞ்ஞான மானந்தம் ப்ரஹ்ம”
“பிரம்மமானது ஞான வடிவமானது, ஆனந்த வடிவமானது”. (பிரஹதாரண்ய உபநிஷதம்)
நாம் ஈஸ்வனிடம் பிரம்மம் + மாயை + நிமித்தகாரணம் என்ற அம்சங்கள் இருக்கின்றன என்று பார்த்தோம். அதில் ‘மாயா’ என்ற அம்சம் மூலப் பொருள் என்றும் பார்த்தோம்,
அடுத்து பிரம்மத்தின் ஸ்வரூபம்(லக்ஷ்ணம்) பார்த்தோம். அந்த லக்ஷ்ணத்தில் பிரம்மம் ஞானவடிவமானது (அறிவு ஸ்வரூபமானது) என்று பார்த்தோம். ஒரு பொருள் படைக்கப்பட வேண்டுமானால் அந்த பொருளைப் பற்றிய ஞானமுடைய ஒருவர் இருந்தாக வேண்டும். ஈஸ்வரனால் இந்த உலகமும், ஜீவன்களும் படைக்கப்பட்டது என்றும் பார்த்தோம். அப்படியானால் அந்த ஈஸ்வரன் அனைத்தும் அறிந்தவராகவும், அவர் ஞான மயமானவராகவும் இருக்க வேண்டும். அப்படியானால் அவருக்கு அனைத்து ஞானம் எங்கிருந்து கிடைத்தது. அதை பார்ப்போம்.
ஈஸ்வர தத்துவத்தில் பிரம்ம அம்சமும், மாயா அம்சமும் இருக்கிறது. அந்த ஈஸ்வரன் மாயா அம்சத்திலிருந்து ஜட பொருளான மூல பொருளை பெற்று இந்த ஜடமான உலகத்தை படைக்கிறார்.
அடுத்து ஈஸ்வரன் தன்னுடைய பிரம்ம அமசத்திலிருந்து ஞானத்தை பெற்று இந்த உலகத்தை வடிவமைத்து அந்த பிரம்மத்தின் சைதன்ய(அறிவு, உணர்வு) அம்சத்தால் ஜீவர்களின் ஜடமான உடலுக்கு உணர்வையும் படைத்து இந்த ஜடமான உலகை போகபொருளாகவும், ஜீவர்களை போகியாகவும் படைத்துள்ளார். அப்படி ஈஸ்வரன் இந்த சிருஷ்டிக்கு காரணமான “உபாதான”காரணமாகவும், “நிமித்த”காரணமாகவும் இருக்கிறார்.
அடுத்து
பூர்ணமிதம் = பூர்ணம் + இதம் ;பூர்ணம் = பிரம்மம் என்று பொருள் பார்த்தோம்.
இதம் = இது ; இது என்றால் ஜீவன் என்று பொருள் கொள்ள வேண்டும் என்று பார்த்தோம்.
பூர்ணமிதம் என்பதற்கு “ஜீவன் பிரம்ம சொரூபமாக இருக்கிறார்” என்று நாம் பொருள் கொள்ள வேண்டும்.
‘ஜீவன்’ என்பது ‘படைக்கப்பட்டது’, ஆக ‘ஈஸ்வரன் படைப்பவர்’ ‘காரணம்’, என்றால் படைக்கப்பட்டது ‘காரியமாகிறது’.
இந்த மந்திரத்தை நமக்கு விளக்குவதற்காக உபநிஷதம் ‘நிர்குணமான பிரம்மனுக்கு’ ‘காரியம்’ என்ற தன்மை(குணம்)யை பொய்யாக ஏற்றி வைக்கி றது. ஆக குணமற்ற பிரம்மனுக்கு ‘காரியம்’ என்ற தன்மை(குணம்)யை ஏற்றி வைக்கும் போது ‘ஜீவன்’ என்று அறியப்படுகிறார்.
பிரம்மம்(பூரணம்) + காரியம் = ஜீவன்.
பூர்ணமத: பூரணமிதம் = ஈஸ்வரன் பூர்ண சொரூபமாக இருக்கிறார், ஜீவன் பூர்ண சொரூபமாக இருக்கிறார்.
இதில் நமக்கு ஒரு சந்தேகம் எழுகிறது. இரண்டு பூரணம் இருக்கிறது என்று,
ஒன்று ஈஸ்வரன் என்ற பூர்ணம், மற்றென்று ஜீவன் என்கிற பூரணம்.
இந்த சந்தேகத்தை தெளிவுப் படுத்துகிறது அடுத்த பதங்கள்
பூர்ணாத் பூர்ணமுதச்சயதே |
பூரணமான ஈஸ்வரனிடமிருந்து பூரணமான ஜீவன் தோன்றுகிறான்.
இந்த பதங்கள் நமக்கு தெளிவுப் படுத்துவது, இரண்டு பூரணம் அல்ல, ஒன்று தான் இருக்கிறது. விளக்கம் பார்ப்போம். பூரணமான ஈஸ்வரனிடமிருந்து பூரணமான ஜீவன் தோன்றுகிறான் என்றால் காரண, காரிய நியாயப்படி, ஈஸ்வரன் என்கிற காரணத்திலிருந்து காரியமான ஜீவன் தோன்றுகிறான் என்றால் காரணத்திலுள்ள தன்மை காரியத்தில் இருக்க வேண்டும். ஒரு காரணம், காரியத்தை உற்பத்தி பண்ணும் போது தன்னுடைய சொரூபத்தை இழக்காமல் காரியத்தை தோற்றுவிக்கும். ஆகவே ஈஸ்வரன் பூரணமான தன்னுடைய சொரூபத்தை இழக்காமல் ஜீவனை பூரண சொரூபமாக தோற்றுவிக்கிறார். உதாரணம் பார்த்தால் புரியும், களிமண்ணிலிருந்து பானை தோன்றியது என்றால் களிமண் தன்னுடைய சொரூபத்தை இழக்காமல் பானையாக தோன்றியுள்ளது. களிமண், பானை என்று இரண்டு சொற்களை சொன்னாலும் இருப்பது ஒன்று தான், அது களிமண். தங்கத்திலிருந்து நகைகள் தோன்றியுள்ளது என்றால் தங்கம் தன்னுடைய சொரூபத்தை இழக்காமல் நகையாக தோன்றியுள்ளது, இருப்பது ஒன்றுதான், அது தங்கம். ஆக உபநிஷதம் நமக்கு போதிப்பது பூரணமான ஈஸ்வரன் தான் பூரணமான ஜீவனாக தோன்றுகிறார். ஆகவே இருப்பது ஒரு பூரணம் தான். இந்த இடத்தில் தான் ஒரு மேலும் ஒரு சந்தேகம் எழுகிறது. ஈஸ்வரனும் பூரணம், ஜீவனும் பூரணம் அப்படியென்றால் தோன்றியது தான் என்ன? உதாரணத்திற்கு போவோம். கடலிலிருந்து அலைகள் தோன்றின. இங்கு கடலும் தண்ணீர், அலைகளும் தண்ணீர் அப்படியென்றால் தோன்றியது தான் என்ன என்றால் நாம, ரூபங்கள் தோன்றின. ஆகவே காரணத்திலிருந்து காரியம் வந்தது என்றால் காரணம் + நாம, ரூபம் = காரியம். நாம, ரூபமென்றால் பெயரும், உருவமும். உதாரணமாக கணிமண்ணிலிருந்து, களிமண் தன்னுடைய சொரூபத்தை இழக்காமல் பானையாக தோன்றியது என்றால் களிமண்ணுடன் நாம, ரூபத்தை சேர்த்தினால் பானைகள். தோன்றியது உண்மையில் நாம ரூபம். அதேபோல் பூரணத்திலிருந்து பூரணம் தோன்றியது என்றால் எங்கும் நிறைந்திருக்கும் பூரணத்திடமிருந்து உண்மையில் தோன்றியது நாம,ரூபங்கள். நாம ரூபத்திற்கு இனியொரு பெயர் தான் உபாதி. தோன்றியது உபாதி. ஈஸ்வரன் பூர்ணமானவர், ஜீவன் பூர்ணமானவர், இந்த பூரணம் இரண்டு பூரணம் அல்ல. பூரணமான ஈஸ்வரனே பூரணமான ஜீவனாக இருக்கிறார் பின் எதற்கு ஜீவன் என்று சொல்வதன் காரணம் என்றால் ஜீவன் காரியம், காரியம் என்றால் நாம ரூபம் தோன்றியுள்ளது. உபநிஷதம் இந்தளவு எடுத்து விளக்க காரணம். பூரணம் என்பது இரண்டு அல்ல, ஒன்று தான் என்பதை தெளிவு படுத்த தான். இதை இன்னும் எளிமையாக கூறினால் பூரணம் என்பது ஒன்றுதான் அந்த பூரணம் நாம ரூபம் இல்லாமல் இருந்தால் அதாவது உபாதி இல்லாமல் இருந்தால் அது ஈஸ்வரன், நாம ரூபத்தோடு அதாவது உபாதியோடு இருந்தால் அது ஜீவன். பூரணத்தில் வேறுபாடு இல்லை. அது ஒன்று தான்.
அடுத்து இரண்டாவது வரியில் உபநிஷதம் அந்த நாம ரூபத்தையே நிஷேதம் செய்கிறது அதாவது இல்லை என்று கூறுகிறது. அது எப்படி நிஷேதம் செய்கிறது என்றால் பூரணத்தினுடைய பூரணத்தை நீக்கி விட்டால் பூரணம் தான் இருக்கும் நாம ரூபம் இல்லை. பூரணத்தினுடைய பூரணத்தை நீக்கி விட்டால் நாம ரூபம் இருக்க வேண்டும் ஆனால் உபநிஷதம் சொல்கிறது பூரணம் தான் இருக்கிறது என்று இதை ஒரு உதாரணம் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம். கடல் “நீர்” சொரூபமானது, அலைகள் “நீர்” சொரூபமானது. இந்த நாம் எப்படி புரிந்த் கொள்ள வேண்டுமென்றால் நீர் என்கிற இடத்தில் பூரணம். கடல் என்கிற இடத்தில் ஈஸ்வரன், அலை என்கிற இடத்தில் ஜீவன் என்று ஒப்புதல் செய்து இந்த உதாரணத்தை வைத்தே இந்த உபநிஷத மந்திரத்தை புரிந்து கொள்ளலாம். நீர் சொரூபமான அலைகளிலிருந்து நீரை நீக்கி விட்டால் நீர் மட்டும் இருக்கும் அலைகள் கிடையாது. இந்த உதாரணத்தை முழுமையான மந்திரத்தோடு ஒபfபிட்டு பார்ப்போம்.
ஓம் பூர்ணமத: பூர்ணமிதம், பூர்ணாத் பூர்ணமுதச்சயதே |
பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவா வசிஷ்யதே!” ||
ஈஸ்வரன் பூர்ண சொரூபமாக இருக்கிறார். ஜீவன் பூர்ண சொரூபமாக இருக்கிறார். பூர்ணமான ஈஸ்வரனிடமிருந்து பூர்ணமான ஜீவன் தோன்றுகிறார்.
கடல் “நீர்” சொரூபமாக இருக்கிறது, அலைகள் “நீர்” சொரூபமாக இருக்கிறது, நீர் சொரூபமான கடலிலிருந்து நீர் சொரூபமான அலைகள் தோன்றுகிறது. நீர் சொரூபமான அலைகளிலிருந்து நீரை நீக்கி விட்டல் நீர் மட்டுமே மிஞ்சி இருக்கிறது.
இந்த மந்திரத்தில் “பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவா வசிஷ்யதே!” ||
பூர்ண சொரூபமான ஜீவனிலிருந்து பூர்ணத்தை நீக்கி விட்டால் பூர்ணம் மட்டுமே எஞ்சி நிற்கிறது. ஜீவன் (நாம ரூபம்) மிஞ்சி இருப்பதாக சொல்ல வில்லை. இந்த உபநிஷத்தினுடைய உபதேசம் பூர்ணம் மிஞ்சி இருப்பது எனபதல்ல, “பூரணம் மட்டுமே” மிஞ்சி இருக்கிறது என்பது. இந்த மந்திரத்தின் முக்கிய உபதேசம் என்பது மிஞ்சி இருப்பது “பூரணம் மட்டும்” என்பதின் தான். “பூர்ணமேவ” என்ற வார்த்தைக்கு தான் முக்கியத்துவம். “ஏவ” என்ற வார்த்தையின் பொருள் பூரணத்தை தவிர “நாம ரூபம்” என்பது கிடையாது. பூரணத்தை தவிர நாம் காண்பது அனைத்தும் தோற்றமே அதாவது “மித்யா.” இது தான் இந்த மந்திரத்தின் மூலம் உபநிஷத் நமக்கு சொல்ல வருகிற உபதேசம். உபநிஷத்தின் தாத்பர்யமும் இது தான். இதிலிருந்து நமக்கு கிடைப்பது நாம ரூபம் என்பது “மித்யா” அதாவது உண்மையிலேயே “நாம ரூபம்” எனபது ஒரு பொருளல்ல அது ஒரு தோற்றம். ஆகவே இந்த “நாம ரூபமே” தோற்றம் என்றால் இந்த நாம ரூபத்திற்கு காரணமும் பொய். எது வரைக்கும் காரணம் உண்மை என்றால் காரியம் இருக்கும் வரை. காரியமே இல்லையென்றால் காரணமும் இல்லை. இங்கு காரியம் என்ற ஒன்று இல்லை என்று உபநிஷதம் சொல்கிறது ஆகவே காரணமும் பொய் என்றாகிறது. அப்படியென்றால் என்ன எஞ்சி நிற்கிறது என்றால் “பூர்ணமேவா வசிஷ்யதே!” “பூரணம் மட்டும் எஞ்சி இருக்கிறது”. இது தான் இந்த மந்திரத்தின் உபதேசம்.
இந்த ஒரு சாந்தி மந்திரத்திலேயே ஈஸாவாஸ்ய உபநிஷத்தின் முழுமையான வேதாந்தச் சாரம் அடங்கியுள்ளது. இந்த மந்திரத்தின் பொருளை நன்கு புரிந்துகொண்டு மனனம் செய்து நிதித்யாசனம் செய்யும் போது, “பூர்ணம் மட்டுமே சத்தியம்” என்ற உபநிஷத்தின் உன்னத உண்மை தெளிவாக வெளிப்படும்.
No content added yet for this topic.






Users Today : 3